பகத்சிங் பெயரை உச்சரிக்காதீர்…ஜனநாயக முடக்கத்திற்கு துணை போகாதீர்!

-எஸ்.கண்ணன்

1931இல் தூக்கிலிடப்பட்ட பகத் சிங் இப்போது ஊடகங் களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறார். 92 ஆண்டுகள் கழித்து, அதே சித்தரிப்புகளுடன் தான் இப்போதும் விவாதிக்கப்படுகிறார். அவர் ஒரு வன்முறையாளர். எதிர்காலத்தை குறித்து எந்த ஒரு தீர்க்கமான பார்வையும் இல்லாத தனிநபர் என்ற கண்ணோட்டத்துடன் தான், 2023 டிசம்பர் 13 அன்று நாடாளுமன்ற அசம்பாவிதங்களின் ஊடாக பேசப்படுகிறார். தேசப்பற்று கொண்ட ஒவ்வொருவரும், இந்திய விடுதலையை அதன் போராட்ட உக்கிரத்திலிருந்து உணரும் ஒவ்வொரு இந்தியரும், பகத்சிங்கிடம் வன்முறையை காண்பதில்லை. வன்முறையற்ற, அனைவருக்குமான சமத்துவ வாழ்க்கையை  கனவு கண்ட பகத்சிங்கும் அவரின் தோழர்களின் கொள்கைகள் தான் காட்சிப்படும். 

ஏகாதிபத்திய சுரண்டல் எதிர்ப்பு
2023 நாடாளுமன்றத்தில் வீசப்பட்ட புகைக்குப்பிகள், பகத்சிங்கும் படுகேஸ்வர் தத்தும் 1929 ஏப்ரல் 8 அன்று வீசிய டமார் என்ற வெடிச்சத்தத்துடன் வீசப்பட்ட குண்டுகளுக்கும் வேறுபாடுகள் அதிகம். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால், நாடாளுமன்றத்தில் முன்மொழிய இருந்த தொழிலாளர் மசோதா குறித்து நாட்டு மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக வீசப்பட்டது, பகத்சிங் மற்றும் தத் ஆகியோரின் வெடியோசை. அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின், காலனியாதிக்க சுரண்டல் கொள்கையை எதிர்த்தது. ஏற்கனவே கொதி நிலையில் இருந்த விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் அன்றைய செயல்களை முன்னெடுத்தனர். தங்களுக்குள் பெரும் சர்ச்சையை நடத்தி பகத்சிங் மற்றும் படுகேஸ்வர் தத் ஆகியோரே பொருத்தம் என்பதை இந்துஸ்தான் சோசலிச குடியரசு படை முடிவு செய்தது. ஆக்ராவின் யமுனை நதிக்கரையிலும், டெல்லியின் கோட்லா மைதானம் அருகிலும் இதற்காக ஏராளமான விவாதங்களை அந்த புரட்சிகர இளைஞர் குழு நடத்தியது. 

வெடியோசையைத் தொடர்ந்த கைதும், சிறைவாசமும், நீதிமன்ற விசாரணைகளும், நாட்டுமக்களிடையே பெரும் கிளர்ச்சியை உருவாக்கியது. சிறைக்குள்ளிருந்த பகத்சிங் மற்றும் அவரின் தோழர்கள், கம்யூனிசத்தை புரிந்து செயல்பட்டனர். பகத்சிங் தன் சகோதரன் குல் தார் சிங்கிற்கு, 1931 மார்ச் 3,  அன்று  எழுதிய கடிதம் மற்றும் 1931 பெப்ரவரி 2 அன்று இளம் அரசியல் ஊழியர்களுக்கு எழுதிய கடிதம் ஆகியவை, இன்றைய இளைஞர்களும் பின்பற்ற வேண்டிய, தொலைநோக்கு பார்வைகளை உள்ளடக்கியவை. அவை மாபெரும் தத்துவ விசாரணைகளை உள்ளடக்கியவை. இந்திய விடுதலை குறித்த நுட்பமான இலக்கை வெளிப்படுத்துபவை. 

“இன்றைய சூழலில், எதிர்கால திட்டம் குறித்து விவாதிப்பது முக்கியம். அதன் அடிப் படையில், அமைப்புரீதியான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். புரட்சி என்பது, திடீரென, அமைப்பாக திரளாமல், அல்லது தன்னெழுச்சியாக நடக்கக் கூடியதல்ல. அது மூன்று கட்டமைப்புகளை கொண்டது. ஒன்று இலக்கு, இரண்டு இன்றைய சூழலில் எங்கிருந்து துவக்குவது என்ற புரிதல், மூன்று செயல்திட்டம் அதன் உள்ளடக்கம் மற்றும் வழிமுறை, ஆகியவை ஆகும்” என பகத்சிங் இளம் அரசியல் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் மிக தெளிவாகக் கூறியுள்ளார். 

நிச்சயம் பகத்சிங் வழி நடக்கும் செயல் வீரர்கள் இவற்றை தெரிந்திருக்காமல் களத்தில் இறங்க மாட்டார்கள். எனவே ஊடகங்கள் பகத்சிங் ஃபேன்ஸ் கிளப், பகத்சிங் மாடல் ஆகிய சொல்லாடல்களால் டிசம்பர் 13 நாடாளுமன்ற நிகழ்வுகளை வர்ணிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். 

பாஜகவும் குண்டுவெடிப்புகளும்
இந்திய அரசியலைப் பொறுத்தளவில் பாஜக தனது கட்சியினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் செயல் பாட்டாளர்கள் மூலம் குண்டுகள் வைத்து பிடி பட்டு இருப்பது உலகறிந்த உண்மை. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது இஸ்மாயில் என பரப்பியது, பின்னர் அது கோட்சே என்ற உண்மை வெளிவந்தது. அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர் என்பதும் உலகறிந்த விவரங்கள்.  தற்போது, கோட்சேக்கு சிலை வைப்பதை பெருமையாக பேசிக் கொள்ளும் துணிவு பெற்று இருப்பதில் இருந்து, சமயத்திற்கு ஏற்ப பெயர்களை சூட்டிக் கொள்வதையும், கலவரத்திற்கு ஏற்ப நிகழ்ச்சிகளை திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் இரத்தத்துடன் கலந்து விட்ட ஒன்று, என்பதை அறியலாம்.  

2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த, மாலே கான் குண்டுவெடிப்பு நிகழ்வு குறித்து, என்.ஐ.ஏ 2013இல் பின்வரும் விவரங்களை தெரிவித்தது. அபிநவ் பாரத் என்ற வலதுசாரி அமைப்பை சார்ந்த லோகேஷ் சர்மா, தன்சிங், மனோகர் சிங், ராஜேந்திர சவுத்ரி ஆகி யோர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தது. 

அதே மாலேகானில் 2008 இல் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர் சாத்வி பிரக்யா சிங் தாகூர். இவர் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்த இடத்தில் இருந்தது. இவர் 2017 இல் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் பிணை வழங்கப்பட்டவர். பின் 2019இல் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். நாடாளுமன்றத்தில் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே மிகச் சிறந்த தேச பக்தர் எனக் கூறினார். கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டார். இப்போதும் மத்தியப்பிரதேசத்தில், வன்முறையை தூண்டும் வகையில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார்.

2007 இல் ஆஜ்மீர் தர்கா, மெக்கா மஸ்ஜித், சம்சவுதா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய வெடிவிபத்துகளுடன் தொடர்புடைய வழக்குகள், ஆசாராம் பாபு என்பவர் மீது நடந்து வருகிறது.  சிறையில் இருந்த படி கேரவன் இதழில் 2014 ஆம் ஆண்டு இவர் அளித்த பேட்டி மூலம்  மேற்படி நிகழ்வுகள் உறுதி செய்யப்பட்டதும் உலகறியும்.  வனவாசி கல்யாண் அமைப்பிற்கு முக்கிய பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர். குஜராத் டங்ஸ் மாவட்டம், மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் அனைத்திலும் இவருக்கு பங்குண்டு என கூறப்படுகிறது. ஆசாராம்பாபுவே தனது பேட்டியில் கேரவன் இதழில் இது போன்ற வற்றை கூறியிருக்கிறார். 

சத்யபால் மாலிக், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர், 2019 ஆம் ஆண்டு பெப்ரவரியில் புல்வாமா இராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் குறித்து அண்மையில் கூறிய விவரங்களும், பா.ஜ.க ஆட்சியின் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. அந்த சாலையில் செல்ல வேண்டாம் என்பது தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட பின்னரும், அந்த பாதையில் இராணுவ வாகனம் செல்வதற்கான உத்தரவு இடப்பட்ட விவரம் சத்யபால் மாலிக் தெரிவித்தது. இதன் காரணமாக இவருடைய வீடு சி.பி.ஐ அதி காரிகளால் சோதனையிடப்பட்டதும் கவனிக்கத் தக்கது. இது போல் மேலும் விவரிக்க நிகழ்வுகள் உள்ளன. 

கேள்விக்குள்ளாகும் பாஜகவின் நாடாளுமன்ற ஜனநாயகம்
ஒரு புறம் பகத்சிங் குறித்த கதையாடல்களும், மற்றொரு புறம் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதும், தான் பா.ஜ.க அரசு மீது கூடுதல் விமர்சனத்தை தூண்டுகிறது. அதானி மீதான குற்றச் சாட்டை, ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் முன் வைத்த போது நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்கியது பா.ஜ.க. இப்போது சில இளைஞர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் புகை குப்பிகளை வீசி இருப்பதும், அவர்கள் நாடாளுமன்றத்திற்குள், பா.ஜ.க எம்.பி, பிரதாப் சிம்ஹா என்பவர் அளித்த பரிந்துரை கடிதத்தை பயன்படுத்தி இருப்பதும் கேள்விகள். ஆனால் இப்போதும் விவாதிக்க அனுமதி இல்லை.

குறிப்பாக கேள்விகள் கேட்டு விவாதிக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது குறித்து விவாதிக்க மறுக்கிறார். பிரகலாத் ஜோஷி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் இதை மறுக்கிறார். விவாதிக்க வேண்டாம் என்கிறார். குறிப்பாக நாடாளுமன்ற வளாகத்திற்குள் வழக்கம் போல் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், பாஜக உறுப்பினர், பிரதாப் சிம்ஹா வலம் வருகிறார். பாஜக பிறர் மீது குத்தும் முத்திரையை வலுவாகவும், தன்  மீது வரும் குற்றச்சாட்டுகளை எந்த ஒரு இட த்திலும் விவாதிக்காமல், திசை திருப்பும் அரசியல் மூலமும் சாதித்துக் கொள்ள நினைக்கிறது. மொத்தத்தில் அதானி விவாதிக்கப்படவே இல்லை. அது போல் இந்த நிகழ்வும் அமைந்து விடக் கூடாது. 

பரிந்துரைக் கடிதம் குறித்து மௌனம் ஏன்?
ஊடகங்கள் நூற்றுக்கணக்கிலான காவலர் பணி இடங்கள் காலியாக இருப்பதை தீவிரமாக விவாதிக்கின்றன. அந்த இளைஞர்கள் காலணியில் மறைத்து புகை குப்பிகளை எடுத்துச் சென்றதாகப் பேசுகின்றன. ஏன் பிரதாப் சிம்ஹா பரிந்துரைத்தார் என்பதை பேச மறுக்கின்றன. இதில் தான் பா.ஜ.க வின் ஜனநாயகம் உள்ளடங்கி இருக்கிறது.

உலகம் முழுவதும் வலதுசாரி சக்திகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தி வருவதைக் காண முடிகிறது. ஜனநாயகத்தை அழிக்க நினைக்கும் வலதுசாரி குணத்தின் வெளிப்பாடாக இவை உள்ளது. பல நாள்கள் ஆன பின்னரும் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய நபர்கள் யாரும் மேற்படி தாக்குதல் குறித்து வாய் திறக்கவில்லை. ஏன் என்ற கேள்விக்கு விசாரணையை திசை திருப்பும் வகையில் அமைந்து விடக்கூடாது என்று வியாக்கியானங்கள் செய்து வருகின்றனர். அரசியலாக்க வேண்டாம் என பிரகலாத் ஜோஷி கூறுவதே ஒரு அரசியல் நோக்கம் கொண்டதாக உள்ளது. பா.ஜ.கவின் ஜனநாயக விரோத செயல்களுக்கு முடிவு கட்டுவதே தீர்வாக இருக்க முடியும்.

Tags: