அதல பாதாளத்தில் இந்தியப் பொருளாதாரம்!

-ச.அருணாச்சலம்

ந்தியா உலகின் முன்னேறும் நாடுகளில் முதன்மையாக திகழ்கிறது என்று சங்கிகள் சுய தம்பட்டம் அடித்த சூழலில், விஸ்வ குருவான நரேந்திர மோடி , மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும், விவசாயிகள் இரசாயன உரத்தை தவிர்க்க வேண்டும், மக்கள் வெளிநாட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்ததன் பின்னணி குறித்த ஒரு அலசல்;

இந்தியா உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாறி வருகிறது என்பதான சொல்லாடல்களை பரப்பிய மத்திய பா.ஜ.க அரசு, அதை ஊதி பெரிதாக்கிய பா.ஜ.கவின் ஐ.டி விங், சலித்து போகும் அளவிற்கு இந்த புளுகை தினமும் பரப்பிய கோடி மீடியாக்கள் இவை அனைத்தும் பிரதமர் மோடியின் இந்தப் பேச்சால் இன்று வாயடைத்து போயுள்ளன.

விக்சித் பாரத், ஆத்ம நிருபர பாரத் என்று சகட்டு மேனிக்கு சவடால் பேசிய மோடி இன்று தனது ஆதரவாளர்களான மத்திய தர வகுப்பினரை , “தங்கம் வாங்காதே, வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லாதே” என்று சொல்வதற்கான காரணம் மேற்காசியாவில் வெடித்துள்ள போரும், அதன் தாக்கமுமான ஆயில் பற்றாகுறை மட்டுமா?

 நொறுங்கிப் போன இந்தியப் பொருளாதாரம்

மோடி அரசை 2014 முதலே பாராட்டி, அதன் செயல்களுக்கு முட்டு கொடுத்த பொருளாதார வல்லுனர் சுர்ஜித் பல்லா , “இப்பொழுது இந்திய பொருளாதாரம் நொறுங்கிய நிலையில் உள்ளது, இது திடீரென்று ஏற்பட்ட சோதனையல்ல” என்று கூறியுள்ளார்.

பணமதிப்பிழப்பை மோடி அறிவித்த போதும், மற்றும் ஜி எஸ் டி முறையை அவசர கோலத்தில் மோடி அமுல் செய்த போதும் இந்திய அரசின் நிதித்துறை செயலராக இருந்த  சுபாஷ் கர்க் இப்பொழுது, “ இந்திய பொருளாதாரம் உலகின் மிக மோசமான பொருளாதாரமாக சிதைந்து போயுள்ளது, போலியான சித்தரிப்பு, போலியான வளர்ச்சி அதல பாதாளத்தில் வீழும் ரூபாயின் மதிப்பு, எரிசக்தி மற்றும் எல் பி ஜி தட்டுப்பாடு ஆகியவை இந்த வீழ்ச்சியின் காரணிகளாக உள்ளன ” எனச் சாடியுள்ளார். “மோடியின் தங்கம் வாங்காதே என்பன போன்ற சிக்கன நனவடிக்கைகள் வெறும் அச்சத்தினால் விளைந்த எதிர் வினையே ஒழிய, அந் நடவடிக்கைகள் ஒரு தீர்வல்ல” என்று கூறியுள்ளார்.

மோடியின் முன்னாள் ஆதரவாளர்களும், முன்னாள் அதிகாரிகளும் மோடியின் முகத் திரையை கிழித்து, இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலவரத்தை உள்ளபடி கூற விழைவது ஏன்? மோடியினால் முட்டு சந்திற்குள் சிக்கியிருக்கும் இந்தியாவை மீட்டெடுக்கும் அறிவாற்றலோ, தகுதியோ, திறமையோ மோடி அரசிற்கு இல்லை என்பதை புரிந்து கொண்டதன் விளைவா அது?

இந்திய பொருளாதாரம் இன்று சந்திக்கும் மிகப் பெரிய சவால்கள் அமெரிக்க ஈரான் போரால் ஏற்பட்ட விளைவல்ல, போரும், ஹோர்மூஸ் சிக்கலும் எரிசக்தி வணிகத்தின் (கச்சா எண்ணெய் மற்றும் எல் பி ஜி சப்ளை) தட்டுப்பாடும் இந்திய பொருளாதாரத்தை பாதிக்கிறது என்றாலும், அவை மட்டுமே இந்திய பொருளாதாரத்தின் சீரழிவிற்கு காரணமல்ல.

இந்திய பொருளாதாரம் ஒரு மோசமான நிலையில் (worst performing economy) இருப்பதற்கான காரணிகளில் முக்கியமானவை

# ஜி டி பி வளர்ச்சி எதிர்மறையாக (negative GDP growth) சென்றது,

# ஏற்றுமதி – இறக்குமதிகளின் ஏற்றத்தாழ்வு,

# நடப்பு கணக்கு பற்றாக்குறை (Current Account Deficit)

# சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு சரிதல்,

# அந்நியச்செலவாணி கையிருப்பை கையாளத் தவறியது

ஆகியன ஆகும்.

சிறு, குறுந்தொழில்கள் முடங்கின

இதனது ஆரம்பம் இந்த ஆண்டு (பெப்ரவரி 28) வெடித்த ஈரான் போரல்ல. 2016 நவம்பரில் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பினாலும் (demonetisation) அரை வேக்காட்டு தனமான ஜி எஸ் டி வரி விதிப்பு முறை அறிமுகத்தாலும், இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்தது.

முறைசாரா பொருளாதாரத்தை (informal economy) அழித்ததனால் சிறு குறு தொழில்கள் முடங்கின. வேலைகள் அழிந்தன, உற்பத்திகள் குறைந்தன.

பழையன அழிதலும், மூலதன சேர்க்கையும் முதலாளித்துவ வளர்ச்சியை மேலும் கூட்டுமென்பது விதியாக இருந்தாலும் , இந்திய பொருளாதாத்தை முறையாக ஒழுங்கமைக்க (formalise) எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அழிவு மட்டுமே ஏற்பட்டது, மூலதன சேர்க்கை நடைபெறவில்லை. வேலையற்றோர் பெருகினர், கூலிகள் குறைந்தன.

உற்பத்தி குறைவு 20-30%

வேலை இழப்பு 32 -35%

வணிக தளங்களில் 43% வேலையிழப்பு நடந்தன.

கோர்ப்பரேட்களின் இலாபம் கூடியது

ஆனால் முறையான பொருளாதாரம் (Formal sector) அழிக்கப்பட்ட சிறுகுறு தொழில் முனைவர்களை, வேலையிழந்த கூட்டத்தை, தன்னுள் ஈர்த்து புதிய உற்பத்திகளை, புதிய தொழில் மலர்ச்சியை இங்கு ஏற்படுத்தவில்லை. மக்களின் சேமிப்பு சீர்குலைக்கப்பட்டது, அது ஜி டி பி அளவில் 34 ல் இருந்து 28% குறைந்தது. குடும்பங்களின் வரவு செலவு வருமானத்தின் அடிப்படையில் அல்லாது கடன் அடிப்படைக்கு மாற்றப்பட்டது தான் மக்கள் கண்ட பலன். இத்தனை பேரழிவினூடும் கார்ப்பரேட்டுகளின் இலாபம் கூடியதே ஒழிய, குறையவில்லை!

ஆனால் மூலதன சேர்க்கைக்கு (primitive accumulation of capital) உதவுகிறேன் பேர்வழி என்று மோடி தனக்கு பிடித்த ஓரிரு முதலாளிகளை மேலும் கொழுத்த ஏகபோக முதலாளிகளாக மாற்ற துணிந்தார் . அரசு மற்றும் பொதுத்துறை சொத்துக்களை தாரை வார்த்து அவர்களை கொழுக்க வைத்தார். வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களை அதானி, அம்பானிகளுக்கு சேவை செய்ய பணித்தார். எல் ஐ சி போன்ற நிறுவனங்களில் குவிந்துள்ள மக்களின் பணத்தை அதானி பங்குகளிலும் முதலீடு செய்ய நிர்பந்தித்தார் .வெளிநாடுகளிலும் இவர்கள் சென்று கொள்ளையடிக்க ஏதுவாக திட்டமிட்டு பயணித்தார். ஒப்பந்தங்களையும் பெற்றார்.

அதானியை பிளாக் லிஸ்ட்டில் இருந்து விடுவிக்க நெதர்லாந்து பயணம்

நெதர்லாந்துக்கு கடந்த வாரம் சென்றார் மோடி. அங்குள்ள நிதி கூட்டமைப்பு அதானி குழுமத்தை பிளாக் லிஸ்டு செய்து விட்டிருந்தது. இதனால் அதானி குழுமம் ஐரோப்பிய வங்கிகளில் கடன் பெற முடியாமல் கட்டம் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையை நீக்குவதற்காகவே மோடி அங்கு சென்றார் . 27 ஆண்டுகள் எந்த இந்திய பிரதமரும் செல்லாத நெதர்லாந்திற்கு சென்று இந்த ஈனத் தனத்தை அரங்கேற்றினார். ஆனால், வெளியில் தெரியாமல் இருக்க, செமி கண்டக்டர் தொழிலில் இந்தியாவும், நெதர்லாந்தும் இணைந்து செயல்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அது இங்குள்ள ஜால்ராக்களின் ஓசைக்கு தீனி போட, பேசப்பட்ட ஒன்றே தவிர, அந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்கு 30 ஆண்டுகளுக்கு எந்த பலனும் இல்லை!

வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு முதலீடு

உள்நாட்டில் தேவைகள் சுருங்கிய நிலையில் (demand contraction) புதிய தொழில்கள் துவங்கப்படவில்லை, தொழிலதிபர்களுக்கு வரிச்சலுகை (ரூ 2.3 இலட்சம் கோடி) கொடுத்தாலும், முதலீடு செய்ய தொழிலதிபர்கள் தயாராய் இல்லை. வெளிநாட்டு முதலீடும் இந்திய சந்தையில் நிலையற்ற தேவை நிலவுவதால் குறைந்து வருகிறது. 81 பில்லியன் டொலர்களை தொட்ட வெளிநாட்டு முதலீடு (FDI) இன்று 0.4 பில்லியன் டொலர்களாக சிறுத்துள்ளதே இதற்கான சான்றாகும்.

ஏற்றுமதி இறக்குமதில் உள்ள ஏற்றத் தாழ்வு, இந்தியா இறக்குமதி செய்பவற்றிற்கு கொடுக்க வேண்டிய நிதியை (வருமானத்தை) இந்தியா உள்நாட்டில் திரட்ட முடியாத சூழல், நடப்பு கணக்கில் பற்றாக் குறையை ஏற்படுத்துகிறது. இதை இரண்டு வகைகளில் சமாளிக்க வேண்டும். ஒன்று நமது சேவைகளை பிற நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது, இரண்டு வெளிநாடுகளில் இருந்து முதலீட்டை ஈர்ப்பது ஆகியன ஆகும்.

சேவைகளின் ஏற்றுமதியில் இந்தியாவின் வளர்ச்சி சுமாராக இருப்பதால் வெளிநாட்டு முதலீட்டை கவர வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் அந்த முதலீடு பல புறச்சூழல்களை – அமெரிக்க வட்டி விகிதம், உலக அரசியல் சூழல் மற்றும் இந்தியாவில் கிடைக்கும் லாபத்தின் அளவு, இந்திய கரன்சியின் மதிப்பு ஆகியவற்றை – சார்ந்து அவை நமக்கு கிட்டும் . இந்திய சந்தைகளின் மீதான நம்பிக்கை குறையும் பொழுது, இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் மீது சந்தேகம் வரும் பொழுது, வெளிநாட்டு முதலீடு குறையும்.

நடப்பு பற்றாக் குறையை (Current Account Deficit) சமாளிக்க ரிசர்வ் வங்கி தனது கையிருப்பிலிருந்து அதை சரிக்கட்ட வேண்டும். அப்பொழுது இந்திய ரூபாயின் மதிப்பு ஊசலாடும். இதற்கு காணம் வெளிநாடுகளில் ஏற்படும் சிக்கல்களல்ல, உள்நாட்டில் உள்ள நமது பொருளாதாரக் கட்டமைப்பில் (permanent structural imbalance) உள்ள கோளாறு தான் என்பதை நம்மால் மறுக்க முடியாது.

தொடரும் இந்த கோளாறை சரி செய்ய நீண்ட கால திட்டமும் சீர்திருத்தங்களும் தேவை.

மோடியின் மேதாவித்தனமான கோஷங்களும், துதி பாடல்களும் இதற்கு உதவாது. இந்திய மக்களின் தேவைகளை உணர்ந்து, உலகில் நிலவும் சூழல்களையும் கருத்தில் கொண்டு பொருளாதாரக் கொள்கைகளும், அயலுறவு கொள்கைகளும் வகுக்கப்பட வேண்டும்.

 வெளிநாடுகளை நம்பியுள்ள இந்தியா

நாம் இறக்குமதி செய்பவை எரிசக்தி (கச்சா எண்ணெய், எல்பிஜி) இவை பெரும்பாலும் ரஷ்யா மற்றும் மேற்காசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

எலகட்ரானிக்ஸ் பொருட்கள், மற்றும் தொழில்நுட்பமிக்க (solar, lithium, and rare earth related ) இயந்திர வகைகள். இவை பெரும்பாலும் சீன நாட்டில் இருந்தே இறக்குமதி செய்கிறோம். ஆனால். நமது ஏற்றுமதிகளோ கச்சா பொருட்களையும், மதிப்பு கூட்டல் சிறிதளவே உள்ள பொருட்களைதான் நாம் ஏற்றுமதி செய்கிறோம்.

எரிசக்தி துறை- சோலார் மற்றும் விண்ட் எனர்ஜி, எலெக்ட்ரிக் வெஃஹக்கிள் (EV) எலெக்ட்ரானிக்ஸ் – செமி கண்டக்டர் மற்றும் சிப்ஸ் – துறை செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய மூன்று துறைகளில் தான் வெளிநாட்டு முதலாளிகள் விரும்பி முதலீடு செய்கின்றனர் .இந்த துறைகளில் இந்தியாவின் பங்கு- அறிவார்ந்த பணியாளர்கள், சோலார் மற்றும் காற்றாடி தொழில் நுட்பம் ஆகியவற்றில்- குறிப்பிடும்படியாக இல்லை. அதற்கான தொழில் நுட்பமோ , கட்டமைப்போ ஒப்பீட்டளவில் இந்தியாவில் இன்னும் வளரவில்லை. இதற்கான எந்த முன் முயற்சியும் மோடி அரசிடம் இல்லை. அறிவிப்புகள் மட்டுமே செய்யத் தெரிந்த மோடி அரசிற்கு அடிப்படைகளை செய்ய நேரமும் இல்லை, நிதியும் இல்லை.

நாளைக்கே மேற்காசியாவில் போர் நிறுத்தம் வந்து கச்சா எண்ணெய் விலை சீரானாலும், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மறைந்து விடுமா?

உள்நாட்டின் தேவை (domestic demand) என்பது வேலை வாய்ப்பு பெருகினால் மட்டுமே!

மக்களின் வாங்குந் திறனும், தேவையின் அளவும் கூடும். வேலைவாய்ப்பு பெருக வேண்டுமாயின் தொழிலாளர் செறிந்த தொழில்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

அத்தகைய முதலீடு இப்பொழுது இருக்கும் வளர்ச்சி மாடலில் சாத்தியமில்லை, இன்றுள்ள மாடலின் நோக்கமெல்லாம் அபரிமிதமான லாபம் ஒன்றே.

மக்களை சார்ந்த அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு நிதி மூலதனத்தின் கட்டளைகள் ஒருபோதும் உதவாது. மாற்றம் வேண்டுமெனில், மாற்றுப் பாதையை தேட வேண்டும்.

தேர்தல் அரசியலில் ஊறி, ஆட்சியில் அமர்வது ஒன்றையே இலட்சியமாக கொண்ட கும்பல் ஆட்சியில் அமர்ந்த பிறகாவது இந்திய பொருளாதாரத்தின் இயல்பையும், தேவைகளையும் கணக்கில் எடுத்திருக்க வேண்டும். குறுகிய மனப்பாங்கும், மிதமிஞ்சிய தலைக் கனமும் மோடி கும்பலின் கண்களை மறைத்தனவா? அல்லது , பகுத்தாய்ந்து தெளிவு பெறக்கூடிய புத்திக் கூர்மை மோடி கும்பலிடம் இல்லையா? தெரியவில்லை.

வாய்ச் சவடாலினால் வாக்காளர்களை முட்டாளாக்கலாம். ஆனால், பொருளாதார காரணிகளை- முதலீடு, தொழில் நுட்பம், சந்தை ஆகியவற்றை – முட்டாளாக்கவோ, வளைத்துப் போடவோ முடியாது. அதைப் போன்றே பிற நாட்டு தலைவர்களையும் ஏமாற்ற முடியாது என்ற உண்மை மோடி அரசிற்கு தாமதமாக புரிந்துள்ளது.

எனவே, கூடா நட்பினால் இந்திய நலன்கள் காவு கொடுக்கப்படுகின்றன, இந்திய தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன, இந்திய உயிர்கள் உதாசீனப்படுத்தப்படுகின்றன, இந்தியர்களின் சேமிப்பு வீண்டிக்கப்படுகின்றன.

ஆனால், அதானியின் நலன்கள் மட்டும் அது அமெரிக்க நீதிமன்றமாக இருந்தாலும் சரி, நெதர்லாந்தின் நிதிக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி மோடி அரசால் பாதுகாக்கப்படுகிறது .

இது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் இல்லை!

Tags: