உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 3

அப்துல்

க்ரைன் எல்லையில் போர் பதற்றம் உருவாக்கப்பட்டது பற்றியும், அதன் மையமாக இருக்கும் அமெரிக்க உலக மேலாதிக்கத்தைப் பற்றியும் முந்தைய பகுதிகளில் பார்த்தோம்.

இந்தப் பிரச்சினையின் எதிர்க்கூறான, ரசியாவும் உக்ரைனும் என்ன நிலையில் உள்ளன?

1. சோவியத் யூனியனின் உடைவும் அதற்குப் பிந்தைய ரசியாவும்

1991-ல் சோவியத் யூனியன் உடைந்து ரசியா, உக்ரைன், பெலோருஸ், மால்டாவியா (ஐரோப்பிய குடியரசுகள்), ஜார்ஜியா, உஸ்பெக், கசக், அஜர்பைஜான், கிர்கிஸ், தஜிக், ஆர்மீனியா, டர்க்மென், (மத்திய ஆசிய குடியரசுகள்) லித்துவேனியா, லத்வியா, எஸ்டோனியா (பால்டிக் குடியரசுகள்) ஆகிய 15 சோசலிச குடியரசுகளும் தனித்தனி நாடுகளாக பிரிந்தன.

ஆனால், ரசியாவிலும், உக்ரைனிலும், பிற முன்னாள் சோவியத் குடியரசுகளிலும் முதலாளித்துவ கும்பல்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின. இந்த நாடுகளின் பொருளாதாரங்களில் முதலீடு செய்து கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக முதலாளித்துவ கும்பல்களுடன் அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய நாடுகளும் ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டன. முன்னாள் சோவியத் குடியரசுகள் அனைத்திலும் பொருளாதார வீழ்ச்சியும், அரசியல் நெருக்கடிகளும், சமூகக் குழப்பமும் தலைவிரித்து ஆடின.

ஆனால், 2000-ம் ஆண்டில் ரசியாவில் விளாடிமீர் புட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 20 ஆண்டுகளில் 8 ஆண்டுகள் அதிபராகவும் அடுத்த 4 ஆண்டுகள் பிரதமராகவும், மீண்டும் அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். ரசியாவின் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்களையும், அணு ஆயுதங்களையும், ஆயுத உற்பத்தித் தொழிலையும் உந்துதலாகக் கொண்டு ரசிய முதலாளித்துவ நலனை உலகச் சந்தையில் நிலைநாட்ட ஆரம்பித்தார்.

ரசியாவின் பொருளாதார அடித்தளமாக இருப்பது எண்ணெய் மற்றும் எரிவாயு வளம். ரசியாவிலிருந்து இறக்குமதியாகும் எரிவாயு மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படுகிறது. ரசியாவிலிருந்து அதிக அழுத்தம் கொண்ட குழாய்களின் மூலம் மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவுக்குச் செல்லும் ஐந்து பெரும் எரிவாயுக் குழாய்கள் பெலாரஸ், உக்ரைன் முதலான முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் வழியாகவே செல்கின்றன.

எனவே, இந்த முன்னாள் சோவியத் குடியரசுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது அமெரிக்காவுக்கு அவசியமாக உள்ளது. அதன் மூலம் ரசியாவை பலவீனப்படுத்தி ஏகபோக மூலதனத்தை விரிவாக்கி ரசியாவுக்குள்ளும் ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிக்கிறது. குறிப்பாக, எரிசக்தித் துறையில் தனது மேலாதிக்கத்தைத் தொடர்வதற்கு ரசியாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்றி கட்டுப்படுத்துவது அமெரிக்காவுக்கு அவசியமாக உள்ளது.

இதன்படி, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்க தலைமையிலிருக்கும் இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும், முன்னாள் சோவியத் குடியரசுகளையும் ஒவ்வொன்றாக தம்முள் இழுக்க ஆரம்பித்தன. ரசியாவை தனிமைப்படுத்த முயற்சித்தன. போலந்து, லித்துவேனியா, லட்வியா, எஸ்டோனியா, செக் குடியரசு, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஹங்கேரி, ரொமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகள் மேற்கத்திய பொருளாதார, இராணுவ மண்டலங்களுக்குள் கொண்டு வரப்பட்டன.

இவ்வாறு, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய கட்டமைவு எரிசக்தி வளத்தை கட்டுப்படுத்தவதை உறுதிப்படுத்துவதற்கான கொள்கையின் அடுத்த இலக்காக இருந்தது உக்ரைன்.

2. முதலாளித்துவ குடியரசாக உக்ரைன் எதிர்கொண்ட பேரழிவுகள்

உலகின் மிக வளமான விவசாய பகுதிகளில் ஒன்றான உக்ரைன் ரசியாவை ஒட்டிய ஸ்லேவிய நாடுகளில் ஒன்று. அதன் நிலப்பரப்பு தமிழ்நாட்டைப் போல சுமார் ஐந்து மடங்கு பெரியது. அதன் மக்கள்தொகை தமிழ்நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் சற்று அதிகமாக மட்டுமே உள்ளது (சுமார் 4.8 கோடி) . ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது அளவில் பிரான்ஸ் நாட்டை விட பெரியதாகவும், ஜெர்மனியின் மக்கள் தொகையில் பாதியையும் கொண்டிருக்கிறது.

உலக அளவில், 7 சதவீதம் முதல் 14 சதவீதம் புராதன உயிர்ச்சத்து அடங்கியிருக்கும் செர்னோஜெம் என்ற கருநிற மண் வகையின் மூன்றில் ஒரு பகுதி உக்ரைனில் உள்ளது. இந்த வகை மண் பெருமளவு ஊட்டச் சத்துக்கள் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், உயர் நீர்த் தேக்கத் திறனும் கொண்டது. சோவியத் சோசலிச குடியரசுகளின் தானியம், இறைச்சி, பால், காய்கறிகள் உற்பத்தியில் 25% பங்களித்து வந்த உக்ரைன் சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டது.

சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியமாக விளங்கிய உக்ரைனில் ஆயுதத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளும், சுரங்க மற்றும் தொழில்துறையில் பயன்படும் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் செழித்திருந்தன.சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, சுதந்திர குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகு, உக்ரைன் மக்கள் முதலாளித்துவ சிறுகும்பலால் சூறையாடப்பட்டனர். அவர்கள் நாட்டின் சொத்துக்களையும் வளங்களையும் தனியார்மயமாக்கி கொள்ளை இலாபம் குவித்தனர்.

உக்ரைன் தனிநாடான அடுத்த பத்தாண்டுகளில் அதன் ஜிடிபி 60% வீழ்ச்சியடைந்தது. 2000 ஆண்டுக்குப் பிறகு ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி சிறிதளவு ஏற்பட்டாலும், உலகளாவிய நிதி நெருக்கடியின் தாக்கத்தால் 2009-ம் ஆண்டு உக்ரைனின் பொருளாதாரம் 15% சுருங்கியது. வரலாற்று ரீதியாக சோவியத் சோசலிச குடியரசாக சாதித்த உச்சகட்ட ஜிடிபி அளவை உக்ரைன் மீண்டும் அடையவேயில்லை.

21-ம் நூற்றாண்டில், விளாடிமீர் புட்டினின் ரசிய ஆதரவு அரசு, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு அரசு என்று மாறி மாறி அதிகாரத்துக்கு வந்த அரசுகள் முதலாளித்துவ கும்பல்களின் பொருளாதார சூறையாடலுக்கு பின்புலமாக இருந்தன.

2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விக்டர் யனுகோவிச் ரசியாவுடன் நெருக்கமான உறவுகளை ஆதரிப்பவர். ஆனால், தேர்தலில் மோசடி நடந்ததாக தெருப்போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவர் பதவியிலிருந்து கீழ் இறக்கப்பட்டார்.

பின்னர் நடந்த மறுவாக்கெடுப்பில் எதிர்த்துப் போட்டியிட்ட “நமது உக்ரைன்” கட்சியைச் சேர்ந்த ஐரோப்பிய சார்பு விக்டர் யுஷென்கோ ஆட்சியில் அமர்த்தப்பட்டார். அவர் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நெருக்கமாக இணைக்க முயற்சித்தார். ரசியாவின் எதிர்ப்புகளை மீறி அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் ஒப்பந்தங்களை போட முயற்சித்தார்.

ஆனால், 2010-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் விக்டர் யனுகோவிச் மீண்டும் அதிபரானார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் உக்ரைன் நலன்களுக்கு எதிரானதாக இருப்பதாகச் சொல்லி அது தொடர்பான பேச்சு வார்த்தைகளை அதிபர் விக்டர் யனுகோவிச் முறித்துக் கொண்டார்.

அதே நேரம், உக்ரைனிய முதலாளித்துவ சிறுகும்பல் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உக்ரைன் மக்களை கிளர்ந்தெழச் செய்தது. அரசு நிர்வாகத்தில் நிலவிய மோசமான ஊழலை எதிர்த்து மக்கள் அணி திரட்டப்பட்டனர்.

3. 2014-ல் உக்ரைனில் நடத்தப்பட்ட ஒரேஞ்சு புரட்சி

உக்ரைனின் தலைநகர் கீவ் நகரத்தில் தெருப் போராட்டங்கள் தொடங்கின. ஐரோப்பிய ஆதரவு எதிர்க்கட்சிகள் தரப்பில் பாசிச கட்சிகளான ஸ்வோபோடா, டிரிசுப் போன்ற வலதுசாரி பயங்கரவாத குழுக்களும் போராட்டங்களில் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த அமைப்புகள் உக்ரைனிய இனவாதத்தை முன் வைப்பவை. யூதர்களுக்கும் ரசியர்களுக்கும் எதிரான இன வெறுப்பை உமிழ்பவை; புதிய நாஜி கொள்கைகளை பிரச்சாரம் செய்பவர்கள்.

ஒரேஞ்சு புரட்சி நடத்திய அமைப்புகளின் தொண்டர்கள், தலைநகர் கீவ் நகரின் “சுதந்திர மைதானத்தை” ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்; அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டனர்; கலவர எதிர்ப்பு போலீசை, பெட்ரோல் வெடிகுண்டு, துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கினர்.

2014-ல் உக்ரைன் தலைநகரம் கீவ் நகரில், “மைதான்” என்று அறியப்பட்ட சுதந்திர சதுக்கத்தில் அரசு எதிர்ப்பாளர்களின் நாசவேலைகள்.

போராட்டக்காரர்களுக்கு மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பணமும் ஆயுதங்களும் தடையின்றி வழங்கப்பட்டது. போராட்டக்காரர்கள் கட்டவிழ்த்து விட்ட வன்முறை கலவரங்களில் 88 பேர் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி சீமாட்டி ஆஸ்டன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலர் விக்டோரியா நியூலாண்ட் ஆகியோர் போராடும் கும்பல்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

“இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்களில் பலர் அரசு படையினரால் கொல்லப்படவில்லை, மாறாக எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த தொலைதூர துப்பாக்கி குறியர்களால் (ஸ்னைப்பர்கள்) இறந்தார்கள்” என்ற தகவல், ஐரோப்பிய ஆதரவு எஸ்டோனிய வெளியுறவுத் துறை அமைச்சர் உர்மாஸ் பேட், சீமாட்டி ஆஸ்டனிடம் பேசும் தொலைபேசி உரையாடல் மூலம் அம்பலமானது.

தொடர்ச்சியான உள்நாட்டு குழப்பத்தின் காரணமாக விக்டர் யனுகோவிச் ஆட்சி கவிழ்க்கப்பட்டது, அவர் ரசியாவுக்கு தப்பிச் சென்றார். உக்ரைனில், மேற்கத்திய ஆதரவுடன் இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.

4. மேற்கத்திய ஆதரவு இனவாத அரசும், பிரிந்து சென்ற ரசிய பகுதிகளும்

2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறுபான்மை இனத்தவருக்கும், மொழியினருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது, உக்ரைன் அரசு. அதன்படி இனிமேல் உக்ரைனிய மொழி மட்டுமே நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும்.

தேசிய சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும், நாட்டை மேற்கத்திய நாடுகளின் பிடியில் ஒப்படைக்கும் இந்த நடவடிக்கைகளை நாட்டின் தெற்கு, தென்கிழக்கு பகுதிகளில் ரசிய மொழி பேசும் மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.

உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள 15 லட்சம் ரசிய மொழி பேசும் மக்கள் வாழும் கிரீமியா தீபகற்பம் 1954-ம் ஆண்டு அப்போது சோவியத் குடியரசாக இருந்த உக்ரைனுடன் சேர்க்கப்பட்டிருந்தது. 1990-களில் சோவியத் யூனியன் வீழ்ந்து ரசியாவும், உக்ரைனும் தனி நாடுகள் ஆன பிறகு 1997-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கிரீமியாவில் அப்போது இருந்த கருங்கடல் பகுதி கப்பற்படையில், 82% ரசியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, செவஸ்தபோல் துறைமுகம் ரசியாவின் பயன்பாட்டில் விடப்பட்டது. அதற்கு பதிலாக உக்ரைனுக்கு நிதி உதவி, கடன் தள்ளுபடி ஆகியவற்றை ரசியா வழங்கியது. செவஸ்தபோல் துறைமுகத்துக்கான பயன்பாட்டுக் கட்டணத்தையும் ரசியா செலுத்தி வந்தது.

சுயஆட்சிப் பிரதேசமான கிரீமியா, மேற்கத்திய ஆதரவு இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது: உக்ரைனிலிருந்து பிரிந்து ரசியாவில் இணைவதற்கான கருத்துக் கணிப்பை நடத்தி ரசியாவுடன் இணைவதாக அறிவித்தது.

கிரீமியாவின் மக்கள் உக்ரைனில் இருந்து பிரிவதாக பெருவாரியாக வாக்களித்தனர். கிரீமிய நாடாளுமன்றம் ரசியாவுடன் இணைக்கும்படி தீர்மானம் நிறைவேற்றியது (2014)

இதைத் தொடர்ந்து, உக்ரைனின் கிழக்கு எல்லையில் உள்ள டான்பாஸ் பகுதியில் உள்ள டோனட்ஸ்க், லுகான்ஸ்க் என்ற 2 மாகாணங்கள் உக்ரைனில் இருந்து பிரிந்து போவதாக அறிவித்தன.

5. தாராளவாத முதலாளித்துவ சொர்க்கத்தில் உக்ரைன் எதிர்கொண்ட பொருளாதார தாக்குதல்கள்

2014-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் மேற்கத்திய ஆதரவு பெட்ரோ பொரோஷெங்கோ வெற்றி பெற்றார். ரசியாவுடனான உறவுகளை துண்டித்துக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடனும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய கட்டமைப்புடனும் நெருக்கமாகும் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன.

ரசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதைத் தடுப்பதற்கு அமெரிக்கா உக்ரைன் அரசை பயன்படுத்தியது. ரசியாவைச் சார்ந்திருப்பதிலிருந்து மேற்கத்திய நாடுகளை சார்ந்திருகுகம்படி உக்ரைன் மறுசீரமைக்கப்பட்டது. உக்ரைனின் பொருளாதார மறுசீரமைப்புக்காக அமெரிக்கா தலைமையிலான நிதி நிறுவனங்கள் கடன் உதவி அளித்தன.

பெட்ரோ பொரோஷெங்கோ அரசு ஐஎம்எஃப்-யிடம் நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பித்தது. வரிகளை ஜிடிபியில் 0.5% அளவுக்கு உயர்த்துவது, எரிசக்திக் கட்டணங்களை உயர்த்துவது, ஓய்வூதியத்துக்கு தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 2014-ல் ஜிடிபியில் 20% ஆக இருந்த சமூக நல செலவினங்கள் 2022-ல் 13% ஆக வெட்டப்பட்டன.

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, வங்கிகளில் அரசின் பங்கு உடைமையைக் குறைப்பது ஆகியவற்றையும் ஐ.எம்.எஃப் நிபந்தனைகளாக விதித்துள்ளது. 2025-க்குள் வங்கிகளில் அரசு பங்குடைமையை 25% ஆகக் குறைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனங்களுக்கு உக்ரைன் சந்தை திறந்து விடப்பட்டது, உக்ரைனின் வளமான விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் குறி வைத்தன.

விவசாய நிலங்களை வாங்குவதற்கு லாபகரமான 10 நாடுகளில் உக்ரைன் ஒன்று என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது, உக்ரைன். கோதுமை உற்பத்தியில் 4-வது பெரிய நாடாக உள்ளது. சுமார் 30% மக்கள் இன்னும் கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். 14% உழைப்பாளர்கள் விவசாயத்தில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

உக்ரைனில் விளைநிலங்களை அன்னிய நிறுவனங்கள் வாங்குவது தடை செய்யப்பட்டிருந்தாலும், உக்ரைனிய நிறுவனங்கள் 10,000 ஹெக்டேர் (25,000 ஏக்கர்) வரை நிலம் வாங்க அனுமதிக்கப்பட்டன. இதன் மூலம் 4.27 கோடி ஹெக்டேர் (சுமார் 10.3 கோடி ஏக்கர்) நிலம் தனியார் வர்த்தகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இது இத்தாலி நாட்டின் நிலப்பரப்புக்கு சமமானது.

6. உக்ரைன் பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் மக்களின் வாழ்நிலை நெருக்கடியும்

இதற்கிடையில், பெட்ரோ பொரோஷெங்கோ ஆட்சியில் ரசியாவுடன் மோதல் தீவிரமடைந்தது. உள்நாட்டில் இனவாத கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. புதியதாராளவாத கொள்கைகள் மூலம் மக்கள் வாழ்க்கை மேலும் நெருக்கடியை எதிர்கொண்டது.

உக்ரைனில் சராசரி வருடாந்திர உண்மைக் கூலி 1990-ல் சுமார் 22,000 மட்டத்திலிருந்து வீழ்ச்சியடைந்து, 2019 வாக்கில் 19,000 அளவில் உள்ளது. அதாவது, சோவியத் சோசலிச குடியரசில் இருந்த கூலி மட்டத்தை விட இப்போதைய சராசரி கூலி சுமார் 13% குறைவாக உள்ளது.

உக்ரைனில் பணக்கார 10% பேர் மிக ஏழ்மையான உக்ரைனியர்களை விட 40 மடங்கு அதிக செல்வத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். உக்ரைன் மக்களிடையை வேலையின்மை வீதம் 10% ஆக உயர்ந்தது.

7. நகைச்சுவை நடிகர் விளாடிமைர் செலன்ஸ்கியும் அமெரிக்க அரசியல் முரண்பாடும்

இந்நிலையில், பெட்ரோ பொரோஷென்கோ அரசு மக்கள் ஆதரவை இழந்தது. ஏப்ரல் 2019-ல் நடந்த அதிபர் தேர்தலில் மேற்பத்திய ஆதரவு பெட்ரோ பொரோஷெங்கோ தோற்கடிக்கப்பட்டார். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நகைச்சுவை நடிகரான விளாடிமைர் செலன்ஸ்கி ரசியாவுடன் மோதலை முடித்து அமைதி ஏற்படுத்தப் போவதாகவும், உக்ரைனின் கிழக்கில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் வாக்களித்திருந்தார்.

அந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரை முழு வீச்சில் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார். டொனால்ட் டிரம்ப் பிரநிதித்துவப்படுத்தும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவு, “அமெரிக்கா முதலில்” என்ற கொள்கையை முன் வைத்து அமெரிக்காவின் வெளிநாட்டுச் செலவுகளை குறைக்க வேண்டும் என்று வாதிட்டனர். எனவே, எரிசக்தித் துறையில் ரசியாவுக்கு எதிரான அமெரிக்க செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் மட்டுப்பட்டன. எனவே, உக்ரைன் அரசும் ரசியாவுடன் உடன்பாடு ஏற்படுத்தும்படி கூறப்பட்டது.

ஆனால், 2021-ல் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டது. எரிசக்தித் துறையில் அதிகரித்து வரும் ரசிய செல்வாக்கைக் குறைப்பது ஜோ பைடன் பிரதிநித்துவப்படுத்தும் உலக மேலாதிக்க அரசியலுக்கு அவசியமாக இருந்தது. ரசியாவும் ஐரோப்பிய நாடுகளும் எரிசக்தி வளங்களை வர்த்தகம் செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமாக யூரோவை பெருமளவு பயன்படுத்த ஆரம்பிப்பதன் மூலம் அமெரிக்க டொலரின் உலகளாவிய மேலாதிக்கமும் பலவீனப்படும்.

அதைத் தடுப்பதும் ஜோ பைடனின் அரசியல் பொருளாதாரக் கொள்கைக்கு அடிப்படையாக உள்ளது.

மறுபுறம், பொருள் உற்பத்தித் துறையிலும், உயர்தொழில்நுட்பத் துறையிலும் சீனாவுடன் போட்டி போடுவதிலும் அமெரிக்கா மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. ஆப்பிரிக்காவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும், தென் அமெரிக்காவிலும் சீனாவின் பொருளாதார செல்வாக்கு அதிகரிப்பதை அமெரிக்காவால் தடுத்த நிறுத்த முடியவில்லை.

இதற்கிடையில், நிதித்துறை, எரிசக்தித் துறை முதலாளிகளின் தரப்பில் அமெரிக்கா உலகெங்கும் நடத்தும் குற்றச் செயல்கள் அமெரிக்க உழைக்கும் மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்களும், ஏகாதிபத்திய கொள்கையும் உள்நாட்டில் கீழ்மட்ட 50% மக்கள் மீது கடும் பொருளாதார சுமையை சுமத்தியுள்ளது.

இவ்வாறு, முதலாளித்துவத்தின் தீர்க்கமுடியாத முரண்பாடுகளின் ஏகாதிபத்திய பரிணாம வடிவத்தில் அமெரிக்கா சிக்கிக் கொண்டுள்ளது. அதிலிருந்து வெளியில் வருவதற்கும் உள்நாட்டு நெருக்கடியை சமாளிப்பதற்கும் போரை தூண்டுவது அமெரிக்காவுக்கு அவசியத் தேவையாக உள்ளது. தோற்றுப் போன உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் இன்னும் ஒரு பலியாடாக உக்ரைன் மக்களின் வாழ்வு சீரழிக்கப்படுகிறது.

உக்ரைனில் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள செல்வங்களை எல்லாம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் நெருக்கடிக்குள் தள்ளுகிறது, இந்த முதலாளித்துவக் கட்டமைப்பு. இயற்கை வளங்களை இலாப நோக்கத்திற்காக சூறையாடுகிறது, இயற்கை வளங்களை கைப்பற்றி கட்டுப்படுத்துவதற்கான போட்டியில் போர்களில் இறங்குகிறது. ஏராளமான செல்வங்களை ஆயுத உற்பத்தியிலும், நிதித்துறை சூதாட்டத்திலும் வீணாக்குகிறது.

உழைக்கும் மக்கள் உணர்வுரீதியாக திட்டமிட்டு சமூக உற்பத்தியையும் சமூக வாழ்வையும் ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கு மாறிச் செல்ல வேண்டிய அவசியத்தை இத்தகைய நெருக்கடிகள் மேலும் வலியுறுத்துகின்றன.

முற்றும்.

பகுதி 1 – பகடைக்காயாகிய உக்ரைன்.
பகுதி 2 – அமெரிக்க உலக மேலாதிக்கத்தின் பரிணாம வளர்ச்சியும் அது எதிர்கொள்ளும் சவால்களும்.

Tags: