மறுக்கப்படும் நீதி! மரித்துக் கொண்டிருக்கும் மனிதம்!

-ச.அருணாச்சலம்

று ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் இருக்கும், உமர் காலீது, ஷர்ஜில் இமாம் ஆகிய இரு மாணவர்களுக்கு  ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது. ‘விசாரணை கிடையாது, குற்றத்தை நிருபிக்கும் அவசியமுமில்லை. எதிர் கருத்தாளர்களை தேச விரோதிகள் என நாங்கள் முத்திரை குத்தி, நீதிமன்றத்தையும் நிர்பந்தப்படுத்துவோம்’ என்று வியப்பில் ஆழ்த்துகிறது, பா.ஜ.க அரசின் பார்முலா.

இந்த ஆண்டு ஜனவரியில் (ஜனவரி 5, 2026) உச்ச நீதிமன்றம் டெல்லி கலவர வழக்கில் (2020) குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து நபர்களை விடுவித்தது. ஆனால், இவ்விரு மாணவர்களுக்கும் பிணை வழங்க அனுமதி மறுத்து தீர்ப்பளித்தது. அதற்கு நீதிமன்றம் ஒரு காரணத்தையும் கற்பித்தது.

டெல்லி கலவரத்தை திட்டமிட்டு தூண்டியவர்கள் என சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் UAPA (Unlawful Activities (Prevention) Act) கீழ் கைது செய்யப்பட்ட 9 நபர்களும் குற்றத்தின் அடிப்படையில் சம்மான இடத்தில் இல்லை என்றும், உமர் காலீது மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் பங்கும், தன்மையும் வித்தியாசமானது, தீவிரமானது (gravity of the Offence) என்ற புதிய வியாக்கியானத்தை தந்த உச்சநீதிமன்ற அமர்வு (அரவிந்த் குமார் – என்.வி.அஞ்சாரியா அமர்வு) உமர் காலீது மற்றும் இமாம் ஆகிய இருவருக்கும் பிணை வழங்க மறுத்து தீர்ப்பளித்தது.

அதைக் காரணம் காட்டி நேற்று பிணையை மறுத்த டெல்லிநீதிமன்றம் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளை நீதிமன்றம் விசாரித்த பின்னரோ அல்லது ஓராண்டு கழித்தோ இவ்விரு குற்றவாளிகளும் பிணை கோரலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் இந்த நீதிமன்றம் அதை மீற இயலாது என கூறியுள்ளது.

டெல்லி கலவரம் 2020 பெப்ரவரி 23 இல் வெடித்ததற்கு ஒரு பின்னணி உண்டு. குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன, டெல்லியில் ஷாஹீன் பாத்தில் அமைதியாக அமர்ந்து பெண்களும், மாணவர்களும் போராடினர். இத்தகைய போராட்டத்தை முறியடிக்க திட்டமிட்ட சங்கப்பரிவாரங்கள் இஸ்லாமியருக்கெதிரான பரப்புரைகள, கோஷங்களை எழுப்பினர், வெறுப்பை விதைத்து வினையறுக்க அடியாட்களை திரட்டினர்.

‘கோலி மாரோ’ என பா.ஜ.க தலைவர் கோஷமிட்டார். அப்போதைய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முஸ்லீம்களை விரட்டி அடிக்க இந்துக்களை அழைத்தார். கலவரம் வெடித்தது, இஸ்லாமியர் வாழ்விடங்கள், வணிக கூடங்கள், மசூதிகள் குறி வைத்து தாக்கப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர். பல இடங்கள் தீக்கிரையாயின. டெல்லி போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்தது.

தாக்கப்பட்ட இஸ்லாமிய மக்களின் மீதே காவல்துறை வழக்கு போட்டனர், சிறைப்படுத்தி கொடுமைபடுத்தினர் என பி.பி.சி நிறுவனம் கூறியது. 758 வழக்குகள் டெல்லி காவல்துறை போட்டது, 2,000 க்கு மேற்பட்டோர் கைது செய்யபட்டனர். இதில் 126 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இதில் 85% வழக்குகளை நீதிமன்றம் பொய் வழக்குகள் எனக்கூறி தள்ளுபடி செய்துள்ளது. 18 மாணவர் தலைவர்களை டெல்லி போலீஸ் இந்த வழக்குகளில் இணைத்து கைது செய்துள்ளது. கோலி மாரோ என கூப்பாடு போட்ட பா.ஜ.ககாரன் இன்று டெல்லி அமைச்சர். குடியுரிமைக்காக குரல் கொடுத்த மாணவர்களோ சிறை கொட்டடியில்.!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து ஐந்து மாதங்களும் இருபத்தைந்து நாட்களும் கழிந்த பின்னரும் கூட -வழக்கு துவங்கி ஐந்து ஆண்டுகள் ஆகியும்- இவ்வழக்கில் சாட்சியங்கள் விசாரிக்கப்பட வில்லை, எப்பொழுது அது நடைபெறும் என்பதற்கு யாருக்கும் விடை தெரியாது! இவ்வாறு தாமதப்படுத்தப்படும் வழக்கு விசாரணைகளால் குற்றஞ்சாட்டப்ட்டோரின் உரிமைகள் (அரசியல் பிரிவு 21 கொடுக்கும் உரிமை) பறிக்கப்படும் அபாயம் தோன்றுகிறது என பல்வேறு உச்சநீதிமன்ற அமர்வுகள் தீர்ப்பு வழங்கியுள்ளன.

குற்றத்தின் தன்மை தீவிரமானது என்ற பதப்பிரயோகத்தின் அடிப்படையில் அதிகமான நபர்கள் நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இன்று இந்தியாவில் 3,71,440 நபர்கள் “விசாரணை கைதிகளாக” உள்ளனர். இந்த எண்ணிக்கை இந்திய சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளோரில் 72.6% சதவிகிதம் ஆகும். 4.5 இலட்சம் நபர்களை அடைத்து வைக்க மட்டுமே சக்தியுள்ள இந்தியச் சிறைக்கூடங்களில் இன்று அடைத்து வைக்கப்பட்டோரின் எண்ணிக்கையோ 5,11,542 ஆகும்!

இத்தகைய விசாரணை கைதிகள் பெரும்பாலும் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருபது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் இறுதியில் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்ட நிகழ்வுகளும் இந்தியாவில் பலமுறை நடந்துள்ளன.

இத்தகைய, பிணையை மறுக்கும் UAPA சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி கைது செய்து சிறையில் அடைப்பதை ஆளுகின்ற அரசுகள் செய்வதற்கு ஒரு அரசியல் காரணம் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதை மனதில் வைத்துதான் சமீபத்தில் டெல்லி கலவர வழக்கில் பிணை மறுக்கப்படுவது  என்பது அரசியல் சாசன மாண்புகளுக்கும், முறைமைகளுக்கும் எதிரானது என்றும்  விசாரணையின்றி எந்த ஒரு நபரையும் சிறையிலடைக்க சட்டத்தில் இடமில்லை என்ற  தீர்ப்பையும் உச்ச  நீதிமன்றம் வழங்கி உள்ளது.

சில நீதிபதிகள் பிணை கோரும் மனுக்களை அனுசரணையுடன் விசாரிக்கின்றனர், சில நீதிபதிகளோ அரசு குற்றஞ் சுமத்துபவர்களின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை கேள்வி கேட்கவே தயங்கி, பிணை உரிமையை மறுக்கின்றனர். நான்கு ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையிலடைக்கப்பட்டிருந்த காஷ்மீரை சார்ந்த மனித உரிமை போராளி குர்ரம் பர்வேஸ் ஸை விடுவித்த அதே நீதிபதிதான் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறையிடப்பட்ட உமர் காலீதிற்கு பிணையை மறுத்தும் உள்ளார்.

இவ்வாறு நீதிமன்றங்கள் மத்தியிலும், நீதியரசர்களின் இடையிலும் ஒருமித்த பார்வையோ,  ஒரே விதமான சட்ட அணுகுமுறையோ இல்லாமல் இருப்பது  தனிமனித உரிமைகளை  மட்டுமின்றி சட்டத்தின் ஆட்சியையும் வெகுவாக பாதிக்கின்றது. இதையடுத்து, இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அரசியல் நோக்கத்திற்காக புனையப்பட்டவை என்பதும் , ஆளுங்கட்சியினர் தங்களின் கருத்துக்களை ஏற்காதவர்கள் மீது இத்தகைய சட்டப்பிரிவுகளை ஏவுகின்றனர், தேசீய பாதுகாப்பு, பயங்கரவாதம் போன்ற சொல்லாடல்களை இதற்காக பயன்படுத்தியும் வருகின்றனர் என்பது நாம் கண்கூடாக கண்ட காட்சிகளாகும்.

இந்தியாவில் மட்டுமின்றி, சட்டத்தின் ஆட்சியில் இந்தியாவிற்கு முன்னோடியென அழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டிலும் ‘பயங்கரவாத தடுப்பு சட்டங்கள்’ உள்நாட்டில் உள்ள எதிர் கட்சியினர் மீது ஏவப்படுவதை காண்கிறோம். பலஸ்தீனத்து காசா பகுதியில் இஸ்ரேலிய அரசு நடத்திய மனிதப்படுகொலையை, போர் குற்றங்களை எதிர்த்து குரல் கொடுத்தோரின் மீது அமெரிக்காவிலும், இங்கிலாந்து நாட்டிலும் பயங்கரவாத சட்டங்கள் பாய்ந்த விதம் இதை மேலும் நிரூபிக்கிறது.

ஒரு நாட்டில் நிறுவப்பட்டுள்ள அரசிற்கும், அங்கு வாழும் தனி மனிதனுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒருவித சமூக உடன்பாடே (social contract) அந்த நாட்டின், அந்த சமூகத்தின் அரண்களாகும் .

அத்தகைய ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்க்கை முறையை பாதுகாக்கும் கூறுகளே அந்த நாட்டின் அரசியல் சாசனம் அல்லது சட்ட மரபு (Constitution or Legal precedent) என்ற புரிதல் ஜனநாயகத்தின் அரிச்சுவடிகளாகும்.

இதில் சட்டத்தின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டிய நீதிமன்றங்களின் பங்கும், கடமையும் என்ன? என்ற கேள்வி எழுகிறது.

UAPA போன்ற சட்டங்களும், ஏனைய பிற சட்டங்களும், அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்தப்படும் பொழுது நீதிமன்றங்கள் தங்களது கடமையிலிருந்து நழுவினாலோ அல்லது முரண்பட்ட போக்குகளை கடைபிடித்தாலோ அங்கு பலிகடாவாக ஆக்கப்படுவது ஒரு சில குற்றஞ்சாட்ட பட்டவர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த சமூகமே அங்கு பலி ஆகின்றது.

நியாயமான விசாரணையும், தண்டிக்கப்படும் வரை நிரபராதி என்ற நிலைப்பாடும் ஜனநாயகத்தின் ஆணிவேர்கள் என்றால் விசாரணையின்றி குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சிறை வைத்தல் என்பது ஜனநாயகத்தை வேரறுக்கும் கொடிய நச்சாகும். இத்தகைய போக்கை தட்டி கேட்க இந்திய நீதிமன்றங்கள் எப்பொழுது முன்வரும்?

குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர பாரபட்சமில்லாத நேர்மையான வழக்கு விசாரணைக்கு இடங்கொடுக்காமல் தண்டனையாக நிலைநாட்டும் வகையில் வழக்கு நடத்தப்படாமலேயே சிறை வைப்பது மனித உரிமைகளுக்கு வைக்கப்படும் வேட்டு மட்டுமல்ல , ஒட்டுமொத்த சமூகத்திற்கே விடப்பட்ட ஒரு சவாலாகும்.

இங்கு பாதிக்கப்படுவது உமர் காலீது என்ற தனிநபர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமூகமே தனது சாரத்தை இழந்து பலியாகி கொண்டிருக்கின்றது. சட்டத்தின் ஆட்சி என்றால் ”ஆளுபவர்கள்“ யாரை வேண்டுமானாலும் விசாரணையின்றி சிறை வைக்க முடியாது என்பது தான். ஆனால் அந்த நிலை மாறும் பொழுது சட்டத்தின் பாதுகாவலர்களான நீதிமன்றங்கள் தங்கள் கடமையிலிருந்து நழுவ கூடாது! ஆனால் அத்தகைய நழுவலும், சீரற்ற அணுகுமுறையுமே நீதிமன்றங்களின் வழிமுறையாக மாறிவிட்டால், அந்தச்சமூகமே மெல்ல செத்து கொண்டிருக்கிறது என்றாகி விடும் .

இந்த நிலைமை நீடிக்க வேண்டுமா?

Tags: