அமெரிக்க பெண்ணியவாதியின் பின்னால் மறைக்கப்பட்ட கம்யூனிசத்திற்கு எதிரான சதிகள்

– சேது சிவன்

பெண்களின் உரிமைக்காகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்த பெண்ணியவாதி என உலக முழுவதும் அறியப்பட்டவர் குளோரியா ஸ்டெய்னம் (Gloria Steinem). இவர் அமெரிக்காவை சேர்ந்தவர்.

2026 செப்டம்பர் 2 அன்று 92 வயதில் காலமான அவரை, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளின் பிரதான ஊடகங்கள் பெண்கள் இயக்கத்தின் முன்னோடி எனவும் பெண்ணியப் போராளி எனவும் அவரது அரசியல் முகம் பற்றிய உண்மைகள் மறையும் அளவுக்குப் போற்றின. மரணமடைந்தவரை இழிவுபடுத்துவது ஏற்புடையது அல்ல. ஆனால் அவர் யாருக்காக, எந்த வர்க்கத்திற்காக செயல்பட்டார் என்பதை மறைத்து ஒரு தவறான பிம்பத்தை கொடுக்க முயற்சிப்பதும் ஏற்புடையதல்ல.

முதலில் எழுந்த பெண்ணிய இயக்கம் பெண்களுக்கான வாக்குரிமையை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தது. இந்நிலையில் 1960-70 களில் இரண்டாம் கட்டமாக பெண்ணுரிமை இயக்கம் எழுந்தது. இந்த இயக்கத்தில் குளோரியா முக்கிய தலைவர்களில் ஒருவர். இந்த இரண்டாம் கட்ட இயக்கம் பெண்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் கலாச்சார ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உருவானது.

இதே காலக்கட்டத்தில் தான் முதலாளித்துவம் வளர்ந்த அமெரிக்காவில் தாராளமய பெண்ணியம் (liberal feminism) பிரபலமாக துவங்கியது. அதன் முன்னணிப் பிரதிநிதியாக குளோரியா இருந்தார்.

சி.ஐ.ஏ உடனான தொடர்பு

குளோரியாவின் அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமானது பனிப்போர் காலத்தில் அவர் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ உடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டது. அது தான் தற்போது மறைக்கப்பட்டது. உலகப் பிரபலப் பெண்ணியப் போராளி என்ற பிம்பம் அவருக்கு உருவாகும் முன்பே, ‘இன்டிபென்டன்ட் ரிசர்ச் சர்வீஸ்’ (Independent Research Service) எனும் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு சி.ஐ.ஏ அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றினார்.

பனிப்போரின் உச்சக்கட்டத்தில் இருந்த போது சோவியத் ஆதரவு அமைப்புகள் 1959 இல் வியன்னாவிலும் 1962 இல் ஹெல்சிங்கியிலும் ‘உலக இளைஞர் விழாக்களை’ நடத்தின. அதை சீர்குலைக்கவும், கம்யூனிசத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்பவும் குளோரியா தலைமையிலான அந்த அமைப்புக்கு சி.ஐ.ஏ 1,00,000 டொலருக்கும் அதிகமான நிதியை இரகசியமாக வழங்கியது.

இது வெறும் யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டு அல்ல. 1967 இல் ‘ராம்பார்ட்ஸ்’ எனும் இதழ் சி.ஐ.ஏ மாணவர் அமைப்புகளுக்கு நிதியளித்ததை அம்பலப்படுத்தியது. அதன் பிறகு, சி.ஐ.ஏ உடன் இணைந்து பணியாற்றியதையும் நிதி பெற்றதையும் குளோரியாவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். தனக்கு சி.ஐ.ஏ உடன் உள்ள தொடர்ப்பு பற்றி அவர் பேசியதை நியூயார்க் போஸ்ட், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பத்திரிகைகள் பதிவு செய்துள்ளன.

தாராளமய பெண்ணியமும் ‘மிஸ்’ இதழும்

பெண்களின் உரிமைப் போராட்டத்தை வர்க்கப் போராட்டத்தில் இருந்து பிரித்துத் தனியாகப் பார்க்கும் தாராளமய முதலாளித்துவப் பார்வையை உருவாக்கியவர்களில் குளோரியாவும் முக்கியமானவர். இந்த எண்ணத்தை வலுப்படுத்தும் விதமாக ‘மிஸ்’ (Ms.) இதழையும் ‘மிஸ் அறக்கட்டளை’யையும் (Ms. Foundation for Women) அவரும் பிறரும் இணைந்து தொடங்கினர். அந்நாட்களில் பெண்ணிய இயக்கத்தில் இருந்த கேட் மில்லெட், பெட்டி ஃப்ரீடன் போன்ற முற்போக்கு போராளிகளை ஓரம்கட்டி, தனக்கான இடத்தை குளோரியா பெரிதாக உருவாக்கிக் கொண்டார். இதற்கு அமெரிக்க ஊடகங்கள் பெரிதும் உதவின. இவ்வாறு முதலாளித்துவ ஆதரவு ஊடகங்கள், குளோரியா, சி.ஐ.ஏ ஆகியோர் இணைந்து பெண்ணியத்தின் உண்மையான விடுதலை நோக்கிய விவாதத்தைத் தாராளவாதத்திற்குள் சிக்க வைத்தனர்.

மிஸ் இதழை நியூயார்க் இதழின் ஆசிரியர் கிளே ஃபெல்கருடன் இணைந்து தான் குளோரியா துவங்கினார். 1971 டிசம்பரில் நியூயார்க் இதழின் பகுதியாகவே மிஸ் இதழ் முதலில் வெளிவந்தது. பிறகு 1972 ஜூலையில் தனி இதழ் ஆனது. வாஷிங்டன் போஸ்ட் வெளியீட்டாளர் கேத்தரின் கிரஹாம் மிஸ் இதழ் மீது முதலீடு செய்தார். வார்னர் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சுமார் 1 மில்லியன் டொலர் முதலீடு செய்தது. ஆனால் இந்த பெரும் முதலீட்டுக்குப்பிறகு வெறும் 25 சதவீதப் பங்குகளை மட்டுமே கேட்டது

மிஸ் இதழை உருவாக்க உதவிய இந்தப் பத்திரிகைகளும் நிறுவனங்களும், பனிப்போர் காலத்தில் கம்யூனிச-விரோத, சோவியத்-விரோதக் கருத்துக்களை உருவாக்கி தீவிரமாகப் பரப்பியவை. தென்னமெரிக்க இடதுசாரி, சோசலிச ஆட்சிகளைக் கவிழ்க்கப் பொய்ச் செய்திகளைப் பரப்பியவை. சமீபத்தில் வெனிசுவேலா ஜனாதிபதிக்குப் போதைக்கடத்தல் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர் மீதான அமெரிக்கத் தாக்குதலையும் கடத்தலையும் நியாயப்படுத்தியவை.

மிஸ் இதழ் மீதான இவர்களின் நோக்கம் மிகத்தெளிவானது. வளர்ந்து வரும் பெண்ணிய இயக்கத்தின் மீது சோவியத் மற்றும் மார்க்சிய கொள்கை தாக்கம் இருக்க கூடாது. மாறாக அது முதலாளித்துவத்திற்குள் சிக்கி கொள்ள வேண்டும். என்பதுதான் எனவே தான் அவர்கள் தாராளவாத பெண்ணிய கருத்துக்களை சமூகத்தில் தீவிரமாக பரப்ப மிஸ் இதழை பயன்படுத்தினார்கள்.

‘தி நியூயார்க்கர்’ இதழில் பாப் இசை பற்றி எழுதி வந்த எலன் வில்லிஸ், 1973 இல் மிஸ் இதழில் எழுதி வந்தார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், மிஸ் இதழின் கொள்கை “இடதுசாரி-எதிர்ப்பு, பழமைவாத பெண்ணியமாக” உள்ளதாகக் குற்றம்சாட்டி ராஜினாமா செய்தார். அனுபவம் வாய்ந்த பெண்ணிய எழுத்தாளர்கள், கோட்பாட்டாளர்கள், அமைப்பாளர்களை வேலைக்கு அமர்த்த அந்த இதழ் உணமையாகவே முயற்சி எடுக்கவில்லை என்றும், பெண்களிடையேயான அரசியல் முரண்பாடுகளை மறைக்க வடிவமைக்கப்பட்ட மென்மையான கருத்து மட்டுமே மிஸ் இதழின் அரசியல் என்றும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில் அம்பலப்படுத்தினார்.

பொன்மொழிகள் மூலம் சிதைக்கப்பட்ட முற்போக்குச் சிந்தனை

குளோரியா, மார்க்சிய-முற்போக்குக் கருத்துக்களை மறைமுகமாகச் சிதைக்கும் தந்திரமான பொன்மொழிகளை அடிக்கடிப் பயன்படுத்தினார். நடிகை லீ கிராண்ட், “நான் ஒரு மார்க்சிஸ்டையும் ஒரு பாசிஸ்டையும் திருமணம் செய்திருக்கிறேன்; இருவரில் ஒருவர் கூட குப்பையை வெளியே கொட்டியதில்லை” என்று சொன்னதை மேற்கோள் காட்டி, கம்யூனிஸ்டுக்கும் பாசிஸ்டுக்கும் வேறுபாடே இல்லை என்ற கருத்தைப் பரப்பினார். இது பாசிசக் கொள்கைகளுக்கு மறைமுகமாகச் செய்யும் சேவையாகும். மேலும், ‘சுதந்திரமான பெண்’ என்பவள் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்பவளாகவும், திருமணத்திற்குப் பின் வேலைக்குச் செல்பவளாகவும் இருப்பாள் என்று விளக்கியது சமூகத்தில் வரவேற்பை பெற்றது. இது கட்டற்ற பாலியல் உறவை நியாயப்படுத்தும் கருத்துக்கள் வலுப்பெறுவதற்கு வழிவகுத்தது.

வர்க்க யதார்த்தமும் இரு பெண்ணியப் பாதைகளும்

1980-களில் தொடங்கிய தொழில்துறை வளர்ச்சி மற்றும் அது சார்ந்த கொள்கைகளானது தொழிற்சங்கங்களை அழித்து, உழைக்கும் வர்க்க மக்களின் உரிமைகளையும் வாழ்க்கை நிலைமைகளையும் சிதைத்தது. ஊதியம் குறைந்தது, சுரண்டல் அதிகரித்தது. இதில் பெண்களின் நிலைமை ஆண்களைவிட மோசமாக இருந்தது. இதற்கு மாறாக, பெண்களின் வளர்ச்சி சார்ந்து சோவியத் முன்னெடுத்த முற்போக்குக் கொள்கைகள் உலகளவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் செயல்பட்ட பெண்ணிய போராளியான பெட்டி ஃப்ரீடன் போன்ற போராளிகள் குழந்தைப் பராமரிப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, ஊதியத்துடன் கூடிய குடும்ப விடுப்பு, குறைந்த வேலை நேரம் ஆகியவற்றுக்காகக் கோர்ப்பரேட் நிறுவனங்களுடன் நேரடியாகப் போராட வேண்டும் என்றும், தனியார் சுகாதார காப்பீட்டு நிறுவனங்களை ஒழிக்க வேண்டும். அரசு காப்பீடு வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதைத்தான் அவர் பெண்ணியத்தின் “இரண்டாம் கட்டம்” என்றழைத்தார். ஆனால் குளோரியாவின் தாராளவாத முதலாளித்துவப் பார்வை, சுரண்டப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றும் தீர்வுகளுக்குப் பதிலாக, முதலாளிகளிடமிருந்து சிறு இழப்பீடுகளைப் பெறுவதையே தீர்வாகக் காட்டியது. இது நீண்ட வேலை நேரம், குறைந்த ஊதியம், மோசமான குழந்தை பராமரிப்புச் சூழல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் வலதுசாரிச் சிந்தனைகளுக்கே பெண்களைப் பலிகொடுக்க வைத்தது.

குளோரியாவின் இந்தக் கம்யூனிச-விரோதப் பங்கும், அதன் மூலம் பெண்களின் உண்மையான விடுதலைப் போராட்டம் திசைமாற்றப்பட்டதும், முதலாளித்துவ ஊடகங்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. பொறுப்புள்ள ஒவ்வொருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களையும் போலவே, குளோரியாவின் வாழ்க்கையின் இரு பக்கங்களையும் பார்த்து மதிப்பிட வேண்டும்.

Tags: