ரூபியோவும் எண்ணெய் வணிகமும்!
–எஸ்.வி.ராஜதுரை

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இரண்டு நாள் (20, 21.10.2026) பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்தப் பயணத்தின்போது, உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான, குஜராத்தில் உள்ள ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தை அவர் பார்வையிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் உள்ள ரிலையன்ஸின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உலகின் மிகப்பெரிய ஒற்றை வளாக சுத்திகரிப்பு நிலையமாகும். பல வழிகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வணிகங்கள், தற்போது நிலவிவரும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் திருப்புமுனையில் அமைந்துள்ளன.
அமெரிக்காவில் முக்கியமான இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு டீசல் விலை உயர்ந்து வருவதுடன், ஈரான் மீதான போருக்கு மத்தியில் எண்ணெய் விலைகளைக் கட்டுப்படுத்தவும், ரஷ்ய எரிசக்தி வாங்குபவர்களைத் தண்டிக்கவும் வாஷிங்டன் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தப் பெருநிறுவனம் மையமாக விளங்குகிறது.

மேலும், ரிலையன்ஸ் சமீபத்தில்தான் அமெரிக்காவில் ஒரு பெரிய முதலீட்டைச் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. உலகளாவிய மூலதனத்தை ஈர்ப்பதில் தனது வெற்றிகளுக்கு உதாரணமாக அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இதை மேற்கோள் காட்டியுள்ளது.
அமெரிக்க-இந்திய இருதரப்பு உறவு, தொடர்ச்சியான உரசல் புரசல்களாலும், எட்டப்படாத வர்த்தக ஒப்பந்தத்தாலும் பாதிக்கப்பட்டு, சீரற்ற நிலையில் இருக்கும் நேரத்தில், ரூபியோ தலைநகர் புது டெல்லியையும் பிரதமரையும் புறக்கணித்து விட்டு ஒக்ரோபர் 20, 2026 அன்று, நேராக மும்பைக்குச் சென்றார். இந்தியாவின் நிதி மையமான மும்பையில் சில சந்திப்புகளுக்குப் பிறகு, ரூபியோ அண்டை மாநிலமான குஜராத்தில் உள்ள ஜாம்நகருக்கு விமானத்தில் சென்றார். அரபிக்கடலில் அமைந்துள்ள ஜாம்நகர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சுத்திகரிப்பு வளாகத்தின் இருப்பிடமாகும். இது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக உள்ளது. மேலும் இது ஒரு நாளைக்கு 1.4 மில்லியன் பீப்பாய் (bpd) கச்சா எண்ணையை சுத்திகரிக்கிறது.
ரூபியோ இந்த ஆண்டின் தொடக்கத்திலும் இந்தியாவிற்கு வந்திருந்தார். ஆனால் இந்தப் பயணம் “சற்று அதிக வணிக நோக்கம் கொண்டது” என்று இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ரூபியோவின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட குறிப்பில், அவர் “வணிக முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக வணிகத் தலைவர்களைச் சந்திப்பார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜாம்நகரில் அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சிலரைச் சந்திப்பார்,” என்று கோர் கூறினார்.
ஜாம்நகரில் என்ன இருக்கிறது?
உலகின் மிகப்பெரிய ஒற்றைத் தள எண்ணெய் சுத்திகரிப்பு வளாகம், ஒரு நாளைக்கு 1.4 மில்லியன் பீப்பாய்கள் என்ற ஒருங்கிணைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனைக் கொண்டுள்ளது. இது உலகளாவிய சுத்திகரிப்புத் திறனில் கிட்டத்தட்ட 1.5 சதவீதம் ஆகும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலாவது, 1999 இல் ஒரு நாளைக்கு 6,60,000 பீப்பாய்கள் (bpd) கொள்ளளவுடன் செயல்பாட்டிற்கு வந்த பிரதான நிலையம்.
இரண்டாவது, 2008 இல் ஒரு நாளைக்கு 5,80,000 பீப்பாய்கள் (bpd) கொள்ளளவுடன் செயல்பாட்டிற்கு வந்த, ஏற்றுமதியை மையமாகக் கொண்ட இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம், இது ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்குகிறது.
ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் சர்வதேச விநியோகஸ்தர்களிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. பல சுத்திகரிப்பு நிலையங்களால் திறமையாகக் கையாள முடியாத, அதிக கந்தகம் நிறைந்த அடர்த்தியான கச்சா எண்ணெயை இந்த சுத்திகரிப்பு நிலையம் பதப்படுத்தி, அதை அதிக மதிப்புள்ள பொருட்களாக மாற்றுகிறது.
பின்லாந்தின் சிந்தனைக் குழுவான, ’ஆற்றல் மற்றும் தூய்மையான காற்று குறித்த ஆராய்ச்சிக்கான மையம்’ (Centre for Research on Energy and Clean Air -CREA) மேற்கோள் காட்டிய தரவுகளின்படி, ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 143 மில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெய் பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது.
ஜனவரி 2026 முதல் ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை, மூன்றாம் நாடுகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய கச்சா எண்ணெயையும் சுத்திகரிக்கும்போது, அந்த சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து ஐரோப்பாவிற்குள் பொருட்கள் நுழைவதை போதுமான அளவு தடுக்கவில்லை என்று CREA தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆக ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் அந்தத் தடையில் ஓர் ஓட்டை விழச் செய்தது.
அமெரிக்காவில் நவம்பரில் நடைபெறவிருக்கும் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, பணவீக்கம், அதிகரித்து வரும் எரிபொருள் விலை ஏற்றம் ஆகியவற்றுக்கு மத்தியில் ட்ரம்பிற்கு மக்களின் ஆதரவு குறைந்துள்ள காலகட்டத்தில் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூபியோ பயணம் அமைந்துள்ளது. ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கணக்கெடுப்பின்படி, சுமார் 31 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ட்ரம்பின் செயல்பாடுகளில் மகிழ்ச்சி அடைகின்றனர் – இது அவரது இரண்டு பதவிக் காலங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
உலக எரிபொருள் சந்தைகளை உலுக்கியுள்ள ரஷ்ய எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் போரும் ஜாம் நகர் சுத்திகரிப்பு ஆலையும்
ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையில் தாக்கம் ஏற்படுத்தும் அமெரிக்க முயற்சிகளில் ரிலையன்ஸும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. பெப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான போரைத் தொடங்கியதிலிருந்து, சீனாவிற்கு அடுத்ததாக ரஷ்ய எண்ணெயை அதிக அளவு வாங்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மேலும், இந்த இறக்குமதி அதிகரிப்புக்கு ரிலையன்ஸ் காரணமாக உள்ளது. 2022-க்கு முன்பு அதன் எண்ணெயில் 3 சதவீதம் மட்டுமே ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட நிலையில், 2025-க்குள் அந்தப் பங்கு 50 சதவீதமாக உயர்ந்தது.
எனவே, ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக புது தில்லியைத் தண்டிக்கும் விதமாக, ஓகஸ்ட் 2025 இல் ட்ரம்ப் இந்தியப் பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தபோது, ரிலையன்ஸ் நேரடியாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அது கணிசமாகக் குறைத்தது. ஆனாலும் 2026 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தில் பதப்படுத்தப்பட்ட எண்ணெயில் மூன்றில் ஒரு பங்காக ரஷியக் கச்சா எண்ணெய் இருந்தது.
தொடர்ந்து வரும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியின் காரணமாக, கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீத வரியை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் தயாராக இருப்பதாகத் தோன்றியபோது, ரிலையன்ஸ் அச்சுறுத்தலுக்கு உள்ளானது. ஆனால், டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட வரிகளை அவரே நிறுத்தி வைத்துள்ளதன் காரணமாக, இது இந்திய அரசாங்கத்திற்கும் ரிலையன்ஸுக்கும் இருந்த கவலைகள் தணித்துள்ளன.
தினமும் மில்லியன் கணக்கான பீப்பாய் ரஷ்ய எண்ணெயை இந்தியா இன்னும் வாங்கினாலும், ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதிலிருந்து விலகி எண்ணெயைப் பல்வேறு நாடுகளிலிருந்து பெற்று இறக்குமதியை பலவகைப்படுத்தி வருவதாக ரூபியோ கூறியுள்ளார். “உதாரணமாக, இந்தியா போன்ற நாடுகள் தாங்களாகவே முன்வந்து தங்கள் எரிசக்தித் தொகுப்பை பலவகைப்படுத்தியுள்ளன, ஆனாலும் அவை இன்னும் கணிசமான அளவு எரிசக்தியை ரஷ்யாவிலிருந்து பெறுகின்றன. ஏனெனில் ஒரு நாளிலிருந்து அடுத்த நாளுக்கு மாறுவது கடினம் “என்றும் “இந்தியா அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடும் கூட்டாளியும் ஆகும் என்று ரூபியோ கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (18.10.26) கூறினார்.
அமெரிக்காவில் ரிலையன்ஸின் முதலீடு

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி, முக்கியமாக எரிசக்தி தொடர்பான திட்டங்கள் மூலம் அமெரிக்காவில் முதலீடு செய்து வருகிறார்.
இது, டெக்சாஸில் உள்ள பிரவுன்ஸ்வில் துறைமுகத்தில் அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங் நிறுவனம் திட்டமிட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு உதவியளிக்கிறது. இது ஐம்பது ஆண்டுகளில் அமெரிக்காவின் முதல் பெரிய சுத்திகரிப்பு நிலையமாக வளர்ச்சியடையும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு 3 பில்லியன் முதல் 4 பில்லியன் டொலர் வரை செலவாகும் என்றும், இது ஆண்டுக்கு சுமார் 60 மில்லியன் பீப்பாய் அமெரிக்க கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையின் உற்பத்தியில் பெரும் பங்கை வாங்குவதற்காக ரிலையன்ஸ் 20 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, மேலும் இதன் செயல்பாடுகள் 2029 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 2024 இல், ரிலையன்ஸின் அமெரிக்க துணை நிறுவனம், தனது குறைந்த கார்பன் எரிசக்தி உத்தியின் ஒரு பகுதியாக, ஹீலியம் ஆய்வு நிறுவனமான வேவ்டெக் ஹீலியத்தில் 21 சதவீத பங்குகளை 12 மில்லியன் டொலருக்கு வாங்கியது.
கடந்த மாதம், ரஷ்யாவுடன் ஆழமான தொடர்புகளைக் கொண்ட ஒரு பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியாவின் எஸ்ஸார் குழுமம், தனது துணை நிறுவனமான மெசாபி மெட்டாலிக்ஸ் மூலம் அமெரிக்காவில் 18 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒருங்கிணைந்த எஃகு முதலீட்டைத் திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்தார்.
எலான் மஸ்க்கின் கோபம்
ரிலையன்ஸின் அமெரிக்க முதலீடுகள் மற்றும் ஜாம்நகர் ஆலைக்கு ரூபியோவின் வருகை இருந்தபோதிலும், உலகின் மிகப் பெரிய பணக்காரரும் ட்ரம்பின் முக்கிய கூட்டாளியுமான எலான் மஸ்க், சமீபத்தில் அம்பானியை கடுமையாக சாடினார். அவரது ஸ்டார்லிங்க் விண்வெளி தொலைத்தொடர்பு நிறுவனம் இந்தியாவில் செயல்படுவதற்கான உரிமத்தைப் பெறுவதற்கு பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது.
சமீபத்தில் தொடர்ச்சியான X பதிவுகளில், சந்தையில் முன்னணியில் இருக்கும் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவுக்கு ஆதரவாக, ஸ்டார்லிங்கின் நுழைவை பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் தடுத்து நிறுத்துவதாக மஸ்க் குற்றம் சாட்டினார். மஸ்க், அம்பானியை நேரடியாக “பிரதமர் அம்பானி” என்று விளித்து, “ஸ்டார்லிங்கை போட்டியிட அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பீர்களா” என்று கேட்டு கிண்டல் செய்தார். இந்தியர்கள் மீதான தங்கள் “ஏகபோக ஆதிக்கப் பிடியைப்” பாதுகாக்கும் “செல்வந்தர்களால்” ஸ்டார்லிங்க் தடுக்கப்படுவதாக மஸ்க் எழுதியிருந்தார்.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், தாங்கள் “போட்டிக்கு ஒருபோதும் அஞ்சியதில்லை” என்றும், “உள்நாட்டு அல்லது சர்வதேச முதலீடு மற்றும் புதுமைகளை வரவேற்கும் இந்தியாவில் வளர்ந்துள்ளோம்” என்றும் கூறியுள்ளது. ஜாம்நகர் வளாகம் 216-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் வகைகளைச் சுத்திகரித்துள்ளதாகவும், “இந்தச் சாதனையை நிகழ்த்திய ஒரே சுத்திகரிப்பு நிலையம் இதுவாகத்தான் இருக்கும்” என்றும் ரிலையன்ஸ் கடந்த மாதம் கூறியது.
வாஷிங்டன் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தை மறுவடிவமைக்க முயல்வதால், ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறன், வெனிசுவேலா கச்சா எண்ணெய் இறக்குமதியை பெருமளவு அதிகரிக்க வழிவகுக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தி அமெரிக்க சிறையில் அடைத்துவிட்டு அந்த நாட்டைக் கைப்பற்றியது. பகுப்பாய்வு நிறுவனமான கேப்ளரின்( Kpler) மதிப்பீடுகளின்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒக்ரோபர் மாதக் கொள்முதல் நாளொன்றுக்கு சுமார் 3,50,000 முதல் 3,70,000 பீப்பாய்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “இன்னும் அதிக அளவில் வெனிசுவேலா கச்சா எண்ணெயை சுத்திகரிப்பது குறித்து ரிலையன்ஸுடன் நாங்கள் பேசுவோம்,” என்று செவ்வாயன்று செய்தியாளர்களிடம் ரூபியோ சுருக்கமாகப் பேசினார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இந்த சுத்திகரிப்பு ஆலை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

உலகின் மிகப்பெரிய சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் வழங்குநர்களில் ஒன்றாக, உலகளாவிய எண்ணெய் சந்தைகளை நிலையாக வைத்திருப்பதில் ரிலையன்ஸ் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. உதாரணமாக, செப்டம்பர் மாதத்தில், ஐரோப்பிய ஒன்றிய துறைமுகங்களில் எண்ணெய் பொருட்களை ஏற்றி வந்த ஏழு பெரிய சரக்குக் கப்பல்களில் ஆறு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொருட்களைக் கொண்டு வந்தன.
ரிலையன்ஸின் மிகப்பெரிய ஏற்றுமதி டீசல் ஆகும். அடுத்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், அமெரிக்காவில் டீசலின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் கவலை அளித்துள்ளது.
பெட்ரோல் டீசல் என வகை வாரியான ஏற்றுமதித் தரவுகள் பொதுவில் வெளியிடப்படவில்லை என்றாலும், வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஜாம்நகரிலிருந்து 21.66 மில்லியன் தொன்கள் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், டீசல் 9.81 மில்லியன் தொன்களுடன் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல் 6.14 மில்லியன் தொன்களாகவும், ஜெட் எரிபொருள் 2.06 மில்லியன் தொன்களாகவும் இருந்தன.
இக்காலகட்டத்தில் ரிலையன்ஸின் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களில் 28 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது ரிலையன்ஸ் ஏற்றுமதி செய்த பெட்ரோல், டீசல் முதலியவற்றில் 28 விழுக்காடாகும்.