2023 ஆம் ஆண்டின் சீனா-ரஷ்யா வர்த்தக இலக்கு

சீனாவும், ரஷ்யாவும் 2023 ஆம்  ஆண்டில் 200 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வது என்ற இலக்கை நிர்ணயித்துள்ளன. பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உறுப்பு நாடுகளாக சீனாவும், ரஷ்யாவும் தங்கள் இருதரப்பு உறவை பெரும் அளவில் வலுப்படுத்தியுள்ளன. சீனா மீதான அமெரிக்காவின் மோதல் போக்கு அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. விரைவில் உலகிலேயே  மிகப்பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை  சீனா பிடிக்கப் போகிறது. அமெரிக்காவிடமிருந்து அந்த இடத்தைத் தட்டிப் பறிக்கும் அதே  வேளையில், தனது நாட்டு மக்களின் வாழ்நிலைத்தரம் உயருவதில் பெரும்  அக்கறை செலுத்தி வருகிறார்கள்.

உக்ரைன் விவகாரத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தன. ஏராளமான பொருளாதாரத்தடைகளை அந்நாடுகள் விதித்திருக்கின்றன. இந்தத் தடைகள் ரஷ்யாவின் மீது பாதிப்பை ஏற்படுத்துவதைவிட, தடைகளை விதித்த ஐரோப்பிய நாடுகளில்  நெருக்கடி முற்றியுள்ளது. எந்தெந்த நாடுகள்  மீதெல்லாம் அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கின்றனவோ, அந்த நாடுகள் எல்லாம் கைகோர்த்து வருகின்றன. இதில் சீனாவும், ரஷ்யாவும் திட்டமிட்ட வகையில் தங்கள் உறவைப் பலப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டில் (2022)  இந்த இருநாடுகளுக்கிடையிலான மொத்த வர்த்தகம், அதாவது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, 190 பில்லியன் டொலர்களைத் தொட்டிருந்தது. நடப்பாண்டுக்கான வர்த்தக இலக்காக 200 பில்லியன் டொலர்களை இரு நாடுகளும் நிர்ணயித்துள்ளன. கடந்த ஆண்டில் 43 விழுக்காடு உயர்வைக் கண்ட இரு தரப்பு வர்த்தகம், நடப்பாண்டில் குறித்துள்ள இலக்கைத் தாண்டி  அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

தங்கள் இருநாடுகளின் ஒத்துழைப்போடு, ஈரான், சவூதி அரேபியா, ஆப்பிரிக்க யூனியன் மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனும் வர்த்தக ரீதியான உடன்பாடுகளை எட்டி வருகிறார்கள். இந்த  உடன்பாடுகளில் இரு தரப்பு வர்த்தகத்தில் அவரவர் நாட்டின் நாணயங்களைப் பயன்படுத்துவது குறித்த அம்சமும் இடம் பெற்றிருக்கிறது. டொலரின் ஏற்ற இறக்கத்தால் நெருக்கடியில் சிக்கிக் கொள்வது வழக்கமாகிவிட்ட நிலையில், சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்வதில் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டியிருக்கின்றன.

முக்கிய திருப்பம்

தங்கள் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய திருப்பமாக சீனா மற்றும் ரஷ்யாவின் இரு  பெரும் நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தில் உள்நாட்டு நாணயங்களில் விற்பது மற்றும் வாங்குவதற்கு உடன்பாட்டை எட்டியுள்ளன. ரஷ்யாவின் பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட் மற்றும் சீனாவின் தேசிய பெட்ரோலியக் கழகம் ஆகிய  இரண்டும்,  தங்கள் வர்த்தகத்தில் டொலரைப் பயன்படுத்துவதில்லை என்று  முடிவெடுத்துள்ளன. இருதரப்பு வர்த்தகத்தை அதிகப்படுத்தப் போகிறார்கள். இந்த அதிகரிப்பு 200 பில்லியன் டொலர் என்ற இலக்கை அடைவதற்கும் உதவும்.

அண்மையில் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேசப் பொருளாதார  அமைப்புக் கூட்டம் (St. Petersburg International Economic Forum – SPIEF) நடைபெற்றது.  அந்தக்  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த இரு நிறுவனங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ராஸ்நெஃப்ட் தலைவர் இகோர் செச்சின் மற்றும் சீன நிறுவனத்தின் தலைவர் டாய் ஹூலியாங் ஆகிய இருவரும் கலந்துரையாடி, வர்த்த கத்தை அதிகப்படுத்துவது மற்றும் உள்ளூர் நாணயங்களைப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்துவது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இரு நிறுவனங்களும் இணைந்து புதிதாக எண்ணெய் கண்டுபிடிக்கும் பணி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி  ஆகியவற்றில் கவனம் செலுத்தப் போகின்றன.

Tags: