இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து

Abhijit Banerjee, one of the three winners of the 2019 Nobel Prize in Economics, waits to speak at a news conference at the Massachusetts Institute of Technology (MIT) in Cambridge, Massachusetts, U.S., October 14, 2019

ந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது. பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கிறது என்பதை அரசு உணர்வதும் அதிகரித்து வருகிறது என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி (Abhijit Banerjee) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி அவரின் மனைவி எஸ்தர் டூப்ளோ (Esther Duflo) ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. சிறந்த பொருளாதார வல்லுநரான அபிஜித் பானர்ஜி, போர்டு பவுண்டேஷன் (Ford Foundation International) சார்பில் செயல்படும் மசசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் [Massachusetts Institute of Technology (MIT)] பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மசசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் 14.10.2019 இல் நிருபர்களுக்கு அபிஜித் பானர்ஜி அளித்த பேட்டியில் கூறியதாவது:

”இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் சென்று வருகிறது. பொருளாதாரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதை அரசு உணர்வதும் அதிகரித்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் பொருளாதாரம் மோசமாகத்தான் இருக்கிறது.

எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக எவ்வாறு பணியாற்றப் போகிறார்கள் என்பதைக் காட்டிலும், தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே முக்கியம். அதைப்பற்றித்தான் என்னால் கூற முடியும்.

தேசிய மாதிரி சர்வே ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் மக்களின் சராசரி நுகர்வு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. அதில் நுகர்வு 2014-15 மற்றும் 2017-18-ம் ஆண்டுகளில் சராசரி நுகர்வு குறைந்துள்ளது. இதுபோன்ற நுகர்வு குறையும் சம்பவம் மிக மிக நீண்டகாலத்துக்குப் பின் நடக்கிறது. இது நமக்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

indian-economy-doing-very-badly-abhijit-banerjee
மசசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் நேற்று நிருபர்களுக்கு அபிஜித் பானர்ஜி, அவரின் மனைவி எஸ்தர் பேட்டி அளித்த காட்சி

எந்த புள்ளிவிவரங்கள் சரியானது என்பது குறித்து இந்தியாவில் பலவிதமான சண்டைகள் நடந்து வருகின்றன. ஆனால் அனைத்து புள்ளிவிவரங்கள் குறித்தும் இந்திய அரசு ஒரு கணிப்பு வைத்திருக்கிறது.

தனக்கு எந்த புள்ளிவிவரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறதோ அது தவறான புள்ளிவிவரங்கள் என்று கூறுகிறது. அப்படி எந்த புள்ளிவிவரங்களும் இல்லை.

ஆனால், பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கிறது என்பதை மட்டும் இந்திய அரசு வேகமாக உணர்ந்து வருகிறது. ஆனால், அரசு உணரும் வேகத்தைக் காட்டிலும் மிகவேகமாக பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்கிறது.

எந்த அளவு வேகம் என்பது நமக்குத் தெரியாது. புள்ளிவிவரங்கள் குறித்து ஏராளமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், பொருளதாரச் சரிவு வேகமாக இருக்கிறது.

உண்மையில் என்ன செய்யப்போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. இந்திய அரசு மிகப்பெரிய நிதிப் பற்றாக்குறையில் இருக்கிறது. ஆனால், தற்போது பட்ஜெட் இலக்குகளையும், நிதி இலக்குகளையும் அடைய அறிவுறுத்தி முயற்சித்து வருகிறது.

என்னைப் பொறுத்தவரை பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கும்போது, நிதி நிலைத்தன்மை குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை, தேவையைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். இப்போது இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பிரச்சினை தேவை (demand) குறைந்து வருவதுதான்”.

இவ்வாறு அபிஜித் பானர்ஜி தெரிவித்தார்.

-இந்து தமிழ்
2019.10.15

Tags: