வர்க்கப் போராட்டத்தின் ஆசான் தோழர் பி.ராமமூர்த்தி: சில நினைவுகள்

டி.கே.ரங்கராஜன்

1961 ஆம் ஆண்டு திருச்சியில் நடை பெற்ற சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் மாநாட்டில்தான் தோழர் பி.ராமமூர்த்தியின் உரையை முதன்முதலாகக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றேன். 1966 ஆம் ஆண்டு மே மாதம் மும்பையில் ஏ.ஐ.டி.யு.சி அகில இந்திய மாநாடு நடைபெற்றது. தமிழகப் பிரதிநிதிகளில் ஒருவராக நானும் பங்கேற்றேன். ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் என்ற முறையில் தோழர் எஸ்.ஏ.டாங்கே அறிக்கையை முன்மொழிந்து பேசினார். அது மிகவும் பொருத்தமாக இருப்பது போன்றே தோன்றியது. ஆனால்  அடுத்த நாள் விவாதம் துவங்கியபோது அறிக்கையின் மீது முதலாவதாக தோழர் பி.ராமமூர்த்தி உரையாற்றினார். அதன் பிறகுதான் அந்த அறிக்கையில் இருந்த குறைபாடுகள் எனக்கு மட்டுமல்ல; மாநாட்டின் பிரதிநிதிகளுக்கும் விளங்கியது. ஒரு அறிக்கை அல்லது ஆவணத்தின் சாதக, பாதகங்களை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டும் உரையாக அவரது உரை விளங்கியது.  அதன்பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இந்திய தொழிற்சங்க மையத்திலும் அவரோடு இணைந்து பணியாற்றிய தருணங்கள் மிகவும் அபூர்வமானவை. ஒரு பிரச்சனையை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல,  அதற்கு எவ்வாறு பொருத்தமான தீர்வு காண வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுவதில் தோழர் பி.ஆருக்கு நிகர் அவர்தான். 

திருச்சி பெல் ஆலையில் தொழிற்சங்க கூட்டுக் குழுவில் அவரோடு 8 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருடைய அனுபவமும்,  தொழிற்சங்க ஞானமும், அதை அடுத்த தலைமுறைக்கு கற்றுத் தரும் பாங்கும் வியக்கத்தக்க ஒன்று.  எம்.ஆர்.எப் நிறுவனத்தில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தின் போது தேசிய பாதுகாப்புச் சட்டம் எனப்படும் மிசா சட்டத்தின் கீழ் வி.பி.சிந்தன், பி.ஆர். பரமேசுவரன் உள்ளிட்ட தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிராக நீதிமன்ற வழக்கில் ஆஜராகி பி.ராமமூர்த்தி வாதாடினார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி, அராஜகம் செய்வதோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதோ எமது கட்சியின் நிகழ்ச்சி நிரல் அல்ல என்று ஆணித்தரமாக வாதிட்டார்.

அவர் ஒரு சிறந்த மார்க்சிய சிந்தனையாளர். பாட்டாளி வர்க்கத்தின் தலைவர் மட்டுமல்ல; அவர் வர்க்கப் போராட்டத்தின் ஆசான். ஒவ்வொரு வழக்கிலும், ஒவ்வொரு போராட்டத்திலும், ஒவ்வொரு பிரச்சனையிலும் முதலாளித்துவ கட்சிகளின் சுரண்டும் வர்க்கச் சார்பினை தயங்காமல் அம்பலப்படுத்தியவர்.  வரலாற்றில் தனிநபருக்கு ஒரு பாத்திரம் உண்டு என்பார் பிளக்கனவ். அதன்படி இந்திய  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் தனிநபர் பாத்திரம் என்பது வியக்கத்தக்கது. வழிகாட்டும் ஒளிவிளக்காக திகழக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் “கட்சித் திட்டத்தை” தோழர்கள் எம்.பசவபுன்னையா, ஹர் கிஷன்சிங் சுர்ஜித் ஆகியோரோடு இணைந்து உருவாக்கியவர்களில் ஒருவர். 

தோழர் பி.ராமமூர்த்தி பன்மொழி விற்பன்னர். அவருக்கு தமிழ்,  ஆங்கிலம், சமஸ்கிருதம்,  தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தெரியும். பஞ்சாபி மொழியிலும் அவருக்கு பரிச்சயம் உண்டு. இந்தப் பன்மொழி ஆற்றல் இந்தியாவைப் புரிந்து கொள்ளவும் நாட்டு மக்கள் அனைவரிடமும் தடையின்றி உரையாடவும் அவருக்கு பெருமளவில் உதவியாக இருந்தது.  இசையில் அவருக்கு ஆர்வம் உண்டு. இளம் வயதிலிருந்தே விளையாட்டுத் துறையிலும் அவர் ஆர்வமிக்கவராக இருந்தார்.  

தன்னுடைய இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு அவர் சென்றுள்ளார். பின்னர் ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தோடு அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது.  தமிழகம் முழுவதும் உள்ள கட்சித் தோழர்கள் அனைவரது குடும்பங்களோடும்,  அவ ருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. தோழர்களின் குடும்பங்களை தன்னுடைய குடும்பமாகவே கருதிய செம்மல் அவர்.  தன்னுடைய பொதுவாழ்வில் எட்டு ஆண்டுகள் சிறையிலும் ஐந்து ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்து செயல்பட்டுள்ளார்.  சிறையில் இருந்தபடியே மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி யில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து அவருக்கும், கட்சிக்கும் இருந்த செல்வாக்கை புரிந்து கொள்ள முடியும்.

Tags: