‘இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்க வேண்டாம்’ – அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
–வெற்றி மயிலோன்

இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடியாக இராணுவ உதவி செய்வது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
இது குறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் (Sergei Alexeyevich Ryabkov) கூறும்போது, “இஸ்ரேலுக்கு நேரடி அமெரிக்க இராணுவ உதவி வழங்குவது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும். இஸ்ரேலுக்கு நேரடி இராணுவ உதவி அல்லது அத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா கருத்தில் கொள்ளக் கூடாது. இது முழு சூழ்நிலையையும் தீவிரமாக சீர்குலைக்கும் ஒரு படியாக இருக்கும்” என்றார்.
மேலும், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் ரஷ்யா தொடர்பில் இருப்பதாக ரியாப்கோ கூறினார். அதே நேரத்தில் ரஷ்ய உளவுத் துறை சேவையின் தலைவர் செர்ஜி நரிஷ்கின், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நிலைமை இப்போது மோசமாக இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில், ஈரான் – இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா, ஐக்கிய அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று தொலைபேசியில் பேசினர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலுக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று இருவரும் ஒப்புக்கொண்டதாக ரஷ்ய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய கவலைகளுக்கு ராஜதந்திர தீர்வைக் காண உதவும் வகையில் மத்தியஸ்தராக செயலாற்ற ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ரஷ்ய அதிபர் புட்டின் மீண்டும் வலியுறுத்தினார் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈரானுக்கு ஆபத்து: ஈரானின் ஆழமான பகுதிகளில் உள்ள அணுசக்தி நிலையங்களை அழிக்கக் கூடிய சக்திவாய்ந்த ஆயுதம், அமெரிக்க பதுங்குகுழி வெடிக்கும் குண்டு ஆகும். ஒருவேளை இஸ்ரேலுக்கு இராணுவ ரீதியாக ஆதரவளிக்க முடிவு செய்தால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேர்ந்தெடுக்கும் ஆயுதமாக இது இருக்கும். இந்த வெடிகுண்டுகள், வெடிப்பதற்கு முன்பு 200 அடி (61 மீட்டர்) நிலத்தடியில் ஊடுருவக்கூடிய திறன் கொண்ட 30,000 பவுண்டுகள் (13,607 கிலோ) எடை கொண்டது ஆகும்.
முன்னதாக, அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13 ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானும் பதிலடி தாக்குதலில் இறங்கியது. இரு தரப்பும் 6 ஆவது நாளாக இன்றும் பரஸ்பரம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா சிவப்புக் கோட்டை தாண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்: ஈரான் எச்சரிக்கை

“ஈரானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது. அமெரிக்கா ‘சிவப்பு கோட்டை’ தாண்டினால் ஈரான் தக்க பதிலடி கொடுக்கும்” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதர் அலி பஹ்ரைனி, “இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எந்த நேரத்திலும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்தால், நாங்கள் அமெரிக்காவுக்கு பதிலளிக்கத் தொடங்குவோம். ட்ரம்ப்பின் முற்றிலும் தேவையற்ற மற்றும் விரோதமான கருத்துகள் குறித்து ஈரான் விழிப்புடன் இருக்கிறது. ஒரு கோடு உள்ளது, அதை தாண்டினால், எங்கள் தரப்பில் பதிலளிப்போம். அமெரிக்கா சிவப்புக் கோட்டை தாண்டியவுடன், எங்களின் பதில் வரும்” என்று கூறினார்.
மேலும், “இஸ்ரேல் அல்லது அமெரிக்கா என யாராக இருந்தாலும் நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம். எந்தப் பக்கத்திலிருந்தும் ஆக்கிரமிப்பை நிறுத்துவோம். நாங்கள் அமெரிக்காவுக்கு இப்போது ஒரு செய்தியை வழங்கியுள்ளோம். எனவே நாங்கள் மிகவும் உறுதியாக பதிலளிப்போம்.
அதேபோல இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலளிப்பதில் உறுதியாக உள்ளோம். நாங்கள் மிகவும் தீவிரமாகவும் வலுவாகவும் பதிலளிப்போம். அதைத்தான் இப்போது செய்கிறோம். இதில் ஈரான் எந்தவிதமான கட்டுப்பாட்டையும் காட்டும் என்று யாரும் எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா எங்கள் மீதான தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பையும் கண்டிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தவும் முயற்சிக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்களை தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறு எந்தச் சூழ்நிலையையும் ஈரான் இப்போதைக்கு யோசிக்கவில்லை” என்று அவர் கூறினார்.
‘வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை செல்போனிலிருந்து நீக்குங்கள்’ – குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

சமீப நாட்களில் சில உயர்மட்ட தலைவர்கள் படுகொலை மற்றும் மிகவும் துல்லிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள ஈரான், செல்போனிலிருந்து வாட்ஸ்அப் செயலியை நீக்கச் சொல்லி தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய நாட்களில் ஈரானில் பல உயர்மட்ட தலைவர்கள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டனர். அதுபோல பல முக்கிய இராணுவ, அணுசக்தி மையங்களும் இஸ்ரேலால் துல்லியமாக தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களின் துல்லியம் ஈரானிய அரசாங்கத்தை மட்டுமல்ல, உலக நாடுகளையே திகைக்க வைத்துள்ளது.
இதனையடுத்து, வாட்ஸ்அப் உட்பட சில செயலிகள் மற்றும் தொலைபேசிகளால் இருப்பிடத் தரவுகள் கசிந்ததன் அடிப்படையில் முக்கிய தலைவர்கள் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. எனவே, வாட்ஸ்அப்பை தங்கள் தொலைபேசிகளிலிருந்து அகற்றுமாறு தனது குடிமக்களுக்கு ஈரான் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று (17.06.2025) ஈரானிய அரசு தொலைக்காட்சி மக்களை தங்கள் தொலைபேசிகளிலிருந்து வாட்ஸ்அப்பை நீக்குமாறு அழைப்பு விடுத்தது. இந்த செயலி இஸ்ரேலிய இராணுவத்திற்கு பயனர் தகவல்களை கசியவிடக்கூடும் என்று அந்த அறிவிப்பு கூறியது. இது ஈரானில் டிஜிட்டல் தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து வளர்ந்து வரும் அச்சங்களை அதிகரித்துள்ளது.
குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த வாட்ஸ்அப் நிறுவனமான மெட்டா, “இந்த தவறான அறிக்கைகள் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் எங்கள் சேவைகள் தடுக்கப்படுவதற்கு ஒரு சாக்காக இருக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.
உங்கள் துல்லியமான இருப்பிடத்தை நாங்கள் கண்காணிக்கவில்லை. யாருக்கு யார் செய்தி அனுப்புகிறார்கள் என்பதற்கான பதிவுகளை நாங்கள் வைத்திருக்கவில்லை. மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் அனுப்பும் தனிப்பட்ட செய்திகளை நாங்கள் கண்காணிக்கவில்லை. நாங்கள் எந்த அரசாங்கத்திற்கும் மொத்தத் தகவல்களையும் வழங்குவதில்லை.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.