யார் வெளிநாட்டு உதவிகளை வாங்கியது? ஆவேச ராகுல்! அஞ்சும் மோடி!!
-ச.அருணாச்சலம்

வாக்கு திருட்டால் அதிகாரத்திற்கு வந்து, வக்கற்ற நிர்வாகத்தால் மக்கள் அதிருப்தியை பெற்றதை மறைக்க, போராடுவோர் எல்லோரையும் தேச விரோதிகள், அந்நிய நாட்டின் உதவியை பெறுவோர்கள் என்பதா? மோடியின் அஸ்திவாரமே அந்நிய நாட்டு உதவியால் போடப்பட்டது தானே? விவாதிக்கத் தயாரா? என்றால், விதிர்விதித்து ஓடுகிறார்! 1993- ல் அமெரிக்காவுக்கு மோடி ஏன் சென்றார்? எந்த நிதியில் சென்றார்?
எதிர்கட்சிகளை இந்திய எதிர்ப்பு சக்திகள், இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள், ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று யாரை சந்திக்கிறார்,யாருடன் ஆலோசிக்கிறார், யாருடைய தூண்டுதலில் என்னை அவதூறு பேசுகிறார்? என்றெல்லாம் பேசியுள்ளார் மோடி.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராகுல் காந்தி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
வைரலாக சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த ட்வீட்டில் ராகுல் காந்தி, “பிரதமர் மோடி அவர்களே, நாட்டு மக்களிடம் பொய் கூறுவதை நிறுத்துங்கள்.வெளிநாட்டு உதவியால் தான் நீங்கள் பிரதமர் ஆனீர்கள், வெளிநாட்டு உதவியால் தான் பிரதமராக பதவியில் நீடிக்கிறீர்கள். உங்களுடைய நிதி கட்டமைப்பு அனைத்தும் வெளிநாட்டினரின் ஆதரவிலும், கட்டுப்பாட்டிலும் தான் உள்ளது. வெளிநாட்டு சமூக ஊடகங்கள் முழுவதும் உங்களைத் தான் பாதுகாக்கின்றன” என காட்டமாக பதிலளித்துள்ளார்.
மேலும் மோடிக்கு பகிரங்கமான சவால் ஒன்றையும் ராகுல்காந்தி விடுத்துள்ளார். இது குறித்து வெளிப்படையான எந்த மேடையிலும், எந்த நேரத்திலும் விவாதிக்க நான் தயார், நீங்கள் தயாரா? துணிச்சல் இருந்தால் வாருங்கள் விவாதிப்போம். நீங்கள் ஒரு போதும் வர மாட்டீர்கள் , ஏனென்றால், உங்களைப் பற்றிய விவரங்கள் எனக்கு தெரியும். ஆதலால் நீங்கள் விவாதத்திற்கு வர அச்சப்படுகிறீர்கள்“ எனத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய துணிச்சலான பதிலடியைக் கண்டு பா.ஜ.க வினர் பதறுகிறார்கள். பனிரெண்டு ஆண்டுகளில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடத்த இயலாத மோடி பொது மேடையில் விவாதிப்பதா?
அமெரிக்காவில் வேறுவழியின்றி பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய நேரத்தில் மொக்கையாக பதிலளித்ததை நாம் மறந்தாலும் மோடி மறந்து விடுவாரா, என்ன?
மோடி விவாதிக்க வரமாட்டார்!

ஹெச்.டபிள்யூ நியூஸ் (HW news) ஊடகத்தின் தலைமை ஆசிரியர் சுரேஷ் நாயர் ஒரு முகநூல் பதிவினை வெளியிட்டார். அதில் அவர் அமெரிக்காவை போன்று இந்தியாவிலும் பிரதமரும் பிரதான எதிர்கட்சி தலைவரும் தத்தமது கொள்கைகள், திட்டங்கள் முன்னெடுப்புகள் குறித்து நேரடியான தொலைகாட்சி விவாதத்தை நடத்தினால் என்ன? என்ற கேட்டுள்ளார். அடுத்த ஒரு சில மணி நேரத்தில் மத்திய அரசு முகநூலின் முதலாளியான மேட்டா நிறுவனத்தை நெருக்கியதால் முகநூல் சுரேஷ் நாயரின் பதிவை உடனடியாக நீக்கி உள்ளது.
எப்பொழுதெல்லாம் ராகுல் காந்தி வெளிநாடு செல்கிறாரோ அப்பொழுதெல்லாம் பா.ஜ.க வின் ஈகோ சிஸ்டம் கதறுவது எதனால்? வெளிநாட்டு பல்கலைகழகங்களில் அவர் உரையாற்றினால் தவறா? உண்மை நிலவரங்களை பகிர்ந்து கலந்துரையாடினால் அது தேசத்திற்கு செய்யும் துரோகமாக சித்தரிக்கின்ற பா.ஜ.க மோடி வெளிநாடு சென்ற போதெல்லாம் நேரு மற்றும் முந்தைய காங்கிரஸ் அரசுகள் குறித்து அவதூறாகப் பேசியது
தேச பக்தியா? 2014 க்கு பிறகு தான் இந்தியர்கள் உலகில் தலை நிமிர்ந்து நடக்கின்றனர் என்று கூறுவது எவ்வளவு அபத்தம்?
மத்திய அரசின் கையில் உளவுத்துறையும், புலனாயவு பிரிவும், தூதரகங்களும், இன்ன பிற வசதிகளும் உள்ள போது ராகுல் காந்தி எங்கு செல்கிறார்? யாரை சந்திக்கிறார்? என்பதும் இந்திய அரசுக்கு தெரியாதா?
ராகுலின் பயணமும், அவரது சந்திப்புகளும் சட்ட விரோதம் என்றால், இந்திய அரசு கையுங்களவுமாக பிடித்து நீதியின் முன் நிறுத்துவதை யார் தடுத்தது?
ஆக , இதெல்லாம் வெறும் கட்டுகதைகள், வாடஸ் அப் மாமாக்களும் மாமிகளும் பக்தகோடிகளுக்கு அளிக்கும் பாமரக் கதைகள். இதையே மோடி திருப்பி சொல்கிறார் என்றால், இந்த நாட்டு மக்கள் இனிமேலும் இத்தகைய புரளிகளை நம்பத் தயாரில்லை.
வெளிநாடுகளில் மோடி பேசும் பொழுது இந்தியா, ‘மதர் ஆஃப் டெமாக்ரசி’ (Mother of Democracy) என்றும் தான் ‘விஸ்வ குரு’ என்றும், கதைத்து விட்டு இங்கு உள்நாட்டில் போராடும் விவசாயிகளை, மாணவர்களை, இளைஞர்களை காலித்தானிகள், தேச விரோதிகள், அராஜகவாதிகள் என்றெல்லாம் பழி சுமத்தலாமா?
படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பதை போல வெளிநாடுகளில் ஜனநாயகவாதி போல பேசுவதும், உள்நாட்டில் எதிர்ப்போரை அடக்கி ஒடுக்குவதும் மோடி அரசின் நடைமுறைகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்பொழுது திமாகி நக்சல் என்ற புதிய எதிரிகளை மோடிஜீ கண்டுபிடித்துள்ளார். ஜென் ஸீ (GEN Z) க்களை நக்சல்கள் என்று கூறாமல் கூறுகிறார்.
எதிர்கட்சிகள் இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்காத வெளிநாட்டு சக்திகளுடன் கூடிக் குலவுகிறார்கள், இந்தியாவின் நன்மதிப்பை சிதைக்க விரும்பும் சக்திகளின் ஆலோசனையில் இங்கு அரசுக்கெதிராக போராட்டங்களை எதிர்கட்சிகள் நடத்துகின்றன என்றெல்லாம் எதிர்கட்சிகளின் மேல் வசை பாடும் மோடிஜீ, தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு அடி பணிகிறார். நமது மணிப்பூர் எல்லையில் பிடிபட்ட 6 அமெரிக்க தீவிரவாதிகளை சத்தமில்லாமல் மோடி அரசு விடுவித்தது ஏன்?
அமெரிக்காவிற்கு பயந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை ஈரானிடமிருந்தும், ரஷ்யாவிடமிருந்தும் நிறுத்திக் கொண்டவர் தான் மோடி!
அமெரிக்காவில் அதானியின் மீது பதிவான வழக்கிலிருந்து விடுபட மோடி இந்திய நலன்களை இப்படி காவு கொடுத்தவர் தான் மோடி!

1993 -லேயே “அமெரிக்கன் கவுன்சில் ஆஃப் யங் பொலிட்டிக்கல் லீடர்ஸ் “ (American Council of Young Political Leaders – ACYPL) என்ற அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டவர் தான் நரேந்திர மோடி. அமெரிக்க பணத்தில் அமெரிக்கா சென்று அன்றே பயிற்சி பெற்று ஆர்.எஸ்.எஸ்சால் வளர்க்கப்பட்ட மோடியை 2001ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமலே குஜராத்தின் முதலமைச்சராக நியமித்தது பா.ஜ.க.
2002 குஜராத் தேர்தலில் வெற்றி ஈட்டிய மோடி 2003 -ல் தனது ஆசானான ACYPL அமைப்பை பா.ஜ.க டெல்லி தலைமையகத்திற்கு அழைத்து விருந்தளித்தார்.
அமெரிக்காவின் ஆசைக்கிணங்கவே இஸ்ரேல் நாட்டிற்கு குஜராத் முதல்வராக அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.
2011ல் ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption) என்ற அன்னா ஹசாரே அமைப்பிற்கு அமெரிக்காவின் ஃபோர்டு ஃபவுண்டேஷன் (Ford Foundation) உதவியதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருந்ததே! ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கெதிராக போராட்டங்களை நடத்தி, அன்று 2014ல் மோடி பிரதமராக வருவதற்கு வழி வகுத்ததே அமெரிக்க உதவியில் தானே!

எனவே மோடி தன்னைப் போலவே ராகுலையும் எதிர்கட்சிகளையும் எண்ணுவதின் விளைவே அவரது கலக்கத்திற்கு காரணமாகும்.
உண்மையில் தற்போது நடக்கும் போராட்டங்கள் இந்திய ஜனநாயகத்தையும், இந்திய அரசியல் சாசனத்தையும் காப்பாற்றவே நடத்தப்படுகிறது. இந்தியாவின் சுயாதீன அமைப்புகளான தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம், நீதிமன்றம், இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் சுதந்திரமாக, நடுநிலையாக செயல்படுவதை உறுதி செய்யத்தான் அனைவரும் நடைபெறும் போராடுகிறார்கள்!
இந்தப் போராட்டங்கள் ஆட்சியாளர்களை அச்சப்பட வைக்கிறது . எனவே அவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள, எதிர்கட்சியினரை, போராடும் மாணவர்களை அந்திய சக்திகளுக்கு உதவுவோர் என பழிக்கின்றனர்.
ராகுல் காந்தி, சோரோஸின் தூண்டுதலின் பேரில் போராட்டங்களை தூண்டுகிறார், அமெரிக்க கோர்பரேட் முதலாளி சோரோஸிடமிருந்து நிதி உதவி பெறுகிறார் என்று மோடியும் பா.ஜ.கவினரும் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் குறிப்பிடும் ராகுல் காந்தியின் உரையிலேயே அவர் “இந்திய ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்பது எங்களது உள்நாட்டு பிரச்சினை, இதில் நீங்கள் (வெளிநாட்டினர்) தலையிடுவதை நாங்கள் (எதிர்கட்சியினர்) அனுமதிக்க மாட்டோம்” என்றே கூறியுள்ளார்.

மோடிக்கு பதிலாக நான் விவாதிக்க வருகிறேன் என பா.ஜ.க எம் பி நிஷிகாந்த துபே என்பதும், ராகுல் காந்தி அவர்களே, நாடாளுமன்றம் இருக்கிறதே, அங்கே நாம் விவாதிக்கலாமே என்று நிர்மலா சீத்தாராமன் கேட்பதுவும் மோடியைக் காப்பாற்றவா?
அமைச்சர் கிரண் ரிஜிஜூவோ, விவாதம் என்பது தகுதி வாய்ந்த நபர்களுக்கிடையே தான் நடக்கும், ராகுல் காந்தியுடன் அல்ல என்று சவடால் விடுவதெல்லாம் பா.ஜ.க வினரின் பதற்றத்தையும் வாய்திறக்க முடியாமல் மோடி புழுங்குவதை காட்டுகிறது.
ஆனால், ராகுல் காந்தியோ“ நான் சவால் விடுத்து 24 மணி நேரம் கடந்து விட்டது. எதிர்கட்சிகளை தேசத்துக்கு விரோதமானவர்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். அஞ்ச வேண்டாம், அதற்கான அறிவிப்பை விரைந்து வெளியிடுங்கள். நாம் இருவரும் அந்த மேடையில் இருப்போம், மாணவர்கள், இளைஞர்கள் முன்னிலையில் விவாதிப்போம், நடுவராக மோகன் பகவத்தை நீங்கள் நியமித்தால் கூட எனக்கு ஆட்சேபனை இல்லை, நாம் விவாதிப்போம். நிதி விவகாரங்கள் சார்ந்தும், அமெரிக்க ஒப்பந்தம் குறித்தும், அதானி வழக்கு முடித்து வைக்கப்பட்டது குறித்தும், எப்ஸ்டீன் கோப்புகள் குறித்தும் வெளிப்படையாக விவாதிக்க நிறைய விஷயங்கள் உள்ளன. என் மீது ஏற்கனவே 45 அவதூறு வழக்குகளை பதிவு செய்துள்ளீர்கள், இந்த பதிவிற்கும் சேர்த்து மற்றொரு அவதூறு வழக்கு பதிவு செய்யுங்கள், அது குறித்தும் நாம் விவாதிப்போம்“ என்று தெரிவித்துள்ளார்.
இதை கண்ணுற்ற பா.ஜ.கவினருக்கும், மோடி கூட்டத்திற்கும் பிரஷ்ஷர் எகிறிவிட்டது.
எப்ஸ்டீன் – மோடி தொடர்பில் தூதுவராக செயல்பட்ட மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியை அமைச்சரவையில் இருந்து நீக்கி விட்டால் கதை கந்தலாகிவிடும் என்ற அச்சத்தில் தான் அவரை பாதுகாக்கிறார்கள்…என பேச்சுக்கள் உள்ளன.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை காப்பாற்றுவது என்பது மோடி தன்னைக் காப்பாற்றி கொள்வதற்கு தானே!
பார்ப்போம், எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..!