வளர்ச்சிக்கான மாற்றுக் கோட்பாடுகள் உலகத் தெற்கு நாடுகளின் அனுபவத்திலிருந்து எழும் சிந்தனைகள்
– பேராசிரியர் விஜய் பிரசாத்

உலகளாவிய வளர்ச்சி என்ற பெயரில், சர்வதேச நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட நிறுவனங்கள் நீண்டகாலமாகத் திணித்து வரும் முதலாளித்துவத்தின்பழைய பொருளாதாரக் கோட்பாடுகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டன. தனியார்மயமாக்கல், கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் மற்றும் மக்களின் நலத்திட்டங்களை முடக்கும் “சிக்கன” நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த மாதிரிகள், வளர்ந்து வரும் ஏழை நாடுகளுக்கு எவ்வித முன்னேற்றத்தையும் தரவில்லை. எனவே, ‘உலக வடக்கு’ (Global North) நாடுகளின் இறக்குமதி செய்யப்பட்ட கோட்பாடுகளுக்குப் பதிலாக, ‘உலக தெற்கு’ (Global South) நாடுகளின் சொந்த அனுபவங்கள் மற்றும் மக்களின் சோதனைகளிலிருந்து எழும் ஒரு புதிய வளர்ச்சி கோட்பாட்டை உருவாக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இதுவாகும்.
தொழிற் கொள்கையின் முக்கியத்துவமும் மாறாத ஐஎம்எப்பின் பிடிவாதமும்
கடந்த 2015 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான மாநாடு (UNCTAD) வெளியிட்ட ஆய்வறிக்கையில், பிரபல பொருளாதார நிபுணர் ராபர்ட் எச். வேட் (Robert H. Wade) ஒரு முக்கியமான வாதத்தை முன்வைத்தார். ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் தங்களின் பிந்தைய தொழில்மயமாக்கல் காலக்கட்டத்தில் அடைந்த வெற்றிகளுக்கு, அரசின் தலையீட்டுடன் கூடிய தொழிற் கொள்கைகளும், தொழில்நுட்ப மேம்பாடுகளுமே முதன்மைக் காரணம் என்று அவர் நிரூபித்தார். தொடர்ந்து, 2024 இல் ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி நிறுவனம் (UNIDO) தனது முதன்மை அறிக்கையில், நிலையான வளர்ச்சிக்குத் தொழிற் கொள்கையே மிக முக்கியமான கருவி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இதற்கிடையே, 2013 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே வழி’ (Belt and Road Initiative – BRI) எனப் பெயரிடப்பட்டுள்ள பழைய “பட்டுப் பாதைத்” திட்டம் உலகளவில் கட்டமைப்பு மற்றும் தொழில் முதலீடுகளின் முக்கிய ஆதாரமாக மாறியது. 2024 வரையிலான இதன் ஒட்டுமொத்த முதலீடு 1.175 டிரில்லியன் டொலரை எட்டியுள்ளது. தொழிற் கொள்கையின் இந்த அத்தியாவசியத் தேவையைச் சர்வதேச நாணய நிதியத்தால் மறுக்க முடியாவிட்டாலும், அதனை முழுமையாக ஆதரிக்க அது எப்போதும் முன்வரவில்லை. உலகின் வடக்குப் பகுதியில் உள்ள வளர்ந்த நாடுகள் தங்களின் சொந்தப் பொருளாதாரங்களில் தொழிற் கொள்கைகளைத் தீவிரமாகப் பயன்படுத்தும் அதே வேளையில், உலக தெற்கு நாடுகளுக்கு மட்டும் சந்தை முற்றுரிமையையும் சிக்கன நடவடிக்கைகளையுமே பரிந்துரைக்கின்றன. இத்தகைய ஆதிக்கக் சிந்தனைகளால், கொள்கை வகுப்பாளர்களிடம் நிலவும் தத்துவார்த்த முடக்கம், ஐநா தொழில் வளர்ச்சி நிறுவன அறிக்கையின் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்களை எழவிடாமல் தடுத்துவருகிறது.
தத்துவார்த்த நெருக்கடியும் தெற்கு நாடுகளின் தேவையும்
உலக தெற்கு நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில், மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்த ஐ.எம்.எப்பின் “சிக்கன” மாதிரிகள் தங்களின் நம்பகத்தன்மையை முழுமையாக இழந்துவிட்டன. இந்த அடக்குமுறைப் பொருளாதாரத்திற்கு எதிராகப் பேசிப் பல அரசியல் கட்சிகள் தேர்தல்களில் வெற்றி பெற்றாலும், அவர்களுக்கு முன்னால் ஒரு தெளிவான மாற்று மாதிரி இல்லாததால், அவர்கள் மீண்டும் ஐ.எம்.எப்பின் பிடியிலேயே விழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். உதாரணமாக, இலங்கை தனது ஐ.எம்.எப் திட்டத்தைத் தொடர்வதையும், செனகல் தனது தற்காலிக நிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தைக்குச் சென்றதையும் குறிப்பிடலாம்.
இத்தகைய இக்கட்டான தத்துவார்த்த நெருக்கடியைத்தான் ‘வென்ஹுவா சோங்ஹெங்’ (Wenhua Zongheng) இதழின் சமீபத்திய வெளியீடு ஆராய்கிறது. ‘உலக தெற்கிலிருந்து ஒரு புதிய வளர்ச்சி கோட்பாட்டை உருவாக்குதல்’ என்ற தலைப்பிலான அந்த இதழ், ஒரு எளிய கேள்வியை எழுப்புகிறது: கடந்த நூற்றாண்டின் எல்லா முதலாளித்துவக் கோட்பாடுகளும் தோற்றுவிட்ட நிலையில், புதிய கோட்பாடுகள் எங்கிருந்து வரும்? இங்கு ‘உலக தெற்கிற்கான’ கோட்பாடு அல்ல, ‘உலக தெற்கிலிருந்து’ எழும் கோட்பாடே முக்கியமானது. இது பிற இடங்களிலிருந்தோ அல்லது வல்லரசுகளாலோ திணிக்கப்படும் கோட்பாடு அல்ல; மாறாக, உழைக்கும் மக்களின் சொந்த உழைப்பிலிருந்தும், பிராந்திய சோதனைகளிலிருந்து முளைத்தெழும் தத்துவமாகும்.
வளர்ச்சிக் கோட்பாடுகள் என்பவை வெறும் பொருளாதார உலகத்தை விளக்குவதோடு நின்றுவிடுவதில்லை; மாறாக அவை அரசாங்கங்களும் சமூக அமைப்புகளும் எதனைச் சாதிக்க முடியும் என்ற அரசியல் எதிர்பார்ப்புகளையும், எதிர்காலம் குறித்த நமது கற்பனைகளையும் வடிவமைக்கின்றன. தற்போதைய சூழலில் நிலவும் மிக ஆழமான நெருக்கடி என்னவென்றால், உலகெங்கிலும் ஒரு புதிய எதிர்காலத்தை கற்பனை செய்து பார்க்கும் திறன் பெருமளவு முடக்கப்பட்டுள்ளது. அரசியல் விவாதங்கள் அனைத்தும் கடந்த காலத்தைப் பற்றிய ஏக்கம் அல்லது வரவிருக்கும் பேரழிவுகள் குறித்த அச்சம் ஆகியவற்றிற்கு இடையே மட்டுமே சுழன்று கொண்டிருக்கின்றன. உழைக்கும் மக்களின் தேவைகளை முதன்மைப்படுத்தும் ஒரு புதிய தத்துவார்த்த அடிப்படையிலான பார்வை இன்று நமக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது.

தெற்கு – தெற்கு ஒத்துழைப்பின் புதிய மாதிரிகள்: பாகிஸ்தான் மற்றும் வியட்நாம்
புதிய தத்துவங்கள் வெறும் கற்பனையான மாதிரிகளிலிருந்து பிறப்பதில்லை; அவை எதார்த்தமான களப் போராட்டங்களிலிருந்தும், பிராந்தியக் கூட்டமைப்பிலிருந்தும் பிறக்கின்றன என்பதை ஷாங்காய் சர்வதேச ஆய்வுகள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் லீ சியாங் மற்றும் ஃபெங் சாவ் ஆகியோரின் கட்டுரைகள் விரிவாக விளக்குகின்றன. பாகிஸ்தானின் ஆற்றல் உள்கட்டமைப்பு குறித்து ஆராயும் லீ சியாங், வளர்ச்சியை வெறும் பொருளாதாரக் குறியீடாக மட்டும் பார்க்காமல், அரசின் உள்கட்டமைப்புத் திறனை விரிவாக்குவதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். பெரிய அளவிலான மின் விநியோகக் கட்டமைப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட சூரிய ஆற்றல் போன்ற புதிய தொழில்நுட்பங்கள், ஒரு சமூகம் தனது பொது நலன்களை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான நிறுவனத் திறனை எவ்வாறு பலப்படுத்துகின்றன என்பதை இது காட்டுகிறது. வெறும் மின்சாரத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், இந்த உள்கட்டமைப்புகள் சமூக உறவுகளை எவ்வாறு மாற்றி அமைக்கின்றன என்பதும், பொது நன்மைகளை வழங்குவதில் அரசுகளின் கரங்களை எவ்வாறு பலப்படுத்துகின்றன என்பதும் இங்கு முக்கிய விவாதமாக மாறுகிறது. மறுபுறம், வியட்நாமில் மேற்கொள்ளப்படும் சீனத் தொழில் முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு, ‘பட்டுப்பாதை உற்பத்தி’ மாதிரியை ஃபெங் சாவ் விளக்குகிறார். உலகமயமாக்கலை வெறும் சந்தைச் சக்திகளின் கைகளில் விட்டுவிடாமல், நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்பப் பரிமாற்றம், தொழிலாளர் திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய உற்பத்தி வலையமைப்புகளை உருவாக்குவதன் மூலம், பங்கேற்கும் அனைத்து நாடுகளின் உற்பத்தித் திறனையும் சமமாக உயர்த்த முடியும் என்பதை இந்த மாதிரி நிரூபிக்கிறது. இது சமமற்ற உலகப் பொருளாதாரப் பிரிவினையால் ஏழை நாடுகள் சுரண்டப்படும் நிலையைத் தடுத்து, கூட்டு வளர்ச்சிக்கான புதிய பாதையை உருவாக்குகிறது.
புதிய சிந்தனை முறையை மீட்டெடுத்தல்
பல பத்தாண்டுகளாக, வளர்ச்சி என்பது தொழில்மயமான வடக்கு உலகிற்கும், வளர்ச்சியடையாத தெற்கு உலகிற்கும் இடையிலான ஒரு சமமற்ற உறவாகவே பார்க்கப்பட்டது. பழைய பாதைகளை அப்படியே பின்பற்றுவதே வளரும் நாடுகளின் இலக்காகக் கருதப்பட்டது. ஆனால், தற்போதைய புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், உலக தெற்கு நாடுகளுக்கு இடையிலான அறிவு மற்றும் உள்கட்டமைப்புப் பரிமாற்றங்களே புதிய வழியைக் காட்டுகின்றன. சீனா போன்ற நாடுகளின் தொழில்மயமாக்கல், வறுமை ஒழிப்பு மற்றும் அரசு கட்டுமான அனுபவங்கள் ஏதோ உலகளாவிய மாதிரிகள் அல்ல; மாறாக அவை கூட்டு கற்றலுக்கான வளங்கள் ஆகும். ஆசியா, ஆபிரிக்கா அல்லது இலத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாற்று அனுபவங்களை ஏதோ ஒரு பொது விதியிலிருந்து விலகியதாகப் பார்க்காமல், அவற்றை தத்துவார்த்த கண்டுபிடிப்புகளின் மூல ஆதாரங்களாகப் பார்க்க வேண்டும்.
உலக தெற்கு எதிர்கொள்ளும் சவால் என்பது புதிய சாலைகளையோ, தொழிற்சாலைகளையோ அல்லது நிறுவனங்களையோ உருவாக்குவது மட்டுமல்ல; மாறாக, முற்றிலும் ஒரு புதிய சிந்தனை முறையைக் கட்டியெழுப்புவதாகும். புதிய வளர்ச்சி கோட்பாடு என்பது, இலாபத்திற்காக இயற்கையையும் மனிதர்களையும் சுரண்டிய பழைய முதலாளித்துவ மாதிரியை மீண்டும் மீண்டும் பிரதிபலிக்கக் கூடாது. புதிய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் வருகை இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காகப் பயன்படுத்தப்படாமல், மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவைச் சமூகப் பாதுகாப்போடு பேணிக் காக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். அதுவே உலக தெற்கு நாடுகளின் இறையாண்மைக்கும், உண்மையான சமூக நீதிக்கும் அடித்தளமாக அமையும்.
மூலம்: To Imagine a New Development Theory from the Global South: The Twenty
தமிழில் சுருக்கம்: எஸ்பிஆர்