உண்மையிலேயே அம்பானி தான் இந்தியாவின் பிரதமரா?
-ச.அருணாச்சலம்

பொருளாதார வலிமையில் இந்திய அரசுக்கு இணையான ரிலையன்ஸ் அம்பானிக்கு இந்த இமாலய வளர்ச்சி எப்படி சாத்தியமானது? அமெரிக்க வெளியுறவு செயலர் மார்க்கோ ரூபியோ இந்தியாவிற்கு வந்த பொழுது, தலை நகர் டெல்லிக்கு வரவில்லை! பிரதமரை சந்திக்கவில்லை! மாறாக மும்பைக்கு நேரடியாக வந்திறங்கி ரிலையன்ஸ் அதிபர் அம்பானியை சந்தித்தன் மூலம் வெளிப்படுத்திய செய்தி என்ன?
பிரதமரை சந்திக்க விரும்பாத அமெரிக்க அரசின் அதிகார மட்டத்தில் மிக முக்கிய நிலையில் உள்ள மார்க்கோ ரூபியோவை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மும்பை சென்று ரூபியோவை சந்தித்து பேசியதாக செய்திகள் கூறுகின்றன.
ஒக்ரோபர் 17 முதல் 20 வரை பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை வளாகத்திற்கு – உலகின் மிகப் பெரிய எண்ணை சுத்தீகரிப்பாலை – சென்ற ரூபியோ, வெனிசுவேலா எண்ணையை, சுத்தீகரிப்பு செய்து உலகிற்கு அளிக்க, அமெரிக்க அரசு அம்பானியின் ஜாம்நகர் ஆலையை தேர்ந்தெடுத்து உள்ளதாக தெரிகிறது.
வெனிசுவேலாவில் கிடைக்கும் எண்ணெயில் மெர்குரி போன்ற வேதியல் பொருள் அதிகமிருப்பதால் அதை சுத்தீகரிக்க சிறப்பான ஏற்பாடுகள் தேவை. அத்தகைய நவீன வசதியுள்ளது அம்பானியின் ஜாம்நகர் சுத்தீகரிப்பு ஆலை. ஈரான் போரின் விளைவாக எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றிற்கு 110 டொலராக எகிறிய வேளையில், வெனிசுவேலாவில் அமெரிக்கா கொள்ளையடிக்கும் எண்ணெயை புழக்கத்திற்கு கொண்டுவர- எண்ணெய் தட்டுப்பாட்டிலிருந்து நிவாரணம் பெற – அமெரிக்க அரசு துடிக்கிறது.
மோடியின் பினாமி அதானியும், டாடா குழுமத் தலைவரும் மோடியின் கையாளுமான சந்திரசேகரும் ரூபியோவை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் அப்துல்லாவும் இந்த கூட்டு முயற்சியில் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சந்திப்புகள் பற்றி ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு பொத்தாம் பொதுவாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஒக்ரோபர் 21ந் திகதி எக்ஸ் தளத்தில் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் இந்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி இருக்கும் போட்டோ ஒன்று வெளியிடப்பட்டது.

அமெரிக்க நீதித்துறையின் வசமுள்ள இந்த போட்டோ இப்பொழுது வெளியிடப்பட்ட காரணம் என்ன? யாரை பிளாக் மெயில் செய்வதற்காக இந்த போட்டோ கசியவிடப்பட்டுள்ளது? மார்க்கோ ரூபியோவின் மும்பை விசிட்டின் இறுதியில் இந்த போட்டோவை அமெரிக்கா வெளியிட என்ன காரணம்? மோடியின் குடுமி என் கையில் உள்ளது என எச்சரித்த ட்ரம்ப்பின் வேலையா இது? எனப் பல கேள்விகள் எழுகின்றன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை எனது நண்பர் என்று பவ்யமாக மோடி குறிப்பிட்டாலும் அமெரிக்க அரசும், அதிபர் ட்ரம்ப்பும் மோடியின் நிலைப்பாடு பற்றியெல்லாம் கவலை பட்டதாக தெரியவில்லை. தங்களது தேவைக்காக நேரே மும்பை சென்று அம்பானியை சந்தித்து காய்களை நகர்த்துகின்றனர்.
யார் இந்த அம்பானி? உண்மையில் எலான் மஸ்க் கிண்டலடித்ததை போல இந்தியாவின் உண்மையான பாஸ் அம்பானி தானா?
140 கோடி மக்களை கொண்ட இந்தியாவும், வல்லமை மிகுந்த அமெரிக்காவும் உறவாடுவதும், வர்த்தகம் செய்வதும் இரு நாட்டு மக்களின் நலன்களுக்காகவா? அல்லது அம்பானி போன்ற முதலாளிகளின் நலன்களுக்காகவா?

முதலாளிகள் தங்களுடைய நலன்களுக்காக அந்நிய முதலாளிகளுடன் உறவாடினால், அதற்காக முன் கையெடுத்தால் அவர்களை “தரகு முதலாளிகள்” என்கிறோம் . ஆனால், அரசியல் தலைவர்களே முதலாளிகளின் நலன்களுக்காக ஆட்சி செய்து அவர்களின் மேம்பாட்டிற்காக சட்டங்களை இயற்றுவதும், நீக்குவதும் நம் கண்முன்னே நடைபெற்று வருகிறது. அதற்கும் மேலே ஒருபடி சென்று ஆட்சியாளர்களுக்கு பதிலாக முதலாளிகளே அந்நிய தலைவர்களுடன் முதலீடு பற்றியும், எதிர்கால வளர்ச்சி பற்றியும் பேசி முடிவு எடுப்பதை இப்பொழுது தான் காண்கிறோம்.
யார் இந்த அம்பானி?
இந்தியாவில் முதலாளி வர்க்கம் அன்னிய காலனி ஆதிக்கத்தின் மடியில் தான் பிறந்தது. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கும் மேலாக, காலனி ஆதிக்க தேவைகளுக்காக சில தொழிற்சாலைகளை நடத்தி வந்த இந்த கூட்டம் நாடு சுதந்திரமடைந்த பிறகு உள்நாட்டு மக்களின் தேவைகளுக்காக உற்பத்தியில் ஈடுபட தொடங்கினர். அப்பொழுதும் புதிய இந்தியாவின் தேவைக்கேற்ப கனரக துறைகளில் ஈடுபட்டு தொழிலுற்பத்தியை பெருக்குமளவிற்கு அவர்களுக்கு மனமும் இல்லை, மார்க்கமும் இல்லை. இதுவே பம்பாய் திட்டமாக (Bombay Plan – A Plan of Economic Development for India 1944-1945) உருவெடுத்து, இந்திய தொழில்வளர்ச்சிக்கு முதலாளிகளைவிட இந்திய அரசே (மக்களே) அதிக முதலீடுகளை செய்யவேண்டும் என்றும், தொழில் வளர்ச்சியில் அரசின் தலையீட்டை வலியுறுத்தியும் அத்திட்டம் கூறியது.
இதன்மூலம் இந்தியா பல வளர்ச்சிகளை கண்ணுற்றாலும், தொழிற்சாலைகள் பெருகினாலும் இந்திய முதலாளிகள் அரசின் பாதுகாப்பில் சந்தை போட்டிகளிலிருந்து காப்பாற்ற பட்ட சோம்பேறி முதலாளி கூட்டமாகவே திகழ்ந்தனர். பெரிய முதலாளித்துவ சக்திகளாக கருதப்ப்பட்ட டாடா, பிர்லா, பஜாஐ் , சிங்கானியா, போன்ற தொழிலமைப்புகள் பலவும் ஏகபோக முதலாளிகளாக கருதப்பட்டாலும், இவர்களால் இந்தியாவை ஒரு தொழிற்முன்னேற்றமடைந்த நாடாக (industrialised country) மாற்ற முடியவில்லை.
இந்த ஏகபோக தொழில் நிறுவனங்கள் அனைத்தும் குடும்ப நிறுவனங்களாகவே இருந்தன. பிற நாட்டு பொருட்களுடன் போட்டியிட்டு திறமையை வளர்த்துக் கொள்ள இயலாத கூட்டமிது, புதிய கண்டுபிடிப்புகளும், புதிய தொழில்நுட்பமும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கு சுட்டுபோட்டாலும் வராது . அவர்களது டி.என்.ஏ (DNA) அப்படி!
இப்படி பாதுகாப்பு வளையத்திற்குள் வளர்ந்து விரிந்த இந்திய முதலாளித்துவ வர்க்கத்தில் 1960 முதல் 1991 வரை பல மாற்றங்கள் நிகழ்நதன என்பதை மறுப்பதற்கில்லை. இந்த சுழற்சியில் பலர் நொடித்து வெளியேறியதும், சிலர் நுழைந்து தங்களை தக்க வைத்து கொண்டதும் இங்கு நிகழ்ந்தது. இவ்வாறு நுழைந்த புதியவர்களில் ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய தோற்றமும், வளர்ச்சியும் சுதந்திர இந்தியாவில் தான் நிகழ்ந்ததே ஒழிய, இவர்கள் டாடா பிர்லா அல்லது பஜாஜ் போன்று நூறாண்டு பாரம்பரியத்தை கொண்டவர்களல்ல. எனினும், 1990 களின் ஆரம்பத்தில் இவர்கள் டாடா பிர்லாவிற்கு அடுத்த மூன்றாவது இடத்தில் தங்களை தகவமைத்து கொண்டனர்.
1958 இல் , ரூ.2.7 கோடி முதலீட்டில் ஒரு கூட்டு நிறுவனமாக (Partnership) தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தது. 1966 வரை பல்வேறு பெயர்களில் இந்த வணிகத்தை திருபாய் அம்பானியும், அவரது சகோகதரர்களும் நடத்தினர்.
1966 முதல் 1977 வரை தனியார் நிறுவனங்களாக தங்களை வடிவமைத்து கொண்ட ரிலையன்ஸ் குழுமம் கர்நாடகத்தில் உள்ள மணிபால் குழுமத்தின் மூலம் வங்கிகள் மற்றும் பொது நிறுவனங்களின் மூலம் வியாபாரத்திற்கு தேவையான கடன்களை பெற்று ரிலையன்ஸ் நிறுவனம் தன்னை வளர்த்து கொண்டது.
1977இல் தங்களது நிறுவனத்தின் பங்குகளை பொதுவில் விற்பதன் மூலம் மூலதனத்தை திரட்டிய ரிலையன்ஸ், முதலீட்டாளர்கள் கொடுத்த ஊக்கத்தால் தங்களது மற்ற நிறுவனங்களையும் பொது நிறுவனங்களாக மாற்றினர். டெக்ஸ்டைல்சில் மட்டுமின்றி பெட்ரோ கெமிக்கல் துறையிலும் ரிலையன்ஸ் அமைப்பு கால் பதித்தது. பாலியஸ்டர் மற்றும் ரேயான் இழைகள் தயாரிப்பிலும் இறங்கியது.
டெக்ஸ்டைல் துறையில், பாலியஸ்டர் மற்றும் ரேயான் துணி வகைகளின் வரவாலும் தனியார் முதலீடுகள் என்ற புதுப் பாணியாலும் (சேமிப்பிலிருந்து சிறு முதலீட்டிற்கு மாறுகின்ற புது பாணி) ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் 1978ல் 12 ஆக இருந்தவை, 1989 இல் 167 நிறுவனங்களாக பல்கி பெருகின. இவற்றிற்கான முதலீடும் பொது நிறுவனங்களான வங்கிகள் மூலமும் தனி நிதி நிறுவனங்கள் (மனிபால் குரூப்) மூலமும் கிடைத்ததனால் இது சாத்தியமாயிற்று.
பருத்தி நூல் பின்னல் என்பதிலிருந்து பாலியஸ்டர் பிலமண்ட் யார்ன் (PFY ) இல் தொடங்கி பெட்ரோ கெமிக்கல் துறையில் Polyester Staple Fibre, Purified Terepthalic Acid, Monoethylene Glycol (MEG) , LAB, HDPE , PVC போன்ற செயற்கை இழை தயாரிப்புகளில் ரிலையன்ஸ் இறங்கி வளர்ந்தது.
உலகெங்கிலும் ஜவுளி உற்பத்தியின் அதீத தேவையும், வேதியல் துறையில் நடந்த புரட்சியால் செயற்கை இழை தயாரிப்பு நுட்பங்கள் ஜவுளி உற்பத்தி துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் இந்தியாவை தாமதமாக வந்து சேர்ந்தது . ஜவுளி வியாபாரத்தளத்தில் இருந்து செயற்கை இழை உற்பத்திக்கு வந்து சேர்ந்த ரிலையன்ஸ் குழுமம் தன்னுடன் புதிய தொழில்நுட்பத்தையோ, தயாரிப்பு அனுபவத்தையோ இங்கு கொண்டு வரவில்லை.
ஜவுளி உற்பத்தியில் பாம்பே டையிங், ஜே கே சிங்கானியா, தப்பார் போன்ற போன்றவர்கள் கொடி கட்டி ஆண்டனர். செயற்கை இழை உற்பத்தியிலோ இந்திய அரசு நிறுவனமான இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் IPCL நிறுவனமும், தனியார் துறையில் தமிழ்நாட்டை சார்ந்த எம் ஏ. சிதம்பரத்தின் தமிழ்நாடு பெட்ரோ புராடக்ட்ஸ் என்ற நிறுவனமும் முன்னணியில் இருந்தன.
ஜே கே சிந்தட்டிக்ஸ் என்ற நிறுவனமும் இவற்றுள் ஒன்று.
இவர்களுக்கு மத்தியில் ரிலையன்ஸ் குழுமம் லேட்டாக நுழைந்து உச்சத்தை தொட்டதற்கு ரிலையன்சின் ‘சிறந்த தொழில் நுட்பம்’ காரணமல்ல .
அன்று நடைமுறையில் இருந்த லைசன்ஸ் ராஜ்யத்தில் (regulatory regime) அரசியல்வாதிகள் குறிப்பாக ஆளுங்கட்சியின் அனுக்கிரகமும் அனுசரணையும் இருந்தால் தான் தொழிலை துவங்கவும், அதை விரிவுபடுத்தவும் (capacity expansion) முடியும். ஆட்சியாளர்களுக்கு இணக்கமாக இருப்பதே வெற்றியின் இரகசியம் என்பதை நன்கு புரிந்து கொண்ட ரிலையன்ஸ் நிறுவனம் புதிய தொழில்களை துவங்க அனுமதி பெற்றதோடு மட்டுமின்றி, போட்டியாக வந்த பழம்பெரும் நிறுவனங்களான சிங்கானியா, தாப்பார் போன்ற நிறுவனங்களுக்கு புதிய தொழில்கள் தொடங்க, இருக்கும் வசதியை விரிவுபடுத்த அனுமதியை அரசு கொடுக்காமலும் பார்த்து கொண்டது.

இத்தகைய பாரபட்ச நடைமுறைகளால் ரிலையன்ஸ் நிறுவனம் போட்டியாளர்கள் யாருமின்றி இத்துறையில் கொடிகட்டி வளர முடிந்தது. இது தவிர மற்றொரு காரணம், வங்கிகள் மூலம் கிடைக்கும் நிதி உதவி. ஆட்சியாளர்களின் கண்ணசைவைக்கு காத்திருந்து கடன் கொடுக்கும் பொதுத்துறை வங்கிகளின் உதவிகளையும் அம்பானி அமோகமாக பெற்றதற்கு காரணம், அவரது அரசியல் தொடர்புகளே ஆகும்.
இப்படி வளர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம், லைசன்ஸ் ராஜ் முடிவுக்கு வந்தபோதும் தாராளமயமாக்க கொள்கை நடைமுறை படுத்தபட்டபொதும் ஆட்சியாளர்களுடன் தங்களது உறவுகளை “நல்ல முறையில் “ பாதுகாத்து வந்தனர்.
பெட்ரோகெமிக்கல் துறையில் கால்பதித்து வளர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம் தனது பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையை குஜராத் ஜாம்நகரில் நிறுவ முயற்சி 1991இல் மேற்கொண்டது.
இந்த நிலையில் இந்திய அரசாங்கம் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் புதிய ஆய்வு மற்றும் அனுமதி கொள்கையை (New Exploration and Licensing Policy) அறிவித்தது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் அரசின் ஏகபோகத்தை உடைத்து தனியாரும் ஈடுபட்டு எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுக்க அனுமதித்தது. கள ஆய்வு செய்தல், எடுக்கப்பட்ட எரிவாயு மற்றும் எண்ணெய்க்கு விலை வைத்தல் அத்தகைய முயற்சியில் சுற்றுப்புற சூழலுக்கு இடையூறு இன்றி பாதுகாத்தல் ஆகியவற்றை யாருக்கு அளிப்பது என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசு தன் வசம் வைத்து கொண்டது.
இத்துறையில் நுழையும் தனியாருக்கு விலை மான்யமும், இழப்பு ஏற்படின் நிவாரணமும், வரிச் சலுகைகளும், முதலீட்டிற்கான கடனையும் தந்து உதவியது. எரிசக்தி உற்பத்தியில் ஈடுபடும் தனியார் முதலாளிகளுக்கு வரிச்சலுகை, சன்மானம், கடன்வசதி… என பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அறிவித்தது. இதற்காக 100% வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிக்கும் அரசு, இதற்கான அரிய தாதுக்களை இறக்குமதி செய்ய வரிவிலக்கும் அளிக்கிறது.
அம்பானி இத்துறையில் முழு மூச்சாக இறங்கினார். குஜராத் ஜாம்நகரில் நவீன எண்ணெய் சுத்தீகரிப்பாலையை நிறுவ தொடங்கினார். அதற்கு வேண்டிய தடையில்லா சான்றுகளை, அரசு அனுமதிகளை, பஞ்சாயத்து தொடங்கி அங்கு வசிக்கும் மக்களின் அனுமதி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி, மாநில அரசின் அனுமதி, மத்திய அரசின் அனுமதி என பல கதவுகள் அம்பானிக்கு தங்கு தடையின்றி திறந்தன.

ஜாம்நகர் சுத்தீகரிப்பு ஆலையை தொடங்கியபின் ஹைட்ரோ கார்பன் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்கியது . கிருஷ்ணா – கோதாவரி வடிநிலத்தில் (KG Basin) D6 பிளாக் என்ற பகுதியில் ஆய்வு செய்து எண்ணெய் எடுக்க ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அரசு அனுமதி வழங்கியது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் சாம்ராஜ்ஜியமே இந்த KG Basin D6 பிளாக்கின் மூலமாகவே கட்டி எழுப்பபட்டதென்றால் அது மிகையில்லை.
இதனையொட்டி உள்ள பிளாக் 5 என்ற பகுதி அரசு நிறுவனமான ONGC ஆயில் அண்ட் நேச்சுரல் காஸ் கார்ப்பரேஷனுக்கு வழங்கப்பட்டது. உலக வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத இயற்கை வளத்திருட்டு– பிளாக்5 பகுதியில் இருந்து எரிவாயு வளத்தை சைடு போர் மூலமாக ரிலையன்ஸ் நிறுவனம் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ONGC அதிகாரிகளும் பிற வல்லுனர்களும் இத்திருட்டை ஊர்ஜிதப்படுத்துகின்றனர்.
1.55 பில்லியன் டொலர் பெறுமான (சுமார் 13,000 கோடி இந்திய ரூபாய் பெறுமான எண்ணெய் வளத்தை) ரிலையன்ஸ் நிறுவனம் திருடியதாக வழக்கும் தொடுக்கப்பட்டு இன்னும் அவ்வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது!
பக்கவாட்டு துளையிடல் மூலமும் திசை மாறிய துளையிடல் தொழில் நுடபங்களின் மூலமும் (horizontal and deviated drilling technique) இந்த திருட்டு நடந்துள்ளது என்பது வல்லுனர்களின் கருத்தாகும். இது சில அதிகாரிகளின் துணையுடன் தான் நடந்திருக்க வேண்டும் என்பதும் கடமையை செய்ய வேண்டிய ஒழுங்குமுறை ஆணயம் உறங்கியதாலும் இது நடைபெற்றன என்றாலும் நீதித்துறையின் பாராமுகமும் இந்த இயற்கைவளத் திருட்டிற்கு துணை போனது வேதனை! ரிலையன்சின் தலைசிறந்த வழக்கறிஞர்களின் துணையுடன் நீதிமன்றம் இன்னும் இந்த வழக்கை இழுத்தடித்து கொண்டுள்ளது.
2004 முதல் 2011 வரை ரிலையன்ஸின் KG பிளாக் 6 அபரிதமான லாபம் பெற்றதும் , அடுத்து உள்ள ONGCயின் பிளாக்5 இல் ஏகப்பட்ட தாறுமாறான நட்டம் அடைந்ததும் உலகினர் கண்ணுக்கு தெரிய வந்தது. அதுவரை உண்மை விளம்புவோரும் , புவியியல் நிபுணர்களும் பல காலமாக கூறி வந்த தகவல்களை – Production Sharing Contractsஐ மீறி ரிலையன்ஸ் திருடுகிறது என்ற உண்மையை – இந்த இலாபம்- நட்டம் வேறுபாடு உறுதி படுத்தியது.
2013 இல் மத்திய அரசு ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது 13,000 கோடியை அரசுக்கு செலுத்துமாறு டிமான்ட் நோட்டீஸ் அனுப்பியது. ஒ.என்.ஜி.சி யின் தொழில்நுட்ப குழுவும் இத்திருட்டை ஊர்ஜிதப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்தது. வழக்கும் தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த, லண்டனில் உள்ள நடுவர் தீர்ப்பாயம் 2018 இல் மத்திய அரசின் புகாரை தள்ளுபடி செய்தது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்வாக்கை மட்டும் இத்தீர்ப்பு சுட்டி காட்டவில்லை, மத்திய அரசு உண்மையான வாதங்களை எடுத்துரைக்க தவறியதையும், தொழில்முறை வல்லுனர்கள் என்ற போர்வையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கையாட்கள் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக இருந்ததையும் இது காட்டுகிறது.
2023 பெப்ரவரியில் இந்த தீர்ப்பை உறுதி செய்த டெல்லி உயர்நீதிமன்றம் பிறகு இத்தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2025 இல் பெட்ரோலிய அமைச்சகம் டிமான்ட் நோட்டீஸ் தொகையை 13,000 கோடியிலிருந்து 25,000 கோடியாக உயர்த்தி தாக்கீது அனுப்பியது. இவ்வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
நவம்பர் 2025 இல் மும்பை உயர்நீதிமன்றம் இது குறித்து சிபிஐ விசாரணை கோரிய மற்றொரு பொதுநல வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், முகேஷ் அம்பானிக்கும் சிபிஐக்கும், மத்திய அரசிற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது!
13,000 கோடி ரூபாயை கட்ட சொல்லி தாக்கீது அனுப்பிய பிறகும் , பத்து ஆண்டுகள் கழித்தும் அதை செயல்படுத்த மறுப்பது அம்பானியா? நீதிமன்றமா? அல்லது தாக்கீது அனுப்பிய அரசேவா? இந்தியாவில் மட்டும் தான் இத்தகைய விந்தைகள் நிகழும்!
எரிசக்தி தட்டுப்பாடு உள்ள இந்தியா போன்ற நாட்டில் ரிலையன்சின் “வெற்றி” என்பது இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கான மான்யமாகவே காட்சியளிக்கிறது.
ஜியோவின் வருகை
2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் வெளியான நிராவ் ரேடியா ஒலிநாடா அரசியல்வாதிகளுக்கும் கோர்ப்பரேட் முதலாளிகளுக்கும் இடையிலான கள்ளத் தொடர்பை உலகிற்கு காட்டியது. அரசின் கொள்கை முடிவுகளை கோர்ப்பரேட்டுகள் எவ்வாறு மாற்றுகின்றனர், யாரை அமைச்சராக ஆக்க வேண்டும் ( ஆ. ராசாவை மீண்டும் அமைச்சராக்கிய விவகாரம்) என்று முடிவு செய்பவர் யார்? என்பதையும் அம்பலப்படுத்தியது. 2G விவகாரத்தில் முகேஷ் அம்பானியின் நிறுவனம் ஆரம்பத்தில் ஒதுங்கியிருந்தாலும், அனில் அம்பானியின் நிறுவனம் குற்றவாளி கூண்டில் ஏறியது.
122 2G உரிமங்கள் இரத்து செய்யப்பட்டதால் தொலைதொடர்பு துறை நிலைகுலைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் துறைக்குள் நுழைந்தது. யுனிநார் நிறுவன சொத்துக்களை கையகப்படுத்திய ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ₹0 டாரீஃப் வழங்கி நேர்மையற்ற வணிகமுறை என்ற அவப்பெயரை சம்பாதித்தது. தொலை தொடர்பு துறையில் போட்டியாளர்களை இதன் மூலம் அப்புறப்படுத்தியது.
இதனால் அத்துறையில் 1 இலட்சம் வேலைவாய்ப்புகள் நசிந்தன, பிற போட்டி நிறுவனங்கள் நொடித்ததால் சுமார் 6 இலட்சம் கோடி ரூபாய்கள் இந்திய வங்கிகளுக்கு வாராக் கடனாக மாறின!
மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை மோடி அரசின் உதவியுடன் ஓரங்கட்டி அவர்களின் நெட்ஒர்க் சாதனங்களை ஏப்பம் விட்டுத் தான், ஜியோ தனது 5G சேவைகளை தொடங்கியது. ஜியோ சேவையை தொடங்கி வைத்த மோடி அதை அரசு விழாவாக கொண்டாடினார்! மோடியின் முழு உருவத்தையும் தாங்கிய முழுபக்க விளம்பரங்கள் அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்தன. இவ்வாறு 40 விழுக்காடு சந்தையை ஜியோ நிறுவனம் கைபற்றியது.
2014 இல் 16 செல்போன் நிறுவனங்கள் இருந்தன, இன்றோ 4 மட்டுமே சந்தையில் உள்ளன. இவற்றில் முதலிடம் வகிப்பது ஜியோ, இரண்டாவது இடத்தில் ஏர்டெல் நிறுவனம் உள்ளது. 2019 நவம்பரில் 10 இலட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனம் பெற்ற இந்தியாவின் ஒரே தனியார் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனம் தான் என்ற பெயரை பெற்றது. டெக் ஜாம்பவான்களான மெட்டா, மற்றும் கூகிள் நிறுவனங்களிடம் அட்வான்ஸ் முதலீடாக 1,56,056 கோடிகளை ரிலையன்ஸ் நிறுவனம் பெற முடிகிறதென்றால், இந்திய சந்தையில் அந்நிறுவனத்திற்கு இருக்கும் செல்வாக்கை, அரசிடம் அந் நிறுவனத்திற்கு இருக்கும் பயங்கரமான செல்வாக்கை என்னென்று கூறுவது?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மார்ட் – ஜியோ ஃபைபர் மூலமாக ஆன்லைன் வர்த்தகத்தில் (e commerce) போட்டியாளர்களை நசுக்கி ரிலையன்ஸ் ரீடெய்ல் மூலமாக கோடிக்கணக்கான சிறிய வர்த்தகர்களை சீரழித்து வருகிறது ரிலையன்ஸ். துறைமுகங்களில் எப்படி அதானி ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்துகிறாரோ, அதைப் போன்று அம்பானி சில்லறை வணிபத்தில் ஏகபோக ஆளுமையாக திகழ்கிறது.
அம்பானி பற்றி பேசும் பொழுது, சட்டத்திற்கு அப்பால் வாழ்ந்து கொண்டிருக்கும் இந் நிறுவனத்தை பற்றி பேசும் பொழுது ரிலையன்சுக்கும் பா.ஜ.க விற்கும் உள்ள அந்நியோன்யமான ‘காரிய நட்பை’ பற்றி பேசாமல் இருக்க முடியுமா? மோடி குஜராத்தில் ஆரம்பித்து, டெல்லி தர்பாரில் அமரும் வரை அவருக்கு வாரி வழங்கியது ரிலையன்ஸ் நிறுவனம்! அதற்கு பிரதிபலனாக ரிலையன்ஸ் அடிக்கும் கொள்ளைக்கேற்ப திட்டங்களை கொள்கைகளை தீட்டுபவராக மோடி செயல்படுகிறார்.
பா.ஜ.கவிற்கு அதிக நன்கொடை கொடுத்த நிறுவனம் க்விக் சப்ளை செயின் (Qwik Supply Chain) ரிலையன்சின் நிழல் நிறுவனம் தான்.
ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்யாவின் ராஸ்நெட் நிறுவனத்துடன் 13பில்லியன் டொலர் (சுமார் 1 இலட்சம் கோடி) பெறுமான ஒப்பந்தம் போட உதவியது நமது பிரதமர் மோடி தான். இதன் மூலம் பொருளாதார தடைகள் இருந்த காலத்தில் ஏகப்பட்ட லாபத்தை ருசித்தவர் அம்பானி! எல்லாம் மோடியின் அருள்!

ரிலையன்ஸ் நிறுவன பணத்தில் இயங்கும் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பின் அமெரிக்கா கிளைக்கு தலைவராக மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கரின் மகனான துருவா ஜெய்சங்கரை அம்பானி நியமிப்பதின் மூலம் இந்திய அரசின் வெளியுறவு கொள்கையே எனது பாக்கெட்டில்தான் இருக்கிறது என்று கூறுகிறார் போலும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் எரிவாயுவின் விலையை உயர்த்தி வழங்கியதின் மூலம் சுமார் 40,000 கோடிகளை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பரிசாக வழங்கியது. ரஃபேல் மூலம் மோடி அம்பானிக்கு 30,000 கோடிகளை பரிசளித்தார்
இப்படி முடைநாற்றமெடுக்கும் ஆட்சியாளர் – கோர்ப்பரேட் கள்ள உறவு இன்று கோர்ப்பரேட்டுகளே அரசியல் முடிவுகளை எடுக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது தான் இன்றுள்ள புதுமை!
ரிலையன்சின் வளர்ச்சியில் சுற்றுச் சூழல் சந்திக்கும் அவலங்களை சொல்லி மாளாது.
உலகின் மிகப்பெரிய சுத்தீகரிப்பு வளாகமான ஜாம்நகரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் நிலத்தடி நீர் மாசு படுதலும், சல்ஃபர் டை ஆக்சைடு வெளியேற்றப்படுவதால் விளை நிலங்களின் தரம் முற்றிலும் அழிக்கப்படுவதும் நீண்டகாலமாகத தொடர்கிறது.
பயிர்கள் மஞ்சளாகி கருகுவதும், கால்நடைகள் இறப்பதும் கிணற்று நீர் கருமையடைதலும் நடைபெற்று வருகின்ற அவலங்களாகும். ஆனால் இவற்றையெல்லாம் கிறீன் எனர்ஜி என்ற போர்வையில் அம்பானி மூடி மறைக்கிறார்! மோடி அரசு அதை ஆமோதிக்கவும் செய்கிறது. எல்லாமே ஒரு நாடகம் போல் அரங்கேறி வருகிறது.
வந்தரா
முகேஷ் அம்பானியின் மகன் ஆன்ந்த் அம்பானியால் கிட்டத்தட்ட 3,000 ஏக்கர் பரப்பளவில் கட்டியமைக்கப்படும் வந்தரா என்ற வனவிலங்கு சரணாலயம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எண்ணெய் சுத்தீகரிப்பாலைக்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. 200 யானைகள், 300 க்கும் அதிகமான பலவகையான புலிகள் அரிய வகை நிலநீர் வாழிகள், அரியவகை பறவைகள் ஆகியவற்றை உலகின் மூலைமுடுக்குகளில் இருந்து கடத்தி வந்து சரணாலயத்தை நிறுவி உள்ளனர்.
வனவிலங்கு சரணாலயமும், எண்ணெய்சுத்தீகரிப்பு ஆலையும் அருகருகே இருப்பதுஅபூர்வமானதா அல்லது அக்கிரமத்தின் உச்சகட்டமா?

பல்வேறு நாடுகளின் விலங்கு பாதுகாப்பு சட்டத்தையும் மீறி போலியான அனுமதிகளுடன் கடத்தி வரப்பட்டு இங்கு வந்தராவில் விலங்குகள் அடைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. ஆனால் உச்ச நீதி மன்றம் இதை விசாரிக்க ஒரு உயர்மட்ட குழுவை நியமித்து ஒதுங்கி கொண்டது. தலைசிறந்த முன்னாள் நீதிபதிகள் (நீதிபதி செல்லமேஸ்வர்) அடங்கிய உயர்மட்ட குழு அவசர அவசரமாக வந்தராவிற்கு நற்சான்று வழங்கி, விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று கருத்து கூறியது, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது! பிரதமரின் ஜாம் நகர் பயணம் எல்லா அலங்கோலங்களையும் திரைபோட்டு மறைத்துவிட்டது.
ஜாம்நகர் ஆலை, கேஜி பேசின் துரப்பணம், கடற்கரை சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய இம்மூன்று இடங்களிலும் சுற்றுச் சூழல் விதிகள் மீறப்பட்டதும், அங்கு வசித்துவந்த மக்களை வெளியேற்றப்பட்டதும் புகார்களாக நீண்டநாள்கள் தொடருகின்றன.
சுற்றுசூழல் ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் பொதுநல நோக்கர்களும் ஆய்ந்தறிந்து ஆதாரங்களுடன் திரட்டிய புகார்களை அரசோ, இந்திய நீதிமன்றங்களோ கண்டு கொள்வதில்லை. அதைவிடக் கொடுமை இத்தகைய புகார்கள் மக்களின் பார்வைக்கு வராமல் மூடி மறைப்பதில் அம்பானியின் நியூஸ் 18 நெட்ஒர்க் முன்னணியில் திகழ்கிறது.

அம்பானியும், மார்க்கோ ரூபியோவும் பேச்சு வார்த்தை நடத்துவது இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் எரி சக்தி கிடைப்பதற்காகவா? அல்லது அமெரிக்க மக்களிடையே வாக்குகளை பெறுவதற்காகவா?
எதை பற்றியும் கவலைபடாமல் தான் பதவியில் ஒட்டி கொண்டிருப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள மோடி அதற்காக ட்ரம்ப்பிடம் என்ன விலையையும் கொடுக்க தயாராய் உள்ளார் மோடி. உலகின் மிகப்பெரிய பிளாக்மெயிலரான ட்ரம்ப் மோடியை பற்றி எள்ளளவும் கவலை படாமல் தனக்கு வேண்டிய டீல் கிடைக்காவிட்டால் மோடி மங்கோலியா சென்றது, எப்ஸ்டீனை சந்தித்தது, எப்ஸ்டீன் தீவிற்கு மோடி சென்றுவந்தது போன்ற ஆதாரங்களை வெளியிடத் தயங்க மாட்டார் எனத் தெரிகிறது.
மோடியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், மோடியின் நண்பர் டிரம்பின் எதிர்காலமோ பெரிய புதிராக உள்ளது. வரும் நவம்பர் 4 இல் நடைபெறும் அமெரிக்க இடைத்தேர்தலில் ட்ரம்ப் கட்சி தோற்க நேர்ந்தால், ட்ரம்ப் அதிகாரமற்ற அதிபராக காட்சியளிப்பார். அவமானப்படும் அதிபராக ட்ரம்ப் வலம் வருவது அமெரிக்காவிற்கும் நல்லதல்ல, மோடிக்கும் நல்லதல்ல!