மைக்கேல் மதுசூதன் தத்: வங்க இலக்கியத்தின் புரட்சிக் கவிஞர்

-வீ.பா.கணேசன்

ங்கிலக் கவிஞரும் இலக்கிய விமர்சகருமான டி.எஸ்.எலியட் ‘பண்பாட்டு வரைவிலக்கணம் பற்றிய சில குறிப்புகள்’ என்கிற நூலில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்:
“ஒரு வெர்ஜில், ஒரு தாந்தே, ஒரு ஷேக்ஸ்பியர் அல்லது ஒரு கதே பிறக்கும்போது, ஐரோப்பிய இலக்கியத்தின் எதிர்காலமும் மாற்றி அமைக்கப்பட்டுவிடுகிறது. ஒரு மகாகவி வாழ்ந்து முடிந்ததும், காவிய உலகிலே சில நியமங்கள் ஆற்றப்பட்டுவிடுகின்றன. அவற்றை மீண்டும் சாதிக்க முடியாது. அதேநேரத்தில், எதிர்காலக் கவிதை எதிர்கொள்ளும் சிக்கலான கவிப்பொருளுக்கும் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்திவிட்டே செல்கிறான் ஒரு மகா கவிஞன்.”

இதையேதான், ‘சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற்புதிது; சோதிமிக்க நவகவிதை, எந்நாளும் அழியாத மகா கவிதை’ என இரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருந்தார் மகாகவி பாரதி.

இந்த வரைவிலக்கணத்துக்கு முற்றிலும் பொருத்தமான வராகத் திகழ்பவர் மைக்கேல் மதுசூதன் தத் (Michael Madhusudan Dutt). வங்காள மறுமலர்ச்சி இயக்கத்தின் வீச்சில் வங்காள இலக்கியம் செழிப்படைந்தது எனில், அதில் மிக முக்கியப் பங்களிப்பைச் செய்தவராக அவர் இருந்தார்.

கவிதை, நாடகம், கடிதங்கள் ஆகிய வடிவங்களில் வங்காள இலக்கியத்துக்குப் புதியதொரு திசையை அவர் வடிவமைத்துக்கொடுத்தார். வசதியான குடும்பத்தில் பிறந்தபோதிலும், தன் தனிப்பட்ட சுதந்திரம் மட்டுமே பெரிதெனக் கருதி மேற்கொண்ட செயல்பாடுகளால், தன் 49 ஆண்டு கால வாழ்க்கைப் பயணத்தின் பெரும்பகுதியை வறுமையிலேயே கழித்தவர் அவர்.

காவியம் படைத்தவர்

அவரது காலத்துக்குப் பிறகு உருவெடுத்து, 1,50,000-க்கும் மேற்பட்ட கவிதை வரிகளை எழுதிய ரவீந்திரநாத் தாகூர், காஜி நஸ்ருல் இஸ்லாம், ஜிபனானந்த தாஸ், ஆஷாபூர்ணா தேவி, புத்ததேவ் போஸ், சுபாஷ் முகோபாத்யாய, சுகந்த பட்டாச்சார்ய, சக்தி சட்டோபாத்யாய, சுனில் கங்கோபாத்யாய உள்ளிட்ட மாபெரும் கவிஞர்கள் படைக்காத வகையில், வங்காள இலக்கியத்துக்குக் காவியம் என்கிற வடிவத்தை அறிமுகப்படுத்தி, நிலைநிறுத்திய ஒரே கவிஞர் மதுசூதன் மட்டுமே.

1858 முதல் 1862 வரையிலான ஐந்தாண்டுக் காலத்தில் ‘சர்மிஷ்டா’ என்ற நாடகத்தை இயற்றுவதில் தொடங்கிய மதுசூதனின் இலக்கியப் பணி, வங்காள இலக்கியத்தின் வடிவமைப்பைத் தலைகீழாக மாற்றியது. அவரது ‘மேக்நாத் வத் காவ்யா’ (மேகநாதனின் வதம்) என்ற காவியம் (1861), இந்திய இலக்கியத்தில் இராவணனையும் அவரது மகன் மேகநாதன் என்ற இந்திரஜித்தையும் காவிய நாயகர்களாகச் சித்தரித்த முதல் நூலாகும். தமிழில் அதற்கு நூறாண்டுகளுக்குப் பிறகே புலவர் குழந்தையின் ‘இராவண காவியம்’ உருவானது.

இன்றளவும் வங்காள இலக்கியத்தின் ஒரே காவிய நூலாக இது விளங்குகிறது. மதுசூதனின் ‘சர்மிஷ்டா’, ‘கிருஷ்ணகுமாரி’, ‘இதுதான் நாகரிகமா?’, ‘பழைய பறவையின் புதிய சிறகுகள்’ ஆகிய நாடகங்களும், ‘திலோத்தமா’, ‘வீராங்கனா’, ‘பிரஜாங்கனா’ ஆகிய தொடர்கவிதைகளும் வங்காள இலக்கியத்துக்குச் சிறப்புச் சேர்த்தன. ‘வீராங்கனா’ நூல், இந்து புராணக் கதைகளில் வரும் பெண்கள் தங்கள் மன உளைச்சலைக் கணவர்களுக்கு வெளிப்படுத்திய கவிதைகளின் தொகுப்பு.

அன்றைய வங்காளத்தில் ஜெசூர் மாவட்டத்தின் சாகர்தரி கிராமத்தில், படித்த முதல் தலைமுறையைச் சேர்ந்த வழக்கறிஞரான ராஜ்நாராயண் தத் – ஜானவி தேவி தம்பதியின் மகனாக, 1824 ஜனவரி 25 அன்று பிறந்த மதுசூதன் அன்றைய கல்கத்தா இந்துக் கல்லூரி மாணவர்களைப் போலவே ஆங்கிலேயக் கலாச்சாரத்தின் மீதும் பெரும் ஈர்ப்புக் கொண்டவராக, ‘ரொமான்டிக்’ கவிஞர்களுக்கே உரிய தன்மையோடு காதல் ரசம் ததும்பும் கவிதைகளை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். தொடக்கத்தில் ஓர் ஆங்கிலக் கவிஞராகவே இருந்தார்.

சென்னை வருகை

தந்தையோடு ஏற்பட்ட பிணக்கால் கிறிஸ்துவராக மதம் மாறினார். பின்பு கல்கத்தாவில் வாழ இயலாத நிலையில், 1848 ஜனவரி 18 அன்று சென்னை வந்த மதுசூதனுக்கு, அவரது பிஷப் கல்லூரிக் கால நண்பரான கென்னெட்டின் தந்தை சார்லஸ், ஆதரவற்றோர் மையம் சார்பில் நடத்தப்பட்ட பள்ளியில் உதவி ஆசிரியர் வேலையைப் பெற்றுத்தந்தார். ஆங்கிலேய வம்சாவளி மாணவியான ரெபெக்கா தாம்ப்ஸன் உடன் மதுசூதனுக்குக் காதல் ஏற்பட்டது.

1848 ஜூலை 31 அன்று கறுப்பர் நகரத்தில் இருந்த கிறிஸ்துவ தேவாலயத்தில் முறைப்படி மதுசூதன் தத் மைக்கேல் என்கிற பெயரை ஏற்றுக்கொண்டு, ரெபெக்காவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் தங்கள் விருப்பம்போல் உள்நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டோ செய்துகொள்ளாமலோ உறவு வைத்துக்கொள்வதே அன்றைய நிலையாக இருந்தது.

இந்த நியதிப்படி பார்க்கும்போது, ஓர் ஆங்கிலேய வம்சாவளிப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட முதல் இந்தியராக மதுசூதன் இருந்தார். இத்தம்பதியினருக்கு பெர்த்தா பிளாங்கே கென்னெட் தத், போபே ரெபெக்கா தத், ஜார்ஜ் ஜான் மெக்டாவிஷ் தத், மைக்கேல் ஜேம்ஸ் தத் என நான்கு குழந்தைகள் பிறந்தனர்.

இதற்கிடையே குடும்பத்தை நிர்வகிக்கும் தேவைக்காக அன்று சென்னையில் வெளியான ‘யூரேசியன்’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவந்த மதுசூதன், ‘தி கேப்டிவ் லேடி’ என்ற ஒரு குறுங்காவியத்தையும் இரு காண்டங்களாக ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். ‘ரிசியா: இந்தியாவின் பேரரசி’ என்ற தொடர் கவிதையையும் எழுதினார்.

1854 இல் அவர் ஆற்றிய ஒரு சொற்பொழிவு பின்னர், ‘தி ஆங்கிலோ சாக்ஸன் அண்ட் த இந்து: லெக்சர் – 1’ என்ற தலைப்பில் வெளியானது. ‘ஈஸ்டர்ன் கார்டியன்’, ‘மெட்ராஸ் இந்து கிரானிகிள்’ ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் செயல்பட்டு அரசியல் குறித்த கருத்துகளை அவர் வெளிப்படுத்திவந்தார்.

1852 இல் மதராஸ் உயர்நிலைப் பள்ளி (சென்னை மாநிலக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னோடியான கல்வி நிலையம் இது) ஆசிரியராகப் பணியில் சேர்ந்த ஒரே இந்தியராகத் திகழ்ந்த மதுசூதன், 1855 ஏப்ரல் வரையில் அங்கு பணியாற்றினார். பின்னர், 1855 மார்ச் 6 முதல் தினசரியாக வெளிவரத் தொடங்கியிருந்த ‘மெட்ராஸ் ஸ்பெக்டேட்டர்’ என்ற நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

1855 டிசம்பரில் தன் தந்தை இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட மதுசூதன், 1856 ஜனவரியில் தன் குடும்பத்தினரைச் சென்னையிலேயே விட்டுவிட்டு கல்கத்தாவுக்குத் திரும்பினார்.

உறவினர்களின் கைகளில் சிக்கியிருந்த சொத்துக்களை மீட்டெடுக்க முயன்றார். ஒரு நண்பரின் உதவியால் போலீஸ் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை கிடைத்தது. விரைவிலேயே நீதிமன்ற எழுத்தராகவும் உயர்ந்தார். ஆனால், மாத ஊதியம் ரூ.125 மட்டுமே. இதற்கிடையே சென்னையில் இருந்தபோதே அவர் தொடர்பில் இருந்த சக ஆசிரியர் ஜார்ஜ் ஒயிட் என்கிறஆங்கிலேயரின் மகளான ஹென்ரிட்டா 1858 செப்டம்பரில்கல்கத்தா வந்து சேர்ந்தார்.

இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே இறுதிவரை கணவன்-மனைவியாக வாழ்ந்தனர். இவர்களுக்கு சர்மிஷ்டா, மில்டன் தத், நெப்போலியன் தத் என மூன்று பிள்ளைகள் பிறந்தனர். மதுசூதன் எதிர்கொண்ட வறுமையை ஹென்ரிட்டா பகிர்ந்துகொண்டார். வறுமையுடனான நீண்ட போராட்டத்துக்குப் பிறகு1873 ஜூன் 29 அன்று மதுசூதன் மறைவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு ஹென்ரிட்டா உயிர் நீத்தார்.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் இந்தியர் என்கிற வகையில் மதுசூதனின் செயல்பாடுகள் தனித்தன்மை வாய்ந்தவை. இலக்கிய உலகில் அவர் செயல்பட்ட ஐந்தாறு ஆண்டுகளுக்கு உள்ளாகவே வங்காள இலக்கிய உலகில் நிலையானதோர் இடத்தைப் பிடித்தார். அவரது 200 ஆவது பிறந்தநாள் நிறைவை உலகெங்கிலும் உள்ள வங்காளிகள் அவரது எழுத்துகளின் சிறப்பு வெளியீடுகள், மறுபதிப்புகள் போன்றவற்றோடு விமரிசையாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்று, அன்றைய பத்திரிகை உலகில் பெயர்பெற்று விளங்கியவர் மதுசூதன். அவரது நினைவைப் போற்றும் வண்ணம் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதும் நோக்கத்தோடு, அவர் சென்னையில் விட்டுச் சென்ற மனைவி ரெபெக்கா, அவரது சந்ததியினர் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுவருகிறேன்.

ஜனவரி 25: மைக்கேல் மதுசூதன் தத் 200ஆவது பிறந்தநாள் நிறைவு

Tags: