போர்த்துக்கல் தொழிலாளர்களின் வரலாற்று வெற்றி

மக்கள் விரோத ‘தொழிலாளர் சட்டத் தொகுப்பு’ தோல்வி

போர்த்துக்கல் நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய ‘தொழிலாளர் சட்டத் தொகுப்பு’ (Labour Package) மசோதா நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கும் பெரும் முதலாளிகளுக்கும் எதிராக அந்நாட்டு தொழிலாளி வர்க்கம் கடந்த 11 மாதங்களாக நடத்திய தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

தொடர் போராட்டம்

போர்த்துக்கலில் சமூக ஜனநாயகக் கட்சி (PSD), மக்கள் கட்சி (CDS–PP) ஆகியவை இணைந்து ஜனநாயகக் கூட்டணி (AD) என்ற பெயரில் ஆட்சி நடத்தி வருகின்றன. இது ஒரு மிதவாத-வலதுசாரி கூட்டணியாக செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு, தொழிலாளர் உரிமைகளை முடக்கும் வகையிலும், கோர்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும் புதிய சட்டத் திட்டங்களை அமுல்படுத்த முயன்றது. இதற்கு எதிராக கடந்த 2025 கோடைகாலம் முதல் தொழிலாளர்கள் நாடு முழுவதும் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர்.

இதன் ஒரு பகுதியாக, நாடு தழுவிய அளவில் மாபெரும் பொது வேலை நிறுத்தங்கள், பிரம்மாண்ட பேரணிகள் மற்றும் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 2026 மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் மற்றும் மார்ச் 28 உழைக்கும் இளைஞர் தினம் ஆகியவற்றிலும் இலட்சக்கணக்கான பெண்கள் மற்றும் இளைஞர்கள் இந்த சட்டத்திற்கு எதிராகத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத்தில் சுருண்ட மசோதா

போர்த்துக்கல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் நூற்றுக்கணக்கான தொழிற் சங்கப் பிரதிநிதிகள் திரண்டு நின்றனர். ஆளும் கட்சிகள் மற்றும் லிபரல் இனிஷியேட்டிவ் (IL) என்ற வலதுசாரி கட்சி ஆகிய கட்சிகள் இந்த மசோதா விற்கு ஆதரவாக வாக்களித்தன. தொழிலாளர்களின் எழுச்சியைக் கண்டு பயந்த ‘சேகா’ (Chega) என்ற தீவிர வலதுசாரிக்கட்சியும் பிற கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், வேறு வழியின்றி மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதனால் மசோதா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்ததில் போர்த்துக்கல் தொழிலாளர்களின் பொதுக்கூட்டமைப்பு (CGTP-IN) மற்றும் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி (PCP) ஆகியவை மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. மசோதாவின் பின்னணியில் இருந்த கோர்ப்பரேட் சூழ்ச்சிகளையும், உழைப்புச் சுரண்டலையும் மக்களிடம் கொண்டு சேர்த்து, இந்த வெற்றியை அவர்கள் சாத்தியமாக்கியுள்ளனர்.

தொழிலாளர் கூட்டமைப்பும், போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், பொய் பிரச்சாரங்கள், சூழ்ச்சிகள், மக்களை ஏமாற்றும் வித்தைகள் ஆகியவற்றுக்கு எதிராகவும், சக்திவாய்ந்த அரசியல் மற்றும் கருத்தியல் பரப்புரைகளை எதிர்த்தும் திட்டமிட்ட போராட்டங்கள் நடத்தியது. தொழிலாளர் சட்டத் தொகுப்பின் நன்மைகள் மற்றும் அதை நடைமுறைப்படுத்துவதன் தவிர்க்க முடியாத அவசியத்தையும் பிரச்சாரம் செய்தது.

மேலும் இவை இந்த 11 மாதங்களாக, இந்த தொழிலாளர் சட்டத் தொகுப்பு சுரண்டலை எவ்வாறு தீவிரப்படுத்தும் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாழ்க்கைத்தரத்தின் மீதான தாக்குதலாக அமையும் என்பதைப் பற்றியும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் போராட்டத்தை ஒருங்கிணைத்தன. இதன் விளைவாக இந்த வெற்றி சாத்தியமாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு தொழிலாளர்களும் எதற்கும் அஞ்சாமல், தங்களின் உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிடாமலும் இருந்தனர்.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது, அவர்களின் வாழ்க்கைத்தரத்தைக் குறைப்பது மற்றும் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவது போன்ற சதி போர்த்துக்கலில் மட்டும் நடப்பதில்லை. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் பெரும்பாலான அரசாங்கங்களாலும், உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளின் அரசாங்கங்களாலும் பின்பற்றப்படுகிறது.

உலகத் தொழிலாளிகளுக்கு சிறந்த பாடம்- பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

போர்த்துக்கல் தொழிலாளர்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி (PCB) தனது புரட்சிகர வாழ்த்துகளையும் சர்வதேச ஒற்றுமையையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘உலகம் முழுவதும் முதலாளித்துவ நாடுகள் தங்களின் பொருளாதார நெருக்கடியைத் தொழிலாளர்களின் தலையில் சுமத்தப் பார்க்கின்றன. பிரேசிலிலும் மிஷெல் டெமர் மற்றும் ஜெய்ர் போல்சானரோ ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டு, தற்காலிக வேலைகளும், வாழ்வாதாரப் பாதுகாப்பற்ற நிலையும் அதிகரித்தன. இந்தச் சூழலில் போர்த்துக்கல் தொழிலாளர்கள் பெற்றுள்ள இந்த வெற்றி, உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கே ஒரு சிறந்த பாடம். போராடினால் மட்டுமே உரிமைகளைப் பெறவும், தற்காத்துக் கொள்ளவும் முடியும் என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: