“ஒற்றுமையே கூடுதல் பலம்” சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறைகூவல்

ம்யூனிஸ்டுகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 22ஆவது சர்வதேச மாநாடு (22nd International Meeting of Communist and Workers’ Parties) கியூபாவின் தலைநகர் ஹவானாவில் தொடங்கியது.

ஒக்ரோபர் 27 முதல் 29ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட 82 கட்சிகள் உலகம் முழுவதுமிருந்து பங்கேற்று வருகின்றன. இந்தக் கட்சிகள் 65 நாடுகளில் இயங்கி வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டின் முழக்கமாக “ஒற்றுமையே கூடுதல் பலம்” இடம் பெறுகிறது.

22ஆவது மாநாட்டின் கருப்பொருளாக, “கியூபா மற்றும் போராடிக் கொண்டிருக்கும் அனைத்து மக்களுடன் ஒன்றுபட்டு நிற்பது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில், முதலாளித்துவம் மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிராக, பாசிச சக்திகளின் ஆபத்து மற்றும் போருக்கு எதிராக, அமைதியை, சுற்றுச்சூழலை, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, சமூக மற்றும் மக்கள் இயக்கங்களோடு ஒன்றுபட்டு நிற்பதே கூடுதல் பலமாகும். ஒற்றுமையும், சோசலிசமுமே வெல்லும்” என்பது முன்வைக்கப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் இந்த மாநாடு மூன்றாவது முறையாக லத்தீன் அமெரிக்கா நாடு ஒன்றில் நடக்கிறது. ஏற்கனவே 2008ஆம் ஆண்டில் பிரேசிலிலும், 2016ஆம் ஆண்டில் ஈக்குவடாரிலும் நடைபெற்றுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்க விதித்து வரும் வகையில், அத்தகைய தடைகளுக்கு எதிராக வெற்றிகரமாகப் போராடி வரும் கியூபாவில் இந்த மாநாடு நடப்பது மிகப் பொருத்தமானதாக உள்ளது என்று மாநாட்டுப் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சோவியத் யூனியன் பின்னடைவுக்குப் பிறகு, இடதுசாரிகளை ஒருங்கிணைக்கும் முக்கியமான அமைப்பாக இந்த மாநாடு விளங்குகிறது. உலகம் முழுவதும் இருந்து 117 அமைப்புகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் அனைத்து மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளன. உலக நிகழ்வுகளில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் எப்படி சர்வதேச ஒற்றுமையைக் கடைபிடிக்கலாம் என்பது பற்றி ஏராளமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு இந்த மாநாடுகளில் விவாதங்கள் நடந்துள்ளன.

தேவையான ஒன்று
தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிராக நவீன தாராளமய முதலாளித்துவம் பெரும் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருப்பதோடு, கம்யூனிசத்திற்கு எதிரான பிரச்சாரமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. உலக அமைதியும், நிலைத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், தங்கள் அனுபவங்களையும், ஒத்துழைப்பையும் உலகின் பிற பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பிற கம்யூனிஸ்டு கட்சிகளிடம் பரிமாறிக் கொள்வதற்கு இது போன்ற அமைப்புகள் மற்றும் மாநாடுகள் அவசியமாகின்றன என்று கியூபா தெரிவித்துள்ளது. 
கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளரும், நாட்டின் ஜனாதிபதியுமான மிகுவேல் டயஸ்-கானெல் (Miguel Díaz-Canel) மாநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்றார். புரட்சி மாளிகையில் சந்தித்து அவர்களிடம் உரையாற்றிய அவர், கியூப கம்யூனிஸ்ட் கட்சி, கியூப அரசு மற்றும் கியூப மக்கள் சார்பாக அனைவரையும் வரவேற்பதாகக் குறிப்பிட்டார். 

இந்தியாவில் மாநாடு
கம்யூனிஸ்டு மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 11ஆவது சர்வதேச மாநாடு 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 20 முதல் 22 ஆம் தேதிகளில் தலைநகர் புதுதில்லியில் நடந்தது. இந்த மாநாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் இணைந்து நடத்தின. அந்த மாநாட்டில் 48 நாடுகளில் இருந்து 57 கம்யூனிஸ்டு மற்றும் தொழிலாளர் கட்சிகள் பங்கேற்றன.

Tags: