“யால்டா 2.0”? மூன்று வல்லரசுத் தலைவர்கள் சந்திப்பு உணர்த்துவது என்ன?

1945 பெப்ரவரியில் சோவியத் ஒன்றியத்தின் யால்டாவில் (Yalta) நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர்.

சீன, ரஷ்ய, அமெரிக்க ஜனாதிபதிகள் முதன்முறையாக ஒன்றாக அமர்ந்து பேசிய ஷென்சென் சந்திப்பை உலக நாடுகள் எதிர்பார்ப்போடும், கூடவே ஆழ்ந்த பதற்றத்தோடும் உற்றுநோக்கின. நட்பு நாடுகளின் கருத்தைக் கேட்காமலேயே முக்கியப் புவிசார் அரசியல் பிரச்சனைகளில் இந்த மூன்று தலைவர்களும் முடிவெடுத்துவிடுவார்களோ என்ற கவலை பல நாட்டுத் தலைநகரங்களில் எழுந்துள்ளதாக ‘புளூம்பெர்க்’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

நினைவுக்கு வரும் யால்டா

இரண்டாம் உலகப் போரின் இறுதியில், 1945 பெப்ரவரியில் சோவியத் ஒன்றியத்தின் கிரிமியாவில் உள்ள யால்டாவில், அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் சந்தித்துப் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் எதிர்காலத்தைத் தீர்மானித்தனர். ஷென்சென் சந்திப்பின் படங்கள் அந்த யால்டா மாநாட்டை நினைவூட்டுவதாக ‘புளூம்பெர்க்’ குறிப்பிட்டது. ஆனால், யால்டாவில் சந்தித்தவர்கள் போர்க்கால நட்பு நாடுகள்; இன்றைய மூன்று நாடுகளோ ஒன்றுக்கொன்று போட்டியாளர்கள் என்பதையும் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒருமுனை உலக ஒழுங்கு முடிவுக்கு வருவதன் அடையாளமாக இந்தச் சந்திப்பைக் காணும் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, அதன் இடத்தில் வரவிருப்பது மேலும் நிச்சயமற்ற, நிலையற்ற உலகமாக இருக்கலாம் என்றும் முதலாளித்துவ நோக்கர்களின் கருத்தை வெளியிட்டுள்ளது.

உக்ரைனின் அச்சம்

இந்தச் சந்திப்பு, செல்வாக்கு மண்டலங்களை மறுபங்கீடு செய்யும் “யால்டா 2, 3, 4” ஆக மாறிவிடக் கூடாது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரித்தார். நேட்டோ உறுப்புரிமைக்கு ஈடாக டான்பாஸ் பகுதியை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்கலாம் என்று அமெரிக்கத்தூதர்கள் யோசனை தெரிவித்ததாகவும், ஆனால் உக்ரைன் தனது நிலத்திலிருந்து பின்வாங்காது என்றும் அவர் கூறினார்.

ஐரோப்பா: “தயவுசெய்து, அதிர்ச்சிகள் வேண்டாம்”

ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் இணைந்தே நிற்க வேண்டும் என ட்ரம்ப்பிடம் வலியுறுத்திய ஜெர்மனி பிரதமர் (சான்சலர்) ஃபிரெட்ரிக் மெர்ஸ், “தயவுசெய்து, அதிர்ச்சிகள் வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார். ரஷ்யாவின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி “புதிய, நவீன யால்டா” வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது, ஐரோப்பாவுக்கு அது ஏற்கெனவே நேட்டோ வடிவில் இருக்கிறது என்று மெர்ஸ் பதிலளித்தார். உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இல்லாமல், சீனா நடத்தும் மேசையில் உக்ரைன் போர் பற்றிப் பேசினால், ஏற்கெனவே மோசமடைந்துள்ள சீன – ஐரோப்பிய உறவை மேலும் பாதிக்கும் என்று ஐரோப்பியக் கொள்கை ஆய்வாளர்கள் எச்சரித்தனர். ஆனால் அப்படி பேசப்படவில்லை என்பது பின்னர் தெரிந்துவிட்டது. யால்டா ஒப்பீட்டை நிராகரித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், உலக ஒழுங்கு என்பது திணிக்கப்படும் முடிவுகளின் மீது அல்ல, பரஸ்பர மரியாதையின் மீதே அமைய வேண்டும் என்றார்.

ஆசியா: ஜப்பான், தாய்வான், அவுஸ்திரேலியா

அமெரிக்காவுடன் கூட்டணியில் இருந்தும், தங்கள் தலைக்கு மேலே பிராந்தியப் பாதுகாப்பு முடிவுகள் எடுக்கப்படுமோ என்ற அச்சம் ஜப்பானுக்கு உள்ளது. இதனால், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி ட்ரம்ப்புடன் தனிப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா விட்டுக்கொடுத்தால், அது தனது பாதுகாப்பைப் பலவீனப்படுத்தும் சமிக்ஞையாகிவிடும் என்று தாய்வான் கவலை கொண்டுள்ளது. தாய்வானுக்கு ஆயுத விற்பனை நிறுத்தம், ஜப்பானுக்கு ரஷ்ய – சீன நெருக்கம், தென்கொரியாவுக்கு வடகொரிய அணு ஆயுதப் பெருக்கம், பிலிப்பைன்சுக்குத் தென்சீனக் கடல் சர்ச்சை என ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனிக் கவலைகள் உள்ளன என்று ஆய்வாளர் ரிக் ஹோனே குறிப்பிட்டார். “பேச்சுவார்த்தை நல்ல விஷயம்” என்று வரவேற்ற அவுஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், ஈரானில் பதற்றம் தணிய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தியாவின் கவனம்

இந்தச் சந்திப்பை இந்தியாவும் உன்னிப்பாகக் கவனித்தது. உக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்பட்டால், ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக 2025 ஓகஸ்டில் இந்தியப் பொருட்களின் மீது அமெரிக்கா விதித்த 25 சதவீதக் கூடுதல் வரி போன்ற தண்டனை நடவடிக்கைகள் கைவிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அமெரிக்க – சீன வர்த்தகச் சமரசம் 2027-க்கும் நீடிக்குமா, குவாட் அமைப்பின் மீதான ட்ரம்ப்பின் ஆர்வம் குறைந்துள்ளதா என்பதையும் இந்தியா கவனித்து வருகிறது. உலகத் தெற்கு நாடுகள் இந்தப் பேச்சுவார்த்தையை வரவேற்றாலும், போர், வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம் ஆகியவற்றில் உறுதியான பலன்கள் கிடைக்குமா என்பதில் ஐயத்துடனேயே காத்திருக்கின்றன.

ஆய்வாளர்கள் பார்வை

உள்நாட்டில் இடைக்காலத் தேர்தல் பின்னடைவு, ஈரான் போர் ஆகியவற்றால் அரசியல் ரீதியாகப் பலவீனமடைந்துள்ள ட்ரம்ப், உள்நாட்டில் காட்டுவதற்கான “வெற்றி”யைத் தேடுவதாகவும், அவர் வந்திருப்பது பெருமளவில் புகைப்பட வாய்ப்புக்காகத்தான் என்றும் டப்ளின் பல்கலைக்கழகக் கல்லூரிப் பேராசிரியர் ஸ்காட் லூகாஸ் கருத்துத் தெரிவித்தார். உலகத் தலைவர்களைக் கூட்டும் வல்லமை தனக்கு உண்டு என்பதைக் காட்டுவதே ஜி ஜின்பிங்கின் நோக்கம்; சீனாவுக்கு வேண்டியது உள்ளடக்கத்தைவிடக் காட்சிதான் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் ஆலோசகர் மெலனி ஹார்ட் கூறிக் கொண்டார். அதேநேரம், “ஆசியாவைச் சீனாவின் மேலாதிக்கத்துக்கு விட்டுக்கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதற்கு எந்தச் சான்றும் இல்லை; யால்டா தவறான ஒப்பீடு” என்று கார்னகி அமைப்பின் துணைத் தலைவர் இவான் ஃபைகன்பாம் கூறினார். உக்ரைனின் தலைவிதியை வல்லரசுகள் தீர்மானிக்கும் யால்டா பாணி ஏற்பாட்டை உருவாக்குவதே இந்த முத்தரப்புச் சந்திப்பை முன்மொழிந்த புட்டினின் நோக்கம் என்று உக்ரைனுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஜோன் ஹெர்ப்ஸ்ட் விமர்சித்தார். எந்தவித அசம்பாவிதமும் இல்லாத ஒரு கைகுலுக்கலே வெற்றிதான் என்றார் ஹின்ரிச் அறக்கட்டளையின் வர்த்தகக் கொள்கைத் தலைவர் டெபோரா எல்ம்ஸ்.

இறுதியில் வெளியான அமைதிப் பிரகடனம் உக்ரைன், ஈரான் போர்கள் குறித்து மௌனம் சாதித்திருந்தாலும், அமெரிக்காவே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்ற ஒற்றை ஆதிக்க நிலை சற்று பலவீனம் அடைகிறது என்பதே இச்சந்திப்பின் உள்ளடக்கம்!

Tags: