யாருக்கான வளர்ச்சி? ஏகபோக மூலதனத்தின் பிடியில் செயற்கை நுண்ணறிவு
-பப்பா சின்ஹா (Bappa Sinha)

2026 மே 1 அன்று, அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை எட்டு நிறுவனங்களுடன் இரகசிய செயற்கை நுண்ணறிவு ஒப்பந்தங்களை இறுதி செய்தது: ஓபன்ஏஐ (OpenAI), கூகிள் (Google), மைக்ரோசாஃப்ட் (Microsoft), அமேசான் (Amazon), என்விடியா (Nvidia), ஆரக்கிள் (Oracle), ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனமான ரிஃப்ளெக்ஷன் ஏஐ (Reflection AI). இந்த ஒப்பந்தங்கள்படி, இரகசிய இராணுவ துறையில் ஏஐ மாடல்களை பயன்படுத்தப்படும். இதில் இருந்து விலக்கப்பட்ட ஒரே பெரிய செயற்கை நுண்ணறிவு ஆய்வகம், ஆந்த்ரோபிக் (Anthropic) – அந்த நிறுவனம் பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்தியதால் ட்ரம்ப் நிர்வாகத்தால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு கைவிடப்பட்டது. இதன் மூலம் சொல்லப்படும் தகவல் தெளிவானது: இந்த ஏஐ தொழில்நுட்பம் போர்த் தளவாடங்களுக்கு சேவை செய்யும்; மேலும் குறைந்தபட்ச பாதுகாப்பைக் கோருபவர்கள் கூட வெளியேற்றப்படுவார்கள். இதுவரை ஏஐ பற்றிய விவாதங்கள் அதன் நம்பகத்தன்மை பற்றியதாகவே இருந்தது. ஆனால் இந்த ஒற்றை நிகழ்வு, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கீழ் உருவாக்கும் செயற்கை நுண்ணறிவின் (generative AI) தர்க்கத்தை துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான வளர்ந்து வரும் எதிர்ப்பு, இப்போது வகுப்பறைகள், தொழிலாளர் இயக்கங்கள், கலைஞர்களின் கூட்டமைப்புகள் மற்றும் தரவு மைய (Data centres) கட்டுமானத்தை எதிர்த்துப் போராடும் சமூகங்கள் முழுவதும் காணப்படுகிறது. இது மோசமாக நிர்வகிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத்திற்கு எதிரான எதிர்வினையாகவே பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறது. இந்தச் சித்தரிப்பு போதுமானதல்ல. செயற்கை நுண்ணறிவு தவறாக நிர்வகிக்கப்படவில்லை. அதைச் சொந்தமாக வைத்திருக்கும், பயன்படுத்தும் மற்றும் இலாபம் ஈட்டும் தொழில்நுட்ப ஏகபோகங்களின் நலன்களுக்காகவே நிர்வகிக்கப்பட்டுள்ளது. இதன் தீங்குகள் தற்செயலானவை அல்ல. உற்பத்தி உறவுகளளின் தேவைக்கேற்ப இந்த அமைப்பு சரியாக செயல்படுகிறது.
மூலதனத்தின் குவிப்பு இந்த கதையை மிகத் தெளிவாகக் கூறுகிறது. 2026 ஆம் ஆண்டில், நான்கு நிறுவனங்கள் மட்டும் மூலதனச் செலவினங்களுக்காக $700 பில்லியனுக்கும் அதிகமாக செலவிட திட்டமிட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை செயற்கை நுண்ணறிவு சார்ந்தவை: அமேசான், தோராயமாக $200 பில்லியன்; ஆல்பாபெட், $190 பில்லியன்; மைக்ரோசாஃப்ட், $190 பில்லியன்; மற்றும் மெட்டா, $125 பில்லியன் முதல் $145 பில்லியன் வரை. யுபிஎஸ் (UBS) வங்கியின் ஒரு அறிக்கைப்படி, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மூலதனச் செலவினம் 2030 ஆம் ஆண்டிற்குள் $1.3 டிரில்லியனை எட்டும். எம்ஐடி மீடியா லேப் (MIT Media Lab) நடத்திய ஒரு ஆய்வில், பெருநிறுவன செயற்கை நுண்ணறிவு திட்டங்களில் 95 சதவீதம் எந்த அளவிடக்கூடிய வருவாயையும் வழங்கத் தவறிவிட்டன. ஊக வணிக தன்மை கொண்ட இந்த முதலீடுகள், ஒரு குறைபாடு அல்ல. இது மூலதன குவிப்புக்காகவே குவிப்பு – அதாவது உற்பத்திப் பயன்பாடு இல்லாவிட்டாலும், தங்களின் ஏகபோக நிலையைப் பாதுகாக்கும் நம்பிக்கையில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முதலாளித்துவ கட்டாயம் காரணமாக நிகழ்கிறது. தவிர்க்க முடியாத நெருக்கடி ஏற்படும்போது, அதன் சுமை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் மீது தள்ளப்படுகிறது.
தொழிலாளர் மீதான தாக்குதலும் திட்டமிடப்பட் தாக்குதலே. 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 77,999 தொழில்நுட்பத் துறை வேலைவாய்ப்புகள் செயற்கை நுண்ணறிவின் காரணமாக நேரடியாக நீக்கப்பட்டன. வால் ஸ்ட்ரீட் வங்கிகள் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 200,000 பணியிடங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளன. உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) 2030 ஆம் ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு, தானியங்குமயமாக்கல் (Automation) மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலாளர் சந்தை மாற்றங்களின் விளைவாக உலகளவில் 92 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று கணித்துள்ளது. இந்தியாவில், இந்த அழிவு ஐடி துறையில் குவிந்துள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services) ஜூலை 2025 இல் 12,200 தொழிலாளர்களை நீக்கியது. 2024-25 காலத்தில், இந்தியாவின் முக்கிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் 1.5 மில்லியன் பட்டதாரிகளில் இருந்து 70,000 முதல் 80,000 புதிய பொறியாளர்களை மட்டுமே பணியமர்த்தினர் – இது கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான அளவு. இந்த எண்கள் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறது: இந்தியாவின் நடுத்தர வர்க்க வேலைவாய்ப்பின் இயந்திரமாக இருக்க வேண்டிய ஐடி துறையில், ஒவ்வொரு பணியிடத்திற்கும் இருபது சராசரியாக விண்ணப்பதாரர்கள்.
மிகவும் அச்சமூட்டும் வகையில், செயற்கை நுண்ணறிவு நேரடியாக இராணுவ கொலைச் சங்கிலிகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. காசாவில், இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீனியர்களை அடையாளம் கண்டு குறிவைப்பதை தானியங்குபடுத்த லாவெண்டர் (Lavender) மற்றும் காஸ்பல் (Gospel) என்ற இரண்டு செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைப் பயன்படுத்தியது. காஸ்பல் ஒரு நாளைக்கு 100 குண்டுவீச்சு இலக்குகளை கண்டறிந்தது; பாரம்பரிய முறைகளில் பணிபுரியும் மனித ஆய்வாளர்கள் ஒரு வருடத்தில் 50 இலக்குகளை மட்டுமே கண்டறிய முடியும். லாவெண்டர், இலக்குகளாகக் குறிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆண்களின் தரவுத்களை தொகுத்து வழங்கியாது – இதில் தோராயமாக 10 சதவீத பிழை விகிதம் இருந்தது ஒப்புக்கொள்ளப்பட்டது. லாவெண்டரால் குறிக்கப்பட்ட ஒவ்வொரு இலக்கிற்கும், இஸ்ரேலிய இராணுவம் 15 முதல் 20 பொதுமக்களைக் கொல்ல அனுமதித்தது என்று இராணுவ வட்டாரங்கள் வெளிப்படுத்தின. ஏஐ வரையறுக்கும் ஒவ்வொரு இலக்கையும் ஒரு இஸ்ரேலிய இராணுவ அதிகாரி 20 நொடிகளில் ஒப்புதல் அளித்தார் – அதாவது ஏஐ சொல்வதை பரிசீலிக்காமல் வெறும் ஒரு இரப்பர் ஸ்டாம்ப் போல ஒப்புதல் தருவது.

ஒபரேஷன் எபிக் ஃபியூரி (ஈரான் மீதான தாக்குதல்) மூலம் காசாவில் நடந்தது ஒரு தனிப்பட்ட செயல் அல்ல என்பதை நிரூபித்தது. செயற்கை நுண்ணறிவால்-இயக்கப்பட்ட கொலைச் சங்கிலிகள் இப்போது ஏகாதிபத்திய இராணுவக் கோட்பாட்டில் உட்பொதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 2026 இல் ஈரானின் மீது தாக்குதலைத் தொடங்கியபோது, பென்டகனின் முதன்மை செயற்கை நுண்ணறிவு இலக்கு தளமான பாலன்டிரின் மேவன் ஸ்மார்ட் சிஸ்டம் (Palantir’s Maven Smart System), முதல் 24 மணி நேரத்திற்குள் 1,000 க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்க உதவியது. மார்ச் மாத நடுப்பகுதியில், இந்த எண்ணிக்கை 6,000 ஐத் தாண்டியது. இந்த அமைப்பு கொலைச் சங்கிலியை மணிநேரங்களில் இருந்து நிமிடங்களுக்கு சுருக்கியது, மனித செயல்பாட்டாளர்கள் மதிப்பாய்வு செய்யக்கூடியதை விட வேகமாக இலக்கு பட்டியல்களை உருவாக்கியது. இதன் விளைவுகளில் ஒன்று, போரின் முதல் நாளிலேயே மினாப் நகரில் உள்ள ஷாஜாரே தய்யேபா (Shajareh Tayyebeh) தொடக்கப் பள்ளி அழிக்கப்பட்டது. ஒரு அமெரிக்க டோமஹாக் (Tomahawk) கப்பல் ஏவுகணை பள்ளியைத் தாக்கி, குறைந்தது 170 பள்ளி மாணவிகளைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 2025 இல், கூகிள் தனது பொது வலைத்தளத்திலிருந்து ஆயுதங்கள் அல்லது கண்காணிப்புக்காக செயற்கை நுண்ணறிவை உருவாக்க மாட்டோம் என்ற வெளிப்படையான உறுதிமொழியை அமைதியாக நீக்கியது. சிலிக்கான் வேலி (Silicon Valley) கார்ப்பரேட் அறையிலிருந்து தானியங்கி கொலைப் பட்டியல் வரையிலான இந்த முன்னேற்றம் தொழில்நுட்பத்தின் ஒரு பிழை அல்ல. இது ஏகாதிபத்தியத்தின் கீழ் தொழில்நுட்பம் அதன் செயல்பாட்டு கடமையை நிறைவேற்றுவதாகும்.
சுற்றுச்சூழல் செலவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. உலகளாவிய தரவு மைய மின் நுகர்வு 2026 ஆம் ஆண்டிற்குள் மணிக்கு 1,050 டெராவாட் எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2022 இல் நுகரப்பட்ட 460 TWh ஐ விட இரு மடங்கு அதிகம். செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் நீர் பயன்பாடு மட்டும் 2025 ஆம் ஆண்டில் 765 பில்லியன் லிட்டரை எட்டக்கூடும். கார்பன் தடம் 2025 ஆம் ஆண்டில் 32 முதல் 80 மில்லியன் டன் CO2 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏஐ சம்பந்தமான செலவுகள் சமூகமயமாக்கப்படுகின்றன – சமூகங்கள், இணைய உள்கட்டமைப்பு மற்றும் உலகளாவிய காலநிலை மீது திணிக்கப்படுகின்றன. ஆனால் இலாபங்கள் மட்டும் அதே சில நிறுவனங்களுக்குச் செல்கின்றன. 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும், அமெரிக்காவில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டக்காரர்கள், விர்ஜினியாவிலிருந்து இந்தியானா வழியாக அரிசோனா வரை $98 பில்லியன் மதிப்புள்ள தரவு மைய திட்டங்களை நிறுத்தி வைத்தனர். ஏனெனில், “செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு” தங்கள் நீர், மின்சார கட்டணங்கள் மற்றும் நிலத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பை குடியிருப்பாளர்கள் கண்டுகொண்டனர்.
இதற்கிடையில், இந்தத் தொழில்நுட்பம் நலிவடைந்தவர்களுக்கு எதிராக ஆயுதமாக்கப்பட்டு வருகிறது. போலியான டீப்ஃபேக் (Deepfake) கோப்புகள் 2023 இல் 500,000 கோப்புகளிலிருந்து 2025 இல் 8 மில்லியனாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அனைத்து டீப்ஃபேக் வீடியோக்களில் 96 முதல் 98 சதவீதம் வரை ஒப்புதல் இல்லாத அந்தரங்க படங்கள்; 99 முதல் 100 சதவீதம் வரை பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். இப்போது உலகளவில் உயர் கல்வியில் அனைத்து மோசடி வழக்குகளிலும் 60 முதல் 64 சதவீதம் வரை செயற்கை நுண்ணறிவு தொடர்பான கல்விசார் முறைகேடுகள் தான். டீப்ஃபேக் மூலம் இயக்கப்பட்ட மோசடி ஒரு காலாண்டில் மட்டும் $200 மில்லியனுக்கும் அதிகமான இழப்புகளை ஏற்படுத்தியது. இவை எதிர்பாராத விளைவுகள் அல்ல. பாதுகாப்புகள் மூலதனக் குவிப்பின் விகிதத்தைக் குறைப்பதால், பாதுகாப்புகள் இல்லாமல் வெளியிடப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தின் தவிர்க்க முடியாத விளைவுகள் இவை.
இவற்றில் எதுவும் ஒழுங்குமுறை தோல்வியடைந்ததால் நடக்கவில்லை. ஒழுங்குமுறை அமைப்பு கைப்பற்றப்பட்டதால் இது நடக்கிறது. 2016 இல் 6 ஆக இருந்த செயற்கை நுண்ணறிவுக்கான லாபி அமைப்புகள் இப்போது அமெரிக்காவில் 450 க்கும் அதிகமாக உள்ளன. மெட்டா (Meta) நிறுவனம், 2025 இல், அமெரிக்காவில் ஒவ்வொரு மாநில அளவிலான செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறையை எதிர்க்க பல்லாயிரக்கணக்கான டாலர்களுடன் ஒரு சூப்பர் பிஏசி (Super PAC) லாபி நிறுவனத்தை தொடங்கியது. அமெரிக்காவில் மத்திய செயற்கை நுண்ணறிவு சட்டம் இல்லை. ஐரோப்பாவில், இந்த லாபி அமைப்பின் “டிஜிட்டல் ஆம்னிபஸ்” (Digital Omnibus) முன்மொழிவுகள், ஐரோப்பாவில் உள்ள செயற்கை நுண்ணறிவு சட்டம் மற்றும் ஜிடிபிஆர் (GDPR) விதிமுறைகளை செயல்படுத்த விடாமல் நீர்த்துப்போகச் செய்ய அச்சுறுத்துகின்றன; 2025 இல் இந்த லாபி குழு கூட்டங்களில் 69 சதவீதம் வணிகக் குழுக்களுடனும், 16 சதவீதம் மட்டுமே பொது சமுதாயக் குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் நடைபெற்றன. எந்தவொரு அர்த்தமுள்ள ஒழுங்குமுறையும் இயற்றப்படுவதற்கு முன்பே ஒழுங்குமுறை அமைப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. நவதாராளமய முதலாளித்துவத்தின் கீழ், அரசு சந்தையை ஒழுங்குபடுத்துவதற்காக, மேற்பார்வையாளராக நிற்பதில்லை. அரசு மூலதனத்திற்கு சேவை செய்கிறது.

இருப்பினும், எதிர்ப்பு வெறும் கருத்துக்களுடன் நின்றுவிடவில்லை. பெப்ரவரி 2026 இல், இலண்டனில் உள்ள ஓபன்ஏஐ, கூகிள் டீப்மைண்ட் (Google DeepMind) மற்றும் மெட்டா தலைமையகங்கள் வழியாக நூற்றுக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர், இது இதுவரை கண்டிராத செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாகும். அமெரிக்காவில், தொழிலாளர் ஆர்வலர்கள், ஜனநாயக சோசலிஸ்டுகள், தேவாலயத் தலைவர்கள் மற்றும் அரசியல் வலதுசாரிகளின் சில பிரிவுகள் கூட ஒரு மனிதநேய சார்பு செயற்கை நுண்ணறிவு பிரகடனத்தில் (Pro-Human AI Declaration) கையெழுத்திட்டன. 2025 பியூ ஆராய்ச்சி (Pew Research) கருத்துக்கணிப்பு, அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின் அதிகரித்த பயன்பாடு குறித்து கவலைப்படுபவர்களின் எண்ணிக்கை உற்சாகப்படுபவர்களை விட ஐந்து மடங்கு அதிகம் என்று கண்டறிந்தது. 2026 ஆம் ஆண்டு வகுப்பில் உள்ள கல்லூரி மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்த மறுப்பதற்கான முதன்மைக் காரணமாக, “இதை நானே செய்வது முக்கியம் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டனர். இது தொழில்நுட்ப அச்சம் அல்ல. இது உழைக்கும் மக்கள், மாணவர்கள் மற்றும் சமூகங்களின் சுயேச்சையான எதிர்ப்பு – இந்த தொழிற்நுட்பம், அதிலிருந்து கிடைக்கும் நலன்களைப் பகிர்ந்து கொள்ள எந்த நோக்கமும் இல்லாத ஒரு வர்க்கத்தால், தங்கள் சொந்த நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
1990களில் ஏற்பட்ட டாட்-காம் குமிழி (dot-com bubble) மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிட்டு பார்ப்பது சிறந்தது. அந்தக் குமிழி வெடித்தபோது, அது ஊக மூலதனத்தை அழித்தது. ஆனால், தற்போதைய தொழில்நுட்ப ஏகபோகங்கள் மற்றும் பரவலான கண்காணிப்பு இணைய உள்கட்டமைப்புகளை அது விட்டுச் சென்றது. செயற்கை நுண்ணறிவு குமிழியும் அதுபோல வெடுத்தாலும், ஒரு நிரந்தர உள்கட்டமைப்பை அது விட்டுச் செல்லும்: நீர் மற்றும் மின்சாரத்தை உறிஞ்சும் தரவு மையங்கள், துவக்க நிலை வேலைகளை இழந்த ஒரு தொழிலாளர் படை, தானியங்கி கொலைச் சங்கிலிகளைக் கொண்ட ஒரு இராணுவ அமைப்பு, பங்குச் சந்தை மதிப்பு குறைந்ததாலும் அகற்றப்படாத ஒரு கண்காணிப்பு கட்டமைப்பு, இவை அனைத்தையும் அது விட்டுச் செல்லும். முதலாளித்துவத்தின் கீழ், ஒவ்வொரு ஊக சுழற்சியின் குப்பைகளும் அடுத்த சுற்று சுரண்டலுக்கான அடித்தளமாக மாறுகின்றன.
இவற்றில் எதுவும் செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான தீர்ப்பு அல்ல. செயற்கை நுண்ணறிவு மனித முன்னேற்றத்திற்கு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது: நோய்களைக் கண்டறிதலில், காலநிலை மாற்றத்தை கையாளும் மாடல்களை உருவாக்குவதில், புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதில், தனிப்பட்ட இலாபத்தை அதிகரிப்பதற்கு பதிலாக மனித தேவைகளைப் பூர்த்தி செய்ய திட்டமிடுவதில் பெரும் ஆற்றல் கொண்டுள்ளது. தொழில்நுட்பம் ஒரு பிரச்சனை அல்ல. பிரச்சனை என்னவென்றால், இந்த சக்தியைக் கொண்ட ஒரு தொழில்நுட்பம், ஏகாதிபத்திய போர்த் தளவாடங்களுடன் ஆழமான தொடர்புகளைக் கொண்ட, ஜனநாயக வெளிப்படைத்தன்மை இல்லாத, செலவுகளை சமூகத்தின் மீது திணித்து அதே வேளையில் ஆதாயங்களைத் தனியார்மயமாக்க அனைத்து ஊக்கங்களையும் கொண்ட ஒரு ஏகபோகக் குழுவின் கைகளில் இருக்கும்போது என்ன நடக்கிறது என்பதுதான். தொழிற்சாலைத் தளங்களிலிருந்து பல்கலைக்கழக வளாகங்கள் வரை, தரவு மையங்களைச் சுற்றியுள்ள சமூகங்கள் வரை இப்போது உருவாகி வரும் எதிர்ப்பு, ஒரு விஷயத்தை அங்கீகரிக்கும்போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்: இந்த சண்டை இயந்திரத்திற்கு எதிரானது அல்ல. அதைச் சொந்தமாக வைத்திருக்கும் வர்க்கத்திற்கு எதிரானது.
மூலம்: Progress for Whom? AI in the Grip of Monopoly Capital
தமிழில் : அபிநவ் சூர்யா