ஏகாதிபத்தியம் மற்றும் மேற்காசிய முடியரசுகளை எதிர்த்துப் போராடும் ஹூத்திகள்

மேற்கு ஆசியாவில் இன்னுமொரு மோதல் வெடித்துள்ளது. இம்முறை ஹூத்திகள் (Houthis) என அறியப்படும் யேமன் நாட்டு அன்சார் அல்லாஹ் (Ansar Allah – இறைவனின் ஆதரவாளர்கள்) ஆயுதக்குழுவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையில் யுத்தம் மூண்டுள்ளது. 2015 இலிருந்து 8 ஆண்டுகள் இருதரப்பினருக்கும் இடையில் யுத்தம் நிகழ்ந்து, 2022 இல் ஐ.நா தலையிட்டு யுத்தநிறுத்தம் ஏற்பட்டது.

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய மதத்தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய ஹூத்திகள் தூதுக்குழுவினர் அடங்கிய ஈரானிய விமானமொன்று, 19.07.2026 இல் ஹூத்திகளின் கட்டுப்பாட்டிலுள்ள சனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்படுகையில் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதனைத் தொடர்ந்து, ஹூத்திகள் தற்போது யுத்தநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, ஏடன் (Aden) நகரைத் தலைமையகமாகக் கொண்ட, சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட ‘யேமன் அரசு’ மற்றும் சவூதி அரேபியா படைகள் மீது தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர்.

அரேபிய தீபகற்பத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள யேமன், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர், அந்நியர்களின் தலையீடு, அரசியல் குழப்பம், பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் சிதைவடைந்து வருகின்றது. யேமன் தலைநகரமான சனா (Sanaa) அமைந்துள்ள வட மேற்கு யேமனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹூத்திகளுக்கும், ‘யேமன் அரசு’ மற்றும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான மோதல் திடீரென உருவானது இல்லை. அதனால் யேமனின் இன்றைய நெருக்கடியைப் புரிந்துகொள்ள அதன் வரலாற்றுப் பின்னணியை அறிந்துகொள்வது அவசியமாகும்.

யேமன் நாகரீகம் 7000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏறத்தாழ 3.3 கோடி மக்கள் தொகை கொண்ட யேமனில் 35 சதவீதம் ஜைதி ஷியா (Zaydi Shi’a) இஸ்லாமிய இனப்பிரிவைச் சேர்ந்த மக்கள். (ஜைதி ஷியா – ஷியா இஸ்லாத்தின் ஒரு முக்கியப் பிரிவாகும். இவர்களின் கொள்கைகள் ஷியா பிரிவைச் சேர்ந்ததாக இருந்தாலும், சட்ட நெறிமுறைகள் மற்றும் மத வழிபாடுகளில் சுன்னி இஸ்லாத்திற்கு மிக நெருக்கமானவர்களாக கருதப்படுகிறார்கள்) வடமேற்கு சடா மாகாணத்தில்தான் பெரும்பாலான ஜைதி மக்கள் வசிக்கிறார்கள். இந்த சடா மாகாணத்தில் வாழும் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஜைதி ஷியா இஸ்லாமியர்களின் பின்னணியிலேயே ஹூத்தி இயக்கம் பிறந்தது.

19 ஆம் நூற்றாண்டில், ஒட்டோமான் மற்றும் பிரித்தானிய பேரரசுகளுக்கு இடையில் யேமன் பிரிக்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர், 1918 இல் யேமன் முடியரசு நிறுவப்பட்டது. 1962 இல் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து வடக்கு யேமன், யேமன் அரபு குடியரசாக உருவாகியது. 1967 இல், பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று, மேற்கு ஆசியாவின் முதலாவதும் மற்றும் ஒரேயொரு கம்யூனிச நாடாக யேமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு (தெற்கு யேமன்) உருவானது.

1990 ஆம் ஆண்டில் வடக்கு யேமனும் தெற்கு யேமனும் ஒன்றிணைந்து ஒரே நாடாக உருவெடுத்து அலி அப்துல்லா சலே (Ali Abdullah Saleh) ஜனாதிபதியானார். எனினும், இந்த ஒற்றுமை அரசியல் அதிகாரப் போட்டிகளையும் பிராந்திய வேறுபாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவரவில்லை. ஆட்சியதிகாரம், பொருளாதார வளங்களின் பகிர்வு, பிராந்தியங்களின் உரிமைகள் ஆகியவை தொடர்பான முரண்பாடுகள் தொடர்ந்து நீடித்து வந்தன.

ஓன்றுபட்ட யேமனில் சவூதி அரேபியாவின் ஆதரவோடு சுன்னி-வஹாபிசக் கருத்துகள் பரவியபோது, தங்கள் பாரம்பரிய ஜைதி ஷியா அடையாளத்தைப் பேணுவதற்காக 1992 இல் ஹுசைன் பத்ருத்தீன் அல்-ஹூத்தி (Hussein Badreddin al-Houthi) ‘இளைய விசுவாசிகள்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். பின்னர் இந்த அமைப்பு அன்சார் அல்லாஹ் என பெயர் மாற்றம் பெற்றது.

2003 இல் அமெரிக்க-ஈராக் போரின்போது யேமன் அரசின் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டைக் கண்டித்து மக்களைத் திரட்டி ஹுசைன் போராடினார். அதனால் 2004 இல், சலே தலைமையிலான யேமன் இராணுவம் அவரை சுட்டுக் கொன்றது. அவரது நினைவாக அன்சார் அல்லாஹ் இயக்கம், ஹூத்திகள் என அழைக்கப்படுகிறார்கள். ஹுசைனுக்குப் பின்னர் அவரது சகோதரர் அப்துல் மாலிக் அல்-ஹூத்தி (Abdul-Malik al-Houthi) அன்சார் அல்லாஹ் அமைப்பின் தலைவரானார்.

21 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த சலே அரசாங்கத்தின் கீழ் ஊழல், வறுமை, அரசியல் அதிருப்தி ஆகியவை அதிகரித்தன. ஜைதிகளுக்கு அரசுப் பணிகளிலும், இராணுவத்திலும் உரிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டது. அவர்கள் வாழும் சடா மாகாணமும் யேமன் அரசால் புறக்கணிக்கப்பட்டது.

2004 முதல் 2010 வரை நடந்த 6 உள்நாட்டுப் போர்களிலும் ஹூத்திகளை யேமன், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியக் கூட்டுப் படைகளால் அழிக்க முடியவில்லை. ஹூத்திகளை அழிப்பதற்காக சவூதி அரேபியாவிற்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கும் அதேவேளையில், துருக்கி, எகிப்து மற்றும் பாகிஸ்தானின் இராணுவங்களும் சவூதி அரேபியாவில் நிலை கொண்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு அரபு உலகின் பல நாடுகளில் வெடித்த மக்கள் எழுச்சியின் ஒரு பகுதியாக யேமனிலும் சலே அரசுக்கெதிராக பெரும் போராட்டங்கள் இடம்பெற்றன. இதன் விளைவாக சலே பதவியிலிருந்து விலகினார். இந்தப் பின்னணியில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களைப் பயன்படுத்தித் தலைநகர் சனாவைக் ஹூத்திகள் கைப்பற்றினர்.

ஹூத்திகள் முன்னேறுவதைத் தடுக்க, 2015 இல் சவூதி அரேபியா தலைமையிலான 9 நாடுகள் போரைத் தொடங்கின. இருப்பினும், 8 ஆண்டு தாக்குதல் நடத்தியும் ஹூத்திகளைத் தோற்கடிக்க முடியவில்லை. இன்று யேமனின் 80 சதவீதம் மக்கள் வாழும் வடமேற்குப் பகுதிகள் மற்றும் பாப் அல்-மந்தப் (Bab al-Mandab) நீரிணையும் ஹூத்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

பழங்குடிகள் கட்டமைப்பையும் நவீன ஏவுகணைத் தொழில்நுட்பத்தையும் இணைத்த அன்சார் அல்லாஹ் இயக்கத்தை வெறும் ‘மத அடிப்படையிலான ஆயுதக் குழு’வாகப் பார்ப்பது தவறு. இன்று இக்குழு, புறக்கணிக்கப்பட்ட யேமன் மக்களின் அதிகார மையமாகவும் தற்போது மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் வீரர்கள் கொண்ட இராணுவமாகவும் உருவெடுத்துள்ளது. பலஸ்தீன ஆதரவு, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய-ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் ஹூத்திகள் உறுதியாக இருக்கிறார்கள். ஈரானின் ஆயுத உதவியும் பரிபூரண ஆதரவும் அவர்களுக்கு உண்டு.

12 வருடங்களாக நடக்கும் யேமன் உள்நாட்டுப் போரில் இதுவரை 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கின்றனர். ஏறத்தாழ 45 இலட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தும் அயல் நாடுகளுக்கு அகதிகளாகவும் சென்றுள்ளனர். என்றாவது ஒரு நாள் யேமனில் அமைதி திருப்பும் என்று இடம்பெயர்ந்த அகதிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் யுத்தம் வெடித்துள்ளது. அரசியல் அதிகாரப் பகிர்வு, மக்களின் அடிப்படை உரிமைகள், பொருளாதார மறுசீரமைப்பு, பிராந்தியங்களுக்கு இடையிலான நம்பிக்கை ஆகியவை உறுதிப்படுத்தப்படாத வரையில், யேமனில் சமாதானம் ஏற்படப் போவதில்லை.

-ஆசிரியர் தலையங்கம், வானவில் இதழ் 190

வானவில் இதழ் நூற்றுத்தொண்ணூறினை முழுமையாக வாசிப்பதற்கு:

https://manikkural.wordpress.com/…/vaanavil-190_2026.pdf

#Vaanaviltamilmagazine

Tags: