இலங்கை – இந்திய உறவு தற்போது உயர் நிலையில்!

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பேட்டி

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் பற்றிய கவலைகள் ‘கடந்த காலத்துக்குரியவை’

இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையேயான நட்புறவுகளில் உயர்நிலையை அடைந்துள்ளதாகவும், இலங்கையில் சீனாவின் பிரசன்னம் பற்றிய கவலைகள் ‘கடந்த காலத்துக்குரியவை’ (Sri Lanka-India ties at high point, concerns about Chinese presence in country ‘consigned to past’) என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே அமைச்சர் பீரிஸ் இதனைக் கூறியுள்ளார்.

இந்திய மீனவர்களின் விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட அவர், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் போது கைது செய்யப்படுவது, இன்றைய வேளையில் இந்தியாவுடனான உறவுகளில் ஒரு ‘பாரதூரமான தருணம்’ என்று கூறினார்.

13 ஆவது திருத்தம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் தேர்தல் சட்டங்களை மாற்றியமைக்கும் தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதன் காரணமாக 13வது திருத்தத்தின் அமுலாக்கத்தில் இடைநிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

கேள்வி: நீங்கள் டெல்லிக்குச் சென்றிருந்த போது, ​​இந்த மாத இறுதியில் இடம்பெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், இந்திய மத்திய அரசாங்கத்திடம் இருந்து ஏதேனும் உத்தரவாதத்தை மேலதிகமாக நாடினீர்களா?

பதில்: பெப்ரவரி 14 அன்று எங்களிடம் சிக்கலான பிரதியொன்று வழங்கப்படும். நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். மேலும், தற்போதைய மற்றும் முன்னைய காலத்தில் ஏற்பட்டுள்ள அனைத்து முன்னேற்றங்கள் குறித்தும் இந்தியா மிகவும் விழிப்புடன் இருக்கக் கூடும். குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான பணியகம், நிலையான அபிவிருத்தி இலக்குகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற உள்ளூர் பொறிமுறைகள் என குறிப்பிடப்படும் நிறைவேற்றப்பட்ட வேலைகள் என்பனவாகும்.

கேள்வி: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி. எஸ். பி (Generalised System of PreferencesGSP) விடயத்தில் நீங்கள் எந்தளவு ஈடுபாட்டைக் கொண்டுள்ளீர்கள்?

பதில்: இலங்கையில் இருந்து ஜி.எஸ்.பி பிளஸ் திரும்பப் பெறப்படுவதுஅதிகளவுக்கு சாத்தியமற்றது என்று நாம் நினைக்கிறோம். இருப்பினும் அது நிகழும் என்ற ஊகமான சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்வோம். அதன் சுமையை யார் சுமக்கப் போகிறார்கள்? இலங்கையில் வசிப்பவர்களே குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களாவர். ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் 90% பெண்கள். அவர்களில் பலர் தங்கள் குடும்பங்களை தாபரிக்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அத்துடன், மீனவ சமூகங்கள் பாதிக்கப்படும். எனவே அதை அகற்றினால், இது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தண்டனை நடவடிக்கை அல்ல. இது இலங்கை சமூகங்களின் வறிய பிரிவினருக்கு எதிரான ஒரு தண்டனை நடவடிக்கையாகும்.

கேள்வி: இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் திரும்பத் திரும்ப எழுந்துள்ள பல விடயங்களில் ஒன்றாகவும், இலங்கையில் தீர்வு காண முடியாத நிலைமையில் உள்ள ஒரு விடயமாகவும் தமிழர் அரசியல் பிரச்சினை உள்ளது. பதின்மூன்றாவது திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பின் ஒரு அங்கமாகும். பதின்மூன்றாவது திருத்தத்தின் முதன்மையான பண்பு மத்திய அதிகாரத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக என்ன நடந்தது? மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவில்லை.

பதில்: அதற்கான காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு யாரும் இல்லை. இலங்கையின் 2015 முதல் 2019 வரையிலான நிர்வாகம் இந்தத் தேர்தல்களை நடத்தவில்லை. தாங்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும், அது மிகவும் அவமானகரமான தோல்வியாக இருக்கலாம். எனவே அந்தத் தேர்தலை நடத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். அதேநேரத்தில் நீதிமன்ற உத்தரவை அவர்களால் மீற முடியவில்லை. [தேர்தல் நடத்தப்பட வேண்டும்]. எனவே அவர்கள் ஒரு புத்திசாலித்தனமான தீர்மானத்தை எடுத்தனர். சரி, நாங்கள் தேர்தலை நடத்துவோம், எனினும் தேர்தல் முறைமை ஏற்றுக் கொள்ள முடியாதது. தேர்தல் முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் தீர்மானம்.

அந்தத் தருணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியாளர்களுக்கு ஆதரவாளராக இருந்தது. தமிழ்க் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியது. அவர்கள் 16 ஆசனங்களை கொண்டிருந்தனர். அவர்கள் வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல இலங்கையின் அனைத்து மக்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தினர். அதை வேண்டுமென்றே செய்து விட்டு இப்போது இந்திய அரசை வசீகரிக்கின்றனர்.

மூலம்: Sri Lanka-India ties at high point, concerns about Chinese presence in country ‘consigned to past’: G L Peiris

Tags: