மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை: இளைய பங்காளியின் எஜமான விசுவாசம்
-பிரகாஷ் காரத்

அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து, ஈரான் நாட்டின் மீது நடத்தி வருகிற அடாவடித்தனமான தாக்குதல் குறித்த பிரச்சனையில் மோடி தலைமையிலான இந்திய அரசு மேற்கொண்டுள்ள நிலைபாடு, கடந்த 12 ஆண்டுகளாக பா.ஜ.க அரசு பின்பற்றி வருகிற ஊசலாட்டம் நிறைந்த வெளியுறவுக் கொள்கையை அப்பட்டமாக அம்பலப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. மோடி அரசின் செயல்பாட்டில் ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கோ, சுயேச்சையான சிந்தனைப் போக்கிற்கோ சிறிதளவும் இடமில்லை. மாறாக, வெளியுறவுக் கொள்கையானது, அனைத்து அம்சங்களிலும் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாத்திடும் தன்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுருங்கக் கூறின், அமெரிக்க அரசின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அதன் இளைய பங்காளியாக இயங்கி வருகிற ஒரு அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையாகவே அது பரிணமித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதியன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரான் நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து கொடூரமான தாக்குதலை ஆரம்பித்த நிலையில், இந்த வன்செயலுக்கு இந்திய அரசு தரப்பிலிருந்து எவ்வித கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. ஈரானின் இறையாண்மைக்கே அச்சுறுத்தலை ஏற்படுத் தும் இந்த ஈனச்செயல் குறித்த சிறு முணுமுணுப்பு கூட இந்திய ஆட்சியாளர்களிடமிருந்து எழவில்லை. மேலும், இந்தப் போர் நடவடிக்கையின் போது, ஈரானின் தலைமை அமைச்சரும், உச்சபட்ச தலைவராக விளங்கியவருமான அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் அல்ல, ஒரு இரங்கல் செய்தி கூட மோடி அரசிடமிருந்து வெளிவரவில்லை. இந்தியாவின் நட்பு நாடாக மட்டுமன்றி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வரலாறு மற்றும் பண்பாட்டு ரீதியான தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டிற்கு இன்னலும், இடையூறும் ஏற்பட்ட சோதனையான நேரத்தில் மோடி அரசின் நீண்ட நெடிய மௌனம், உலக அளவில் அரசியல் பார்வையாளர்களிடையே விவாதப் பொருளாய் அமைந் துள்ளது.
அமெரிக்கச் சார்பு, வலதுசாரி வெளியுறவுக் கொள்கை
மோடி அரசின் உள்நோக்கம் நிறைந்த இந்த மௌனத்திற்குப் பின்னால், பன்னெடுங்காலமாக இந்தியா பின்பற்றிவந்த வெளியுறவுக் கொள்கையிலிருந்து தற்போது வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது என்று வலிமையாக இருந்து வரும் விமர்சனம் சுட்டிக் காட்டப்படுகிறது. முந்தைய காலங்களைப் போல, இந்தியா ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கான அடிப்படைக் கூறுகள் இன்னமும் இருக்கவே செய்கின்றன என்கிற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பரவலாக இருந்து வருகிறது. ஆனால் இது முற்றிலும் தவறானது என்று தான் கூற வேண்டும். தேசிய நலன் சார்ந்த சுயசார்புச் சிந்தனையுடன் கூடிய ஒரு வெளியுறவுக் கொள்கையைத் தாங்கள் பின்பற்றப்போவதாக மோடி அரசு வெறும் உதட்டளவில் கூறி வந்த போதிலும், நடைமுறையில், 2014 இலிருந்தே இத்தகைய நோக்கங்கள் கைவிடப்பட்டுவிட்டன.
மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையையும், உள்நாட்டில் பெரும் கோர்ப்பரேட் நலன் சார்ந்து அது பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கையையும் ஒன்றையொன்று பிரித்துப் பார்க்க இயலாது. உலகம் முழுவதும் வலதுசாரிக் கொள்கைகளை அமுல்படுத்தி வருகிற நாடுகள் பெரும்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கரம் கோர்த்துச் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் இந்துத்துவா – கோர்ப்பரேட் கூட்டணியின் முகமாக விளங்கி, தீவிர வலதுசாரிக் கொள்கைகளை மக்கள் மீது திணித்து வருகிற மோடி அரசு, அமெரிக்காவுடன் கூட்டணி வைத்திருப்பதில் வியப்பேதுமில்லை.
இந்தியாவின் பெருமைமிக்க அணிசேராக் கொள்கையினை அறவே கைவிட்டு, அமெரிக்காவுடனான தனது நெருக்கத்தையும், கோர்ப்பரேட் நலன் சார்ந்த கூட்டணியையும் மேலும் மேலும் வலுப்படுத்திக் கொள்வதே, இன்றைய மோடி அரசு பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையின் அடிநாதமாக உள்ளது. மோடி அரசு பதவியேற்ற பிறகே, இந்திய-அமெரிக்க பாதுகாப்புக் கட்டமைப்பு என்கிற போர்வையில், பரஸ்பர இராணுவ ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் நான்கு ஒப்பந்தங்கள் இறுதிப் படுத்தப்பட்டன. இது இந்தியாவை அமெரிக்காவின் ஒரு முக்கியமான பாதுகாப்புக் கூட்டாளியாக மாற்றி விட்டது. இதைத் தொடர்ந்தே அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய ‘குவாட் அமைப்பில் இந்தியா இணைந்து கொண்டது.
இதன் நீட்சியாக, ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவால் மேற்கு ஆசியாவுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘ஐ2யு2’ முன்னெடுப்பிலும் இந்தியா இணைந்து கொண்டது. இஸ்ரேல், இந்தியா, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா ஆகி யவை இதில் அங்கம் வகிக்கின்றன. இத்தகு முன்னெடுப்பின் நோக்கம், ஈரானுக்கும், ஆசியப் பகுதியில் செல்வாக்கு செலுத்திவரும் சீனாவுக்கும் எதிராகச் செயல்படுவதுதான் என்பது முன்னரே கணிக்கப்பட்டது.

‘அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா’ என்னும் அச்சு
ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும், இந்துத்துவா கூட்டத்தாருக்கும், தான் உருவான காலத்திலிருந்தே இனவெறிக் கருத்தியலைத் தீவிரமாகக் கடைப் பிடிக்கும் இஸ்ரேல் நாட்டின் மீது, பரிவும் பாசமும் நிறைந்த ஒரு கரிசனப் பார்வை சாவர்க்கர் காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. அடல் பிஹாரி வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில், ‘அமெரிக்கா-இஸ்ரேல்-இந்தியா’ என்னும் ஒரு அச்சை ஏற்படுத்துவது குறித்த விவாதங் கள் தலைதூக்கின. மோடி ஆட்சி, இத்தகைய அச்சை நடைமுறை சாத்தியமாக்கிவிட்டது. இதன் மூலம் இஸ்ரேல், இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்கிடும் ஒரு முக்கியமான நாடாக உருவெடுத்துள்ளது.
அது மட்டுமன்றி, இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிலும் இஸ்ரேல் முழுமையாக ஈடுபட்டு, பெகாசஸ் போன்ற வேவுபார்ப்பு ஏற்பாடுகளையும், உளவு உபகரணங்களையும் வழங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், மேற்கு ஆசியப் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதிக்கச் செயல்பாடுகளை ஏற்க மறுத்திடும் ஒரே பெரிய நாடு ஈரான் ஆகும். அதனால் தான் அந்நாடு, கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக, உலகப் போலீஸ்காரனாகத் தன்னைத்தானே அறிவித்துக் கொள்ளும் அமெரிக்காவின் இலக்காக இருந்து வருகிறது. கடந்த 2017 இல், டொனால்ட் ட்ரம்ப்பின் முதலாவது ஜனாதிபதி பதவிக் காலத்தில், அமெரிக்கா, ஈரானிய எண்ணெய் மீது தன்னிச்சையாகத் தடைகளை அறிவித்தது.
மோடி அரசு, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவது வணிக ரீதியாக இந்தியாவுக்குப் பலன் தருவதாக இருந்த போதிலும், ட்ரம்ப்பின் கட்டளைக்கு இணங்கி, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை உடனடியாக நிறுத்திக் கொண்டது. சென்ற ஆண்டு (2025) ஜுன் மாதம் இஸ்ரேல் எந்தவிதமான முகாந்தி ரமுமின்றி, ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது, 12 நாட்கள் நீடித்த இந்த குண்டுவீச்சுத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்கவே இல்லை. கிட்டத்தட்ட இதே கால கட்டத்தில், ட்ரம்ப்பின் உத்தரவுப்படி அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது குண்டு வீசிய போதும் இந்தியா வாய்மூடி மௌனியாகவே இருந்தது.
மோடியின் இஸ்ரேலியப் பயணமும் அதீத அக்கறையும்
இந்தப் பின்னணியிலேயே, கடந்த பெப்ரவரி 25-26, 2026 திகதிகளில் இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அச்சமயம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி ஆற்றிய உரையில், இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையால் மிகக்கொடூரமான இன்னலுக்கு ஆளாகியுள்ள காசாவின் இன்றைய நிலைமை குறித்தோ, மேற்குக் கரையில் பலஸ்தீன மக்கள் இஸ்ரேல் இராணுவத்தால் துன்புறுத்தப்படுவது குறித்தோ எந்த விதமான மென்மையான விமர்சனக் கருத்துகூட இடம்பெறவில்லை. இதற்கு மாறாக, இஸ்ரேலுடன் அனைத்துத் தரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவது குறித்தும், இஸ்ரேலை உள்ளடக்கி அமெரிக்கா முன்மொழிந்துள்ள திட்டங்களான “இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய வழித்தடம்” மற்றும் “ஐ2யு2” ஆகியவற்றை ஊக்குவிப்பது குறித்தும் மையப்படுத்தியே மோடியின் உரை அமைந்திருந்தது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்த்து ஒரு இராணுவ ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்குவதற்கு ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பெஞ்சமின் நேதன்யாகு, அதற்குச் சற்று முன்னதாக இருக்குமாறு மோடியின் இஸ்ரேல் பயணத்திட்டத்தை வகுத்துக் கொடுத்திருந்தது இங்கே கவனிக்கத்தக்கது. அமெரிக்காவும் தன் பங்கிற்கு, ஈரானைக் குறிவைத்து தனது கப்பற்படையைத் திரட்டி வைத்திருந்தது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இவ்வாறாகப் போருக்கான முன் தயாரிப்பில் இருந்த நேரத்தில் தான், நரேந்திர மோடி மிகவும் படாடோபமாக இஸ்ரேலுக்குப் பயணித்து, காசாவில் அரங்கேறிய போர்க் குற்றங்களுக்காக, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ள நேதன்யாகுவுடன் தனது நெருங்கிய நட்பையும், உறவுகளையும் பேணுவதில் மோடி அதீக அக்கறை செலுத்தி வந்துள்ளார்.
கூட்டுச் சதிச்செயலின் குரூர மௌனம்
மேலே நாம் விவாதித்த பின்னணியில் பார்த்தோமானால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, தனது இரண்டு நெருங்கிய கூட்டாளிகள் ஈரான் நாட்டின் மீது தொடுத்துள்ள போரைப் பற்றி கள்ள மௌனம் சாதிப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. இந்த மௌனம், ஒரு சில விமர்சகர்கள் கடுங்கோபத்துடன் குற்றம் சாட்டுவது போல, வெறுமனே கோழைத் தனத்தால் விளைந்தது அல்ல. இது, அமெரிக்கா-இஸ்ரேல் சேர்ந்து நடத்தும் குற்றச்செயலுக்கு உடந்தையாக நின்று, அவர்கள் கூடவே இருப்பதால் எழுந்துள்ள மௌனம் ஆகும். மேலும் தெரிந்தே நடத்தப்படுகிற இந்தக் கூட்டுச் சதிச்செயலை எவ்வாறு நியாயப்படுத்துவது என்கிற தர்மசங்கடத்திலிருந்தும் இந்தியா மௌனம் சாதிக்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடல்பரப்பில், ஈரானிய போர்க்கப்பலான “ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா” அமெரிக்கத் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம், இந்தியாவின் தர்ம சங்கடத்தை அதிகப்படுத்திய நிகழ்வாக அமைந்து விட்டது. சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய கடற்படையின் கப்பல் அணிவகுப்பு ஆய்வு நிகழ்வில் பங்கேற்ற மூன்று போர்க்கப்பல்களில் ஒன்று தான் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்புவரை இந்திய கடற்படையின் விருந்தினர்களாக இருந்து மகிழ்வுடன் திரும்பிச் சென்ற 100 இற்கும் மேற்பட்ட மாலுமிகள் திடீர்த்தாக்குதலால் கொல்லப்பட்ட சம்பவம், இந்திய அரசை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியது. ஆயினும், இந்தக் கொடூரமான சம்பவம் குறித்து வருத்தம் தெரி விக்கும் வகையிலோ, ஈரான் நாட்டிற்கும், உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத்தினருக்கும் அனுதாபம் தெரிவிக்கும் தன்மையிலோ எந்தவொரு அறிக்கையும் இந்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. கடந்த மார்ச் 9 ஆம் திகதியன்று இந்திய நாடாளு மன்றத்தில் மேற்கு ஆசியச் சூழல் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையானது, எந்தவிதமான விளக்கவுரைகளுமின்றி, வெறும் சடங்குப்பூர்வமாகவே இருந்தது. ஈரான் அரசில் உயர் பதவிகளில் இருந்தவர்களின் மரணத்தையும் (அதுவும் அயதுல்லா காமேனியின் பெயரைக் குறிப்பிடாமல்), இந்தியப் பெருங்கடலில் ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தையும் மட்டும் மேலோட்டமாகப் பதிவு செய்த அறிக்கையாகவே அது அமைந்திருந்தது. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக நடத்தும் அடாவடி ஆக்கிரமிப்பு நடவடிக்கை பற்றிய எந்தவிதமான விமர்சனமும் வெளியுறவு அமைச்சரின் நாடாளுமன்ற அறிக்கையில் காணப்படவில்லை.
ஈரான் நாட்டின் மினாப் நகரில் அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலால் 175 பள்ளிச் சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட கொடிய நிகழ்வு, ஈரானியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதால் இந்தியாவுக்கு வந்து விட்டுத் தாய்நாடு திரும்பிக்கொண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட மாலுமிகள் மரணமுற்ற கோரச் சம்பவம் நெஞ்சத்தைக் கரையச் செய்திடவில்லை. குறைந்த பட்சம் வருத்தம் தெரிவித்திடக் கூட ஆட்சியாளர்களுக்கு தோன்றவில்லை. காசாவில் பல்லாயிரக் கணக்கில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிப் பொதுமக்கள் இஸ்ரேலின் கொடுங்கரங்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட விஷயத்திலும், இந்திய அரசின் அணுகுமுறை மரத்துப்போனதாகவும், மனிதாபிமானமற்ற ஒன்றாகவுமே தென்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், அதன் கைப்பாவையாக விளங்கும் இஸ்ரேலுடனும் இணைந்து நின்று கொண்டு, அவ்விரு நாடுகளின் இராணுவ ரீதியிலான குற்றச்செயல்களை மௌனமாக அங்கீகரிப்பதன் மூலம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தனது தார்மீக நெறிமுறைகளை முற்றிலுமாக இழந்துவிட்டது.
தொடரும்..