ட்ரம்ப்பிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது மோடி அரசு!

இந்தியப் பொருட்கள் மீதான வரி விதிப்பை 18 சதவிகிதமாக அமெரிக்கா குறைத்துள்ள நிலையில், இதற்கான ஒப்பந்தத்திற்காக, இந்திய விவசாயிகள் – சிறு, குறு உற்பத்தியாளர்கள் நலனை, மிக மோசமான முறையில் மோடி அரசு பலி கொடுத்துள்ளது. இந்திய – அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், அதனடிப்படையில், இந்தியா மீதான 25 சத விகித வரியை 18 சத விகிதமாக குறைப்பதாகவும் கடந்த 02.02.2026 அன்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
காவு கொடுக்கப்பட்ட இந்தியாவின் நலன்கள்
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக விதிக்கப்பட்ட 25 சதவிகித வரியில் மாற்றமில்லாமல் இருந்தது. இதனிடையே, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவிகித அபராத வரியையும் முழுமையாக இரத்து செய்து 30.01.2026 டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இந்தியா மீதான 25 சதவிகித தண்டனை வரிரத்து செய்யப்பட்டு, மொத்த வரி 18 சத விகிதமாக மாறியுள்ளது.
இந்த புதிய வரிவிதிப்பு 07.02.2026 அதிகாலை 12.01 மணி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கும் வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமானது என்று ஒன்றிய பா.ஜ.க அரசு ஊட கங்களில் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறது. உண்மையில், இந்த வரிக்குறைப்புக்காக, இந்திய விவசாயிகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் முனைவோர், சிறு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களையும் மோடி அரசு காவுகொடுத்துள்ளது.
சரணாகதி உறுதிமொழிகள்
ஆண்டுக்கு 100 பில்லியன் டொலர் விகிதம், அடுத்த 5 ஆண்டுகளில், 500 பில்லியன் டொலர் (சுமார் 42 இலட்சம் கோடி இந்திய ரூபாய்) மதிப்பிலான அமெரிக்கத் தயாரிப்புகளை வாங்குவதற்கு – அதாவது இறக்குமதி செய்வதற்கு, வர்த்தக ஒப்பந்தம் மூலம் மோடி அரசு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துள்ளது.
இதனால் அமெரிக்க வெள்ளை மாளிகை பெரும் புளகாங்கிதத்தை அடைந்துள்ளது. ‘இந்த ஒப்பந்தமானது, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் புதிய அத்தியாயத்தை கொண்டுள்ளது’ என்று கூறி கொண்டாடித் தீர்த்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவோம் அல்லது பெருமளவு குறைப்போம்; மறுபுறத்தில், அமெரிக்காவிடமிருந்து எரிசக்தி, விமானப் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெருமளவிலான கொள்முதல்களை செய்வோம் என்ற சரணாகதி உறுதிமொழிகளின் பேரிலேயே, 18 சதவிகிதம் வரி விதிப்பு என்ற ‘உத்தரவை’ அமெரிக்காவிடம் பெற்றுள்ளது.

மோடி அரசின் அடிமைச் சாசனம்
ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு 3 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பரில் இந்தியா 2.7 பில்லியன் டொலர் அளவுக்கு மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. கடந்த 38 மாதங்களில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெற்ற கச்சா எண்ணெய் அளவில் இதுவே மிகக் குறைவானது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி நவம்பரில் 34 சதவிகிதமாக இருந்தது, டிசம்பரில் 25 சதவிகிதத்திற்கும் கீழே குறைக்கப்பட்டு உள்ளது. ஒரே மாதத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்கு மதியை 1 பில்லியன் டொலர் அளவுக்கு இந்தியா குறைத்துள்ளது. மறுபுறம் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை ஒரே ஆண்டில் 34 சத விகிதம் உயர்த்தியுள்ளது.
இதன்காரணமாகவே, இந்தியா மீதான வரியை 18 சதவிகிதமாக குறைத்துள்ள ட்ரம்ப், “ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தெரியவந்தால், இரத்து செய்யப்பட்ட 25 சதவிகித அபராத வரி உடனடியாக மீண்டும் விதிக்கப்படும்’ என ஒப்பந்தத்திலேயே மிரட்டியுள்ளார்.
நாங்கள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறோமா, இல்லையா? என்பதை அமெரிக்கா கண்காணிக்கலாம் என்றும் அடிமைச் சாசனத்தில் மோடி அரசு எழுதிக் கொடுத்துள்ளது. அதாவது, இரு நாடுகளும் இணைந்து கண்காணிப்பு முறையை ஏற்படுத்த உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பொருள் இறக்குமதி 3 மடங்கு அதிகரிக்கும்
இந்த வர்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவில் அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதி மூன்று மடங்கும் அதிகரிக்கும். இதனால், இந்தியச் சந்தைகளில் அமெரிக்கப் பொருட்கள் குவிந்து உள்நாட்டு சிறு, குறு உற்பத்தியாளர்கள் கடும் நட்டத்தை சந்திக்க உள்ளார்கள்.
தற்போது அமெரிக்காவுடன் சுமார் 130 பில்லியன் டொலர் இருதரப்பு வர்த்தகத்தை இந்தியா கொண்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு 45 பில்லியன் டொலர் வர்த்தக உபரி (Trade Surplus) உள்ளது. அதாவது, அமெரிக்காவிடமிருந்து வாங்குவதை விட (40 பில்லியன் டொலர்), அமெரிக்காவுக்கு அதிக பொருட்கள் இந்தியாவில் இருந்து (85 பில்லியன் டொலர்) ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால், மோடி அரசு ஏற்படுத்தியிருக்கும் அடிமை வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் நீண்டகால வர்த்தக உபரி இனி இருக்காது. மிகக் கடுமையான வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படும். இவை ஒருபுறமிருக்க, இந்தியா – அமெரிக்கா இடையில் ஏற்பட்டிருப்பது, இடைக்கால ஒப்பந்தம் அல்ல; புரிந்துணர்வு மட்டுமே என்று அமெரிக்கா கூறியுள்ளது. தற்போதைய புரிந்துணர்வில் ஒப்புக்கொண்டுள்ளதை எந்த அளவிற்கு இந்தியா கடைப்பிடிக்கிறது என்பதைப் பொறுத்தே ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

ட்ரம்ப்புக்கு நன்றியாம்; கொண்டாடும் மோடி
ஆனால், இந்த புரிந்துணர்வையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுக் கொண்டாடியுள்ளார். “இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இந்த அறிவிப்பு சிறந்த செய்தியாகும். இரு நாடுகளுக்கும் இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். இதற்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு எனது தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெக்குருகியுள்ளார்.
இடைக்கால ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
- வெள்ளை மாளிகை அறிக்கையின்படி, அனைத்து அமெரிக்க தொழில்துறை தயாரிப்புகள் மற்றும் எத்தனால் தயாரிப்பின் போது கிடைக்கும் உலர் தானியங்கள் (Distillers Dried Grains), கால்நடை தீவனத்திற்கான சிவப்பு சோளம், கொட்டை வகைகள், புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின், மதுபானங்கள் மற்றும் இதர விவசாய தயாரிப்புகள் மீதான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும்.
- இந்தியாவின் கொள்முதலில் அமெரிக்க எரிசக்தி தயாரிப்புகள், விமானங்கள் மற்றும் விமான பாகங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் நிலக்கரி ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தரவு மையங்களுக்கான மேம்பட்ட சிப்கள் உட்பட, இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப தயாரிப்புகளின் வர்த்தகம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- இருப்பினும், இந்தியாவின் முதலீட்டு ஒப்பந்தம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 500 பில்லியன் டாலர் மதிப்பிலான கொள்முதல் ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும். இது தரவு மையங்கள் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளையும், ஏற்கனவே உள்ள சில திட்டங்களையும் உள்ளடக்கும்.
- இந்தியாவின் ஜவுளி, தோல், காலணிகள், பிளாஸ்டிக், ரப்பர், கரிம ரசாயனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 18 சதவீத வரி விதிக்கப்படும்.
- இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக அமைந்தால், ஜெனரிக் மருந்துகள், ரத்தினக் கற்கள், வைரங்கள் மற்றும் விமான பாகங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா மேலும் நீக்கும்.
- மருந்து மற்றும் அதன் மூலப்பொருட்கள் குறித்த ‘பிரிவு 232’ விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில், ஜெனரிக் மருந்துகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளிலிருந்து இந்தியா பயனடையும்.
- அமெரிக்காவும் இந்தியாவும் அந்தந்த பிராந்தியங்களில் ஒருவருக்கொருவர் முதன்மை சந்தை அணுகலை நிலையான அடிப்படையில் வழங்க உறுதிபூண்டுள்ளன.
- இந்த ஒப்பந்தத்தின் பலன்கள் முக்கியமாக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் சென்றடையும் வகையில் இரு நாடுகளும் ‘ஆரம்ப விதிகளை’ தீர்மானிக்கும்.
- அமெரிக்காவும் இந்தியாவும் இருதரப்பு வர்த்தகத்தைப் பாதிக்கும் வரி அல்லாத தடைகளை நீக்கும். அமெரிக்க மருத்துவ உபகரணங்களின் வர்த்தகத்தில் நீண்டகாலமாக இருந்த தடைகளை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டது.
- தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான அமெரிக்க தயாரிப்புகளின் சந்தை நுழைவைத் தாமதப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் இறக்குமதி உரிம நடைமுறைகளை இந்தியா நீக்கும்.
“இந்திய – அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுக்கே சாதகம், ஏனெனில்…” – ப.சிதம்பரம் விவரிப்பு

இந்திய – அமெரிக்க வர்த்தக கட்டமைப்பு இடைக்கால ஒப்பந்தம், அமெரிக்காவுக்கே அதிக சாதகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்திய – அமெரிக்க வர்த்தக கட்டமைப்பு இடைக்கால ஒப்பந்தம் குறித்த தனது முதற்கட்டக் கருத்துகளை, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்தியா மற்றும் அமெரிக்காவால் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை, எந்தவொரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. இது ஓர் இடைக்கால ஒப்பந்தம் கூட அல்ல. இது ஓர் இடைக்கால ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பு மட்டுமே.
இந்த கூட்டறிக்கையில் உள்ள இரண்டாம் பத்தியும், பல்வேறு துணைப் பிரிவுகளும் இந்த கட்டமைப்பு ஒப்பந்தத்தை மிகவும் தெளிவற்றதாக ஆக்குகின்றன. 2.4.2025, 5.9.2025, 8.3.2018, 30.7.2025, 17.5.2019 ஆகிய திகதிகளில் அமெரிக்கா பிறப்பித்த உத்தரவுகளைப் படித்து ஆய்வு செய்யாதவரை, அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளின் சரியான தன்மையை புரிந்து கொள்வது சாத்தியமற்றது.
ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. இந்த கட்டமைப்பு ஒப்பந்தம் அமெரிக்காவுக்கே அதிக சாதகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த சமச்சீரற்ற தன்மை வெளிப்படையாகத் தெரிகிறது.
உதாரணமாக, அமெரிக்காவின் அனைத்து தொழில்துறைப் பொருட்கள் மற்றும் பரந்த அளவிலான உணவு மற்றும் விவசாயப் பொருட்களுக்கான வரிகளை இந்தியா நீக்கும் அல்லது குறைக்கும் நிலையில், அமெரிக்கா, இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 18% வரியை விதிக்கும். ஜவுளி, தோல் பொருட்கள், கரிம ரசாயனங்கள் போன்ற பொருட்களும் இதில் அடங்கும். இடைக்கால ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்தால் மட்டுமே இந்த வரிகளை அமெரிக்கா நீக்கும்.
விமான பாகங்கள், சில வகை விமானங்கள் தவிர்த்து இந்தியா ஏற்றுமதி செய்யும் எஃகு, செம்பு, அலுமினியம் மீதான அமெரிக்காவின் வரிகள் தொடரும் என்று தெரிகிறது. பிரிவு 232 இன் கீழ் அமெரிக்கா நடத்தி வரும் விசாரணை தொடரும். இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தம் அந்த விசாரணைக்கு உட்பட்டதாக இருக்கும். இந்த இடைக்கால ஒப்பந்தத்துக்கான கட்டமைப்பு எப்படி ஒரு கொண்டாட்டத்துக்கு உரிய விஷயமாக இருக்கும்?’’ என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.