அஞ்சி நடுங்கும் அதிகாரம்

வாக்காளர் பட்டியலிலிருந்து 13 கோடிப் பெயர்கள் நீக்கப்பட்டது ஏன் என்ற ஒற்றைக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத மோடிஅரசு, கேள்வி கேட்டவர்களின் குரல்வளையை நெரிக்கத் துணிந்திருக்கிறது. கடந்த இரண்டுநாட்களாகத் டெல்லியில் நடந்தவை ஓர் அரசின் பலத்தை அல்ல; அதன் பீதியையே அம்பலப்படுத்துகின்றன.
போராடுவதற்கென்றே ஒதுக்கப்பட்ட ஜந்தர் மந்தருக்குள் யாரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு தலைநகரமே முடக்கப்பட்டது. பல்லாயிரம் படையினர், மூடப்பட்ட மெட்ரோ நிலையங்கள், இரத்தான ரயில்கள், துண்டிக்கப்பட்ட இணையம், தடுப்பு முகாம்களான விளையாட்டு மைதானங்கள். காஷ்மீரிலும் மணிப்பூரிலும் பழகிய அடக்குமுறை ஆயுதங்கள் இப்போது நாடாளுமன்றத்தின் நிழலிலேயே பிரயோகிக்கப்படுகின்றன.
முன்னாள் முதலமைச்சர்கள், கட்சிகளின் பொதுச் செயலாளர்கள், வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், காணொலி எடுத்த பாதிரியார் என யாரும் தப்பவில்லை. ஒரு தலைவர் விமானத்துக்குள்ளேயே பிடிக்கப்பட்டார். எண்பது வயதைக் கடந்த பினராயி விஜயனுக்கு மணிக்கணக் கில் உணவும் மருந்தும் மறுக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் தலையிட்டு, சட்டத்துக்குப் புறம்பாக யாரையும் கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட அதே ஞாயிறன்று, ஊடகங்களிடம் பேசிக்கொண்டிருந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜோன் பிரிட்டாஸ் கேமராக்கள் முன்பே இழுத்துச்செல்லப்பட்டார்; வாகனத்துக்குள் மூச்சுத் திணறும் வரை அமுக்கப்பட்டு, தாக்கப்பட்டார். மாணவர் சங்கத் தலைவர் ஆதர்ஷின் நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்தது. நீதிமன்றத்தின் சொல்லுக்கே மதிப்பில்லை என்றால், இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி யாருடையகையில் இருக்கிறது?

போராடியவர்களுக்குக் கைவிலங்கு; குற்றச்சாட்டுக்கு உள்ளான தேர்தல் ஆணையருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு. அவரது சக ஆணையர்களே பதினான்கு முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்புத் தெரிவித்ததாகச் அப்பட்டமாக அம்பலமான பிறகும் அவரைக் காக்க அரசு இவ்வளவு தூரம் போகிறது என்றால், அஞ்சுவது ஞானேஷ் குமார் மட்டுமல்லஎன்பது தெளிவு. வாக்குப்பெட்டியை நம்பாத அரசுதான் தடியை நம்பும்.
இவை அனைத்தும் ‘அரசியல் நாடகம்’ என்கிறார் ஒன்றிய அமைச்சர். ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கவலை தெரிவித்தால்,‘உள்விவகாரங்களில் தலையீடு’ என்று சீறுகிறது வெளியுறவு அமைச்சகம். பட்டியல் திருத்தம் நேர்மையானது என்றால், அமைதியாகக் கேள்வி கேட்கும் மாணவர்களைத் தடுக்க முப்பதாயிரம் படையினர் எதற்கு?
ஆனால் வரலாறு ஒரு பாடத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கிறது. நெருக்கடி நிலையின் சிறைகள் நிரம்பியபோதுதான் அதன் முடிவும் எழுதப்பட்டது. “மக்களைக் கைது செய்யலாம்; இயக்கத்தைக் கைது செய்ய முடியாது” என்று காவல் வாகனத்துக்குள்ளிருந்து முழங்குகிறது இளைய தலைமுறை.
தேசமே எழுக! ஒவ்வொரு ஊரையும் ஜந்தர் மந்தர் ஆக்குக!
-தீக்கதிர் ஆசிரிய தலையங்கம்
2026.10.11