ஏகாதிபத்திய போரும் கோர்ப்பரேட் சேவகமும் 

– எஸ்.பாலா

கடந்த காலங்களில் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருட்களையும் புதிய சந்தைகளையும் கைப்பற்ற ஐரோப்பிய நாடுகள் பிற நாடுகளை ஆக்கிரமித்தன. இந்த ஆக்கிரமிப்பு, சுரண்டல் செயல்முறை இராணுவ வலிமையின் மூலமே சாத்தியமானது. தற்போதைய ஏகாதிபத்திய சூழலில் முரண்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்கவும், அதன் இலாப நலன்களுக்காகப் புதிய களங்களை விரிவுபடுத்தவும் இராணுவம் ஒரு மிக முக்கியமான வர்க்கக் கருவியாகசெயல்படுகிறது என்று மாமேதை காரல் மார்க்ஸ் மதிப்பிட்டார். ஏகாதிபத்திய அமெரிக்கா தன் இராணுவ வலிமையால் உலக வளங்களைச் சுரண்டி, தன் கோர்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்திட எந்தக் கொடூரச் செயலுக்கும் தயங்குவதில்லை. அமெரிக்கா–இஸ்ரேல் நடத்திய ஈரான் மீதான போரே இதற்கு சமீபத்திய உதாரணம்.

குவியும் கோர்ப்பரேட் இலாபம்

ஈரான் மீதான போருக்கும் மோசமான காலநிலை நெருக்கடிக்கும் நடுவே, எட்டு பகாசூர கோர்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்களின் இலாபம் 93 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. 2026 ஏப்ரல்–ஜூன் மூன்று மாதங்களில் உலகின் மிகப்பெரிய எட்டு எண்ணெய் நிறுவனங்கள் சேர்ந்து ஈட்டிய இந்த இலாபம், முந்தைய ஆண்டின் இதே காலகட்ட இலாபமான 50 பில்லியன் டொலருடன் (சுமார் ₹4.77 இலட்சம் கோடி) ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் (93 பில்லியன் டொலர் ₹8.87 இலட்சம் கோடி). இந்த அதிக இலாபத்திற்கு முக்கியக் காரணம், ஈரான் மீதான போருக்குப் பின் ஏற்பட்ட எண்ணெய் விநியோகக் குழப்பமும், அதனால் உலகளவில் விலை உயர்ந்ததுமாகும்; ஒரு பீப்பாய்கச்சா எண்ணெய் விலை 126 டொலருக்கும் மேல் உயர்ந்தது. சவூதி அராம்கோ, பிரிட்டிஷ் பெட்ரோலியம் (பிபி), ஷெல், ஈக்வினோர், டோட்டல் எனர்ஜீஸ், எனி, செவ்ரான், எக்ஸான் மொபில் ஆகியவையே இந்த எட்டுநிறுவனங்கள். இவை ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக ஏழு கோடிக்கும் அதிகமான ரூபாய் இலாபம் ஈட்டியதாக கார்டியன் பத்திரிகை ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பும் மூன்றுமாதங்களில் 600 பில்லியன் டொலர் அதிகரித்து 3 டிரில்லியன் டொலரைத் தாண்டியது — போரும் எரிசக்தி நெருக்கடியும் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமான வாய்ப்பாக மாறியுள்ளது.

பெரும் துயரங்களால் சூழ்ந்த உலகம்

பகாசூர எண்ணெய் நிறுவனங்களின் இலாபம் அதிகரித்த அதே நேரத்தில், உலகம் கடுமையான காலநிலை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. வெப்ப அலைகள், வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏராளமான மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பறித்துள்ளன. புதைபடிவ எரிபொருட்களால் ஏற்படும் காலநிலை பாதிப்புகளுக்கான பொறுப்பை பொதுமக்கள் ஏற்கவேண்டியிருக்க, அதே எரிபொருட்களை விற்கும் நிறுவனங்கள் பெரும் இலாபம் குவிப்பதே இன்றைய முக்கியமுரண்பாடு.

சவூதி அராம்கோ முதலிடம்

இந்தக் காலாண்டில் அதிகபட்ச இலாபம் ஈட்டிய நிறுவனமாக சவூதி அராம்கோ (Saudi Aramco) இருந்தது; அதன் நிகர இலாபம் 33 பில்லியன் டொலரைத் தாண்டி, முந்தைய ஆண்டைவிட 34% அதிகரித்தது. அரம்கோ நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி வரலாற்றிலேயே மிகப்பெரிய கார்பன் உமிழ்வுக்குக் காரணம் எனக் கார்பன் மேஜர்ஸ் தரவுத்தளம் குறிப்பிடுகிறது. செவ்ரான், எக்ஸான் மொபில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன; ஷெல், பிரிட்டிஷ் பெட்ரோலியமும் அதிக கார்பன் உமிழ்வு செய்த நிறுவனங்களின் பட்டியலில் உள்ளன. பிரிட்டிஷ் பெட்ரோலியம் இந்தக்காலாண்டில் 5.73 பில்லியன் டொலர் இலாபம் ஈட்டியது — முந்தைய காலாண்டின் 2.5 பில்லியன் டொலரைவிட இரு மடங்குக்கும் அதிகம். ஷெல் நிறுவனம் 9.84 பில்லியன் டொலர் நிகர இலாபம் ஈட்டியது, இது அதன் வரலாற்றிலேயே இரண்டாவது அதிகபட்ச காலாண்டு இலாபம்; போர் காரணமாக கத்தாரில் உள்ள அதன் எரிவாயு உற்பத்தி நிலையம் சேதமடைந்திருந்தும் இந்த இலாபம் கிடைத்தது. செவ்ரான் 12.2 பில்லியன் டொலரும், எக்ஸான் மொபில் 14.5 பில்லியன் டொலரும் (முந்தைய ஆண்டைவிட இரு மடங்கு) இலாபம் ஈட்டின. இந்த அளவு இலாப பெருக்கத்தைஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூட “அதிகமாக இலாபம் ஈட்டுகின்றன” என விமர்சித்தார்; போரால் கிடைத்த இலாபத்தின் ஒரு பகுதியை பொதுமக்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என பம்மாத்து உரையும் நிகழ்த்தினார்.

இலாப நோக்கமும் இயற்கைப் பாதிப்பும்

இந்நிலையில் எதிர்பாராத அதிகப்படியான இலாபத்தின் மீதான வரி (windfall tax) விதித்து, அதைக் காலநிலைப் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு, காட்டுத்தீ பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. ஆனால் இந்த கோர்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடு நேர்மாறாக உள்ளது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் தன் பசுமை எரிசக்தி முதலீட்டை ஆண்டுக்கு 5 பில்லியன் டொலரிலிருந்து 1.5–2 பில்லியன் டொலராகக் குறைத்துள்ளது. மனிதகுலத்தின் மீதான எத்தனை பெரிகுரூரமான தாக்குதல் இது!

உலகமே பாதிக்கும் நிலை

ஐரோப்பாவின் கடும் வெப்பநிலையால் பிரிட்டனில் மட்டும் மே–ஜூன் மாதங்களில் சுமார் 3,000 பேர் உயிரிழந்ததாக மதிப்பீடு. தென் கொரியா, ஜப்பானில் வெப்பநிலை 42.5 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது; ஆபிரிக்காவின் பல பகுதிகளிலும் ஜூலையில் வெப்பநிலை அதிகரித்தது. இதனால் மக்காச்சோளம், சூரியகாந்தி, காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டு, குறைந்தது 9 மில்லியன் தொன் தானிய உற்பத்தி இழக்கப்படலாம்.

பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ் ஆகிய நாடுகளில் வறட்சி பெரும் காட்டுத் தீயை ஏற்படுத்தியது.வங்கதேசத்தின் சட்டோகிராமில் 24 மணி நேரத்தில் 40 செ.மீ.-க்கும் அதிகமான மழை பெய்து திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியது. இந்தியா, பாகிஸ்தானிலும் வெள்ளமும் நிலச்சரிவுகளும் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பறித்த புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களின் அதிகப்படியான இலாபத்தின் மீது நியாயமான வரி விதித்து, அந்த வளங்களைக் காலநிலைப் பாதுகாப்புக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. ஆனால் ஏகாதிபத்திய அமெரிக்கா பல பத்தாண்டுகளாக போர்களுக்கு நிதியளித்தும், பெருநிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்கி பில்லியனர் வர்க்கத்தை மேலும் டிரில்லியனர் செல்வந்தர்களாக்கியும் வருகிறது. ஏகாதிபத்திய அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளாமல் உலகப் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகவே மாறும்!.

Tags: