அமெரிக்கா உடன் 2-ம் கட்ட பேச்சு இப்போதைக்கு இல்லை என ஈரான் தகவல்

மெரிக்காவுடன் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

தெஹ்ரானில் நேற்று (20.04.2026) செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, “பேச்சுவார்த்தையை, ராஜதந்திர முயற்சிகளை முன்னெடுப்பதில் அமெரிக்கா தீவிரமாக இல்லை. பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறும் அமெரிக்கா, அதற்கான செயல்முறையை முன்னெடுப்பதில் தீவிரம் காட்டுவதில்லை. அதன் நடத்தைகள் இதையே உணர்த்துகின்றன.

ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியது, ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டிருப்பது, லெபனானில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதை தாமதப்படுத்துவது ஆகிய அனைத்தும் போர் நிறுத்தத்தின் தெளிவான மீறல்கள்.

அதோடு, அச்சுறுத்தும் சொல்லாடல்களை அமெரிக்கா மேற்கொள்கிறது. அமெரிக்கா தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றுவதோடு, அளவுக்கு அதிகமான கோரிக்கைகளை முன்வைக்கிறது.

ஹார்முஸ் நீரிணையில் மற்றவர்களுக்கு தடையற்ற பாதுகாப்பை எதிர்பார்க்கும் அதேவேளையில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது. எனவே, இப்போதைக்கு புதிய பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஈடுபடாது” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டிருப்பது அமைதி பேச்சுவார்த்தைக்கு மிகப் பெரிய தடையாக இருப்பதாக பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனிர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் தொலைபேசியில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் இஸ்லாமாபாத்தில் நடத்த தங்கள் நாடு தயாராக இருப்பதாகவும் அப்போது அவர் கூறியுள்ளார். இதையடுத்து, அசிம் முனிரின் கவலை குறித்து பரிசீலிப்பதாக ட்ரம்ப் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் நிலைப்பாடு என்ன?

ஹார்​முஸ் வளை​குடா பகு​தி​யில் சென்று கொண்​டிருந்த ஈரான் சரக்கு கப்​பலை அமெரிக்க கடற்​படை கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக, ஈரான் வெளியுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் இஸ்​மா​யில் பாகா​யி கூறும்போது, “போர் நிறுத்​தம் அமுலானது முதல் அமெரிக்கா​வின் செயல்​பாடு​கள் முன்​னுக்​குப் பின் முரணாக உள்ளன.

கடந்த ஞாயிற்​றுக்​கிழமை (19.04.2026) இரவு ஈரான் சரக்கு கப்​பல் மீது அமெரிக்க கடற்​படை தாக்குதல் நடத்தி உள்​ளது. இது போர் நிறுத்​தத்தை மீறும் செயல் ஆகும். அமெரிக்காவுடன் அடுத்த சுற்று அமை​திப் பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்​கும் திட்​டம் இல்​லை” என்றார்.

ஈரான் இராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, “சரக்கு கப்​பல் மீது அமெரிக்கா நடத்​திய தாக்​குதல் கடற்​கொள்ளை தாக்குதல் போன்​றது. ஈரான் கப்​பல் கடத்தப்பட்​டுள்​ளது. இதற்கு தக்க பதிலடி கொடுப்​போம். ஈரான் கப்​பலில் எங்களது மாலுமிகள், ஊழியர்​கள் உள்​ளனர். அவர்​களின் நலன் கருதி அமெரிக்​கா மீதான தாக்​குதலை தாமதப்படுத்​தி வரு​கிறோம்​” என்​று தெரிவித்​தன.

Tags: