இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான ‘தாமரைக் கோபுரம்’

லங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான ‘தாமரை கோபுரத்தின்’ செயற்பாடுகள் செப்ரெம்பர் 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதற்கமைய கட்டணங்களை செலுத்தி சகலருக்கும் தாமரை கோபுரத்திற்குள் பிரவேசித்து அதனை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எம்.பி. ரத்நாயக்க தெரிவித்தார்.

வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கட்டணங்களை செலுத்தி பெற்றுக் கொள்ளும் நுழைவுச் சீட்டு மூலம் சகல பகுதிகளுக்கும் சென்று பார்வையிட முடியும். பிரவேச அட்டைக்கான கட்டணங்கள் 500 மற்றும் 2000 ரூபாவாகும்.

500 ரூபாய் செலுத்துபவர்கள் குழுக்களாக அழைத்துச் செல்லப்படுவார்கள். 2000 ரூபாய் செலுத்துபவர்கள் தனியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.இவர்கள் வரிசையில் காத்திருந்து செல்ல வேண்டி ஏற்படாது. பார்வையிட வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கான நுழைவுச் சீட்டு 20 அமெரிக்க டொலர்களாகும். அடுத்த சில மாதங்களில் நுழைவுச் சீட்டுக்கு பதிலாக கியூ.ஆர். தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2000 ரூபாவை செலுத்துபவர்களுடன் வருகை தரும் 12 அல்லது 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு 500 ரூபாவும், 500 ரூபா செலுத்துபவர்களுடன் வரும் சிறுவர்களுக்கு 200 ரூபாவும் அறவிடப்படும்.

பாடசாலை மாணவர்களுக்கும் 200 ரூபா கட்டணம் அறவிடப்படும். தாமரை கோபுர வருகை தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினால் முன்னரே அறிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்காக பிரத்தியேக நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படும்.

தாமரை கோபுர செயற்பாடுகளை 3 கட்டங்களாக ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். முதற்கட்டமான உணவு பண்டிகை, இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக கண்டுபிடிப்பு மையங்கள், தொழிநுட்ப வங்கிகள் உள்ளிட்டவற்றை எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். இறுதி கட்டமாக அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் சினிமா திரையரங்கு, சொகுசு உணவகங்கள், சாகச விளையாட்டுகளான ஸ்கை டைவிங் மற்றும் பங்கி ஜம்பிங் உள்ளிட்டவை ஆரம்பிக்கப்படும்.

கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இவ்வருடம் மார்ச் மாதம் திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. மேலும் அதன் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் கணக்காய்வு செய்யப்படுகிறது.

தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி சீன நிறுவனம் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. சுமார் 113 மில்லியன் டொலர் செலவில் தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு சீன நிறுவனம் 88.65 டொலர் கடனுதவியை வழங்கியுள்ளது. சீனாவிடம் பெறப்பட்ட கடன் தவணை 2024 ஆம் ஆண்டிற்குள் செலுத்தி முடிக்கப்பட உள்ளது. அத்துடன் ஏற்கனவே கடனாகப் பெறப்பட்ட சுமார் 66 மில்லியன் டொலர்கள் மீளச் செலுத்தப்பட்டுள்ளன.

இதுவரை 58 முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில் 22 பேர் ஒப்பந்தம் மேற்கொள்ள இணங்கியுள்ளனர். 38 பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காக எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்திற்கு வரும் பொதுமக்களுக்காக தரை தளம், பிரபலமான உணவகங்கள், நினைவுப்பரிசு அங்காடிகள் என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பல முன்னணி வணிக வங்கிக் கிளைகளும் தரை தளத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தளம், அலுவலக வசதிகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன் டிஜிட்டல் சினிமா அனுபவத்தைப் பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்திலுள்ள மாநாட்டு மண்டபம், ஒரே நேரத்தில் சுமார் 400 பேருக்கான இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திறந்த தளம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள மிகவேகமாக இயங்கக்கூடிய மூன்று மின் தூக்கிகள் தாமரைக் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. குறித்த மின் தூக்கிகள் மூலம் தரைதளத்திலிருந்து 29 ஆவது மாடிக்கு 49 செக்கன்களில் செல்ல முடியும்.

வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், வார இறுதி நாட்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரையும் தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படும். அதே போன்று வார நாட்களில் இரவு 8 மணிமுதல் 11 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 7 மணி முதல் 11 மணி வரையும் மின் விளக்குகள் ஒளிரச்செய்யப்படும்.

தாமரை கோபுரத்தின் மேற்தளத்திலிருந்து தொலைக்காட்டி மூலம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை சீகிரியா குன்றையும், 3 மணி முதல் 7 மணி வரை சிவனொளி பாதமலையையும் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏனைய நாடுகளில் காணப்படுவதைப் போன்று வெகு விரைவில் தாமரை கோபுரமும் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட தளமாக மிளிரும் என நம்புவதாக நிறுவனத்தின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார்.

Tags: