ஒரு பொய்யை எத்தனை முறை சொன்னாலும் அது பொய்யே!
-சாவித்திரி கண்ணன்

உலகிலேயே எண்ணெய் வளத்தில் தலை சிறந்து விளங்கும் வெனிசுவேலாவிற்கு போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் தேவையே எழவில்லை.
அதுவும் அமெரிக்கா தன்னை விழுங்குவதற்கு கண்கொத்திப் பாம்பாக காத்திருப்பதை நன்கறிந்தும் அதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருமா ஒரு சுயாதீனத்தையும், சுதந்திரத்தையும் உயிர்மூச்சாகக் கொண்ட சின்னஞ்சிறிய நாடான வெனிசுவேலா.
தமிழகத்தின் முல்லை பெரியாறு அணை மிக பலமாக இருக்கிறது என பல முறை நிபுணர்கள் குழு கள ஆய்வு செய்து ஆதாரங்களுடன் தெளிவுபடுத்திய பிறகும் தொடர்ந்து முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்ற பல்லவியை சற்றும் மனசாட்சியே இன்றி பல்லாண்டுகளாகப் பாடி வருகிறது கேரளா.
காரணம் என்ன? முல்லை பெரியாறு அணைத் தண்ணீரை தமிழகத்திற்கு தராமல் முழுமையாக கொள்ளையிடும் நோக்கமின்றி வேறொன்றுமில்லை.
இதே போலத் தான் தன் பேராசையை மறைத்துக் கொண்டு அமெரிக்கா பொய் காரணங்களை கூறி பொலி போட்ட நாடுகள் பட்டியல் வெகு நீளமானது. ஈரான், வியட்நாம், சிலி, ஆப்கனிஸ்தான்., பிரேசில், ஜோர்ஜியா, கெளதமாலா.. என்ற எண்ணற்ற நாடுகளின் வரிசையில் தற்போது வெனிசுவேலா.
கடந்த பல ஆண்டுகளாக வெனிசுவேலாவின் கடற்கரையை சுற்றிலும் அமெரிக்க துருப்புகளை நிறுத்தி ஏராளமான படகுகளையும், கப்பல்களையும் அழித்தது அமெரிக்கா.
உண்மையில் அமெரிக்கா செய்ய வேண்டியது அமெரிக்காவிற்குள் நுழைய வரும் போதைக் கடத்தல் படகுகளையும், கப்பல்களையும் சுட்டு வீழ்த்துவது தான். அமெரிக்காவில் அதை வாங்கி விநியோகம் செய்பவர்களை நீங்கள் பிடிக்கலாமே? ஏன் முடியவில்லை. ஏனென்றால், அது உண்மையாக இருந்தால் தானே!
செவ்விந்தியர்களின் குருதியைக் குடித்து உருவான அமெரிக்காவிற்கு தொடர்ந்து இரத்தவெறி மரபிலேயே ஊறிப் போய்விட்டது போலும்.

சுத்த சுயம்பிரகாசமாய் இருப்பவர்களையுமே கூட நீங்கள் கதை பண்ணி காலி செய்வீர்களே..! அதிகாரப் பசி, எண்ணெய் வளத்தை கொள்ளையிடும் குரூர ஆசை ஆகியவற்றை நிறைவேற்ற ஜனநாயக காவலர் வேடம், மனித உரிமை காவலர் வேடம்.. என நேரத்திற்கு ஒரு வேஷம்.
அதெப்படி இன்னொரு நாட்டிற்குள் அத்துமீறி நுழைவீர்கள்?
அங்கு இஷ்டத்திற்கு குண்டு மழை பொழிவீர்கள்..?
ஏராளமான அப்பாவி மக்களை கொன்று குவிப்பீர்கள்?
அந்த நாட்டின் அதிபரையும், அவரது மனைவியையும் படுக்கையறைக்குள் பாய்ந்து கைது செய்வீர்கள்?
உலகின் தலை சிறந்த நாடாக தன்னை சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவின் அசல் முகம் இது தானா?
ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா.. உள்ளிட்ட சில நாடுகளே இந்த தாங்க முடியாத அக்கிரமத்தைக் கண்டித்துள்ளன. வெனிசுவேலா மூலம் நிறைய எண்ணெய் இறக்குமதி செய்து வந்த இந்திய அரசு வாய் மூடி மெளனிக்கிறது. கவலையளிக்கிறது என்று முணுமுணுக்கிறது.
இந்த அநீதிக்கு எதிராக அறச் சீற்றம் எழாவிட்டால், அப்படி ஒரு பிறவி எடுத்து வாழ்ந்து தான் பயன் என்ன?