சனாதன ஒழிப்பு ஒரு கலாச்சாரப்புரட்சி! – பகுதி 2

பாஸ்கர் செல்வராஜ்

ஆங்கிலேயர்களால் அளவாக உடைந்த சாதியச் சமூக ஒழுங்கு

அதன்பின்பு வந்த முகலாயர்கள் இந்த உற்பத்தியில் அது சார்ந்த நிலத்தில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாத நிலையில் அவர்கள் கொண்டுவந்த இசுலாமிய மதத்தையும் சாதியைக் கொண்டதாக இந்த பார்ப்பனியம் மாற்றியதே தவிர அவர்களால் இந்தப் பார்ப்பனிய சாதிய ஒழுங்கில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்த முடியவில்லை.

அவர்களைத் தொடர்ந்து வந்த ஐரோப்பியர்கள் அவர்களின் தேவையைப் பொறுத்து இந்த நிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி இந்தச் சாதிய ஒழுங்கில் ஒரு உடைப்பை ஏற்படுத்துகிறார்கள். இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியும் போட்டி முதலாளித்துவமும் அவர்களின் கீழிருந்த இந்தியாவுக்கு வருகிறது. அதுசார்ந்து பெருகிய பணப்புழக்கம், கல்வி, வேலை இங்கே பொதுச்சட்டம், நீதி, தண்டனை முறையைக் கொண்ட புதிய ஒழுங்கை உருவாக்குகிறது.

அப்படியென்றால் அப்போதே நால்வர்ண சாதிய ஒழுங்கு முற்றிலுமாக உடைக்கப்பட்டுவிட்டதா என்று கேட்டால் இல்லை என்று மறுக்கிறார் அம்பேத்கர். ஆங்கிலேயர்கள் நால்வர்ண முறையைச் சட்டத்திற்கு புறம்பான தண்டனைக்குரிய குற்றமாக மாற்றவில்லை; பதிலாக அதனைச் சட்டரீதியாக அங்கீகரிக்காமல் பொதுவாக அமலில் இருந்த அந்த சட்ட நெறிமுறையை திரும்பப் பெற்றிருக்கிறார்கள் (withdraw) அவ்வளவுதான் என்கிறார். (vol.7page 13).

காரணம் நிலத்தை மையமாகக்கொண்ட பார்ப்பனிய ஒழுங்கை இங்கிருக்கும் மக்கள் போராடி உடைத்து அதன் மையமான நிலத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொள்ளவில்லை. மாறாக ஆங்கிலயர்களின் தேவையின் பொருட்டு அளவாகவே அது உடைக்கப்பட்டது. இதோடு இந்திய விடுதலை வரைக்கும் 562 சிற்றரசுகள் இருந்ததையும் சேர்த்துப் பார்க்கும்போது அன்றைய சமூக ஒழுங்கு முதலாளித்துவ ஜனநாயகமும் பார்ப்பனிய நால்வர்ணமும் கலந்த கலவையாக இருந்ததில் ஆச்சரியமில்லை.

ஏகாதிபத்தியகால கலவை ஒழுங்கு

விடுதலைக்குப் பிறகுதான் தீண்டாமை தண்டனைக்குரிய குற்றமாகிவிட்டதே! தொண்ணூறுகளுக்குப் பிறகு நமது உற்பத்தியும்பெருமளவு தொழிற்துறைக்கு மாறிவிட்டதே! எவரும் எந்தத் தொழிலையும் செய்யமுடியும் நிலை ஏற்பட்டுவிட்டதே! பிறகு எப்படி இவர்கள் பார்ப்பனிய இந்துமதத்தைக் கொண்டு இந்தியாவை ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்று கேட்கலாம்.

இப்போது நடைமுறையில் இருப்பது உலகப்போர்களுக்கு முந்தைய போட்டி முதலாளித்துவ உற்பத்தியல்ல; மூலதனமும் உற்பத்தித் தொழில்நுட்பங்களும் ஒருசிலரிடம் குவிந்து அவர்களின் ஆதிக்கம் நிறைந்த ஏகாதிபத்திய உற்பத்தி.

அன்று நிலத்தைத் தன்னிடம் குவித்துக்கொண்டு உற்பத்தியைக் கைப்பற்றி சாதிய சமூக ஒழுங்கை ஏற்படுத்தி அதில் முதல் மூவர்ணம்உண்டு வாழ்ந்ததைப்போல இன்று தொழிற்துறை உற்பத்தியை விடுதலைக்குப் பிறகு டாட்டா-பிர்லாவிடமும் இப்போது அம்பானி-அதானி போன்ற ஒருசிலரிடம் குவித்து தங்களது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டி நமது உழைப்பில் உண்டுகொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது நடைமுறையில் முற்போக்கான முதலாளித்துவ உற்பத்தியும்,பெயரளவுக்குச் சமமான ஜனநாயக சட்ட ஒழுங்கும், நடைமுறையில் பிற்போக்கான சாதிய சமூக வாழ்வும் கொண்ட பஞ்சாமிர்தக் கலவையாக (cocktail) இங்கே வெளிப்படுகிறது.இது இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறதா என்று கேட்டால் இங்கிலாந்து, ஸ்பெயின், ஜப்பான், தாய்லாந்து போன்ற பல ஐரோப்பிய-ஆசிய நாடுகளிலும் இந்த ஜனநாயகமும் மன்னர்களும் இணைந்த கலவைத்தன்மை இருக்கிறது.

ஆனால் இந்நாடுகளில் நிலவுடைமை சமூக ஒழுங்கிலும் அரசியலிலும் செலுத்தும் ஆதிக்கத்தின் அளவுகளில் மட்டும் வேறுபாடு நிலவுகிறது. அதேசமயம் நிலவுடைமையுடன் சமரசம் செய்யாமல் புரட்சிகரப் பாதையில் நிலப்பிரபுத்துவ உற்பத்தியைத் தூக்கியெறிந்த பிரான்ஸ், ரஷ்யா சீனா போன்ற நாடுகளில் இது இல்லாததும் இங்கே கவனிக்கத்தக்கது. அப்படியென்றால் இந்தச் சமூகங்களில் எல்லாம் நிலவுடைமைகால மதத்தின் ஆதிக்கம் இல்லாமல் போய்விட்டதா என்றால் நிச்சயமாக இல்லை.

சமூக மாற்றத்திற்கு அவசியம் கலாச்சாரப் புரட்சி

பொதுவாக ஒரு உற்பத்திமுறையில் இருந்து அடுத்த உற்பத்தி முறைக்கு மாறும்போது அது சார்ந்த புதிய சமூக ஒழுங்கும் மதிப்பீடுகளும் ஏற்படுகிறது. உற்பத்தி மாற்றம் சமச்சீரற்ற செல்வப்பகிர்வைக் கொண்டிருப்பதால் சமூக மாற்றம் மெதுவானதாகவும் சமச்சீரற்றதாகவும் இருக்கிறது. நிலவுடைமையுடன் சமரசம் செய்துகொண்டு ஆமை வேக சீர்திருத்தப் பாதையில் நாம் செல்ல புரட்சிகர பாதையில் நிலப்பிரபுத்துவத்தைத் தூக்கியெறிந்த ரஷ்யாவும் சீனாவும் அதிவேகமாக தொழிற்துறை உற்பத்தி மாற்றம் கண்டன.

அதனுடன் உருவான மூலதனத்தைத் தனதாக்கிக் கொள்ளும் சுயநலம், பேராசை, போட்டி, பொறாமை அங்கே ஏற்பட்டு அது சமூகத்திலும் கட்சியிலும் எதிரொலித்தது. அதனை அதிகாரத்தின் மூலம் எதிர்கொண்டு கட்சியில் இருந்த முதலாளித்துவவாதிகளை ஒடுக்கினார் சோவியத்தின் ஸ்டாலின்.

அதனை மறுதலித்த சீனாவின் மாவோ மக்களை ஒருங்கிணைத்து கட்சியில் இருந்த முதலாளித்துவவாதிகளையும் அதற்கு இசைவாக மக்களிடம் நிலவும் பிற்போக்கான மதிப்பீடுகளை எதிர்த்தும் போராடும் கலாச்சாரப் புரட்சியை முன்வைத்தார். அதிலும் வன்முறை பயன்படுத்தப்பட்டதும் அதனை அவர் கண்டித்ததும் தனிக்கதை.

இந்தக் கலாச்சாரப் புரட்சியின் மூலம் பிற்போக்குவாதிகள் கோரிய முதலாளித்துவ உற்பத்திக்கு மாற்றாக சோசலிசத்தையும் மக்களிடம் நிலவிய பழைய நிலபிரபுத்துவ முதலாளித்துவ மதிப்பீடுகளுக்கு மாற்றாக சோசலிச மதிப்பீடுகளையும் முன்வைத்தார். மேலும் ஒரு கலாச்சாரப் புரட்சியல்ல நீடித்த பல கலாச்சாரப் புரட்சிகளை செய்யவேண்டும் என்றார்.

போராட்டமின்றி பின்தங்கிய சமூக வளர்ச்சி

அவர் மறைவுக்குப்பின் கலாச்சாரப் புரட்சியைக் கைவிட்ட சீனா பேச்சில் சோசலிசமும் நடைமுறையில் ஒரு சில நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் மாறியிருக்கிறது. சோவியத் உடைவுக்குப்பின் நிலவுடைமைகால கிறிஸ்துவத்தில் மக்களை ஆழ்த்தி சில பணமுதலைகள் இன்று ரஷ்யாவை ஆள்கின்றன. தெற்கைப்போல சாதிக்கெதிரான போராட்டமற்ற வடக்கு முன்னேற்றமின்றி தேங்கி நிற்பதைப் பார்க்கிறோம்.

பெரியாருக்குப்பின் பார்ப்பனிய எதிர்ப்பு சுணங்கியதால் தமிழக மக்கள் சாதியிலும் பக்தியிலும் மூடத்தனங்களிலும் மூழ்கிக் கிடப்பதும் சங்கிகள் அதன்மூலம் இந்துத்துவ அரசியல் செய்து காலூன்றுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் நடப்பில் இருக்கும் உற்பத்திமுறையை மாற்றும் பொருளாதாரத்தை முன்னிறுத்திய அரசியல் புரட்சி மட்டுமல்ல, அதனோடு உருவாகி மக்களிடம் நிலைத்திருக்கும் பழைய பண்பாட்டுப் பழக்கவழக்கங்களுக்கு எதிரான நீடித்த கலாச்சாரப்புரட்சியும் அவசியம் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்கின்றன.

தேவை அரசியல் கலாச்சாரப் போராட்டம்

பெரும்பாலான இந்திய இடதுசாரிகள் உற்பத்தி தொழில்மயமாகிவிட்டதால் மாவோவைப்போல சோசலிச புரட்சிக்கு அழைப்பு விடுத்து சமூகத்தில் நிலவும் சாதிய கலாச்சாரத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்கின்றனர். சமூகத்தில் நான்கில் மூன்று பங்கினர் சத்தான உணவை உட்கொள்ள முடியாத நாட்டின் விவசாயம் வளர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்லமுடியுமா? தொண்ணூறு விழுக்காடு தொழிலாளர்கள் முறையான வேலையின்றி அத்துக்கூலிகளாக இருக்கும்போது சோசலிசம் அதற்கு தீர்வாகுமா?

முன்னர் நிலவுடைமை காலத்தில் பார்ப்பனியம் தொழிலை பிறப்புடன் இணைத்ததற்கும் விவசாய உற்பத்தி தேக்கத்திற்கும் இந்திய ஊட்டசத்துக் குறைபாட்டுக்கும் தொடர்பில்லையா? பின்னர் ஏகாதிபத்தியவாதிகளுடன் இணைந்துகொண்டு தொழிற்துறையையும் கைப்பற்றி சூத்திர-பஞ்சம மக்களை உள்ளே விடாமல் இப்போதுவரை தடுத்துக்கொண்டு நிற்பதை இல்லையென்று மறுக்கமுடியுமா?

ஆகவே இன்றையத்தேவை இந்த ஏகாதிபத்தியவாதிகளின் முற்றோருமையிலிருந்து தொழிற்துறை உற்பத்தியை விடுவிக்கும் அரசியல் போராட்டமும் இவர்களின் ஆதிக்கத்துக்கு ஆதாரமாகவும் விவசாய, தொழிற்துறை வளர்ச்சிக்கான திறன்மிக்கத் தொழிலாளர்களின் உருவாக்கத்துக்குத் தடையாகவும் சமூகத்தில் நிலவும் சாதியச் சிந்தனைக்கெதிரான போராட்டமும்தான்.

வரலாறு படைப்பது உறுதி

இந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் இன்ன தொழிலைத்தான் செய்யவேண்டுமென்ற நால்வர்ண சனாதன தர்மம் உடைந்தாலும் இந்தக்கால தொழிற்துறை உற்பத்திக்கான ஜனநாயக ஒழுங்கிற்கு சற்றும் தொடர்பற்றி சமூகத்திலும் கட்சிகளிலும் நிலவும் இந்தச் சாதிய சனாதன சிந்தனைக்கு எதிரான நமது போராட்டம் ஒரு கலாச்சாரப்புரட்சி.

இப்படியான போராட்டத்திற்கு அவர்களே நம்மை அழைத்ததும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களை வீழ்த்த முடிவெடுத்து தமிழகம் தனது வரலாற்றுக் கடமையைச் சிறப்புறச் செய்கிறது. இதன்மூலம் எதிரிகளை வீழ்த்திசாதியச் சமூகநீதியை இந்தியா முழுக்க நிலைநாட்டும் பட்சத்தில் அது இந்தியாவின் புதிய வரலாறாக எழுதப்படப்போவது உறுதி.

ஆனால் நம்மில் சில முற்போக்காளர்களும் வடக்கின் பிற்போக்கு அரசியல்வாதிகளும் ஐயகோ! இது வடக்கில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி 2024 தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்று கூக்குரலிடுகிறார்கள்.

இது விடுதலைக்கு முன்பு எழுந்த அரசியல் மாற்றமா? சமூக மாற்றமா? என்ற கேள்வியை மீண்டும் எழுப்புகிறது. அன்று அதற்கு அம்பேத்கர் சொன்ன பதிலென்ன? பெரியாரின் தெரிவென்ன? அதனால் நாம் கண்ட மாற்றமென்ன?

அடுத்த கட்டுரையில் காணலாம்.

சனாதன ஒழிப்பு ஒரு கலாச்சாரப்புரட்சி! – பகுதி 1

Tags: