பரவும் பெருநெருப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு,கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான நிதிஒதுக்கீடுகுறைப்பு, வேலையின்மை உள்ளிட்ட வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்வைத்து ஜெர்மனியிலும் போராட்டம் வெடித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பற்றிப் பரவி வரும் போராட்டப் பெரு நெருப்பு பறைசாற்றுகிற செய்தி ஒன்றுதான். முதலாளித்துவக் கொள்கைகளால் குறிப்பாக தாராளமய, தனியார்மய பொருளாதாரக் கொள்கைகள் திவால் அடைந்து வருகிறது என்பதையே இந்த வெகுமக்கள் போராட்டம் – குறிப்பாக இளைய தலைமுறையால் முன்னெடுக்கப்படும் போராட்டம் பறைசாற்றுகின்றது.
ஆனால் முதலாளித்துவ ஊடகங்கள் இந்தப் போராட்டங்களை வன்முறை நிகழ்வுகளாக சித்தரிக்க முயல்கின்றன. இதன்மூலம் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு முட்டுக் கொடுக்க முயல்கின்றன கோர்ப்பரேட் ஊடகங்கள். ஐரோப்பியநாடுகளில் பரவி வரும் வாழ்வாதார போராட்டத்தின் வெம்மை தாங்க முடியாமல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டவர்கள் அலறத் தொடங்கியுள்ளனர்.
பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துகல், அல்பேனியா உள்ளிட்ட நாடுகளில்நடைபெற்று வரும் போராட்டங்கள் அனைத்தும் வெகுஜன மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளையே பிரதானமாக முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. பிரான்சில் துவங்கிய போராட்டம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, கல்வி நிறுவனங்களின் மோசமான நிலை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டமாக வெடித்தது. பிரான்சில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டங்களில் பாடசாலை மாணவர்களும் பெருமளவில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்சைத் தொடர்ந்து ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுக்கு பரவிய போராட்டம் ஜெர்மனி வரை நீள்கிறது. விலைவாசி உயர்வு,வீட்டு வாடகை, வேலை வாய்ப்பு ஆகிய அடிப்படைக் கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் இளைஞர்களோடு ஊதிய உயர்வுக்காகப் போராடும் தொழிலாளர்களும் இணைந்துள்ளனர்.
இந்தப் போராட்டங்களின் ஊடாக ஊழல்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அரசுகளுக்கு எதிராகவும் மக்களின் கோபம் திரும்பிள்ள்ளது. ஆனால் இந்தப்போராட்டங்களில் வன்முறை நிலவுவதாக மட்டும் முதலாளித்துவ ஊடகங்கள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன; மக்களின் வாழ்க்கை எந்தளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த ஊடகங்கள் மூடி மறைக்கின்றன.
உலகின் பல்வேறு நாடுகளில் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்கான முதலீடு குறைக்கப்பட்டு இராணுவத் தளவாடங்களுக்கான ஒதுக்கீடுஅதிகரித்து வருகிறது. கல்வி, சுகாதாரம், ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகளுக்கு மட்டுமல்ல, நாடுகளை இராணுவமயமாக்குவதற்கு எதிராகவும் இளையதலைமுறை போராடத் துவங்கியுள்ளது. இந்தப் போராட்டங்கள் வன்முறைக்கானவை அல்ல, வாழ்க்கைக்கானவை. உலகளாவிய ஊழலின் ஒரு பகுதியாக மாறியுள்ள முதலாளித்துவ ஊடகங்களால் இதை மறைத்து விட முடியாது.
-தீக்கதிர் ஆசிரியர் தலையங்கம்
2026.11.02