விடுதலைப் போரில் தொழிலாளி வர்க்கம்

ந்தியத் திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழாவினை இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.  இந்த 75 வது சுதந்திர தினத்தினை மிகவும் எழுச்சியோடும், சுதந்திரத்தின் மாண்புகளை பாதுகாக்க வேண்டும் என்கிற உறுதியோடும் கொண்டாடும் முழு உரிமை இந்திய தொழிலாளிகளுக்கும், விவசாயத் தொழிலாளிகளுக்கும், ஒட்டு மொத்த இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கும் உண்டு என்றால் அது மிகை ஆகாது. சுதந்திரப்  போரில் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தீவிரமான பங்கினையும், இந்திய நாடு சுதந்திரத்திற்குப் பின் எப்படி இருக்க வேண்டும் என்று தங்களது ஒன்றுபட்ட இயக்கங்களால் தெளிவுபட காட்டியதையும், இந்திய சுதந்திர வரலாற்றினை எழுதியவர்கள் திட்டமிட்டு மறைத்துள்ளனர். பிற்காலத்தில், பல தொழிற்சங்கத் தலைவர்களும், இடதுசாரி சிந்தனையாளர்களும் தான் அதை வெளிச்சத்திற்கு கொண்டு  வந்துள்ளனர். இன்றைக்கு இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் புதிய சவால்களும், இந்திய சுதந்திரத்தின் மாண்புகளை போற்றிப் பாதுகாத்து, பின் வரும் சந்ததியினருக்கு தர வேண்டிய பொறுப்புகளும் ஒரு சேர வந்துள்ளன. 

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோன்மை
இன்றைக்கு உள்ள இந்திய நிலப்பரப்பில், பண்டைய காலம் முதல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் வரை, பல்வேறு மன்னர்கள், ராஜவம்சங்கள் ஆட்சி புரிந்து வந்துள்ளன. மகாஜன் பாட் என்கிற அரசு முதல் துவங்கி, நந்த வம்சம், மௌரிய வம்சம், சாளுக்கிய வம்சம், பாண்டியப் பேரரசு, சோழ, சேர, பல்லவப் பேரரசுகள், முகலாயப் பேரரசு, கில்ஜி வம்சம், அடிமை வம்சம் என பல்வேறு விதமான ஆட்சிகளை இந்தியத் துணைக் கண்டம் பார்த்திருக்கிறது. ஆனால் இந்த அனைத்து ஆட்சிகளை விடவும் மிகக் கொடுமையானது பிரிட்டிஷ் ஆட்சி. மற்ற பேரரசுகளெல்லாம் அந்தந்த மக்களிடம் பெற்ற வரியை, மற்ற வகைகளில் வசூல் செய்த பணத்தை, உணவுப் பொருட்களை வேறு எங்கும் கொண்டு செல்லவில்லை. தங்களது கஜானாக்களில் வைத்திருந்து, அதை மக்களுக்காகவோ, தங்களது ஆடம்பர வாழ்க்கைகளுக்காகவோ, படை மற்றும் போர் வீரர்களை பராமரிப்பதற்காகவோ பயன்படுத்தினார்கள். ஆனால் பிரிட்டிஷ் அரசு நமது மக்களின் உழைப்பில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களை, நமது நாட்டின் வளங்களை, நமது மக்களிடம் மிகக் கொடூரமான வழிகளில் வசூலித்த வரிப் பணத்தை, இங்கிருந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு கொண்டு சென்றது. இந்த முக்கியமான அம்சத்தை நாம் புரிந்து கொண்டோமேயானால், இந்திய நாட்டின் விவசாயிகளும், கைவினைத் தொழிலாளர்களும், சிறு சிறு பட்டறை தொழில்களும் எவ்வாறு பிரிட்டிஷாரால் நசுக்கப்பட்டன என்பது தெளிவாக விளங்கும்.  

அதுமட்டுமல்லாமல், பிரிட்டனில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே இந்தியா போன்ற காலனி நாடுகளில் விற்பனை செய்யவும் அவர்கள் சட்டங்களை இயற்றியிருந்தார்கள். ஆக, கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை கபளீகரம் செய்து வந்த காலத்திலும் சரி, பின்னர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேரடி ஆட்சியிலும் சரி, இந்திய விவசாயம் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டது. இந்தியாவின் மரபுசார் உணவுப் பொருட்கள் பயிரிடுவதை தடை செய்த பிரிட்டிஷ் அரசு, கோதுமை மற்றும் பஞ்சு உற்பத்தியை மட்டுமே செய்ய வேண்டும் என வற்புறுத்தியது. பிரிட்டிஷ் படை வீரர்களுக்கு உணவளிக்க கோதுமையும், இங்கிலாந்தில் செயல்படும் ஜவுளி மில்களுக்கு தேவையான பஞ்சினை அனுப்புவதற்கும் இந்திய விவசாயம் திசை திருப்பப்பட்டது.

இந்தியாவின் ஜவுளி தொழில்கள் முதல் பாரம்பரியத் தொழில்கள் அனைத்தும் நசுக்கப்பட்டன. மஸ்லின் துணி நெய்யும் தொழிலாளர்களின் கட்டை விரல்கள் துண்டிக்கப்பட்ட வரலாற்றுக் கொடுமைகளை நாம் படித்திருக்கிறோம். இத்தகைய அடக்குமுறைகளை எதிர்த்து முதலாம் சுதந்திரப் போர் அல்லது சிப்பாய் கலகம் என்று சொல்லக் கூடிய 1857 போராட்டத்திற்கு முன்பே இந்திய விவசாயிகள் ஆங்காங்கே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக பிரிட்டிஷ் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடத் துவங்கியிருந்தார்கள். அதன் நீட்சியாகத்தான் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான 1857 ஆம் ஆண்டின் மிகப் பெரிய எழுச்சியை நாம் பார்க்க வேண்டும். ஜான்சி ராணி, திப்பு சுல்தான், மகாராஜா ரஞ்சித்சிங் போன்ற சில அரசர்கள் 1857 இல் நடைபெற்ற போராட்டத்தின் கதாநாயகர்களாக சித்தரிக்கப் பட்டாலும் (அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது), அந்தப் போராட்டக் கனல் விவசாயிகளிடமிருந்தும், விவசாயத் தொழிலாளர்களிடமிருந்தும் தான் பெறப்பட்டது என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, வங்காளத்தில் இண்டிகோ என்கிற பயிரினை (நீல நிற சாயம் தயாரிக்க பயன்படும்) சாகுபடி செய்வதற்கு கட்டாயப்படுத்துவதைக் கண்டித்து விவசாயிகள் நடத்திய போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக விவசாயிகள் முன்னின்று நடத்திய போராட்டம் இது என்பதை குறித்துக் கொள்ள வேண்டும்.

‘தொழிலாளி’ என்கிற வர்க்கத்தின் தோற்றம்…
 19ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிக்கு பின்னர் தான் ரயில்வே, சணல் தொழிற்சாலை, பஞ்சு நூற்பாலை, நிலக்கரி சுரங்கப்பணி, தபால் நிலையங்கள், தேயிலை உற்பத்தி தொழிற்சாலை என பல்வேறு தொழில்கள் துவங்கப்பட்டன. இதே காலகட்டத்தில் தான் விவசாய உற்பத்தியை கிட்டத்தட்ட சீரழித்து வைத்திருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். கைவினைத் தொழில்கள் அனைத்தையும் அழித்தொழித்து விட்டது பிரிட்டிஷ் அரசு. வறுமையும் பஞ்சமும் கிராமப்புறங்களில் தலைவிரித்து ஆடும் நிலையில், இத்தகைய தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக, கொத்தடிமைகளாக, குறிப்பாக பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். அவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களில் 40% பேர் பெண்கள் என வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. இந்தியாவில் நில பிரபுத்துவமும், ஜமீன்தார் முறைமையும் தொடர்ந்து கொண்டே இருக்கும் சமயத்தில் தான், புதிதாக தொழிலாளி வர்க்கமும் உருவானது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஆரம்ப கட்டத்தில், தொழிலாளர்கள் தங்களது பணி நிலைமைகளில் முன்னேற்றம் கோரி, வேலை நேரத்தைக் குறைக்கக் கோரி தான் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. அந்த காலகட்டத்தில் தொழிற்சங்கங்களின் உருவாக்கமும் கூட ஒரு சேம நல அமைப்பாகத் தான் இருந்தன. அதுவும் தொழிலாளர்கள் அல்லாத – கருணையுள்ளம் கொண்டவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டதாக இருந்தது. ஆனால் வெகு விரைவாகவே தொழிலாளர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட ஆரம்பித்துவிட்டார்கள்.

விடுதலைப் போரில் தொழிலாளர்களின் முதல் எழுச்சி
பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராக முதன் முதலில் தொழிலாளி வர்க்கம், 1905 ஆம் ஆண்டு கர்சன் (பிரபு) வங்கத்தை இரண்டாகப் பிரித்து உத்தரவிட்டதை எதிர்த்து வங்கதேசத்து தொழிலாளர்கள் மற்றும் மகாராஷ்ரா தொழிலாளர்களும் போராடத்துவங்கினர். லாலா லஜபதி ராய், பாலா கங்காதர திலகர், பிபின் சந்திர பால் ஆகிய மூவரின் தலைமையில் நடைபெற்ற பிரிட்டிஷார் பொருட்களை பகிஷ்கரிப்போம் என்கிற முழக்கத்தோடு சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த இயக்கங்களில் தொழிலாளர் இயக்கங்களின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்திய தொழிலாளர் வர்க்கம் போராடத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக ‘Printers’ Union’ (பிரிண்டர்ஸ் யூனியன்) என்கிற பெயரில் அச்சகத் தொழிலாளர்கள் துவங்கியதோடு மட்டுமல்லாமல், மாபெரும் வேலை நிறுத்தத்தையும் மேற்கொண்டனர். 1906ஆம் வருடம் ஆகஸ்ட் முதல் 1907 டிசம்பர் வரை இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறிப்பிடத்தக்கது. வங்காளப் பகுதியில் இருந்த கிழக்கிந்திய இரயில்வே தொழிற்சங்கம், மொகல்சராய், அலகாபாத், கான்பூர், அம்பாலா, அசன்சோல் ஆகிய இடங்களில் இரயில்வே தொழிலாளர்கள் பிரிட்டிஷாரின் அடக்குமுறைகளை எதிர்த்து வேலைநிறுத்தம், ஹர்த்தால் போன்ற இயக்கங்களை முன்னெடுத்தனர். இவர்களோடு சேர்ந்து சணல் மில் தொழிலாளர்களும் இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தொழிலாளர்களின் எழுச்சி…
தமிழகத்தில் ஒரே காலத்தில் தொழிலாளர்களின் எழுச்சி என்பது மிகவும் தீவிரமாக நடைபெற்றதைக் காண முடிந்தது. தூத்துக்குடியில் இயங்கி வந்த, பிரிட்டிஷாரின் “கோரல் காட்டன் மில்” தொழிலாளர்களின் எழுச்சி மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. இந்த மில்லின் சென்னை பிரிவிலும் வேலைநிறுத்தம் தொற்றிக் கொண்டது. கோரல் மில் தொழிலாளர்களின் எழுச்சியை ஒடுக்குவதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மேற்கொண்ட மிகக் கடுமையான அடக்குமுறைகளுக்கு எதிராக, கோரல் மில் தொழிலாளர்களோடு முனிசிபல் தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டிரக் ஓட்டுனர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் களம் கண்டனர். அன்றைக்கே தமிழகத்தில் தொழிற்சங்கங்களின் ஒற்றுமை என்பது கட்டப்பட்டது என்பதை கவனப்படுத்திக் கொள்ள வேண்டும்.  இதற்கு பின்னர் இந்தியா முழுவதும் நடைபெற்ற அனைத்து சுதேசி இயக்கங்களிலும் தொழிலாளர்களோடு, மாணவர்களும், விவசாயிகளும், தோழமை தொழிற்சங்கங்களும் இணைந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக களம் கண்டனர். 1917 இல் ரஷ்யப் புரட்சி நடைபெறுவதற்கு முன்பே, இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் அரசியல் போராட்டங்களில் தீவிரமான பங்கேற்பினை செய்து வந்ததை நாம்மால் காண முடிகிறது.

ரஷ்யப் புரட்சிக்குப் பின் இந்திய தொழிற்சங்க வரலாறு…
ரஷ்யாவில் தொழிலாளர்களின் மற்றும் விவசாயிகளின் எழுச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமகாலத்தில், இங்கே பிபின் சந்திர பால் கைது செய்யப்படுகிறார். 14 செப்டம்பர் 1907 அன்று கல்கத்தாவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை “நவசக்தி” இப்படி எழுதியது: “இப்பொழுது ரஷ்யாவில் உள்ள தொழிலாளர்கள் புதிய உலகத்தை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தொழிலாளி வர்க்கம் அவர்களது அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளும். இந்தக் கணிப்பு உண்மையானது. மும்பையிலும், நாக்பூர், சோலாப்பூர் ஆகிய தொழிற் மையங்களில் 24 ஜூன் 1908 முதல் மிகப் பெரிய போராட்டம் தொழிலாளர்களால் தெருக்களில் தொடர் போராட்டமாக வெடித்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 18 ஜூலை 1908 அன்று போலீசாரும் இராணுவத்தினரும் போராடும் தொழிலாளர்களைத் தாக்கத் துவங்கினார்கள். அன்று நடைபெற்ற வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மறுநாள் 60 மில்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள், 60,000 க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தத்தை செய்தனர். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்த பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார். இதை அறிந்த லெனின் மும்பை போராட்டத்தை வாழ்த்தி செய்திகளை அனுப்புகிறார். மும்பை நகரத் தெருக்கள் தொழிலாளர்களும், பத்திரிக்கையாளர்களும், அரசியல்வாதிகளும் தெருக்களில் நிறைந்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இந்த எழுச்சியான போராட்டத்தில் தொழிலாளர்கள் தலைமை தாங்கி போரிடுகிறார்கள். ரஷ்யாவைப் போல் இந்தியாவிலும் பிரிட்டிஷ் ஆட்சி தொழிலாளர்களின் எழுச்சியால் தூக்கி எறியப்படும் என்று வாழ்த்து செய்தியில் கூறியிருந்தார் தோழர் லெனின்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சி…
அமிர்தசரஸில் 1919 ஆம் வருடம் நடைபெற்ற ஜாலியன் வாலா பாக் என்ற இடத்தில் ஜெனரல் டயர் நடத்திய படுகொலையைக் கண்டித்து இந்திய நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் தெருக்களில் வந்திறங்கி தொடர் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களும் பங்கு கொண்டது என்பது தொழிலாளிக்கும் விவசாயிகளுக்குமான நெருக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குப்பின் தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்து பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தத் துவங்கினார்கள். 1923 ஆம் வருடம் “சுமித் சர்க்கார்” என்கிற பத்திரிகை இந்த எழுச்சி குறித்து விரிவான கட்டுரையை வெளியிட்டது.

Bal Gangadhar Tilak

ஏஐடியுசியின் தோற்றம்
பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilak) 31.10.1920 இல் ஏஐடியுசி என்கிற தொழிற்சங்க மையத்தை அகில இந்திய அளவில் துவக்கினார். துவக்கத்திற்கு பின் பால கங்காதர திலகர் மறைவெய்தினார். பின்னர் லாலா லஜபதி ராய் அவர்கள் ஏஐடியுசியை வழிநடத்தினார். “இராணுவ அடக்குமுறையும் எதேச்சதிகாரமும் முதலாளித்துவத்தின் ஓட்டிப் பிறந்த பிள்ளைகள். இவற்றை அடியோடு அழித்தொழிப்பதற்கு இந்தியா முழுமையும் தொழிலாளர்கள் மத, மொழி, இன, கலாச்சார வேற்றுமைகளைக் கடந்து ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அறைகூவல் விடப்பட்டது. தொழிலாளி வர்க்க உணர்வு குறித்து இந்தியா முழுவதும் விவாதிக்கப்பட்டது. இயக்கம் என இந்திய தொழிலாளர் வர்க்கம் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்கள் சிவப்பு எழுத்துக்களால் பொரிக்கப்பட வேண்டியவை. நாடு முழுவதும் செங்கொடியை சுமந்து, தொழிலாளி என்கிற வர்க்க சிந்தனையோடு தெருக்களில் இறங்கி பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராடியதானால் தான் இந்திய சுதந்திரக் கனவு நிதர்சனமாகியது என்பது தான் உண்மை. இதன் முத்தாய்ப்பாகத் தான் கப்பற்படை எழுச்சியின் தீவிரத்தை இந்தியா கண்டது. ஏஐடியுசி உருவானபின் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தொழிலாளர்களின் விவசாயிகளின் பங்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. 1921இல் வேல்ஸ் பிரபு வருகையை எதிர்த்த மாபெரும் முழு அடைப்பு சென்னை மற்றும் கல்கத்தாவில் எழுச்சியாக நடைபெற்றது. சென்னையில் பி&சி மில் தொழிலாளர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. 1923 இல் தோழர் சிங்காரவேலு மே தின சூளுரையை முழங்கினார். காந்தி அறைகூவல் விடுத்த ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரக இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், பூரண சுதந்திர இயக்கம் என இந்திய தொழிலாளர் வர்க்கம் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்கள் சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. நாடு முழுவதும் செங்கோடியை சுமந்து, தொழிலாளி என்கிற வர்க்க சிந்தனையோடு தெருக்களில் இறங்கி பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராடியதானால் தான் இந்திய சுதந்திரக் கனவு நிதர்சனமாகியது என்பது தான் உண்மை.

-தீக்கதிர்

Tags: