பரிணாமத்தின் பிதாமகன் சார்லஸ் டார்வின்
-பேராரியர் சோ.மோகனா

பரிணாமத்தின் பிதாமகன் சார்லஸ் டார்வினின் 209 வது பிறந்த தினம் பெப்ரவரி 12 ஆம் நாள் தான். அவர் இந்த பூமியில் அவதானித்து 209 ஆண்டுகள் ஆகின்றன. அவர் இல்லாமல் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும். ஒன்றும் நடந்திருக்காது. என்ன டார்வினின் கோட்பாடு போல ஒன்று மனிதனின பரிணாம்ம் பற்றி அறிந்துகொள்ள உருவாக இன்னும் 100 அல்லது 500 ஆண்டுகள் ஆகி இருக்கலாம்.
டாக்டரின் மகன் சார்லஸ் டாரவின்
இந்த டார்வின் இருக்காரே! ரொம்ப வித்தியாசமான மனிதர். இயற்கையை வெகுவாக நேசித்ததால்தான் அவரால் பரிணாமத்துடன் ஒன்றிணைந்து இயற்கைத் தேடலை கொண்டு செல்ல முடிந்த்து.. இயற்கை சிந்தனைவாதியான, சார்லஸ் ராபர்ட் டார்வின், (இதுதான் இவரது முழுப்பெயர்), இங்கிலாந்தில், ஸ்ரூவ்ஸ்பெரி ( Shrewsbury, Shropshire) என்ற ஊரில், 1809 ஆம் ஆண்டு, பெப்ரவரி12 ஆம் திகதி பிறந்தார். அவரது தந்தை ரொபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; ஊரில் பிரபலமான, சமூகத்தில் மிகுந்த மதிப்பை பெற்ற மனிதர். அவரது பாட்டனார் “எராஸ்மஸ் டார்வினும்” ஒரு மருத்துவர்தான். டார்வினின் குடும்பம் கொஞ்ச வசதியான, பணக்கார குடும்பம்; தனது, ஊரில் புகழ் பெற்றதும் கூட. சார்லசின் தாத்தா எராஸ்மஸ் டார்வின் முற்போக்கு சிந்தனைகள் கொண்டவர். அதுபோலவே பேரன் சார்லசும் வித்தியாசனமான கோணத்தில்தான் அனைத்தையும் சிந்திப்பார்.
அறிவியலின் புது சரித்திரம் எழுத..
ஆனால் அவர் பிறந்த போது, அந்த 19 ஆம் நூற்றாண்டில் தான் அந்த காலகட்டதில்தான், சமுதாயத்தில். ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகளும், சில புரட்சிகரமான அறிவியல் மாற்றங்களும் நடைபெற்றன. அதில் முக்கியமான ஒன்று உயிரியலில், நிகழ்ந்தது. அதுவும் மனிதக் கதை மற்றும் மூதாதையரைப் பற்றிய தேடல்தான் இதிலும், மனிதனின் வரலாற்றுப் பாத்திரத்தில், மனிதனின் மற்றும் உயிரிகளின் முன்னோடி யார் என்பதுதான் அது. அதனைத் தேடுவது கூட சிரமக இருந்தது. ஏனெனில் அதைப்பற்றிய வினாக்கள் எழுப்புவது கூட, புரிதல் இல்லாத கடினமாக இருந்த காலகட்டம் அது. அதுதான் பரிணாமம் என்பதும் கூட. அந்த பரிணாமத்தின் அறிவியலில் பிறந்த தகவலும், உண்மையுமான ஒரு விஷயம்தான் மனித இனம் குரங்கு போன்ற இனத்திலிருந்து உருவானது என்பதே. அதனை, அந்தக் கருத்தை, பல புதைபடிம சான்றுகளுடன், உயிர் சான்றுகளுடன் நிரூபணம் செய்த விஞ்ஞானிதான் சார்லஸ் டார்வின்.
தந்தையின் ஆசையும், மகனின் இயல்பும்.
டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். ஸ்ரூவ்ஸ்பெரியில் தொடக்கக்கல்வியைக் கற்றார். சிறுவயது முதலே டார்வினுக்கு விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அதீத ஆர்வமும் காதலும் இருந்தது. தந்தையார் ரொபர்ட் டார்வின், தன்னைப் போன்றே மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று, தந்தையார் ரொம்பவே ஆசைப்பட்டார், அதற்கான முயற்சியும் எடுத்தார். ஆனால் நடந்தது என்ன? சார்லஸின் பள்ளிப்படிப்பு முடித்ததும், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் ரொபர்ட் டார்வின் மகனைச் சேர்த்தார். ஆனால் இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் துளிக்கூட நாட்டம் செல்லவில்லை.
விலங்குகளும் டார்வினும்.
சார்லஸ் சிறுவனாக இருந்தபோது, அவர் பள்ளிக்குச் செல்லாமல், பெரும்பாலும் ஊர் சுற்றப் போய்விடுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்தார். இதனை அறிந்த அப்பாவுக்கு எப்படி இருக்கும்?. தட்டான், மண்புழுக்கள், பட்டாம்பூச்சி, வண்டுகள், அணில்கள், புறாக்கள் எல்லாம் அவர் அறையில்தான் குடியிருந்தன. ஊரில் உள்ள பல விலங்குகளுடன் பேசி, விளையாடியே பொழுதைக் கழிப்பார். சார்லஸ். விலங்குகளிடம் அன்பாக இருப்பார். இதனால் தந்தைக்கு சார்லசின் மேல் ஏகக் கோபம். “உனக்குப் படிக்கவேபிடிக்கலை; படிப்பும் ஏறல, நாய் பின்னாடி ஓடுறது. எலி பிடிக்கிறது இதுதான் உனக்கு பிடிச்சது. உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். நீ உருப்படவே மாட்டே இதனால் நம்ம குடும்ப மானமே உன்னால போகுது!” எனத் தன் மகனை கடித்து கொள்வார் தந்தை. தந்தைக்கு பின்னாளில் தன மகன் பெரிய விஞ்ஞானியாகப் போகிறான். உலக சரித்திரத்தில் நீங்கா இடம் பெறப்போகிறான் என்பதெல்லாம் அப்போது தெரியாதே..!
மதமும் X அறிவியலும்.
18 &19 ஆம் நூற்றாண்டுகளில் உலகின் சகல விஷயங்களிலும், மதத்தின் கையே ஓங்கி இருந்தது. அனைத்தும் , மதத்தின் கட்டுப்பாட்டிலேய இருந்தன. அனைத்து தகவல்களும், பதிவுகளும், கண்டுபிடிப்புகளும், செயல்பாடுகளும்,ஊர் திருவிழாக்களும், மதத்தைச் சார்ந்தே, அவர்களின் ஒப்புதலின் பேரிலேயே நடைபெற்றன. அரசும் கூட மதவாதிகளின் கைக்குள்தான். அதனால்தான் கலீலியோ பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்ன போது, மதவாதிகள் அதிர்ச்சியுற்று, கோபப்பட்டு, கடவுள் உருவாக்கிய மனிதன் உள்ள பூமி சூரியனைச் சுற்றுவதா, அது ஒரு போதும்இருக்காது, நடக்கவே நடக்காது என்றும் நினைத்தனர். எனவேதான், கலீலியோ அதன் அடிப்படையில் அரச நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டார்; தண்டிக்கப்பட்டார். கலீலியோ, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னது கடவுள் மறுப்பு செயல். அவதூறு/கடவுள் நிந்தனை என்று சொல்லப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு வீட்டுச் சிறையில்அடைக்கப்பட்டு, அங்கேயே. வாடினார்; உயிர் நீத்தார்.
சார்லஸ் டார்வினும், பரிணாம சான்றுகளும்.
பூமிக்கே இப்படி என்றால் பூமியில், கடவுள் படைத்த அற்புத உருவம் மனிதன் மட்டுமே, அவன்தான் கடவுளின் படைப்பில் உயர்ந்தவன் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில்,மனிதன் குரங்கு போன்ற இனத்திலிருந்து உருவானது என்றால், மதவாதிகள், தேவாலய மக்கள் இவரை நடு ரோட்டில் நிற்கவைத்தே சுட்டுவிடுவார்கள். ஆனாலும், கடலில் பல மாதங்கள் பயணம் செய்தார். ஆங்காங்கே, பல உ யிர்களையும், விலங்குகளையும் சேகரித்து, ஒப்பீட்டு, அவற்றின் உடல் உள்ளுறுப்புகளை ஆராய்ந்து அதன் பின்னரே, உயிரிகளின் தோற்றம் (Origin of Species ) என்ற நூலை எழுதினார் சார்லஸ் டார்வின். ஆனால் இதனை எழுதுவதற்கு அவர் சுமார் 20 ஆண்டுக்காலம் அதற்கான தகவல்களை, அதன் உண்மைகளை சேகரித்தார் என்பதே உண்மை.

சார்ல்ஸ் டார்வின் பரிணாமக் கொள்கை
சார்ல்ஸ் டார்வினுக்கு இயற்கையாக விலங்குகள் மேலுள்ள ஈடுபாட்டால்தான், அவற்றை சேகரித்து, அதன் பின்னணி அலசி, உயிர்களின் தோற்றம் பற்றிய கணிப்பைக் கொண்டுவரமுடிந்தது. இயற்கைத் தேர்வு மூலம் சார்ல்ஸ் டார்வின் உருவாக்கிய பரிணாமக் கொள்கைதான், இன்று நம்மை, இந்த உலகத்தில் நமது இடம் என்ன என்ற மறுசிந்தனையை தூண்டியது. மனிதன் தனது முன்னோடிகளை மனிதக் குரங்கோடு சேர்ந்து பகிர்ந்து கொள்கிறான் என்ற கருத்தை ஆதாரம் மூலம் விதைத்து, மேற்கத்திய கலாச்சார அடிப்படைக்கு வேட்டுவைத்து தகர்த்து ஒரு சவாலை உருவாக்கியவர் சார்லஸ் டார்வின்.
“பரிணாமத்தின் பிதாமகன்” சார்லஸ் டார்வின்
சார்லஸ் டார்வின், “பரிணாமத்தின் பிதாமகன்” தந்தை என்று போற்றப்பட்டாலும் உண்மையில், டார்வின் அவரது பரிணாமக் கொள்கையை உருவாக்கிய காலகட்டத்திலேயே, ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் (Alfred Russell Wallace) என்ற மற்றொரு விஞ்ஞானியும் இதே கருத்தை முன்னிறுத்தி எழுதினர்; வெளியிட்டார். ஆனால் பல்வேறு காரணங்களுக்காக , டார்வின் மட்டுமே, இயற்பியல் தேர்வு மூலம் நிகழும் பரிணாமக் கொள்கைக்காக, அவரது புத்தகமான உயிர்களின் தோற்றம் (1859 ,book ‘On the Origin of Species’) , என்ற புத்தகம் வெளியாகும் முன்னரே, டார்வின் அவரது பல்வேறு பணிகளுக்காக மதிக்கப் பட்டார். மேலும் காரணம் “ஆல்பிரட் வாலஸ்” அப்போது பெரிதும் பலரால் அறியப்படாதவராக இருந்ததும் கூட ஒரு காரணம். எனவே விஞ்ஞானிகளும், மக்களும், சார்லசின் பரிணாமக் கொள்கை வெளியீட்டில், சார்லஸ் டார்வின் பக்கமே ரொம்பவும் சாய்ந்தனர். அவரின் கருத்துகளைக் கேட்டனர். அந்த கால கட்டத்தில் “உயிர்களின் தோற்றம்” புத்தகம் வெளியானபோது, அது ஒரு பரபரப்பான வெற்றியையும் பெற்றுத் தந்தது. மனிதஇனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை
பீகிள் பயணத் துவக்கம்.. டார்வின் வயது 22.
சார்லஸ் டார்வின் தமது 22 ஆம் வயதில் இறையியலில் (Theology) பட்டம் பெற்றார். ஆனால் கிறித்தவத் திருச்சபையில் உறுப்பினராகச் சேரவும் மறுத்துவிட்டார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில், தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜோன் ஹென்ஸ்லோ (John Stevens Henslow) என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின். அவர் மூலமாக கேப்டன் ரொபர்ட் பிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ரொபர்ட் பிட்ஸ்ராயின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர். ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் “பரிணாம வளர்ச்சிக் கொள்கை “உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22.
பரிணாம சான்றுகள் சேகரிப்பு
ஐந்து ஆண்டுகளில் HMS Beagle என்ற கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது. இடரும், இன்னலும் மிகுந்த கடற்பயணத்தைச் சார்லஸ் டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார். பயணத் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல், தற்போது காணக்கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக்கண்டு டார்வின் வியப்படைந்தார். இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியது
உயிரின மாற்றம் நோக்கிய ஆய்வு
“உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி ஏன் ஏற்படுகின்றன?” என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. இந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும், அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்றும் கருதினார். கலபோகஸ் (Galapagos Island) தீவுகளில், புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயப்பட்டார். அந்த ஆய்வின் பயனாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” முடிவுக்கு அவர் வந்தார். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836 ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக்கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும்,தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக்கட்டுரையாக எழுதி “The voyage of the Beagle” என்ற நூலை லண்டனில் வெளியிட்டார்.

பீகிள் பயணமும் பரிணாம கொள்கையும்
1858 ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள், டார்வினின் கண்டுபிடிப்புகளும், அவரது நண்பர் வாலஸின் கட்டுரையும், இலண்டன் லின்னேயன் கழகத்தில் (Linnean Society of London) வாசிக்கப்பட்டன. பீகிள் பயணத்தில் சேகரித்த ஆய்வு செய்ததன் பயனாக டார்வினுக்குத் தோன்றியதே ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’ ஆகும். 1859 ஆம் ஆண்டு இக்கொள்கையை, டார்வின் உலகை வியப்பில் ஆழ்த்திய ஒரு புத்தகம் மூலம் வெளியிட்டார். “The Origin of Species by Natural Selection” அதாவது ‘இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்’ என்ற அந்த புத்தகம் கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும்”. இது புதிய இனங்களின் உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்றும கண்டறிந்து கூறினார் டார்வின். இக்கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன
அயற்சியில் டார்வின் 20 ஆண்டுகள்
சார்லஸ் டார்வின், தனது புத்தகமான உயிரிகளின் தோற்றம் வெளிவரும் முன்பு சுமார் 20 ஆண்டுக்காலம், எதுவும் செய்யாமல், மௌனமாக சும்மாவே இருந்தார். டார்வின் உயிரிகளின் தோற்றம் பற்றி அவர் எழுதப் போவதாக சொன்னதுமே, அவரைச் சுற்றி உள்ளவர்கள், அவர் என்னவோ ஒரு கொலைக்கு தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்போவது போல, அவரை ரொம்பவும் கேலியும், கெக்கலியும், நையாண்டியும் செய்தனர். எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு, இதுவரை யாரும்செய்யாதது, உலகைப் புரட்டிப் போட்ட, யாரும் நம்பவே முடியாத ஒன்றைக் கண்டுபிடித்தத்திற்கு, உயிரிகளின் மிக அடிப்படையான ஆதாரத்தை, ஆதாரங்களோடு , உண்மையை வெளிப்படுத்துவதற்கு, ஒரு மனிதன், ஒரு தனி மனிதன் தன வாழ்க்கையில், ஏராளமான போராட்டங்களையும் கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. என்பதுதான் உண்மை.
அறிவியலை மறுக்கும் மதம்.
சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையைக் கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக்கொண்டனர். பல மதவாதிகள் இவரைக் குரங்கு என கேலி சித்திரம் வெளியிட்டு கேலி செய்தனர். பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் அவதூறு பேசினார்கள். அவரின் பிறந்தநாளைப ‘பேய் தினம்’ என்று வேறு அறிவித்தார்கள். காரல் மார்க்ஸ் தன்னுடைய நூலை டார்வினுக்கு சமர்ப்பித்தார். கடவுளின் முதல் எதிரி என்று டார்வினின் நூலைத் தூற்றினார்கள்.
உலகை புரட்டிப் போட்ட /பயமுறுத்திய உயிர்களின் தோற்றம்
உயிர்களின் தோற்றம் என்ற புத்தகத்தின் முழுப்பெயர் : ”On the Origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favoured Races in the Struggle for Life” இந்த புத்தகம் முதன் முதல் 1859 ஆம் ஆண்டு, நவம்பர் 24 திகதி மதியம் 1.00 மணிக்கு வெளியானது. அப்போது அது வெளியான அன்றே அதன் 1250 பிரதிகளும் விற்று தீர்ந்துவிட்டன. அதனுடைய, அன்றைய விலை 15 ஷில்லிங் . இதில் ஆச்சரியப் படவேண்டிய விஷயம், என்னவென்றால், யாரெல்லாம் டார்வினை, இவர் குரங்கு, இவர் அப்பா குரங்கு, இவரின் மூதாதையர் குரங்கு என்றெல்லாம், திட்டித் தீர்த்தார்களோ, அவரைப்பற்றி, டார்வின் தலையையும், குரங்கு உடலையும் சேர்த்து கேலி சித்திரமும் போட்டார்களோ, அவர்களும், மத குருமார்களும் தான், டார்வின் அப்படி என்னதான் எழுதி இருக்கிறார் என்பதை அறிய ஆவல்கொண்டு, எல்லா புத்தகங்களையும் வாங்கிவிட்டனர். ஆனால் டார்வினின் கருத்துகள் அறிவியல் உலகை வேரோடு அசைத்தது. அவரின் கருத்துகள் வணிக உலகிலும் உலவின. சமுதாயத்திலும் பல மாற்றங்களை உண்டுபண்ண அவரின் கருத்துக்கள் உதவின. பரிணாமக் கொள்கையைக் கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக்கொண்டனர். பல மதவாதிகள் இவரைக் குரங்கு என சித்தரித்தார்கள்
இன்னமும் அச்சில் வரும் உயிரிகளின் தோற்றம்.
உயிரிகளின் தோற்றம் (Origin of Species ) என்ற இந்த நூல் 1859 இல், நவம்பர் 24 ஆம் நாள் வெளியிடப்பட்டது. ஆனால் இதிலுள்ள ஆச்சரியம் என்னவென்றால், புத்தகம் வெளியிட்ட அன்றே அச்சிட்ட அனைத்து 1250 புத்தகங்களும் ஒரு மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன. அப்போது அந்த புத்தகத்தின் விலை 15 ஷில்லிங். 1872 க்குள் 6 பதிப்புகள் போடப்பட்டன.1860 ஆல் 3000 புத்தகங்கள் அச்சிடப்பட்டன.
கோபம் குறையான மதவாதிகள்
இதன் காரணம் என்னவாக் இருக்கும் என எண்ணுகிறீர்கள்? இருப்பினும் அந்த டார்வின் எழுதிய “On the Origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favoured Races in the Struggle for Life என்ற புத்தகத்தில் என்ன தான் இவன் எழுதி வைத்து இருக்கிறான் என்று எனபதை அறிய அனைவருக்கும் ஆவல். முக்கிய மாக மதவாதிகளுக்குத்தான். டார்வினின் “Origin of Species” இல் என்ன இருக்கிறது என அறிய ஏற்பட்ட துடிப்பில், அப்போது வெளியிட்ட Origin of Species னின் 1250 பிரதிகளும், உடனேயே விற்றுத் தீர்ந்து விட்டன. இதில் டார்வின் மனித இனம் குரங்கு போன்ற உயிரியிலிருந்து உருவானது என்று கூறியதால், மதவாதிகள் ஆத்திரம் அடைந்தனர். ஆத்திரம் அடைந்த மதவாதிகளும், கடவுள் நம்பிக்கை உள்ள அனைவரும், எப்படியாவது இந்த டார்வினை ஒழித்துக்கட்ட விரும்பினர். அது முடியாமல் போகவே, குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்லிய நீதான் குரங்கு என, டார்வினை குரங்காக உருவகப்படுத்தி, உடனே உடல் முழுவதும் குரங்காகவும், முகம் மட்டும் டார்வின்ஆகவும் உள்ள ஒரு கேலி சித்திரமும் உடனே போட்டனர். ஆனாலும் கூட, அவர்களுக்கு மனம் சமாதானம் அடையவில்லை.கோபம் குறையவில்லை.

மதத்ததை நொறுக்கிய டார்வின் கோட்பாடு
உயிர்ளை எல்லாம் ஒரே நாளில்தான் ஆண்டவன் உருவாக்கினார் என்று உலகின் அனைத்து மதங்களும் போதித்து வந்தன. அந்தக் கருத்தினை டார்வினின் புத்தகம் அடித்து நொறுக்கி, தூள் தூளாக்கி தவிடு பொடியாக்கியது, என்றால் அனைத்து மதவாதிகளும் எப்படி கொதித்துக் கொந்தளித்து டார்வினை உண்டு இல்லை என்று ஆக்கிவிடத் துடித்தனர். ஆனால் டார்வின் அமைதியாக தன உயிரின சேகரிப்பால், அவற்றின் விளக்கத்தால், அவர்களுக்கும், அவைகளுக்கான விளக்கமும் தர முடிந்தது. உயிரினங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து, சின்ன உயிரிகளிலிருந்து பெரிய உயிரியாக மாற, ஒவ்வொரு விலங்கினமாக மாறி மாறி, இன்றைய உருவத்துக்கு வந்திருக்கின்றன என்பதையும் தெளிவாக ஆதாரத்துடன் தெரிவித்தார். எதுவும் ஒரே நாளில் படைக்கப்பட்டதல்ல என்பதை தன் ஆராய்ச்சியின் மூலம் பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கினார் டார்வின். இதனால் மதவாதிகளுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. அனைவரும் கொதித்துக் கிடந்தனர்.
அதன் பின்னர் கி.பி. 1860 ஆம் ஆண்டு ஜூன் மாதம். இங்கிலாந்து, ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகம் மக்கள் வெள்ளத்தால் ததும்பி வழிகிறது.வெளி நாடுகளிலிருந்து வருந்திருந்த விஞ்ஞானிகள் எல்லாம் என்னதான் நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தில் ஒருவருடன் ஓருவன் கிசுகிசுத்தவாறு இருக்கின்றனர். உடன் அமர்ந்திருக்கும் பிரபு வர்க்கத்தினர்கள் நடைபெற இருக்கும் மாபெரும் விவாதப் போரைப் பற்றி ஆரவாரத்துடன் பேசிக் கொண்டிருகின்றனர். இதற்கிடையில் மக்கள் கூட்டத்தாலும் கூட ஒக்ஸ்போர்டு வளாகம் அதிர்ந்து கொண்டிருந்தது.
சூறாவளியை உருவாக்கிய உயிரிகளின் தோற்றம்
ஒக்ஸ்போர்டின் கலகலப்பிற்கு காரணம் உண்டு, அதன் காரணம் என்ன தெரியுமா? அதாம்பா டார்வின் சொன்ன அவர் வெளியிட்ட புத்தகமான உயிரினங்களின் தோற்றம்தான். ‘இயற்கைத் தேர்வின் மூலம் “உயிரினங்களின் தோற்றம்”’ என்ற புத்தகத்தை வெளியிட்டு அன்றைய இங்கிலாந்தில் பட்டையைக் கிளப்பி ஒரு சூறாவளியைக் உருவாக்கியவர் சார்லஸ் டார்வின். பரிணாமத்தின தத்துவத்தை வெறும் 230 பக்கங்களில் மட்டுமே தெரிவித்த, உலகைப் புரட்டிப் போடும் அற்புத நிகழ்வைத தந்தவர் டார்வின். அவரின் சின்ன புத்தகம் உலக உருண்டையை மிரட்டியது. உண்மை கசந்தது மதவாதிகளுக்குக்கும், கடவுள் தாசர்களுக்கும். இந்த குட்டி புத்தகம் ஏற்படுத்திய சூறாவளியில் விவிலியமும் பறந்தே பறந்து சென்றது. போய்விட்டது.
இறைவனின் மறைவாக்கு கேள்விக்குள்ளாக்கப்படுவதை கிறித்தவ பாதிரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களால் பொறுக்க முடியவில்லை. கடவுள் உருவாக்கிய மனித இனம், எப்படி குரங்கு போன்ற இனத்திலிருந்து வந்திருக்க முடியும். இந்த மதவாதிகளின் கூச்சல் குழப்பம், சச்சரவைக் கண்டு, அவர்களை பொதுமேடையில் விவாதத்திற்குத் தயாரா என்று டார்வினின் ஆதரவாளர்களுக்கு சவால் விட்டனர்.
அறிவியல் காக்க ஹக்ஸ்லியும், ஹூக்கரும்
மதத்தின் பிடியிலிருந்து அறிவியலை மீட்கும் கடமையுணர்வுடன் ஒக்ஸ்போர்டு விவாதத்திற்கு வருகை தந்தனர் டார்வினின் ஆதரவாளர்களான ஹக்ஸ்லியும், ஹூக்கரும். அறிவின் அடக்கத்துடன் அமர்ந்திருந்த இவ்வறிஞர்களின் எதிரில் ஒக்ஸ்போர்டு மதத்துறையின் பிரபலமான மதகுரு பிஷப் வில்பர் போர்ஸ் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து வீற்றிருந்தார். அவரைச் சுற்றி வெண் தூண்களாய் ஆண்டவனடியார்கள் மூளையைச் சாணை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
டார்வினை கேலி செய்த மதபோதகர்
விவாதம் தொடங்கியது. வேத நூலை முத்தமிட்டு, சிலுவை ஏந்திய கரங்களுடன் தொண்டையைக் கனைத்துவிட்டு பேச ஆரம்பித்தார் பிஷப், ”மக்களே! பரமபிதாவின் பெயரால் உங்களை வேண்டுகிறேன். சாத்தானின் அவதாரமான சார்லஸ் டார்வின், நீங்களெல்லாம் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என கூசாமல் கூறியிருக்கிறான். பாலூட்டி சீராட்டி வளர்த்த உங்கள் பாட்டன்மார்களும், முப்பாட்டன்மார்களும் குரங்குகளா? இதை ஏற்கப் போகிறீர்களா? எனது கேள்விக்கு இங்கு அமர்ந்திருக்கும் குரங்கின் சீடர்கள் என்ன பதில் தருவார்கள். இவர்கள் குரங்கிலிருந்து உதித்ததாகச் சொல்வது தன் பாட்டன் வழியாகவா, பாட்டி வழியாகவா” என்று கேலி செய்தார். அதன் பின் திருப்தியுடன் இறுதியில் ‘டார்வினின் ஆராய்ச்சி சத்திய மறைநூலின் புனிதக் கொள்கைக்கு எதிராக இருக்கிறது’ என்று கூறினார்..
புனிதக் கொள்கையும் துணிச்சல் டார்வினும்
புனிதக் கொள்கையால் உணர்வூட்டப்பட்ட மக்களின் கரவொலியின் நடுவில் பேச வந்தார் டார்வினின் சீடர் ஹக்ஸ்லி. வெறியூட்டப்பட்ட மத உணர்வுகளின் மத்தியில் உண்மையைப் பேசுவதற்கு ஒரு மனிதனுக்கு ஏராளமான துணிவு தேவை. மதமெனும் இருட்டுக் குகைக்குள் இருக்கும் மக்களை, அறிவியல் உண்மையெனும் ஒளியை நோக்கி ஈர்ப்பதற்காவே அனைத்து அவலங்களையும் சகித்துக்கொண்டார் ஹக்ஸ்லி. டார்வினின் ஆராய்ச்சியைப் பற்றி விரிவாக பேசினார். அங்கு வீற்றிருந்த மக்களில் ஒரு பகுதி மக்களையாவது உண்மையை ஒத்துக் கொள்ள வைக்க முடிந்ததே என்ற எண்ணத்தில் பேசினார் ஹக்ஸ்லி. பின்னர் பொது விவாதம் முடிந்தது. ஆனால் டார்வின் எழுப்பிய அறிவியலின் புரட்சிப் புயல் ஓயவில்லை.
வெறி பிடித்த மறை மக்களும் அறிவியல் உண்மையும்
குரங்குகளை கண்ட இடமெல்லாம் கல்லாலடித்து துரத்தினார்கள் மறை உணர்வு கொண்ட மக்கள். இங்கிலாந்தின் தேவாலயங்களில்,கருப்பு உடை தரித்த விவிலிய பக்தர்கள் தங்களின் கால்களின் கீழ் டார்வினின் புத்தகத்தை மிதித்தவாறு இறைவனின் புனிதக் கொள்கையை சாத்தானாகிய டார்வினிடமிருந்து காப்பதாக உறுதி பூண்டார்கள். இதுதான் அன்றைய உலகில் நடந்த தகவல். ஆனால் இன்று மனித இனம் குரங்கின அமைப்பிலிருந்து தான் உருவானது என்றும், மனிதனுக்கும், டால்பினுக்குக்கும் கூட பொது முன்னோடிகள் உண்டு என்ற உண்மைகள் வெளிவந்து, அறிவியலின் தலை நிமிர்ந்த உண்மை கம்பீரமாக எழுந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
உயிரிகளின் தோற்றத்தின் இரண்டாவது பதிப்பு 1860, ஜனவரி 7ஆம் நாள் வெளியானது. டார்வினின் வாழ்நாளில் இந்த புத்தகத்தின் 6 பதிப்புகள வெளியாயின. முதல் அமெரிக்க பதிப்பும் 1860 களில்தான் வந்தது. இந்த புத்தகத்தின் மொழியாக்கங்களும் வெளிவந்தன. ஆனால் அதிலுள்ள விளக்கங்களைச் சொல்வதற்குள் அவர்களுக்கு விழி பிதுங்கிப் போயிற்று. இதில் முக்கியமாக, பரிணாமக் கொள்கையில் கூறப்படும், ”survival of the fittest” என்னும் சொல்லாடல் முதல் பதிப்பில் பயன்படுத்தப்படவே இல்லை. இந்த உருவாக்கியவர் ஹெபெர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer) என்ற தத்துவ ஆசான்தான்.
முரண்பட்ட சொற்களும், முதல் பாதிப்பும்.
பொதுவாக நாம் பரிணாமத்தில் பேசும் ‘”தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்”’ (“survival of the fittest” ) என்ற பதங்கள் அடங்கிய மந்திரச்சொல் டார்வினின் முதல் பதிப்பில் வரவேயில்லை. 5 ம் பதிப்பில்தான் வந்தது. மேலும், நாம் இப்போது பயன்படுத்தும் பரிணாமம் (Evolution ) என்ற சொல்லும் முதல் பதிப்பில் இல்லை.
6 ஆம் பதிப்பில்தான் இணைக்கப்பட்டது. ஏனெனில் இந்த வார்த்தைகள் கொஞ்சம் முரண்பட்டவை என டார்வின் கருதியதால், இவற்றை அவர் முதல் பதிப்பில் பயன்படுத்த வில்லை.
டார்வினின் அரிதான இயல்புகள்
இது தவிர டார்வினுக்கு ஏராளமான விசித்திர குணங்களும், பழக்க வழக்கங்களும் உண்டு. ஆனால் பொதுவாக பரிணாமம் பற்றி பேசும் மக்கள் இவற்றைக் கையில் எடுப்பதில்லை. டார்வின் பொதுவாகவே, விலங்குகள் மீதும் மற்ற உயிரிகள் மேலும் பச்சாதாபமும், பரிவும் ஏராளமாய் உள்ளவர். அவரின் இந்த குணம் மனித இனம் வரை கூட நீட்சி செய்தது. அவர் HMS பீகிள் என்ற கப்பலில் பயணிக்கும்போது, அவரின் மனம் அடிமைகளுக்கு நடக்கும் கொடுமையைப் பற்றி சிந்தித்தது. அவர் அந்த கப்பலை தென்னமெரிக்காவில் நிறுத்தினார். அங்கு நடைபெற்ற கொடுமைகளையும் கூட உயிர்களின் தோற்றம் புத்தகத்தில் அடிமை ஒழிப்பு பற்றிய தகவல்களையும் குறிப்பிடுகிறார்.

பெப்ரவரி 12ம் நாளின் முக்கியத்துவம்
பெப்ரவரி 12 ஆம் நாள்,1809 ஆம்ஆண்டு வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற நாள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அன்று சார்லஸ் டார்வின் மட்டும் பிறக்கவில்லை. அன்று உலகின் புகழ் பெற்ற வேறொரு முக்கியத் தலைரும் பிறந்திருக்கிறார். அவர் யாரென உங்களால் சொல்ல முடியமா நண்பரே..ம். ஹூஹூம்.முடியாதா? அவர்தான் விறகு வெட்டி, படகோட்டி, பலசரக்குக்கடை ஊழியர், வழக்கறிஞர் என்று பல தொழில்களில் பயணித்து அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியாக உயர்ந்து உலகத் தலைவர்களில் ஒருவராக இன்றும் போற்றப்படும் அடிமைகளின் சூரியன் எனப்படும், ஆபிரஹாம் லிங்கன். டார்வின், லிங்கன் இருவருக்கும் கிட்டத்தட்ட ஒத்த குண அமைப்புதான்.இருவரும் அடிமைத் தளைக்கு எதிராக வலுவாக எதிர்த்தவர்கள். மேலும் இருவரும், உலக அளவில் பேரும் புகழும் பெற்றவர்கள். இருவரும், தங்களின் குழந்தைகளை சிறு வயதில் இழந்தவர்கள். அதுபோலவே, இருவரும் தங்களின் இளம் வயதில் அன்னையைப் பறிகொடுத்த பின், அதிகமான மனத்தாக்கத்துக்கும் ஆளானவர்கள். அதைவிட மிக உயர்ந்த விஷயம், இருவரும் உலகை உன்னதப் படுத்திய, உலகுக்காகப் பாடுபட்ட, தங்களின் செயல்பாட்டால் உலகின் தரம் உயர்த்தி, புரட்சிகரமான எதிர்கால மாற்றம் செய்தவர்கள்.
வரலாறு மாறிய காரணம் என்ன ?
டார்வினின் தந்தை ரொபர்ட் டார்வின் சமூகத்தில் மிகவும் பிரபலமான ஒரு மருத்துவர். அவரின் தந்தையும் கூட அந்த ஊரில் புகழ் பெற்ற மருத்துவர்தான். எனவே வழி வழி வாரிசாக தன் மகனையும் மருத்துவராக்கவே ரொபர்ட் டார்வின் விரும்பினார். ஆனால் டார்வினுக்கோ இரத்தத்தைப் பார்த்தாலே ஒரே அலர்ஜி. மயக்கம் போடாத குறைதான். தந்தையோ, மகனை எடின்பரோ பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயில சேர்த்தார். நடந்தது என்ன தெரியுமா? ஆனால் பொதுவாகவே டார்வினுக்கு, இயற்கையில் துறையிலும் நிலவியல் துறையிலும் தான் அதீதஆர்வம். இவரைக் கொண்டுபோய் மருத்துவம் படிக்க அனுப்பினால் என்ன ஆகும்?. இருப்பினும் தந்தையின் ஆர்வத்தை ஒட்டி, அவரின் அடியொற்றி மருத்துவம் படிக்கவே விரும்பினார். ஆனால் நடந்த கதையே வேறுதான். டார்வினின் எண்ணம்தான் நிறைவேறியது. அவரின் தந்தைக்கு ஏராளமான ஏமாற்றம் தான்.
டார்வினின் மருத்துவ மறுப்பு
டார்வின் மருத்துவம் படிக்க முடியாத பின்னணியைப் பற்றி புரட்டுவோமா? அந்த காலத்தில், உணர்வு நீக்கி, அதாவது மயக்க மருந்து கண்டுபிடிக்கப்படாததால், மயக்க மருந்து கொடுக்காமலேயே, எல்லோரையும் கதற கதறவே அறுவை சிகிச்சை செய்வார்கள். அப்படி ஒரு சமயம், ஒரு சின்னக் குழந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சையைப் பார்க்க வேண்டிய சூழல் டார்வினுக்கு ஏற்பட்டது. அதைக் கண்ணுற்ற சார்லஸ் டார்வின் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று கண்காணாமல் ஓடியே போய்விட்டார் டார்வின்..! பொதுவாகவே புழு, பூச்சிகள், விலங்குகள் மேலிருந்த ஆர்வத்தை ஒட்டி, டார்வின் அவற்றை பின்னர் சேமித்தார். டார்வின் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் சேர்ந்து, படிப்பில் சிறந்து விளங்கினார். உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆய்வும் கூட தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.
டார்வினின் திருமணமும் கூட சொந்தத்தில்தான். டார்வின் தனது நெருங்கிய முதல் இரத்த சொந்தத்திதில் “எம்மா” என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். டார்வினுக்கும் எம்மாவுக்கும் சேர்த்து 10 குழந்தைகள் இருந்தன. 6 பையன்கள்; 4 பெண் குழந்தைகள். ஆனால் அவரின் செல்ல மகள் ஆன்னி டார்வினை அவளின் பத்தாவது வயதில் பறிகொடுத்ததால், அவருக்கு கடவுளின் மேல் நம்பிக்கை போனது. அவர்களின் 3 குழந்தைகள் இறந்து போயின.
டார்வினின் திறமைகள் & பீகிள் பயணிப்பு
தென் அமெரிக்காவிலுள்ள “ஜான் எட்வர்டொன்” என்ற அடிமை ஒருவரின் மூலமாக இறந்த உயிரினங்களை பதப்படுத்தும் கலையைக்கற்றுக் கொண்டார். உலகிலுள்ள சிறந்த அருங்காட்சியகம் மூலமாக, தாவரங்களை வகைப்படுத்தும் முறையையும் அறிந்து கொண்டார். ‘ரொபர்ட் பிட்ச்’ என்பவருடன் இணைந்து, HMS பீகிள் என்ற கப்பலுடன் கடற்பயணம மேற்கொண்டார். துவங்கும்போது இந்த பயணம் இரு ஆண்டுகள்தான் பயணம் என்று நினைத்தனர். அதிலேயே குறியாக இருந்தனர். சீக்கிரம் முடிய வேண்டும் என்றும் விரும்பினர். ஆனால் நடந்தது வேறு… அதில் டார்வின் சுமார் 5 ஆண்டுக்காலம் நிற்காமல் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த பீகிள் கப்பல் பயணம் கொஞ்சமும் எதிர்பாராதுத்தான்.
சார்லஸ் டார்வின் தனது 21 ஆவது வயதில்தான் கப்பலில் பயணித்தார். அவரின் மூக்கு எப்போதும் HMS பீகிளின் முகப்பு போலவே இருப்பதால், அவருக்கு இது எப்போதுமே பிடிக்காது. HMS பீகிளின் மாலுமி, ரொபர்ட் பிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவர் தென்னமெரிக்காவைச் சுற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்த விரும்பினார். ஆனால் தனியாகச் செல்ல கொஞ்சம் அச்சப்பட்டார். ஏனெனில் இதற்கு முந்தைய கப்பல் பயணத்தில் அதன் மாலுமி தற்கொலை செய்துகொண்டதால், பிட்ஸ்ராய்க்கு கொஞ்சம் பயம் ஏற்பட்டது. அவருக்குத் தெரிந்த பேராசிரியர்களைக் கேட்டபோது, அவர்கள் டார்வின் பெயரைக் குறிப்பிட்டனர். ஆனால் டார்வினுக்கு செல்ல இஷ்டம் இல்லை. ஏனெனில் அவரின் அப்பாவுக்கு இரண்டு ஆண்டுகள் மகனை கடலில் பயணிக்க வைக்க விருப்பம் இல்லை. மேலும் அதற்கு கொடுக்க பணமும் இல்லை. எனவே மறுத்து விட்டார். பின்னர் டார்வினின் மாமாவின் சிபாரிசின் பேரில் HMS பீகிள் கப்பலில் புறப்பட்டார்.
டார்வின் பிறந்ததினமும், தனித்தீவின் பெயர் சூட்டலும்
டார்வினும் அவரின் கப்பல் பயணிகளும் 1833 ஆம் ஆண்டு, டியாரா டெல் பியூகோ அருகில் சென்றபோது, ஒரு பெரிய பனிப்பாறை கடலில் வீழ்ந்து பெரிய அலையை உண்டு பண்ணியது. அப்போது டார்வின் வேகமாக கடற்கரைக்கு ஓடிச் சென்று கப்பலின் படகுகள் கடலுக்குக்குள் சென்றுவிடாமல் காப்பாற்றினார். எல்லா மனிதர்களையும் காப்பாற்றினார். எனவே மாலுமி பிட்ஸ்ராய் அந்த இடத்துக்கும் டார்வின் பெயரையே “டார்வின் ஒலி” என்று சூட்டினார். டார்வின் HMS பீகிள் கப்பலில் பயணிக்கும்போது, 1834, பெப்ரவரி 12ஆம் நாள், அவரின் 25 வது பிறந்த நாள் வந்தது. அங்கே கடலில் ஒரு தீவு போன்ற மலை தென்பட்டது. அதனைப் பார்த்த பீகிளின் மாலுமி, பிட்ஸ்ராய், அந்த குன்றை, டார்வினுக்கு டார்வின் பெயரைச் சூட்டி, டார்வினுக்கு அதனை அர்ப்பணித்தார். அந்த பகுதியில் உள்ள Tierra del Fuego என்ற இடத்திலுள்ள பெரிய சிகரத்தின் ”டார்வின் சிகரம் (Mount Darwin)” என்பதாகும்.
கண்டதை தின்னும் டார்வின்
டார்வினுக்கு எப்போதுமே, வித்தியாசமான குணம்தான். எல்லா விலங்குகளையும் சாப்பிட்டு சுவைத்து ருசித்துப் பார்க்க ஆசைப்படுவார் டார்வின். கிடைத்த உணவை எல்லாம் சுவைக்க வேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர். அதனால், கேம்பிரிட்ஜ்சில் உள்ள குளூட்டன் சங்கம் (“Glutton Club”) என்ற சங்கத்தில் இணைந்து வாரம் ஒரு முறை, கண்ட விலங்குகளையும் உண்டு சுவை பார்ப்பார். அதுபோலவே, அவர் HMS பீகிள் கப்பலில் பயணிக்கும்போதும், வழியில் கிடைத்ததை சாப்பிட்டு ருசி பார்த்தார். எனவே டார்வின் பீகிளில் செல்லும்போது அங்கு இப்போது அப்போது கலபோகஸ் தீவுகளில் உள்ள, இகுவானா (Iguana) என்ற பல்லியை மற்றும் பெரிய ஆமைகளை உண்டு, சுவைத்து இரசித்தார் ஆர்மடில்லோவை சுவைத்தாராம். கலபோகஸ் தீவில் உள்ள ஆமையின் சிறுநீர்ப் பையில் உள்ள நீரையும் கூடசுவைத்துப் பார்த்தாராம். அதுவும் கசப்புதான். தான் கண்டுபிடித்த புதுவகை கோழியையும் உண்டு பார்த்தாராம். அந்த கோழிக்கு, டார்வின் பெயரே சூட்டப்பட்டு, “Rhea darwinii ” என்று அழைக்கப்பட்டது.
டார்வினின் அதீத ஆர்வம்/
டார்வின் காட்டுக்குள் சென்று, அங்கு கிடைத்த பூச்சிகளைக் கொண்டுவந்தாராம். இரண்டு பூச்சிக்கு மேல் பிடிக்க முடியாததால், மூன்றாவது பூச்சியை வாயில் போட்டுக்கொண்டடு வந்து சேர்ந்தாராம். இது எப்படி இருக்கு? அது கசப்பாக இருந்ததாம். On the Origin of Species என்ற புத்தகம் உலகளவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். டார்வின் H.M.S. பீகிள் என்ற கப்பலில் சென்றபோது ஏற்பட்ட நிகழ்வுகள், சேகரிப்புகள் மூலமே பரிணாமக் கொள்கை என்ற கருத்து பிறந்தது.

டார்வினின் மற்ற கண்டுபிடிப்புகள்
டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த்திறன்’ ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார். அவருடைய நூலான “தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு” என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒன்றோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளக்குவதாகும்.
டார்வின் காதல் மொழியும், மறைவும், அரசு மரியாதையும்:
மதத்துக்கும் அறிவியலுக்கும் அறிவியல் கண்டுபிடிப்புக்கு, பரிணாமத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனச் சொன்ன அவர், கடவுளைப் பற்றிய எந்த விசாரணையிலும் ஈடுபடவில்லை. அரசு மரியாதையோடு நியூட்டனுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். உலகைக் கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்” எனச் சொன்னார் டார்வின் .
அவர் இறக்கிற பொழுதும் மனைவியிடம் காதல் மொழி பேசினார். ‘நீ என்னைக் கவனித்துக்கொள்வாய் என்றால், அதற்காகவே நான் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கத் தயார்’ என்று சொல்லியபடியே அவரின் இறுதி மூச்சு அடங்கியது. சார்லஸ் டார்வின் 1882 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் ( Westminster Abbey) அவரது உடல் இரண்டு பெரிய விஞ்ஞானிகளுடன் – ஜோன் ஹெர்ஸ்ஷல் மற்றும் சேர் ஐசக் நியூட்டன் (John Herschel and Isaac Newton) இவர்களுடன் – ஏப்ரல் 26 ஆம் நாள், மிகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது
அறிவியலிடம் மன்னிப்பு கேட்ட தேவாலயம்:
ஆனால் சார்லஸ் டார்வின் இறந்து ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர் அவரின் கோட்பாட்டை இலண்டனின் தேவாலய சேர்ச் தவறென்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்டது. என்றைக்கும் அறிவியல் உண்மை உலகில் நிலைத்து வாழும். அறிவியல் உண்மை காணவே. அறிவியல் விழிப்புணர்வு தரவே. அறிவியல் கண்டுபிடிப்புக்கே.. இன்றைக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளால் தான், இந்த உலகம் புனரமைக்கப்பட்டு இருக்கிறது. அறிவியல் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும். ஆய்வின் மூலம் உண்மையை உலகுக்கு எடுத்து உரைக்கும் .