இஸ்ரேலிய தேர்தல் முடிவு தெஹ்ரானுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது என ஈரான் கூறுகிறது!

இன்று (27.10.2026) செவ்வாய்க்கிழமை நடைபெறும் இஸ்ரேலின் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு, ஈரானுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி (Esmaeil Baghaei) கூறியுள்ளார்.
26.10.2026 அன்று தெஹ்ரானில் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகாயி, மேற்கு ஆசியாவில் இஸ்ரேலின் செயல்பாடுகளை விமர்சித்தார். அப்பகுதிக்கு ‘வன்முறையையும் படுகொலையையும்’ தவிர, வேறு எதையும் அது கொண்டு வரவில்லை என்று கூறினார். பலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை இஸ்ரேல் தொடர்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் அதன் விரோதப் போக்கின் ஒரு பகுதி என்றும் அவர் கூறினார்.
தேர்தலைக் குழப்புவதற்காக ஈரான் முன்கூட்டியே தாக்குதல்களைத் தொடங்கக்கூடும் என்ற இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுக்குப் பதிலளித்த பாகாயி, ‘போலித் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இஸ்ரேல் மிகவும் கைதேர்ந்தது’ என்று எச்சரித்தார்.
ஈரான், நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நாட்டின் நிலப்பரப்பைப் பாதுகாக்க அதன் ஆயுதப் படைகள் தயங்காது என்றும் அவர் கூறினார். மேலும், ஈரான் போருக்குத் தயாரான நிலையில் இருப்பதாகவும், தற்காப்புக்கான தனது உரிமையை அது பயன்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2026 பெப்ருவரி 28 அன்று, இஸ்ரேலும் அமெரிக்காவும் தலைநகர் தெஹ்ரான் உட்பட ஈரானிய நகரங்கள் மீது கூட்டுத் தாக்குதல்களைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக, ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது. இப்பகுதியில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மற்றும் சொத்துக்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.