காந்தியும் மதமும்

என். குணசேகரன்

ந்தியா பல தேசிய இனங்கள், பல்வேறு பண்பாடுகள், மத நம்பிக்கைகள், மொழிகள் கொண்ட நாடு. பல வேறுபாடுகள் கொண்ட இந்த நாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஒன்றுபட்ட போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது; இது உலக வரலாற்றில் ஒரு மகத்தான நிகழ்வு. சாதி, மத, இன, மொழி, தத்துவங்கள் என வேறுபாடுகள் பல்லாயிரக்கணக்கில் இருந்தாலும், அந்நிய அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து மக்கள் திரண்டு புதிய வரலாறு படைத்தனர்.

இந்த நாடு தழுவிய ஒற்றுமை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தபோதும், ஒரு முக்கிய பங்களிப்பு காந்திக்கு உண்டு. மூடநம்பிக்கைகளிலும், பின்தங்கிய நிலைமைகளிலும் வாழ்ந்துவந்த கோடானுகோடி கிராமப்புற மக்களையும் தட்டியெழுப்பி, போராட்டப் பாதையில் கொண்டு வந்த அந்த மகத்தான நிகழ்வுக்கு காந்தியின் வாழ்வும் செயல்பாடுகளும் முக்கிய பங்களிப்பு செலுத்தியது. இந்திய வரலாற்றை ஆழமாக பயில்பவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள். காந்தியின் செயல்பாடுகளும் கருத்துக்களும்தான் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அவரது இந்த உயிர்த் தியாகம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இன்றும் காந்தி இந்திய சிந்தனை பரப்பில் முக்கிய தாக்கம் செலுத்துகிறார். அவரது வாழ்க்கை பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. கடும் விமர்சனங்களும் தொடர்கின்றன. ஆனால் அவரது கருத்துக்களுக்கு நேரெதிரான சித்தாந்தம் கொண்டவர்களும் இன்றைக்கு அவரை தூக்கிப் பிடிக்கிற நிலையைக் காண்கின்றோம். எனவே அவரை சரியாக மதிப்பிடுவது எப்படி என்பது முக்கியமான ஒரு கேள்வி.

இ.எம்.எஸ். வழிகாட்டுதல்

இந்தியாவில் மார்க்சிய சிந்தனையை வலுவாகப் பதித்து மார்க்சிய இயக்கத்தை கட்டுவதில் பெரும்பங்காற்றியவர், தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள். அவர் காந்தியை பற்றிய துல்லியமான ஆய்வினை செய்துள்ளார். “மகாத்மாவும் அவரது தத்துவமும்” என்ற அவரது நூல் மார்க்சிய நோக்கில் காந்தியை மதிப்பீடு செய்கிறது. இந்திய பாட்டாளி வர்க்கம் அவரை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென அந்த நூல் வழிகாட்டுகிறது.

காந்தியின் சிந்தனைகளையும் நடைமுறையையும் புரிந்துகொள்வதில் இரண்டு விதமான தவறுகள் இருப்பதாக தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார். ஒன்று, அவரது சிந்தனைகளை குறைத்து மதிப்பிட்டு, காந்தியத்தை நிராகரிக்கும் வகையில் முற்றாக விமர்சிப்பது ஒரு வகை; மற்றொரு வகை, பாரபட்சமாக அவரை உச்சத்தில் வைத்து போற்றிப் புகழ்வது. இந்த இரண்டு தவறுகளையும் தவிர்க்க வேண்டுமென தோழர் இஎம்எஸ் வலியுறுத்துகிறார்.

எடுத்துக்காட்டாக, எழுத்தாளர் அருந்ததிராய், காந்தியை சாதிய முறைக்கு ஆதரவானவர் எனவும், அவரது தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சாரம் தலித் மக்களை இந்து மதப் பிடிக்குள் கொண்டு வருகிற நோக்கம் கொண்டது என்றெல்லாம் எழுதியுள்ளார். காந்தியை ஆதரிப்பவர்கள் மட்டுமல்லாது, அவரை விமர்சிப்பவர்களும் தங்களது கருத்துக்களுக்கு ஆதரவாக காந்தி எழுதிய எழுத்துக்கள், அவர் ஆற்றிய உரைகளையே மேற்கோள்களாக பயன்படுத்துகின்றனர்.

இந்த முரண்பாடுகளுக்கு என்ன காரணம்? அவரது 60 ஆண்டுகால எழுத்தும் பிரச்சாரமும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவர் அவ்வப்போது மாறும் சூழலுக்கு ஏற்பவும், அவர் எதிர்கொண்ட புதிய கருத்துக்கள், உண்மைகளுக்கு ஏற்பவும் தனது கருத்துக்களையும் மாறுதல்களுக்கு உள்ளாக்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நால் வருண அமைப்பை வலுவாக ஆதரிப்பதாக பேசும் காந்தி, பிற்போக்கு பழமைவாதம் தலை தூக்கிய நிலையில் நால்வருண அமைப்பை எதிர்ப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

காந்தியை முற்றாக நிராகரிப்பதும், விமர்சனமற்ற வகையில் போற்றி புகழ்வதும் தவறு. தற்போதைய மாறியுள்ள காலச்சூழலில் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்க காந்தியின் சிந்தனை எவ்வாறு பயன்படும் என்பதே முக்கியமான கேள்வி.

மதங்களின் பன்முகத் தன்மை

பன்முக சமய கண்ணோட்டங்கள் மனித சமூகத்தில் தவிர்க்க இயலாதது என்பது காந்தியின் கருத்து. அதுவே, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அவசியம் என அவர் கருதினார். “அனைத்து மதங்களிலும் எல்லையில்லாத அளவில் பல்வேறு பிரிவுகள் உள்ளன; முடிவற்ற மத வேறுபாடுகள் உள்ளன” என்றார் காந்தி.

“சிலர் புனித பயணம் மேற்கொண்டு புனித ஆறுகளில் குளிப்பார்கள்; மற்றவர்கள் மெக்காவிற்கு செல்வார்கள்; சிலர் கோவிலில் வழிபாடு மேற்கொள்வார்கள்; மற்றவர்கள் மசூதிகளில் வழிபடுவார்கள்; சிலர் தலைவணங்கி வழிபடுவார்கள்; சிலர் வேதங்களை படிப்பார்கள்; மற்றவர்கள் குரானை படிப்பார்கள்; சிலர் தங்களை இந்து என்று அழைத்துக் கொள்வார்கள்; மற்றவர்கள் இஸ்லாமியர்கள் என்பார்கள்”என்று விவரிக்கிறார் காந்தி.

மதங்களின் மற்றொரு முக்கியமான தன்மையையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை; “என்னை நான் இந்து என்று சொல்லிக்கொள்கிறபோது, நான் வழிபடுகின்ற முறையில், மற்ற இந்துக்களும் வழிபடுவதில்லை என்பதை நான் அறிவேன்” என்று குறிப்பிடுகிறார்.

ஆழமான, பன்முக, வேறுபாடுகள் கொண்ட மதங்கள் உள்ள நிலையில் என்ன அணுகுமுறை தேவை என்பதை காந்தி விளக்குகிறார். “மனித சமூகம் முழுமைக்கும் ஒரே ஒரு மதம் என்பது தேவையில்லை; தற்போதைய தேவை என்னவென்றால் பல்வேறு மதப் பிரிவினருக்கிடையே பரஸ்பர மரியாதை, சமமான மதிப்பு அளிப்பது, பல்வேறு மதங்களின் பக்தர்களிடையே சகிப்புத்தன்மை போன்றவையே” என்று அழுத்தமாக குறிப்பிடுகிறார் காந்தி. காந்தியின் இத்தகைய கருத்துக்கள் இந்து மதத்தின் பெயரால் இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்கிற கருத்துக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பது மறுக்கமுடியாத உண்மை.

”அனைத்து மதங்களும் உண்மையானவை; அனைத்தும் சில தவறுகளை கொண்டிருக்கின்றன; நான் என்னுடைய மதத்தைப் பின்பற்றுகிறபோது இந்து மதத்தின் மீது எந்த அளவில் என்னிடம் பற்று இருக்கிறதோ, அந்த அளவில் மற்ற மதத்தினரையும் நேசிக்க வேண்டும். இதில் வித்தியாசம் பார்க்கக் கூடாது” என்று கூறிய காந்தி, அவரது வாழ்நாள் முழுவதும் இந்த நெறியை கடைப்பிடித்து வந்தார்.

காந்தி தனது நோக்கில் இந்து மதத்தை பற்றி விளக்கினார். “இந்து மதம் எல்லா உயிர்களும் ஒரே மூல ஆதாரத்திலிருந்து தோன்றுகிறது எனவும், அந்த மூலாதாரத்தை அல்லா என்றும், கடவுள் என்றும், பரமேஸ்வரன் என்றும் அழைக்கலாம்” என்று காந்தி கருதினார். இதுதான் இந்து மதத்தின் பார்வை என்று காந்தி கூறினார். ”இஸ்லாம் மதத்தின் அல்லாவும், கிறித்துவ மதத்தின் கடவுளும், இந்துக்களின் ஈஸ்வரனும் ஒன்றே!” என்றார்.

இந்தக் கருத்தை இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிற அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா? நிச்சயமாக, இந்துத்துவவாதிகள் இந்த கருத்தை கடுமையாக எதிர்ப்பார்கள்.

சாதி முறை குறித்து

ஒடுக்குமுறை சார்ந்த சாதி கட்டமைப்பை வலியுறுத்தும் வர்ணாசிரம முறையை காந்தி ஆதரித்து வந்தது உண்மையே. இருப்பினும் அந்த சித்தாந்தத்தின் ஒடுக்குமுறை, தீண்டாமை போன்றவற்றை தொடர்ந்து எதிர்த்து வந்தார். அதே போன்று, நடைமுறை வாழ்க்கையில், அவர் சாதி வேறுபாடுகள் அடிப்படையில் மக்களை அணுகவில்லை. ஒடுக்குமுறை அடிப்படையிலான சாதிய முறையை அவரது செயல்பாடுகளில் மதத்தின் பெயரால் கடைப்பிடிக்கவில்லை. அவர் உருவாக்கி வழிநடத்திய ஆஸ்ரமத்தில் சமூக சமத்துவத்தை பின்பற்றினார்.

1934-இல், “இந்து சாஸ்திரங்கள் தற்போது நிலவும் தீண்டாமைக்கு ஆதரவு நிலையை வெளிப்படுத்துவதாக அறிந்தால், நான் இந்து மதத்தை கைவிட்டு, இந்து மதத்தை எதிர்ப்பேன்”என்று அவர் எழுதினார்.1935-இல் ஹரிஜன் இதழில் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு “சாதி மறைய வேண்டும்” (caste has to go). அதில் “பொதுச் சிந்தனையில் எவ்வளவு விரைவாக சாதி ஒழிய வேண்டுமோ, அந்த அளவிற்கு நல்லது” என்று அவர் எழுதினார்.

காந்தியின் சமூக, பொருளாதார கருத்துக்கள் அனைத்தும் மதக் கண்ணோட்டம் சார்ந்த நெறிமுறைகள் அடிப்படையில் அமைந்துள்ளன. ஒழுக்கம், நேர்மை, உண்மைத்தன்மை போன்ற நெறிகளை அவர் இந்து மத நோக்கில்தான் வலியுறுத்தினார். இந்து மதம் மீது அவர் கொண்டிருந்த பற்றுடன் இணைந்ததாக அவரது சமூக, அரசியல் கருத்துக்கள் அனைத்தும் அமைந்துள்ளன. மதங்களுக்கிடையே சமத்துவமும் பன்முகத் தன்மையும் நிலவுகிறது என அவர் கருதியதால், அதற்கேற்ப இந்து மதம் பற்றிய விளக்கங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

காந்தி பார்வையில் மதச்சார்பின்மை

இந்த நடைமுறைகளும், இந்து மதம் குறித்த காந்தியின் மத நல்லிணக்கம் சார்ந்த பார்வையும்தான் இந்து மதவெறியர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் வலியுறுத்திய இந்து முஸ்லிம் ஒற்றுமை,இந்து மதத்தைப் பற்றிய மத நல்லிணக்கம் சார்ந்த அவரது கருத்துக்கள் போன்றவற்றை ஜீரணிக்க முடியாத இந்துமத வெறியர்கள் அவரை படுகொலை செய்தனர்.

மதச்சார்பற்ற அரசு என்பது என்ன? ஒரு அரசு தனது அரசியல் சட்ட அமைப்பு அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடாது; அத்துடன் ஒரு மதத்தை உயர்த்திப் பிடிப்பதாக இருக்கக் கூடாது. எந்த மதத்தின் உள் விவகாரங்களிலும் தலையிடுவதாக அரசு இருக்கக்கூடாது; ஒரு குடிமகனை மதம் சார்ந்து அரசு அணுகிடக் கூடாது; ஒரு தனி மனிதனின் மத சுதந்திரத்தை அரசு பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற தன்மைகள் கொண்டதுதான் ஒரு மதச்சார்பற்ற அரசாக இருக்க முடியும். இந்தப் பார்வை காந்தியின் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் நிறைந்திருந்தது.

காந்தியின் மதம் குறித்த பார்வை இயல்பாகவே அவரை ஒரு மதச்சார்பற்ற எண்ணம் கொண்டவராக வாழ்வதற்கு வித்திட்டது. அனைத்து மதங்களும் இந்து மதம் போலவே தனக்கு பிடித்தமான மதங்கள் என்று அவர் குறிப்பிட்டார்; “எல்லா மதங்களும் ஒரே உண்மையை நோக்கி பல வழிகளில் பயணிப்பவை” என்பதும் அவரது பார்வையாக இருந்தது. எந்த மதமும் வேறு மதத்திற்கு எதிரானது அல்ல என்பதையும் அவர் வலியுறுத்தி வந்தார். இந்த கருத்துக்கள் ஒரு தனி மனிதனின் மத சுதந்திரத்தை பேணி பாதுகாக்கும் கருத்துக்களாக அமைந்துள்ளன.

அதேபோன்று அரசு எந்த மதத்தையும் சாராமல் செயல்பட வேண்டும் என்பதிலும் காந்தி உறுதியாக இருந்தார்.1947-இல் அவர் “நான் எனது மதத்தின் மீது உறுதியான பற்று கொண்டவன்; நான் எனது மதத்திற்காக உயிரைக் கூட துறப்பேன்; அது என்னுடைய தனிப்பட்ட விவகாரம்; ஆனால் அரசு அதில் தலையிடக் கூடாது; அரசு மதச்சார்பற்ற முறையில் வாழ்நலன்களை பாதுகாக்கும்” என்று எழுதிய காந்தி “..மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம்; அரசியலில் அதற்கு இடமில்லை ..” என்று அழுத்தமாக குறிப்பிட்டார்.

எனவே, காந்தி மதச்சார்பற்ற சிந்தனை கொண்டவராக வாழ்ந்தார். ஒரு மதச்சார்பற்ற இந்தியா என்கிற காந்தியின் எண்ணத்துக்கு மாறாக இன்று மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. மதச்சார்பின்மையை காக்க காந்தியின் கருத்துக்கள் பயன்படும்.

காந்தியின் தத்துவம்

காந்தி இந்துமத தத்துவார்த்த மரபுகள் மீதான பிடிப்பு கொண்டவராக விளங்கினார். வேதாந்தம், பகவத்கீதை, உபநிடதங்கள் போன்றவை அவரது சிந்தனையில் ஆழ்ந்த தாக்கம் செலுத்தின. காந்தியின் தத்துவ சிந்தனையை ஆராய்ந்த தோழர் இ .எம்.எஸ். தனது நூலில் காந்தி ஒரு கருத்து முதல்வாதி எனக் குறிப்பிட்டார். மதம் பற்றிய காந்தியின் சிந்தனைகள் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் கொண்டவை.

தத்துவத்தில் அடிப்படையான கேள்விகள் உண்டு. பொருளிலிருந்து சிந்தனை தோன்றியதா? சிந்தனையிலிருந்து பொருள் தோன்றியதா? பொருள் முதன்மையானதா? சிந்தனை முதன்மையானதா? -போன்றவை தத்துவப் பிரச்னைகள். மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டு இயங்குகிற, பொருட்களால் ஆன பிரபஞ்சம், இயற்கை அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது என்றும், அனைத்தையும் இயக்குவது சிந்தனையே என்பதும் கருத்துமுதல்வாதம். இந்தக் கண்ணோட்டம் மாற்றத்தை சாதிக்கும் கடமையை கடவுளுக்கு விட்டுவிட்டு மனிதர்களை முடமாக்குறது. இதற்கு நேர்மாறானது பொருள்முதல்வாதம்.

இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் மதத்தின் பங்கினை மார்க்சியம் விளக்குகிறது. மனித வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களிலும் மதத்தின் பங்கு எவ்வாறு உள்ளது என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிற ஒரு தத்துவம் மார்க்சிய தத்துவமே. கடவுள் உண்டா,இல்லையா என்ற மேம்போக்கான ஆன்மீக, நாத்திக விவாதங்களை கொண்டதல்ல மார்க்சியம். கண்ணை மூடிக் கொண்டு, இறப்புக்குப் பிறகு சொர்க்கமா, நரகமா என்று விவாதிப்பதல்ல மார்க்சியம்.

வாழும் பூமியில் நிலவும் சமூக எதார்த்த நிலைமைகளை ஆராய்ந்து மார்க்ஸ் மதம் பற்றிய கருத்துக்களை படைத்தார். வர்க்க ரீதியாக பிளவுபட்டுள்ள சமூகத்தில் பெரும்பான்மை மனிதர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளாகி கரைந்து போகின்றனர். அந்த நிலையில், ஆன்மீகத்தில் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள மனிதர்கள் முயற்சிக்கின்றனர். அதற்கு மதம் அவர்களுக்கு புகலிடமாக அமைகிறது.

மார்க்ஸின் பிரசித்திபெற்ற கீழ்க்கண்ட மேற்கொள் இதனை விளக்குகிறது;
“மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மாகவும் உள்ளது. மதம் மக்களுக்கு அபினி.” இப்படிப்பட்ட பங்கினை மதம் ஆற்றுவதால், அதன் மீதான நேரடித் தாக்குதல் பலன் தராது. வறட்டுத்தனமான கடவுள் மறுப்பு ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலைமையை மாற்றுவதற்கான போராட்டத்திலிருந்து அந்நியப்படும் நிலையை ஏற்படுத்தும்.

மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம், இயற்கையின் இயக்கத்தை மேலும் மேலும் புரிந்து கொள்ள உதவுகிறது. உலகம், பிரபஞ்சம், இயற்கை, சமூகத்தின் இயக்கப் போக்கு ஆகியவை பற்றிய அறிவு மனித சிந்தனையில் பதியும்போது கடவுளுக்கு எவ்வித பங்கும் இல்லாமல் போகிறது. இது ஒரே நாளில் நடப்பதில்லை. தொடர்ச்சியான கருத்துப் போராட்டத்தில்தான் இது ஏற்படும். இதற்கு கருத்து தளத்தில் போராட்டம் நடந்தால் மட்டும் போதாது; ஒடுக்குமுறை, சுரண்டலை மேற்கொள்ளும் அதிகார வர்க்கங்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தில் மனிதர்கள் மத மயக்கத்திலிருந்து மீள்கின்றனர். கடவுள் மீது பாரத்தை இறக்கி நிம்மதி காணும் நிலையிலிருந்து மாறி, தங்கள் மீதும், தங்களது வர்க்க ஒற்றுமை மீதும் நம்பிக்கை கொள்கின்றனர்.

முதலாளித்துவத்தை வீழ்த்தி, சுரண்டலற்ற புதியதோர் உலகம் படைக்கிறபோது, தங்களது எதிர்காலத்தை, கற்பிதமான கவுளிடம் விட்டு வைக்காமல் தாங்களே தங்கள் எதிர்காலத்தை உருவாக்குகின்றனர். மதம் பற்றிய விளக்கங்களை அளிக்கும் மார்க்சியம், மனித சமூகம் தனது விடுதலைக்காக இந்த பூவுலகில் நடத்த வேண்டிய வர்க்கப் போராட்டப் பாதையையும் விளக்குகிறது.

வர்க்க இயக்கமும் காந்தியும்

இந்த சிந்தனைகள் காந்தியின் மதம் பற்றிய பார்வையில் இல்லை என்பது வெளிப்படையானது. ஆனால் மார்க்சிய சமூக மாற்ற செயல்திட்டத்தில் காந்தியின் மத நல்லிணக்கப் பார்வை, மதத்தினை பன்முகத் தன்மையோடு பார்க்கிற பாங்கு உள்ளிட்டவை மக்களை ஒன்றுபட வைக்கிறது. இது வர்க்க ஒற்றுமைக்கான திறவுகோலாக அமைகிறது. மார்க்சிய செயல் திட்டத்திற்கு வாய்ப்பான சூழலை அது ஏற்படுத்துகிறது. அந்த வகையில் வர்க்க இயக்கத்தை முன்னேற்றம் கண்டிட காந்தியும் தேவைப்படுகிறார்.

ஆனால் மதம் பற்றிய அவரது ஆன்மீகப் பார்வை அறிவியல் பார்வையோடு முரண்படுகிற நிலையும் ஏற்படுகிறது. எனவே காந்தியின் ஆன்மீக பார்வையை மார்க்சிஸ்டுகள் ஏற்க இயலாது; மதத்தில் செயல்பாடு பல தருணங்களில் மனிதர்கள் செயல்படுவதற்கான திறனை மழுங்கடிப்பதாக அமைகிறது. அந்த நிலையில் மத நம்பிக்கை பிற்போக்கான பங்கினை ஆற்றுகிறது. இதில் பாட்டாளி வர்க்க கட்சி கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு அறிவுரையை லெனின் வழங்குகிறார்: “…மத நம்பிக்கைகளின் வடிவத்தில் ஏற்படுகிற வர்க்க உணர்வற்ற நிலை, அறியாமை, மூடத்தனம் போன்றவை குறித்து அக்கறையற்று இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.” வர்க்க உணர்வை மழுங்கடிக்கும் மூடநம்பிக்கைகளை கம்யூனிஸ்டு கட்சி எதிர்த்திட வேண்டும்.

அதே நேரத்தில், குறிப்பிட்ட பல தருணங்களில் அடக்கு முறையை எதிர்ப்பதற்கும் மத நம்பிக்கை ஊக்கமளிப்பதாக இருந்ததுண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்துள்ள விவசாயிகள் எழுச்சிகள் வீரியமாக நடைபெறுவதற்கு மத நம்பிக்கைகளும் ஓரளவு தூண்டுகோலாக பயன்பட்டுள்ளன. இலத்தீன் அமெரிக்காவில் ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்ப்பதற்கு கிறித்துவ மத அமைப்புக்களும், இடதுசாரிகளும் அணி சேர்ந்து போராடிய அனுபவங்களும் உண்டு. இந்த சாதகமான மத செயல்பாட்டை பயன்படுத்துவது அவசியம். ஆனால் கருத்தியல் ரீதியாக, மதம் ஆளும் வர்க்கத்தின் கருவியாகவும், சுரண்டலை நியாயப்படுத்துகிற கருத்தியலாகவும் இருப்பதையும் கவனத்தில் கொள்ள மார்க்சியம் அறிவுறுத்துகிறது. அதனை மார்க்சிஸ்டுகள் கண்டறிந்து அம்பலப்படுத்த தயங்கக் கூடாது; அதே நேரத்தில், ஆளும் வர்க்க எதிரிகளை தனிமைப்படுத்துவதற்கு, விரிவான உழைக்கும் மக்களின் ஒற்றுமையை கட்டுவதற்கு, அனைவரும் ஒன்று சேர்கிற நிலையை உருவாக்க வேண்டும்.

லெனின் குறிப்பிட்டது போன்று, இந்த விரிவான அணியில் மதநம்பிக்கை கொண்டவர்கள், நாத்திகர்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும். வர்க்க ஒற்றுமை எழுச்சியில் இணைந்திட மதநம்பிக்கை தடையாக இருக்கக்கூடாது. அவ்வாறான ஒன்றுபட்ட போராட்டம் காலப்போக்கில் மதத்தின் மீதான பிடிப்பில் தளர்வை ஏற்படுத்துகிறது. சிறிது சிறிதாக அறிவியல் ரீதியான சிந்தனையை பலப்படுத்துகிறது. மதத்தின் சிக்கலான செயல்பாடுகளை உணர்ந்து மார்க்சிஸ்டுகள் மதம் பற்றிய தங்களுடைய அணுகுமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என மார்க்சிய லெனினியம் போதிக்கிறது.

எனவே, காந்தியின் கருத்துக்களை முற்றாக நிராகரிப்பது சரியல்ல. அவரது கருத்துக்களில் உடன்பாடு காண்பதற்கான கூறுகளை இணைத்துக்கொண்டு, முரண்பட வேண்டிய கருத்துக்களை விமர்சித்து செயல்படும் நடை முறையை கையாள வேண்டும். இன்று இந்து மதத்தினை முன்னிறுத்தி, சுரண்டப்பட்ட மக்களை தங்களது அரசியலுக்கும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் அணி சேர்க்கிற வேலையை இந்துத்துவா செய்து கொண்டிருக்கிற நிலையில், இந்த அணுகுமுறை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இன்றைய சூழலில், காந்தி பிரச்சாரம் செய்த இதர மதங்கள் மீதான வெறுப்பு கூடாது என்கிற போதனையும், மதங்கள் பற்றிய பன்முகப்பார்வையும், மதநல்லிணக்க கருத்துக்களும் பெரிதும் பயன்படும். மதச்சார்பின்மையை பாதுகாக்கிற போராட்டத்திற்கும் காந்தியின் சிந்தனைகள் பயன்படும். இந்தப் புரிதலுடன் சோசலிச இலட்சியத்திற்கு போராடும் இயக்கங்கள் காந்தியின் சிந்தனைகளை அணுகிட வேண்டும்.

அதற்கு ஏற்ப தங்களது அணுகுமுறையை வகுத்து செயல்படுவதுதான் இந்திய சோசலிசத்திற்கான சரியான பாதையாக அமையும்.தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு “மகாத்மாவும் அவரது தத்துவமும்” நூலினை கீழ்க்கண்டவாறு முடிக்கின்றார்: “காந்திய நடைமுறை மற்றும் தத்துவத்திற்கு எதிராக சித்தாந்த ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் போராட்டத்தை மார்க்சிய லெனினியர்கள் நடத்த வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரச்சனைகளில் சாத்தியமான அளவில் கூட்டு செயல்பாட்டுக்கு உள்ள வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.” இந்த வழிகாட்டுதல் இன்றளவும் பொருத்தமானது. அதிலும், இன்றைய இந்துத்துவா சவாலை எதிர்கொள்ள மேற்கண்ட அணுகுமுறை மிகவும் பொருத்தமானது.

ஜனவரி 30: இன்று மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினம்

Tags: