இஸ்ரேல் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்?

காடி ஐசன்கோட்டின் (Gadi Eisenkot) மிக வலிமையான தேர்தல் பலங்களில் ஒன்று, ஒரு எளிய, மறுக்க முடியாத உண்மை, அவர் பெஞ்சமின் நெத்தன்யாகு (Benjamin Netanyahu) அல்ல. இஸ்ரேலின் தேர்தலில் பல வாக்காளர்களுக்கு அதுவே போதுமானதாக இருக்கலாம்.

ஆனால், நெத்தன்யாகுவின் குரலாகக் கருதப்படும் ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளரான யினோன் மகல், நெத்தன்யாகுவின் பிரதான போட்டியாளரான காடி ஐசன்கோட்டைச் சாடிய போது, ‘ ‘அஸ்கெனாஸி’ (Ashkenazi) மேட்டுக்குடியினரால் நிர்வகிக்கப்படும் ‘மிஸ்ராகி – மொரோக்கன்’ (Mizrahi-Moroccan) பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒரு குரங்கு’ என்று அழைத்தார்.

ஐரோப்பிய வம்சாவழி யூதர்களுக்கும் மத்திய கிழக்கைச் சேர்ந்த யூதர்களுக்கும் இடையே நிலவி வரும் நீண்டகால வேறுபாட்டை இந்தக் கருத்துக்கள் சுட்டிக்காட்டியதால், அரசியல் மற்றும் ஊடகங்களில் பெரும் புயல் கிளம்பியது.

ஐசன்கோட்டின் இனப் பின்னணியைக் கேலி செய்யும் நோக்கம் தனக்கு இல்லையென்றும், மாறாக, திரைக்குப் பின்னால் இருந்து நிர்வகிக்கப்படும் முகவரைக் குறிக்கும் பாதாள உலகச் சொல்லைத் தான் பயன்படுத்தியதாகவும் மகல் பின்னர் கூறினார். வருதத்தம் தெரிவிப்பதில் பெயர் போனவர் அல்லாத நெத்தன்யாகு கூட இந்தக் கருத்துக்களைக் கண்டித்தார்.

இருப்பினும், இது ஐசன்கோட்டின் குடும்ப வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

பல ஆண்டுகளாக, பல மிஸ்ராஹி வாக்காளர்கள் (மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து வந்து இஸ்ரேலில் குடியேறிய யூதர்கள்) நெத்தன்யாகுவின் லிகுட் கட்சியை ஆதரித்து வருகின்றனர். மொரக்கோவில் இருந்து குடியேறியவர்களின் மகனும், இஸ்ரேலின் உயர்மட்டத் தளபதியுமான 66 வயதான ஐசன்கோட், நாட்டின் அதிகார மையங்களுக்கு வெளியேயுள்ள திபேரியாஸ் மற்றும் எய்லாட் ஆகிய இடங்களில் வளர்ந்தார். ஜெருசலேமில் உள்ள உயர்மட்டப் பின்னணியில் வளர்ந்த நெத்தன்யாகுவின் கதை இவருடைய கதைக்கு முற்றிலும் முரணாக உள்ளது.

ஐசன்கோட் தனது இனத்தைப் பற்றி அரிதாகவே குறிப்பிடுகின்றார். ஆனால், அதுவே அவரது செல்வாக்கின் ஒரு பகுதி என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஓராண்டுக்கு முன்னர் நடந்த வாக்கெடுப்பில் அவர் ஒற்றை இலக்க வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும், 2026 ஒக்ரோபர் 27 அன்று நடைபெறும் தேர்தலில் நெத்தன்யாகுவைப் பதவியில் இருந்து நீக்குவதற்கான எதிர்க்கட்சிகளின் முன்னணி வேட்பாளராக அவர் உருவெடுத்துள்ளார். இஸ்ரேலுக்கு இதுவரை ஒரு மிஸ்ராஹி குடியேறிகள் பிரதமராக இருந்ததில்லை. ஐசன்கோட் வெற்றி பெற்றால், அதுவே முதல்முறையாக இருக்கும்.

அப்படியானால் இந்த காடி ஐசன்கோட் யார்?

ஐசன்கோட் ஒன்பது குழந்தைகளில் இரண்டாமவர் மற்றும் ஐந்து குழந்தைகளின் தந்தை. அவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை இஸ்ரேல் பாதுகாப்புப் படையில் கழித்த பிறகு, அரசியலுக்கு வந்தார். அதனால் ஒப்பீட்டளவில் அவர் அரசியலுக்குப் புதியவர் ஆவார்.

அவர் 1978 இல் கோலானி படைப்பிரிவில் சேர்ந்து, 40 ஆண்டுகாலப் பணியில் படிப்படியாக உயர்ந்து, 2015 முதல் 2019 வரை பிரதமர் நெத்தன்யாகுவின் கீழ் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார்.

அண்மைக்கால இஸ்ரேல் இராணுவ வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய இராணுவ அத்தியாயங்களில் ஒன்று அவரது பதவிக்காலத்தில் இடம் பெற்றது. 2016 இல், ஹெப்ரோனில் காயமடைந்த பலஸ்தீனத் தாக்குதல்தாரியை இஸ்ரேலிய சார்ஜன்ட் எலோர் அசாரியா சுட்டுக் கொன்றார். நெத்தன்யாகு உள்ளிட்ட வலதுசாரி அரசியல்வாதிகளின் அழுத்தம் இருந்தபோதிலும், இராணுவத்தின் ஒழுக்கத்தையும் நெறிமுறைகளையும் பாதுகாப்பதாகக் கூறி, ஐசன்கோட் ஒரு இராணுவ விசாரணையையும் வழக்கையும் ஆதரித்தார்.

அவர் 2022 இல் மற்றொரு முன்னாள் தலைமை அதிகாரியான பென்னி கான்ட்ஸூடன் இணைந்து அரசியலில் நுழைந்தார். 2023 ஒக்ரோபர் 7 அன்று ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், இவர்கள் இருவரும் பிரதமர் நெத்தன்யாகுவின் அவசரகால போர் அமைச்சரவையில் இணைந்தனர். ஆனால், போருக்குப் பிந்தைய தெளிவான உத்தி இல்லாததைக் காரணம் காட்டி 2024 ஜுனில் அமைச்சரவையில் இருந்து விலகினர்.

இந்தப் போர் தொடங்கி இரண்டு மாதங்களில் ஐசன்கோட்டின் இளைய மகன் காஸாவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார். அவரது மருமகன்கள் இருவரும் போரில் கொல்லப்பட்டனர்.

ஐசன்கோட் வெற்றிபெற என்ன தேவைப்படும்?

எதிர்க்கட்சிகளின் மிக வலிமையான வேட்பாளராக ஐசன்கோட் இஸ்ரேலியப் பொதுத் தேர்தலை எதிர் கொள்கிறார்.

சமீபத்தைய கருத்துக் கணிப்புகளில், நெசெட்டில் உள்ள 120 தொகுதிகளில் நெத்தன்யாகுவின் ‘லிகுட்’ (Likud) கட்சியை விட சுமார் 20 இடங்களை ஐசன்கோட்டின் ‘யஸார்’ (Yashar) கட்சி கூடுதலாகக் கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், பிரதமராக யார் தகுதியுள்ளவர் என்ற கருத்துக் கணிப்பிலும் நெத்தன்யாகுவை விட ஐசன்கோட் முன்னணியில் உள்ளார்.

இஸ்ரேலின் ஆட்சியமைப்பின்படி, ஐசன்கோட்டின் கட்சி முதலிடம் பிடித்தாலும் கூட, அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஜனாதிபதி அவரிடம் வழங்கமாட்டார். கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிக வாய்ப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கே அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தீவிர வலதுசாரி மற்றும் அதி பழமைவாதக் கட்சிகளை உள்ளடக்கிய நெத்தன்யாகுவின் அணியோ அல்லது நெத்தன்யாகு எதிர்ப்பு அணியோ 61 இடங்கள் கொண்ட பெரும்பான்மையை அடையும் பாதையில் இல்லை என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஐசன்கோட்டின் அதிகாரப் பாதை இடது, வலது மற்றும் மையவாதக் கட்சிகள் வழியாகச் செல்கிறது. மேலும், சில சூழ்நிலைகளில் அது அரபுக் கட்சிகளையும் சார்ந்திருக்கக்கூடும். அரபுக் கட்சிகளுடான எந்தவொரு ஒத்துழைப்பையும் செல்லாததாக்குவதற்காக நெத்தன்யாகு கடந்த பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்.

61 இடங்கள் இடங்கள் இல்லாமலேயே அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பதாக ஐசன்கோட் கூறியுள்ளார். இது, அரபுக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்கும் ஒரு சிறுபான்மை அரசாங்கத்திற்கான சாத்தியக்கூறை எழுப்பியுள்ளது.

டிசம்பர் 8, 2023 அன்று ஹெர்ஸ்லியா கல்லறையில் தனது இளைய மகனின் இறுதிச் சடங்கில் ஐசன்கோட் கலந்து கொள்கிறார்

ஐசன்கோட் நெத்தன்யாகுவிலிருந்து எவ்வளவு வேறுபட்டவர்?

ஒரு முன்னாள் இராணுவத் திட்டமிடுபவரான ஐசன்கோட், குணம், பாணி மற்றும் மனோபாவத்தில் நெத்தன்யாகுவிலிருந்து வேறுபட்டவர். அவரது விளம்பரப் பதாதைகள் அவரை, ‘ஒரு போர் வீரர், ஒரு தலைவர், ஒருமைப்படுத்துபவர்’ என்று சித்தரிக்கின்றன. அவரது கட்சிக்கு ‘யஸார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஹீப்ரு மொழியில் இதன் பொருள் ‘நேராக’ என்பதாகும்.

ஒக்ரோபர் 7 தாக்குதலில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து ஒரு அரசு விசாரணை ஆணையத்தை அமைப்பதாக அவர் உறுதியளித்திருக்கிறார். நெத்தன்யாகு இதை எதிர்த்து வருகிறார்.

இருப்பினும், பாதுகாப்பைப் பொறுத்தவரை, அவர் நெத்தன்யாகுவின் பல நிலைப்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கடும் போக்காளர் ஆவார். நெத்தன்யாகுவின் போட்டியாளர்கள் அனைவரையும் போலவே, அவரும் காஸா, லெபனான் மற்றும் ஈரானில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளை ஆதரித்தார்.

ஈரானைப் பொறுத்தவரை, அது அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பது மற்றும் ஈரானின் வலையமைப்பைப் பலவீனப்படுத்துவது ஆகிய நெத்தன்யாகுவின் மைய இலக்குகளை அவர் பகிர்ந்து கொள்கிறார்.

காசா போரை நெத்தன்யாகு கையாண்ட விதம் குறித்து அவர் கடுமையாகச் சாடினார். அரசியல் காரணங்களுக்காக நெத்தன்யாகு போரை நீட்டித்து, இஸ்ரேலிய பயணக் கைதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இதன் காரணமாகவே இறுதியில் அவர் நெத்தன்யாகுவின் போர் அமைச்சரவையில் இருந்து விலகினார்.

பலஸ்தீனியர்களுக்கு அவருடைய கொள்கைகள் எப்படியிருக்கும்?

ஐசன்கோட் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர். மேலும், அவருடைய கூட்டணிக் கட்சிகளில் சில, இஸ்ரேலின் மூலோபாயத் திசையில் தீவிர மாற்றத்தை ஏற்க விரும்பாத கட்சிகளாக இருக்க வாய்ப்புள்ளது. காசாவைப் பொறுத்தவரை, ட்ரம்பின் போர் நிறுத்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலமாகவோ அல்லது ‘ஆக்கபூர்வமான’ இராணுவ நடவடிக்கைகள் என்று அவர் அழைத்ததின் மூலமாவோ, 18 மாதங்களுக்குள் ஹமாஸ் ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

நடைமுறையில், நெத்தன்யாகுவின் நோக்கங்களை இவர் ஒத்திருந்தாலும், ‘நெத்தன்யாகு பதவியில் இருக்கும் வரை ஹமாஸ் ஆட்சி நீடிக்கும்’ என ஐசன்கோட் வாதிடுகிறார்.

அரசியலில் நுழைவதற்கு முன்பு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான கட்டுப்பாடு, இரு தேசிய அரசை உருவாக்கும் என்றும், அதனை அவர் ‘சியோனிசப் பாதையின் முடிவு’ என்றும் எச்சரித்திருந்தார். இருப்பினும், ஒக்ரோபர் 7 முதல், அவர் இரு அரசுத் தீர்வை நிராகரித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில், இன்னும் அதற்காக வாதிடுபவர்கள் ‘மாயையில் இருப்பவர்கள்’ என்று கூறிய அவர், எந்தவொரு மாற்றுப் பாதையையும் முன் வைக்கவில்லை.

மேலும், மேற்குக் கரையின் சர்ச்சைக்குரிய பகுதியில் இஸ்ரேலிய அரசாங்கம் கட்டிடம் கட்டும் திட்டத்தை, அதனால் ஏற்படும் சர்வதேசப் பாதிப்புகளின் காரணமாக அதை ஒரு ‘தவறு’ என்று கூறியுள்ளார்.

ட்ரம்புடன் எப்படி அவருக்கு ஒத்துப்போகும்?

ட்ரம்ப் தனது விருப்பத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் நெத்தன்யாகுவுக்கு தனது ‘முழுமையான மற்றும் மொத்த ஆதரவை’ அளித்து, அவரை ஒரு ‘சிறந்த போர்வீரர், பிரதமர்’ என்று அழைத்தார். வேறு யாராக இருந்தாலும், அவர் ‘தவறான தலைவராக’ இருப்பார் என்று எச்சரித்தார். இதன் மூலம் அமெரிக்கா ஈரானைத் தனியாகவே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.

மற்றொரு இஸ்ரேலிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்று அரசியல் ஆய்வாளர் பராக் ரவித், ட்ரம்பிடம் கேட்டபோது, அவர் ‘ஒருவேளை செய்வேன், ஒருவேளை செய்யமாட்டேன், யார் அந்த ஆபத்தை எடுக்க விரும்புவார்கள்?’ என்று பதிலளித்தார்.

நெத்தன்யாகுவின் தீவிர வலதுசாரிக் கூட்டாளிகளான இட்டாமர் பென்-க்விர் மற்றும் பெலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் இல்லாத, ஐசன்கோட் தலைமையிலான அரசாங்கம் அநேகமாக அதிக மிதமான போக்கைக் கொண்டிருக்கும். பலஸ்தீன தேசத்திற்காக நம்பகமான பாதையை சவூதி அரேபியா இன்னும் கோரி வரும் நிலைமையில், தீவிர வலதுசாரிகளைச் சாராத ஒரு கூட்டணிக்கு அந்தத் திசையில் நகர்வது எளிதாக இருக்கும்.

(இந்தக் கட்டுரை அமெரிக்காவின் சி.என்.என் செய்திச் சேவையில் வந்ததாகும்)

Tags: