‘பாரதிராஜா’ – தமிழ்த் திரை உலகின் திருப்பு முனை! 

– அ.அன்வர் உசேன்

யக்குநர் பாரதிராஜா தமது 85-ஆவது வயதில் விடை பெற்றுக்கொண்டுள்ளார். சுமார் 40-க்கும் அதிகமான திரைப்படங்களை இயக்கியிருக்கும் பாரதிராஜா, 1977-ஆம் ஆண்டு, தனது முதல் படமான ‘பதினாறு வயதினிலே’ மூலம் தமிழ்த் திரை உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார் எனில் அது மிகை அல்ல.

குற்றாலச் சாரலாக பதினாறு வயதினிலே!

தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் கிட்டத்தட்ட திரை உலகிலிருந்து ஓய்வுபெற்ற காலம் அது! இந்த ஜாம்பவான்களின் இடத்தை பிடிப்பதற்கு கமலஹாசனும் ரஜினியும் தொடக்க நிலையில் இருந்த காலம் அது! செல்லும் திசையறியாது, தமிழ்ச்சினிமா அனல் காற்றில் சிக்கி தவித்த சூழலில் குற்றாலச் சாரலாக வந்தது, பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’. கதாநாயகர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்து, கமல், ரஜினி ஆகிய முன்னணி நாயகர்களையும், கதாநாயகியான ஸ்ரீதேவியையும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க வைத்த பாரதிராஜா, முதல் படத்திலேயே, தானொரு சிறந்த இயக்குநர் என்ற முத்திரையைப் பதித்தார்.

கேமிராக்களை கிராமங்களுக்கு திருப்பிய இயக்குநர்

திரைப்படங்கள் என்றால் ஸ்டூடியோ எனப்படும் படப்பிடிப்பு தளங்களில் அல்லது பெரு நகரங்களில் தான் உருவாகும் என இருந்த விதியை யும் உடைத்து, அசலான கிராமத்தை கண்முன் படைத்தது பதினாறு வயதினிலே! கேமிராக்களை கிராமங்களை நோக்கி நகர்த்தியது. பாரதிராஜா உதவி இயக்குநராக இருந்த காலத்திலேயே அவரின் திறமையை உணர்ந்த தாகவும், அதனால் தான் பதினாறு வயதினிலே படத்தில் ‘சப்பாணி’ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் பின்னாளில் கமலஹாசன் கூறினார். அந்த கட்டத்தில் தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்கான முனைப்பில் இருந்த ரஜினியும் கிராமத்து மைனராக வில்லத்தனம் கலந்த பாத்திரத்தை ஏற்றார். இவை அனைத்தும் ஒன்றிணைந்து பதினாறு வயதினிலே ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது எனில் மிகை அல்ல.

சமூகப்பிரச்சனைகளை பேசிய திரைப்படங்கள்

அதற்கு பின்னர், பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான ‘கிழக்கே போகும் ரயில்’ சாதி மறுப்புக் காதலைப் பேசியது. மாற்றுச் சாதியை சேர்ந்த காதலர்கள் ஊரைவிட்டுச் செல்வதும், கிராமத்தினர் அவர்களை தாக்க முனைவதும், முற்போக்கு பேசும் இராணுவ வீரர் தனது உயிரை பலி கொடுத்து அவர்களை காப்பாற்றுவதும் என இந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தக் கட்டத்தில் கிராமத்து இயக்குநர் எனும் பெயரை உடைக்க அவர், கமல் நடிப்பில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ எனும் திரைப்படத்தை இயக்கினார். உளவியல் சிதைவு காரணமாக கொலையாளியாக மாறும் ஹாலிவுட் பாணியிலான இந்த திரைப்படமும் பெரும் வெற்றிபெற்றது. பின்னர் ‘வேதம் புதிது’ படத்தில் மீண்டும் சாதியப் பிரச்சனைகளை பேசினார் பாரதிராஜா! சத்யராஜின் சிறந்த நடிப்பால் இந்த படம் பேசுபொருளானது.

தேசிய அளவில் கவனம்பெற்ற கருத்தம்மா

‘நிழல்கள்’ வேலையின்மை பிரச்சனையையும், ‘அலைகள் ஓய்வதில்லை’ மதம் கடந்த காதலையும் பேசியது. அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக பாரதிராஜாவை ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் இந்துத்துவா வலதுசாரியான மணியன் கடுமையாக விமர்சித்தார். குழந்தைகள் வீட்டை விட்டு ஓடும் எண்ணத்தை உருவாக்க பாரதிராஜா முயல்கிறார் என கொதித்தார். ஆனால், ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மாபெரும் வெற்றி, மதம் கடந்த காதலுக்கு ஏற்பு வழங்கியது. பாரதிராஜா, தனது படங்களில் சமூக பிரச்சனைகளை பேசினார் என்றாலும், பெரும்பாலும் வேறு பிரச்சனைகளில் தான் அவர் கவனம் செலுத்தினார். ‘மண் வாசனை’, ‘டிக் டிக் டிக்’, ‘கடலோரக் கவிதைகள்’ போன்ற திரைப்படங்கள் அத்தகைய பிரிவில் சேர்ந்தன.

முக்கிய இடத்தைப் பிடித்த படைப்பு

எனினும் இரு திரைப்படங்கள் இங்கு குறிப்பிடத் தகுந்தவை. ஒன்று ‘கருத்தம்மா’. இதில், பெண் சிசுக்கொலை பற்றி பாரதிராஜா பேசினார். தென் மாவட்டங்களில் நிலவிய இந்த வழக்கம் இரு கருத்துகளை விளைவித்தது. ஒன்று அது சமூக விரோத மற்றும் சட்டவிரோத செயல் என்பது. இன்னொன்று அது ஏன் நிகழ்கிறது எனும் காரணங்களை ஆய்வது. இரண்டாவது கருத்தின் பக்கம் நின்றார் பாரதிராஜா! அதை வெளிப்படுத்தவும் செய்தார். எனினும் கருத்தம்மாவில் சிறிதும் அதனை ஆதரிக்காமல் பெண் சிசுக்கொலை குறித்து வலுவாக எதிர்ப்பு குரலை பதிவு செய்தார். தமிழ்நாடு மட்டு மின்றி இந்தியா முழுதும் சிசுக்கொலை பற்றிய விவாதங்களை கருத்தம்மா விளைவித்தது. அந்த வகையில் கருத்தம்மா பாரதிராஜாவின் படைப்புகளில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

சிவாஜி ‘நடித்த’ முதல் மரியாதை

இன்னொரு திரைப்படம் முதல் மரியாதை! இதில் சிவாஜியின் அசலான – மிக யதார்த்தமான நடிப்பை வெளிக்கொணர்வதில் பாரதிராஜா மிகப்பெரிய வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இதே காலத்தில் பாக்ய ராஜின் இயக்கத்தில் வெளிவந்த ‘தாவணிக் கனவு’கள் படத்தில் சிவாஜியின் மிகைப்பட்ட நடிப்பு வெளிப்பட்டிருக்கும். ஆனால், ‘முதல் மரியாதை’ யில் அப்படியே வேறுபட்டிருக்கும். படத்தின் கதையும் வேறுபட்டது. தமிழிலணக்கம் கூறும் ‘பெருந்திணை’ எனப்படும் பொருந்தாக் காதலை, காட்சிகள் மூலம் மரியாதைக்குரிய உணர்வாக கட்டமைத் திருப்பார். பாரதிராஜா, பிற்காலத்தில் சிறந்த நடிகராகவும் முத்திரையை பதித்தார். குறிப்பாக மணி ரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில், சூழ்ச்சிகள் கொண்ட அரசியல்வாதியாக அவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. அதேபோல, ‘குரங்கு பொம்மை’ உட்பட பல படங்களிலும் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. ‘கல்லுக்குள் ஈரம்’ எனும் படத்தில் அவர் இயக்குநராகவே நடித்தார். மிகச்சிறந்த கலைப்படைப்பாக உருவான இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை.

மாற்றத்தை ஏற்படுத்திய பாலசந்தரும், பாரதிராஜாவும்

கதாநாயகர்களுக்காக திரைப்படம் பார்ப்பது என்பதைத் தாண்டி, இயக்குநருக்காக திரைப்படம் பார்ப்பது எனும் மாற்றத்தை தொடங்கியது கே.பாலச்சந்தர் எனில் அதனை வலுவாக நிலை நிறுத்தியது பாரதிராஜா எனில், மிகை அல்ல. எனினும் பிற்காலத்தில் சமூகப் பிரச்சனைகளில் தன்னை புதுப்பித்துகொள்ள தவறிய பல ஆளுமைகள் போல பாரதிராஜாவும் பின் தங்கினார். ரஜினி நடித்த ‘கொடி பறக்குது’, உச்சத்தில் இருந்த குஷ்பூ நடித்த ‘கேப்டன் மகள்’ ஆகியவை ஒளிரவில்லை. எனினும், 2008-இல் வெளியான ‘பொம்மலாட்டம்’, மூலம் கதையமைப்பிலும், காட்சியமைப்பிலும் ஒரு புதிய பாரதிராஜா-வாக மிளிர்ந்தார். சினிமா மொழியில் சிறந்த திரைப்படமாக பொம்மலாட்டத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார்.

சமூகப் பிரச்சனைகளில் மிருணாள் சென், ஷியாம் பெனகல், சையத் மிர்சா, கிரீஷ் கர்னார்டு, நசுரூதின் ஷா போன்றவர்களை போல வலுவான தலையீடுகள் பாரதிராஜாவிடமிருந்து வரவில்லை என்றாலும், அவரது வரவு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கியது எனில் மிகை அல்ல. 6 தேசிய விருதுகளையும் 4 பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் வென்ற பாரதிராஜாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை!.

Tags: