இஸ்ரேல் நாடாளுமன்ற துணைத் தலைவரானார் அகமது திபி

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மருத்துவரும், மூத்த பலஸ்தீனிய வம்சாவளி இஸ்ரேலிய அரசியல்வாதியுமான அகமது திபி (Ahmad Tibi), இஸ்ரேல் வலதுசாரி அரசியல் தலைமைகளின் எதிர்ப்புகளை மீறி நாடாளுமன்ற துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அரபு மறுமலர்ச்சி இயக்க (Arab Movement for Renewal – Ta’al) கட்சியின் தலைவரான அகமது திபி, இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இஸ்ரேலில் வாழும் பலஸ்தீனிய மக்களின் பிரதிநிதியாக நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் அவருக்கு இந்தத் தேர்வு முக்கிய அரசியல் மைல்கல்லாக அமைந்துள்ளது.

தனது தேர்வுக்குப் பிறகு ஊடகத்திடம் பேசிய அகமது திபி,

“11 இடங்களைக் கைப்பற்றிய கூட்டுப் பட்டியலுக்கு (Joint List) கிடைத்துள்ள நியாயமான வெற்றி இது”. சமீபத்திய ஆண்டுகளில் இஸ்ரேல் அரசில் இடம்பெற்றுள்ள தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு எதிரான வெற்றியாக இதைக் குறிப்பிட்டார்.

மேலும், “எனது தேர்வைத் தடுக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியும், தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இடாமர் பென்-கிவிரும் முயன்றனர். ஆனால், அவர்களின் பொறுப்பற்ற தூண்டுதல்களையும் மீறி அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன” என்றார்.

யார் இந்த அகமது திபி?

1958 டிசம்பர் 19 அன்று தைபே நகரில் பிறந்த அகமது திபியின் குடும்பம், 1948 ஆம் ஆண்டு நக்பா (பலஸ்தீனியர்களின் பேரழிவு) காலத்தில் ஜாஃபா நகரிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பமாகும்.

மருத்துவம் பயின்ற அவர், 1983 ஆம் ஆண்டு ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தகுதியுடன் பட்டம் பெற்றார். இருப்பினும், அவரது அரசியல் செயல்பாடுகள் மருத்துவப் பணியைப் பின்னுக்குத் தள்ளின.

அராஃபத்தின் அரசியல் ஆலோசகர்

1984 ஆம் ஆண்டு துனிசியாவின் துனிஸ் நகரில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) தலைவர் யாசர் அராஃபத்தைச் சந்தித்தார். அப்போது இஸ்ரேல் அரசு அந்த இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தியிருந்த நிலையில், இச்சந்திப்பு இஸ்ரேலிய சட்டங்களை மீறிய செயலாகக் கருதப்பட்டது.

இஸ்ரேலுக்குத் திரும்பியபோது காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டாலும், அவர் மீது அதிகாரப்பூர்வமாக எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

பின்னர், 1993 முதல் 1999 வரை யாசர் அராஃபத்தின் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் நடைபெற்ற வை ரிவர் உச்சி மாநாட்டில் (Wye River summit ) பலஸ்தீனத் தூதுக்குழுவின் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டார்.

அப்போது பெஞ்சமின் நெதன்யாகு தனது முதல் ஆட்சிக் காலத்தில் பிரதமராக இருந்தார். இந்த மாநாட்டில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் சில பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெற இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஆயுதம் ஏந்திய பலஸ்தீன எதிர்ப்புக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த பலஸ்தீன அதிகார சபை ஒப்புக்கொண்டது.

இருப்பினும், இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையிலான பிற ஒப்பந்தங்களைப் போலவே வை ரிவர் ஒப்பந்தமும் விரைவிலேயே கைவிடப்பட்டது.

நாடாளுமன்றத்தில் உரிமைக்கான போராட்டம்

1996 ஆம் ஆண்டு தால் (Ta’al) கட்சியைத் தொடங்கிய அகமது திபி, 1999 ஆம் ஆண்டு முதன்முறையாக இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தன்னை, “இஸ்ரேலியக் குடியுரிமை கொண்ட அரபு பலஸ்தீனியர்” என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் அவர், இரு நாடுகள் தீர்வையும், பலஸ்தீன அகதிகள் தங்கள் தாயகத்திற்குத் திரும்பும் உரிமையையும் ஆதரித்து வருகிறார்.

இஸ்ரேலை ஒரு ‘யூத நாடு’ என்று வரையறுப்பதைத் தொடர்ந்து எதிர்த்து வரும் அவர், அதை ‘நிறவெறி அரசு’ (Apartheid State) என்று விமர்சித்து, அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை கொண்ட நாடாக இஸ்ரேல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

அவரது வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகளும், களப்போராட்டங்களும் இஸ்ரேல் அரசின் எதிர்ப்பையும், வலதுசாரி தீவிரவாதிகளின் வன்முறைத் தாக்குதல்களையும் தொடர்ந்து எதிர்கொள்ளச் செய்துள்ளன.

2000 செப்டம்பரில் நடைபெற்ற இரண்டாவது இன்திபாதா (Intifada) போராட்டத்தின்போது, அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த அப்போதைய இஸ்ரேலிய அரசியல் தலைவர் ஏரியல் ஷரோனை எதிர்கொண்டபோது, அகமது திபியின் வலது கை முறிக்கப்பட்டது. ஏரியல் ஷரோன் அடுத்த ஆண்டு இஸ்ரேல் பிரதமரானார்.

2002 ஆம் ஆண்டு இஸ்ரேலிய இராணுவம் ஜெனின் அகதிகள் முகாமில் நடத்திய இராணுவ நடவடிக்கையின்போது அங்கு சென்ற அகமது திபி, இராணுவ வீரர்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அவரது நாடாளுமன்றச் சட்டப் பாதுகாப்பை (Parliamentary Immunity) இஸ்ரேல் அரசு நீக்கியது.

நாடாளுமன்றத்தில் தனது அதிரடியான எதிர்ப்புப் போராட்டங்களுக்காகவும் அவர் அறியப்படுகிறார்.

2016 ஆம் ஆண்டு ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் தொழுகைக்கான அழைப்பை (பாங்கு) ஒலிபரப்பத் தடை விதிக்கும் மசோதாவை இஸ்ரேல் கொண்டுவர முயன்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றக் கூட்டரங்கிற்குள்ளேயே இஸ்லாமியத் தொழுகை அழைப்பை ஒலிக்கச் செய்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார் அகமது திபி.

Tags: