எதில் தன்னாட்சியும் தற்சார்பும் வேண்டும்? – பகுதி 12
–பாஸ்கர் செல்வராஜ்
வரலாற்றுக் காலம்தொட்டு நிலவிவரும் சாதிய சமூகப் பிரச்சனைக்கும் தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் “முறையான” வேலைவாய்ப்பின்மைக்குமான தீர்வு உழைக்கும் வர்க்கம் உற்பத்தித் தொழில்நுட்பங்களைக் கைக்கொள்வதுதான்.
ஏற்கனவே நம்மிடம் பல நுட்பங்கள் இருக்கிறது. இன்று புதிதாக பல தொழில்நுட்பங்கள் வந்திருக்கிறது. இதில் உழைக்கும் வர்க்கம் எதனைக் கைக்கொள்ளவேண்டும்? என்று கேட்டால் இன்றைய உற்பத்தியின் தீர்மானகரமான காரணி எதுவோ அதனைக் கைக்கொள்ளவேண்டும் என்பதுதான் பதில். அதனை எப்படித் தீர்மானிப்பது? அதற்கும் சமூக மாற்றத்திற்குமான தொடர்பு என்ன? என்று எழும் அடுத்தடுத்த கேள்விகளுக்கான விடையை நாம் வரலாற்றில்தான் தேடவேண்டும்.
உற்பத்தித் தொழில்நுட்ப சமூக மாற்ற வரலாறு
தற்போதைய நாகரீக (civilization) காலத்தின் தொடக்கமான பொ.ஆ.மு (பொது ஆண்டிற்கு முன்)1200இல் கண்டறியப்பட்ட இரும்பு தீர்மானகரமான காரணியாக இருந்தது. அதனைக் கைக்கொண்ட கிரேக்க, உரோமானிய சமூகங்கள் மற்ற இனக்குழு சமூகங்களைவிட முன்னேறிய நிலப்பிரபுத்துவ சமூகங்களாக மாற்றம் கண்டன. இத்தொழில்நுட்பப் பரவலாக்கம் மற்ற சமூகங்களும் அவ்வாறு மாறுவதற்குக் காரணமானது. இக்காலத்தில் இந்திய பகுதி இருவேறு இனம், மொழி, உற்பத்தி, தொழில், சமூகக் கட்டமைப்பு காரணமாக பார்ப்பனிய சாதிய சமூகங்களாக மாற்றம் கண்டது.
அடுத்து உருவான நீராவி இயந்திரம் நிலையாக இருந்த இரும்பாலானப் பொருட்களை இயங்கச் செய்தது. இதனையும் இரும்பையும் பெருமளவில் உற்பத்தி செய்த இங்கிலாந்து முதலாளித்துவ சமூகமாக மாறி முன்னோக்கிச் சென்றது. இதன் பரவலாக்கம் மற்ற சமூகங்களையும் முதலாளித்துவ சமூகங்களாக மாற்றியது. இந்நுட்பங்களற்ற மற்ற பின்தங்கிய சமூகங்கள் இவர்களிடம் அடிமைப்பட்டன.
உற்பத்தி நுட்பங்கள் விரவியிருந்த முதலாளித்துவ சமூகங்களுக்கு இடையிலான மோதலும் சோவியத் உருவாக்கமும் அடிமைப்பட்ட சமூகங்களை விடுவித்து இந்நுட்பங்களை உலகெங்கும் பரவச்செய்தது. இதனையடுத்து பொருட்களின் இயக்கம் நீராவியில் இருந்து எண்ணைக்கும் மின்சாரத்திற்கும் மாறியது. இவற்றின் உற்பத்தியைக் கைப்பற்றிக் கட்டுப்படுத்திய அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் உலகம் முழுக்க இப்பொருட்களையும் மூலதனத்தையும் ஏற்றுமதி செய்து உலக மக்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் ஏகாதிபத்திய சமூகங்களாயின.
இதனிடையில் காகிதங்களில் இருந்த தகவல்தொடர்பு மின்காந்த அலைகளுக்கும் சாலை, தண்டவாளம், கப்பல் என தரை, தண்ணீரில் இருந்த போக்குவரத்து வானில் பறக்கும் வானூர்தியாகவும் வளர்ந்தது. இப்படி நாடுகளின் எல்லைகள் கடந்து பாயும் மூலதனத்தையும், காற்றில் மிதக்கும் அலைகளையும், வானில் பறக்கும் பொருட்களையும், கட்டுப்படுத்தி இணைத்து, இயக்க குறைமின்கடத்திகளாலான கணினிகள், கடத்திகள், இணைப்பான்கள் தோன்றின. இவற்றின் உற்பத்தியில் பங்கெடுத்து இந்நுட்பங்களைக் கைக்கொண்ட மற்ற ஜப்பான், தென்கொரிய, சீன சமூகங்கள் முழுமையான முதலாளித்துவ சமூகங்களாக மாறின. மற்றவை சமூக வளர்ச்சியின்றி தேங்கின.
ஆக, மனிதர்களின் உருவாக்கத்திற்கும் இயக்கத்திற்கும் பொருட்கள் தேவை. அந்தப் பொருட்களின் உருவாக்கத்திற்கும் இயக்கத்திற்கும் தேவையான உற்பத்தித் தொழில்நுட்பங்களை உருவாக்கிக் கைக்கொள்ளும் சமூகங்கள்தான் ஒரு நிலையிலிருந்து அடுத்த சமூக நிலைமாற்றத்தைக் காண்கின்றன என்பதை இதன்மூலம் அறிகிறோம்.
இன்றைய உற்பத்தி மாற்றம்
பொஆமு 1200க்குப் பிறகு எண்ணாயிரம் பொருட்களை உற்பத்தி செய்தாலும் அவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக இரும்புதான் இருந்து வருகிறது. இந்த இரும்பு மற்றும் இதனாலான பொருட்களை இயக்கத் தேவையான நீராவி, மின்சாரம், எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தி தீர்மானகரமான பாத்திரத்தை வகித்திருக்கின்றன.
வெவ்வேறு இடங்களில் இயங்கிக் கொண்டிருந்த மனிதர்களையும் பொருட்களையும் இணைக்க உருவான சிலிக்கனாலான குறைமின்கடத்திகள் வளர்ந்து இன்று எல்லாவகை பொருட்களையும் மனிதர்களையும் இணைக்கும் இணையமாகவும் செய்யறி நுட்பமாகவும் வளர்ந்திருக்கிறது.
இரும்பாலான பொருட்களை இணைக்க உருவான சிலிக்கன் முற்றுமுழுதாக அதனால் உருவாக்கப்படும் மின்னணு பொருட்களாகவும் பொருட்களின் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்யும் சூரிய மின்னாற்றல் தகடுகளாகவும் வளர்ந்திருக்கிறது. மின்னணு பொருட்களை இயக்க உருவான மின்கலங்கள் மற்ற இரும்பாலான பொருட்களையும் இயக்குபவைகளாக மாறிவருகிறது. ஆகவே
இன்றைய உலக உற்பத்தி மாற்றம்: இரும்பில் இருந்து இரும்பாலும் சிலிக்கானாலும் உருவாகும் பொருட்கள் மரபான எரிபொருளில் இருந்து மரபுசாரா மின்னாற்றல் மற்றும் மின்கலங்களில் இயங்குவதாக மாறிக்கொண்டிருக்கிறது (transitioning).
நம் தற்சார்புக்கு உவப்பானது எது?
பொதுவாக இந்தத் தொழில்நுட்ப உற்பத்தி மாற்றத்தை சூழலியல் சார்ந்து அணுகுவதைக் காணமுடிகிறது. ஆனால் உயிரினங்களும் மனிதர்களும் வாழ அடிப்படையான சூழலைக் காப்பது வாழ்வாதாரம் சார்ந்தது. அதனை வாழ்வாதாரப் பிரச்சனைகளின் ஒரு அங்கமாக அணுகவேண்டுமே ஒழிய தனியாக பிரித்துப் பார்க்கக்கூடாது. அதேபோல இப்புது நுட்பங்கள் பேசுவதற்கும் கேட்பதற்கும் எளிதாகவும் இனிமையாகவும் இருந்தாலும் இதற்குக் கொடுக்கவேண்டிய விலை மிக அதிகம்.
அதற்காக இப்போதைய மரபான எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்திலேயே தொடரலாமா? என்றால் அதுவும் முடியாது. ஏனெனில் எண்ணெய்யின் விலையை உயர்த்தியும் அதன் மதிப்பைத் தெரிவிக்கும் டொலர், ரூபாய் மதிப்பைத் திரித்தும் வரியை உயர்த்தியும்தான் அமெரிக்க பார்ப்பனிய ஏகாதிபத்தியவாதிகள் நமது உழைப்பை உறிஞ்சி வருகிறார்கள். அது நம்மிடம் மூலதனம் பெருகாமல் நம்மை சாதிய சமூகமாகவே நீடித்திருக்க வைக்கிறது. ஆகவே இவ்விரு ஏகாதிபத்தியவாதிகளும் ஆதிக்கம் செலுத்தும் இதிலிருந்து விடுபடாமல் நம்மால் சமூக மாற்றத்தைச் சாதிக்க முடியாது.
உக்ரைன் போருக்குப் பிறகு எண்ணெய் மீதான டொலரின் முற்றொருமைதான் உடைந்திருக்கிறதே! 2024 தேர்தலில் பாஜக தோற்றால் எண்ணெய் மீதான பார்ப்பனியத்தின் முற்றொருமையையும் உடைத்துவிடலாமே என்று நினைக்கலாம். இவை எல்லாம் நமக்குத் தற்காலிக தீர்வைத்தான் தரும். நம்மிடம் எண்ணெய் வளம் இல்லாத நிலையில் இதற்கான விலையைத் தீர்மானிக்கும் ஆற்றல் எப்போதும் நம்மிடம் இருக்காது. நாம் கடைசிவரை அடுத்தவர் தயவில்தான் வாழவேண்டி இருக்கும். எனவே மாற்று உற்பத்தித் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்வது நமது தெரிவல்ல; தேவை.
நம்முடைய பலம் பலகீனம்
சூரியமின்னாற்றல் மற்றும் அதனைத் தேக்கும் மின்கலங்களைப் பயன்படுத்தி பொருட்களை உருவாக்கி இயக்கும் புதிய உற்பத்தித் தொழில்நுட்பத்திற்கு ஆண்டு முழுவதும் சூரிய வெப்பம், அதிகளவில் நிலம், நீர், தொழிலாளர்கள் தேவை. இந்த புதிய உற்பத்தித் தொழில்நுட்ப முறையில் நம்முடைய
பலம்: ஆண்டு முழுவதும் வெப்பம், உலகிலேயே அதிகமான பயிரிடத்தக்க நிலம், போதுமான நீர், மலிவான தொழிலாளர்கள் என அனைத்தும் ஓரிடத்தில் ஒருங்கே அமைந்திருப்பது.
குளிர் நிறைந்த ஐரோப்பிய நாடுகளில் நிலமும் நீரும் இருக்கலாம் ஆனால் ஆண்டு முழுவதும் சூரிய ஒளியும், தொழிலாளர்களும் இல்லை. அராபியப் பாலைவனங்களில் சூரியனும், பரந்த நிலப்பரப்பும் இருக்கலாம் ஆனால் நீரும் தொழிலாளர்களும் இல்லை. அங்கு உற்பத்தி செய்து மற்ற இடங்களுக்குக் கொண்டுசென்றாலும் செலவு கூடும். சீனாவில் நிலம், நீர், வெப்பம், தொழில்நுட்பம் இருந்தாலும் இளம் தொழிலாளர்களின் அளவு குறைந்து அவர்களின் கூலி கூடிக்கொண்டிருக்கிறது. நம்மிடம் மற்றவை எல்லாம் இருக்கிறது ஆனால் இந்த உற்பத்திக்கு அடிப்படையான தொழில்நுட்பம் எதுவுமில்லை.
பலகீனம்: புதிய உற்பத்தி முறைக்கான எந்தத் தொழில்நுட்பமும் இல்லாமல் இருப்பது.
காலனிய விடுதலையும் பார்ப்பனிய பலமும்
இன்றைய அமெரிக்காவைப் போல அன்றைய இங்கிலாந்து உற்பத்தியை இந்தியா போன்ற காலனிகளுக்கு மாற்றி வர்த்தகமையமாக மாறியபோது இந்தியாவிற்கு உற்பத்தியை மாற்றி இரும்பு, மின்சார உற்பத்தி நுட்பங்களை அறிமுகப்படுத்தியது. இங்கிலாந்து முதல் உலகப்போர் நெருக்கடியில் சிக்கிய சூழலைப் பயன்படுத்தி டாட்டா உள்ளிட்ட பார்ப்பனிய ஆளும்வர்க்கம் அதனிடமிருந்து அந்நுட்பங்களைப் பெற்றது.
அதுவரையிலும் பொருட்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து மதிப்பு குறைவான வெள்ளி நாணயம், கடன் பத்திரங்களைப் பெற்றுவந்த இவர்கள் உலகப்போரின்போது உண்மையான பணமான தங்கத்தையும் பெற்றார்கள். இப்படி மூலதனம், தொழில்நுட்பத்தை அடைந்த பிறகே காங்கிரஸின் மூலம் முழு விடுதலைக்கான முன்னெடுப்புகளைத் தொடங்கினார்கள். அது பார்ப்பனிய முதலாளிகளுக்கான இந்திய தேசிய ஒன்றியமும் பிராந்திய நிலவுடைமைகளுக்கான மொழிவாரி மாநிலங்களும் உருவாகக் காரணமானது.
உற்பத்தியைக் கைப்பற்ற பார்ப்பனியத்தின் பழைய வழி
இந்திய விடுதலைக்குப் பிறகான அமெரிக்க-சோவியத் மோதலில் சோவியத்திடம்இருந்து எண்ணையை இறக்குமதி செய்து சுத்திகரித்துப் பயன்படுத்தும் நுட்பத்தை அடைந்த பார்ப்பனிய ஆளும்வர்க்கம் அதில் வளர்ந்து ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்தது. ஆனால் இதற்கிடையில் உருவான மின்னணு, மின்கல நுட்பங்களிலும் அவற்றின் உற்பத்தியிலும் பங்கெடுக்காமல் சோம்பியிருந்து பின்தங்கியது.
இந்த புதிய உற்பத்தி மாற்றத்திற்கான மூலப்பொருட்களாலும் தொழில்நுட்பங்களும் கிழக்கிலும் மேற்கிலும் விரவியிருக்கும் நிலையில் அது பல்துருவ உலக மாற்றமாக அமெரிக்க-சீன-ரசிய மோதலாக வெடிக்கிறது, இந்த மோதலைப் பயன்படுத்தி முன்பு போலவே புதிய நுட்பங்களை பார்ப்பனியம் அடைய நினைக்கிறது.
அதற்கான விலையாக சொந்த இராணுவ பலத்தை விடுத்து ஜப்பான், ஜெர்மனியை போல அமெரிக்க பொருளாதார வண்டியில் இறுக்கமாக இணைத்துக் கட்டப்பட்ட இறையாண்மையற்ற (vessel) ஒரு குதிரையாக இந்தியாவை இருக்கச் சொல்கிறார்கள். அப்படி அவர்களிடம் இந்தியாவை அடகு வைத்து மீண்டும் முழுமையான அடிமைகளாக மாற மனமின்றியும் அது இந்திய தேசியத்தை உடைக்கும் ஆபத்தை உணர்ந்தும் இவர்கள் தவிர்க்கிறார்கள்.
உற்பத்தியைப் பிடித்து விடுதலைக்கு முயன்ற தமிழகம்
முதலாளித்துவ ஏகாதிபத்திய காலத்தின் உற்பத்திக் காரணிகளான நிலம், தொழிலாளர்கள், மூலதனம், தொழில்நுட்பம், நிர்வாகம் ஆகியவற்றை அடைந்த பார்ப்பனியவாதிகள் காலனியவாதிகளிடம் இருந்து விடுதலை பெற்றார்கள். இந்த பார்ப்பனியவாதிகளிடம் இருந்து நிலம், நிர்வாகம் ஆகியவற்றை மொழிவாரி தேசியஇன போராட்டத்தின் மூலம் முதலாளித்துவ வர்க்க வளர்ச்சியற்ற மாநிலங்கள் பெற்றன.
விடுதலைக்குப் பிறகு முதலாளித்துவ மாற்றத்திற்குத் தேவையான உற்பத்தியின் தீர்மானகரமான காரணிகளான துருபிடிக்காத இரும்பு (steel), எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் வேண்டி நாடாளுமன்றத்தில் அண்ணா ஆற்றிய உரையிலும் போராட்டத்திலும் அவரின் தீர்க்கமான புரிதலைக் காணமுடிகிறது. குஜராத் உறுப்பினரின் தொழில்வலிமையைப் பற்றிய பேச்சை சுட்டிக்காட்டி வடக்கில் நான்கு உருக்காலைகள் இருக்கிறது எங்களிடம் என்ன இருக்கிறது என்று கேட்கிறார். இதனை அவர்கள் நமக்கு மறுப்பதை வடக்கின் ஏகாதிபத்தியம் என தெளிவாகவே குறிப்பிடுகிறார்.
அப்படியான போராட்டத்தின் மூலம் சேலம் உருக்காலை அமைந்தது. (அதையும் இப்போது தனியார்மயமாக்கப் பார்க்கிறார்கள்) ஆனால் கடைசிவரை எண்ணெய் சுத்திகரிப்பு அமையவேயில்லை. இதோ இரும்பு, எண்ணையின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி அதன் விலையையும் வரியையும் நிர்ணயிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும் அவர்கள் அவற்றின் மதிப்பைத் தெரிவிக்கும் ரூபாயின் மதிப்பை மாற்றி நம் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கிறார்கள். அதனால் உற்பத்திக் காரணியான மூலதனத்தை அடையாமல் நாம் நிதிக்கு அவர்களிடம் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
பார்ப்பனிய ஆதிக்கத்திலிருந்து விடுபடும் வழி
அடுத்த உற்பத்தி மாற்றத்திற்கான எண்ணையில் இருந்து எரிவாயு, இரும்பில்இருந்து இரும்பாலும் சிலிக்கனாலுமான மின்னணு பொருட்கள் மற்றும் சூரியமின்னாற்றல் உற்பத்தி அதற்கான பிணையம் (grid), இவற்றை இணைத்துக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் இணையம் ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நாமோ இதிலிருந்து விடுபட அண்ணாவைப் போன்று போராடாமல் வெறுமனே 2024 தேர்தலில் இந்துத்துவத்தை தோற்கடிக்கும் பல்லவியைப் பாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய சூழலோ பெரியார், அண்ணாவின் வழியில் புதிய உற்பத்தியை அடைந்து பார்ப்பனிய பொருளாதார ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான அரசியல் போராட்டத்தைக் கோருகிறது.
அதோடு இரும்பு சிலிக்கனாலான பொருட்களை இயக்க லித்தியத்தில் இயங்கும் மின்கலங்களை மற்ற நாடுகள் உருவாக்கி முன்சென்றுவிட்டன. அதே திசையிலான நமது நகர்வு மீண்டும் லித்திய தேவைக்கு மற்றவர்களை நம்பியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடும். அதற்கு மாறாக நாம் சூரியமின்னாற்றல் மூலம் உருவாகும் மின்சாரத்தை சேமிக்க அளவில் பெரிய எங்கும் நிறைந்திருக்கும் புதிய மின்கல நுட்பமான சோடிய மின்கலமும் (sodium batteries) பொருட்களின் இயக்கத்துக்கு எரிவாயு மற்றும் கடல்நீரில் இருந்து உருவாக்கப்படும் ஹைட்ரஜன் என்பதுதான் நமக்குச் சரியாக இருக்கும்.
அதேபோல ஒரேநாளில் இந்த மாற்றத்தை நம்மால் சாதித்துவிடமுடியாது. அப்படியான திசையில் மாறிச்செல்லும் உலகத்தின் வேகத்துடன் இசைந்து நாமும் மாறவேண்டும். அதுவும் பார்ப்பனியத்தின் கையில் இருக்கும் எண்ணையில் தேங்கியிருப்பது என்பதாக இல்லாமல் அதிலிருந்து வேகமாக எரிவாயுக்கு மாறுவதாக இருக்கவேண்டும்.
நம்மிடம் பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கும் சிமெண்ட், இரும்பு உற்பத்தி இருக்கிறது எரிபொருள் உற்பத்தி இல்லை. எனவே இன்றைய விலைவாசிப் பிரச்சனைக்கான உடனடி தீர்வாக எரிவாயுவை இறக்குமதி செய்யும் முனையங்களை நிறுவி அதனை விநியோகிக்கும் உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதை இடைக்கால அரசியல் இலக்காகக் கொள்ளவேண்டும். நீண்டகால நோக்கில்
அடையவேண்டிய தொழில்நுட்ப தற்சார்பு: சிலிக்கன் உற்பத்தி அதனாலான பொருட்கள் மற்றும் சூரியமின்தகடுகள் அந்த மின்சாரத்தை சேமித்து இரும்பு சிலிக்கானாலான பொருட்களை இயக்கி இணைக்கும் சோடிய மின்கலங்கள், ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் இணையம் ஆகியவற்றை நோக்கி முன்னேற வேண்டும்.
நிலபிரபுத்துவகால உற்பத்திக் காரணிகளாக இருந்த நிலமும், தொழிலாளர்களுடன் முதலாளித்துவகால மூலதனமும், தொழில்நுட்பமும் இணைந்தது. பின்பு உற்பத்தி ஓரிடத்தில் குவிந்த ஏகாதிபத்திய காலத்தில் அதனை நிர்வகிக்கும் நிர்வாகம் சேர்ந்தது. இப்போதைய மின்னணு பொருட்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் இதனால் உருவாக்கப்படும் மாபெரும் தரவுகள் நிர்வாகத்தைத் திறம்பட செய்வதற்கான மற்றுமொரு உற்பத்திக் காரணியாக சேர்ந்திருக்கிறது. இதனைக் கைப்பற்றி நம்மை ஆதிக்கம் செய்ய பார்ப்பனியம் இந்தத் தரவுகளைத் தன்னிடம் குவித்து வருகிறது. அதிடமிருந்து விடுதலை பெற நாம் உற்பத்திக்காரணியான தொழில்நுட்பத்துடன்
அடையவேண்டிய தன்னாட்சி அதிகாரங்கள்: மூலதனம், நிதி, தரவுகளை உருவாக்கி கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அரசியல் அதிகாரங்கள்.
புதிய உற்பத்திக்கான மூலப்பொருட்கள் கிழக்கிலும், நுட்பங்கள் கிழக்கிலும் மேற்கிலும் இருக்கிறது. அரசியல் அதிகாரம் ஒன்றியத்துடன் இருக்கிறது. இந்நிலையில் இவற்றில் தற்சார்பையும் தன்னாட்சியையும் அடையும் வழிமுறை என்ன? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
பகுதி 1: இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள்
பகுதி 2: இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள்
பகுதி 3: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன?
பகுதி 4: டொலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி?
பகுதி 5: பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும்
பகுதி 6: இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும்
பகுதி 7: உடையும் ஒற்றைத் துருவம்
பகுதி 8: உலகை மாற்றிக் கொண்டிருக்கும் உக்ரைன் போர்
பகுதி 9: எழுபதுகளையும் தொண்ணூறுகளையும் ஒத்த சூழலை எதிர்கொள்ளும் இந்தியா
பகுதி 10: சாதிக்கும் தொழில்மயமாதலுக்குமான தொடர்பு என்ன?
பகுதி 11: சாதி எப்போது ஒழியும்?