திருட்டு ஆணையத்தை எதிர்த்து போராட்டங்கள்!

-ச.அருணாச்சலம்

‘இனியும் பொறுப்பதற்கில்லை ‘என எதிர்கட்சிகள் களம் கண்டு வருகின்றன. இனி, ‘தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை’ போராராட்டங்கள் ஒயப்போவதில்லை.  நீதிமன்றத்தில் முறையிடுவது பலனளிக்காது என்பதால், ‘மக்கள் மன்றமே தீர்ப்பளிக்கட்டும்’ என்று உக்கிரம் கொண்டுள்ளது போராட்டங்கள்!  எங்கே செல்கிறது இந்தியா ; ஒரு அலசல்:

எதிர்கட்சிகள் அனைத்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தேர்தல் ஆணையத்தின் சட்டவிரோதமான SIR நடவடிக்கைகளை பற்றி கேள்வி கேட்டபோது கண்டும் காணாமல் இருந்த ஊடகங்களும், உயர்தட்டு மக்களும், தேர்தல் ஆணையத்திற்குள் ஏற்பட்ட பிளவையும் எதிர்ப்புகளையும் “இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் அம்பலப்படுத்திய பிறகு தேர்தல் ஆணையத்திடமிருந்து நேர்மையான பதிலை எதிர்பார்த்தனர்.

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு? என்பதற்கிணங்க தேர்தல் ஆணையம் மறுப்பு என்ற பெயரில் மீண்டும் பொய் மூட்டையை அவிழ்த்து சமாளித்துள்ளது. இந்த மறுப்பு தலைமை ஆணையருக்கு எதிராக இரு தேர்தல் ஆணையர்கள் தெரிவித்த எதிர்ப்பை மீண்டும் நிரூபித்துள்ளது எனலாம். அதே மறுப்பு செய்தியில் படிவம் 6 இல் செய்யப்பட்ட சட்டவிரோதமான திருத்தத்தை (இணைப்பை) உச்சநீதிமன்றமே அங்கீகரித்துள்ளது என்ற அப்பட்டமான பொய்யை மீண்டும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

படிவம் 6ஐ திருத்தும் அதிகாரம் தன்னிடம் இல்லாதபோது அதை சட்டவிரோதமாக, தேர்தல் ஆணையர் இருவரின் எதிர்ப்பையும் மீறி “யாரை வெற்றிபெற வைக்க”  ஞானேஷ் குமார் இத்திருத்தத்தை மேற்கொண்டார் என்ற கேள்வி எழுகிறது. இந்த சட்டவிரோத செயலை நடைமுறைப் படுத்த தேவையான மாற்றங்களை மென்பொருள் திட்டத்தில் செய்ய டிசிஎஸ் (TCS) நிறுவனத்தை வற்புறுத்தியது யார் ? என்ற கேள்வியும் எழுகின்றன.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், படிவம் 6ஐ திருத்த உச்சதீதிமன்றம் ஒப்புதல் கொடுக்கவில்லை, அது தவறான தகவல், தேர்தல் ஆணையம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்று கொண்டிருந்த உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம் கூறுவதை எல்லாம், பலத்த எதிர்ப்புக்களுக்கு இடையிலும் உண்மை என்று நம்பிய -நம்மையும் நம்பச்சொன்ன – உச்சநீதிமன்றம் இன்று இந்த சிக்கலில் இருந்து உச்சநீதிமன்றத்தின் மானத்தை எவ்வாறு காப்பாற்றுவது என முழித்துக்கொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் சமீப காலமாக தனது கண்ணியத்தையும் மாண்பையும், சுதந்திரத்தையும் காப்பாற்ற தவறியதும், ஆளுங்கட்சியினரை அனுசரித்து செல்வது ஒன்றையே தனது தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டது என்பதில் இன்று யாருக்கும் ஐயமில்லை!

எனவே தனது கடந்தகால “தீர்ப்புகளை” நியாயப்படுத்தவும் முடியாமல், கண்முன் அம்பலப்பட்ட தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை கண்மூடி கடந்து செல்லவும் முடியாமல் இருதலை கொள்ளி எறும்பாக துடிக்கிறது, உச்சநீதிமன்றம்.

இதுவரை தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்திலும், SIR ஐ அனுமதித்த விதத்திலும், வாக்குரிமையை சட்டவிரோதமாக பறித்துவிட்டு தேர்தலை நடத்த அனுமதித்த விதத்திலும் பல சறுக்கல்களை சந்தித்துள்ளது, உச்ச நீதிமன்றம். SIRன் நோக்கத்தையும், சட்டவிரோதமான அதன் உள்ளர்த்தத்தையும், அதனுடைய மோசடியான நடைமுறைகளையும் உச்சநீதிமன்றம் சரியாக புரிந்து கொள்ளவில்லையா? அல்லது யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற இறுமாப்பா? தெரியவில்லை. ஆனால் இந்த கேள்வி இன்று உச்சநீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்க தொடங்கியுள்ளது. கரப்பான்பூச்சி கட்சியின் அமைப்பாளர் சௌவ்ரவ் தாஸ் கூறியதை போல, உச்சநீதிமன்றம் இப்பொழுதாவது விழித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் இளைய சமுதாயம் அந்த சூழலை எதிர்கொண்டு நிலைமையை சீராக்கும் என்று தான் நாமும் எண்ண வேண்டியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மையின் அடிப்படையிலோ இருக்க வேண்டும் என்பது சட்டம். அது மீறப்பட்டுள்ளது SIR ஐ யார் ஆணையிட்டதை தொடர்ந்து நடைமுறை படுத்தப்பட்டது? அதன் அவசியம் என்ன?

எளிய மக்கள் வாக்காளர்களாக முடியாத வண்ணம் சிக்கலான வகையில் படிவம் 6ஐ மாற்றியது யார்? எதற்காக? இல்லாத அதிகாரத்தை தன்னகத்தே எடுத்து கொண்டு மாற்றங்கள் செய்வது கிரிமினல் குற்றமில்லையா? அது தெரிந்த பிறகும் பழியை உச்சநீதிமன்றத்தின் மீது போடுவதன் நோக்கம் என்ன? என்ன நம்பிக்கையில் இத்தகைய பொய்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகிறார்?

படிவம் 7 மற்றும் படிவம்8 ஐ சட்டவிரோதமாக உபயோகிக்க பா.ஜ.க வினரை அனுமதித்தது யார்?

தேர்தல் ஆணையத்தின் மத்திய அலுவலகம் ECINET என்ற மென்பொருள் திட்டத்தை பயன்படுத்தி சகட்டுமேனியில் வாக்காளர்களை நீக்கம் செய்வதை, வாக்காளர்களை சேர்ப்பதை, அனுமதித்தது யார்?

சட்டம் அனுமதித்துள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் அதிகாரங்களை (ERO) முடக்கியது யார்? மாவட்ட மற்றும் மாநில தேர்தல் அலுவலர்களின் அனுமதி இன்றி வாக்காளர்களின் பெயர்களை மத்திய அலுவலக ஊழியர்கள் தங்களிஷ்டத்திற்கு நீக்குவதும், இணைப்பதும் எவ்வாறு நடைபெறுகிறது? இதற்கான மூளை யாருடையது? இதற்கான உத்திரவை பிறப்பித்தது யார்?

TCS நிறுவனத்தை இதில் இணைத்து சட்டவிரோத காரியங்களை அரங்கேற்றியது யார்?

நீதிமன்ற உத்திரவுகள் மூலம் மீண்டும் இணைக்கப்பட்ட வாக்காளர்களை சட்டவிரோதமாக மீண்டும் நீக்க 14 லட்சம் எதிர்மனுக்களை தாக்கல் செய்தது யார்? என்பன போன்ற பல அடிப்படையான கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை. இவற்றை உச்சநீதிமன்றம் கவனித்து நடவடிக்கை எடுக்குமா?

நீதிமன்ற உத்தரவை அவமதித்த, சட்டவிரோதமாக செயல்பட்ட தலைமை தேர்தல் ஆணையரை தற்காலிக பதவி நீக்கம் (suspension) செய்ய மறுத்த உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி பதிலை கேட்டுள்ளது. ஆனால், இத்தகைய முக்கியமான அடிப்படையான – நாட்டின் ஜனநாயகம், அதற்கான தேர்தல், அதை நேர்மையாக நடத்துதல் சம்பந்தப்பட்ட- விடயத்தில் கூட குறிப்பிட்ட இரண்டு அல்லது மூன்று நாட்களில் பதில் கூற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடாமல் இருக்கும் உச்சநீதிமன்றத்தின் செயலை எவ்வாறு எடுத்து கொள்வது?

ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியே, மக்கள் மன்றங்களில், தெருக்களில் மக்கள் கொதித்தெழுந்திருப்பதை ஒக்ரோபர் 2 முதல் நாம் கண்ணுற்று வருகிறோம்.

ஜந்தர் மந்தரில் இளம் மாணவப் போராளி நேஹா போரா மற்றும் பல மாணவரமைப்பினர் தொடர்ந்து போராடி வருவதை, சமூக ஆர்வலர்கள் அஞ்சலி பரத்வாஜ், யோகேந்திர யாதவ், வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரசாந்த பூஷன் மற்றும் முன்னாள் உயரதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக ஆர்வலர்களும் வீதியில் இறங்கி போராடுவதை, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மும்பையில் போராடியதை, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 250- க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி காவல் துறையினரின் பலத்த தடைகளையும் மீறி தேர்தல் ஆணையத்தை  நோக்கி பேரணியாக புறப்பட்டதை, அவர்களை காவல்துறை தடுத்து கைது செய்ததை, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த தேர்தல் ஆணையத்தை, மாலைவரை காத்திருந்த எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியதை …….நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

இத்தனை முறைகேடுகளுக்கும் . சீரழிவுகளுக்கும் மூல காரணம் யார் என்பது மக்களுக்கு புரியாமல் இல்லை. இந்த போராட்டம் நீதிமன்ற வளாகத்திற்குள் முடிந்துவிடக் கூடிய பிணக்கு இல்லை. இது இந்திய மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமை குறித்த பிணக்கு !

அத்தகைய உரிமைகளை நடைமுறை படுத்த வேண்டிய நேர்மையான அமைப்பை பற்றிய பிணக்கு!

நாட்டு மக்கள் அனைவருக்கும் சாதி மத நிற வேறுபாடின்றி, ஏழை பணக்காரன் என்ற பேதமின்றி வழங்கப்பட்டுள்ள உரிமையை பறிக்க முற்படுவர்களுடனான பிணக்கு!

நேர்மையான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறியுள்ளதால் குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலையாய் இன்று அறுந்து தொங்குகிறது.

அரசியல் சாசனத்தின் காவலராக இருக்க வேண்டிய உச்சநீதிமன்றம், ஆளுங்கட்சியினரின் அதிகார முறைகேட்டை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய உச்சநீதிமன்றம் இன்று தன்வசமிழந்து தடுமாறி கொண்டிருப்பதற்கும் காரணம் மக்களுக்கு தெரியாமல் இல்லை.

சூத்திரதாரிகள் யார் என்பது மக்களுக்கு தெரிந்தே உள்ளது. புது ரத்தமும் இளைஞர் எழுச்சி மூலம் இப்போராட்டத்தில் பாய்ச்சப்படுகிறது. இது கரப்பான்பூச்சி கட்சி வடிவில் வந்தாலும் நேஹா போரா போன்ற புரட்சிகர மாணவர்கள் மூலமாக வந்தாலும் சரி, அவை வரவேற்க தக்கதே. இவர்களது வரவால் பயந்து ஒதுங்கியிருந்த கூட்டமான அதிகார வர்க்கம், நீதியரசர்கள், ஊடக மேதாவிகள், மதில்மேல் பூனையாக இதுவரை பம்மாத்து பண்ணியவர்கள் ஆகியோருக்கு புது தெம்பு பிறந்துள்ளது உண்மை தான்.

அவர்களது வரவு இப்போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டுமே அல்லாது, இப்போராட்டத்தின் தலைமை யாருக்கு காங்கிரஸ் கட்சிக்கா? அல்லது கரப்பான்பூச்சி கட்சிக்கா? என்ற அபத்தமான கேள்விகளை எழுப்பி ஒற்றுமையை குலைக்க கூடாது.

இந்த பிணக்கு பலரது முகமூடிகளை கிழித்தெறிந்து உண்மை முகத்தை உலகிற்கு காட்டத் தான் போகிறது. இந்த நேர்மையான நோக்கங்களுக்கான போராட்டங்களில் பங்கு கொள்ளாத ஒரு கட்சி நேர்மையற்ற தேர்தல்களை இரத்து செய்தால் தமிழ்நாட்டிலும் மீண்டும் தேர்தல் வர வேண்டும் என வேண்டி கொள்கிறது. தவறில்லை, அது அவர்களது ஆசை ! ஆனால் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து அனைத்து கட்சிகளும் போராடுகையில் ஓடி ஒளிந்த அந்த கட்சிக்கு , அப் போராட்டத்தால் மீண்டும் தமிழகத்தில் தேர்தல் வந்தால், அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது எப்போது புரியும்?

ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற சட்ட திருத்த மசோதாவை பரிசீலிக்கும் கூட்டுக்குழு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சில மூத்த நீதிபதிகளை சந்தித்து இந்த மசோதா குறித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ள செய்தியை சில நாட்களுக்கு முன்னர் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் போட்டுடைத்தார்.

இத்தகைய கலந்துரையாடல் அரசியல் சாசனம் கூறும் அதிகார வரம்பு (separation of powers) என்ற மாண்பை பாழடிக்கும் செயல் என சாடினார். அதற்கு பின்னர் அத்தகைய கூட்டத்தை முதலில் அரசு தரப்பு கைவிட்டது. அதற்கு பிறகு உச்சநீதிமன்ற அலுவலகமும் இச்சந்திப்பு ரத்து செய்யப்பட்டது என்ற செய்தியை அறிவித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ்நாட்டின் உரிமைக்காக நாங்கள் தான் இருக்கிறோம்

மாநில சுயாட்சி என்றால் அதை எங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என கதையளக்கும் தி.மு.க வின் ஆஸ்தான வழக்கறிஞர், பாராளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் பரிசீலனைக் குழு நீதிபதிகளை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேட்டு தங்களது கட்சியின் உள்ளார்ந்த பாசமும், நேசமும் கொள்கை பற்றும் எங்குள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளார்.

பெருவாரியான தமிழ்மக்களுக்கு புரிந்த விஷயம் தான் இது, புரியாதது போல் பாசாங்கு செய்பவர்கள் இனியும் நடிக்க முடியாது.

Tags: