ரூபாய் மைய வர்த்தகத்தின் முக்கியத்துவம் என்ன? – பகுதி 14

பாஸ்கர் செல்வராஜ்

ற்பத்தி முறைதான் ஒரு சமூகத்தின் வளர்ச்சி நிலையையும் அதன் ஒருங்கமைப்பையும் (social order) தீர்மானிக்கும் காரணி. நமது உற்பத்தி முதலாளித்துவ முறைக்கு மாறிவிட்ட பின்பும் நிலவுடைமைகால சாதிய சமூகமாகவே தொடர்வதற்குக் காரணம் 

  1. உழைக்கும் வர்க்கம் தற்போதைய உற்பத்தித் தொழில்நுட்பத்தைக் கைக்கொள்ளாமல் வெறும் பயனாளிகளாக இருப்பது. 
  2. இங்கே உழைத்து உருவாக்கப்படும் செல்வமனைத்தையும் உலக முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதிகளும் உள்ளூர் சாதிய (பார்ப்பனிய-பனியாக்கள்) சமூக ஏகாதிபத்தியவாதிகளும் உறிஞ்சிக் கொள்வது.

உற்பத்தி மாற்றம் சமூகத்தை மாற்றும்

ஆகவே சாதிய சமூகத்தை மாற்ற வேண்டுமானால் இந்தச் சுரண்டலைத் தடுத்து அல்லது குறைந்தபட்சம் குறைத்து நம்மிடம் மூலதனம் பெருகுவதை உறுதிசெய்ய வேண்டும்.

அதன் சுழற்சி சாதியும் வர்க்கமும் சம அளவில் நிறைந்திருக்கும் தற்போதைய நமது சமூகத்தை மாற்றி சாதியின் அளவைக் குறைத்து முதலாளித்துவ வர்க்கத்தன்மையைக் கூட்டும். இப்படியான சமூக மாற்றத்திற்கு தற்போதைய உற்பத்தி மாற்றமான “இரும்பு சிலிக்கானால் உருவாகி மரபுசாரா எரிபொருள், மின்னாற்றல், மின்கலங்களில் இயங்கும் பொருட்கள்” என்பதை வரித்துக்கொண்டு இந்த உற்பத்தித் தொழில்நுட்பங்களில் தற்சார்பை அடைவதை இலக்காகக் கொண்டு செயல்படுவதே தீர்வு. 

இந்த உற்பத்திக்கான காலநிலை, நிலம், தொழிலாளர்கள் ஆகியவை நம்மிடம் இருக்கிறது. ஆனால் மூலப்பொருட்களும் தொழில்நுட்பங்களும் இல்லை. அது கிழக்கிலும் மேற்கிலும் பரவிக் கிடக்கிறது. அதனைப் பெறும் நோக்கில் இருவரையும் சமமாக பாவித்துத் தென்னகத்தை இருவரும் சந்திக்கும் உற்பத்தி மையமாக்கும் வகையில் நமது புவிசார் அரசியல் பொருளாதார வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொள்ளவேண்டும். 

தற்போதைய பல்துருவ உலக மாற்றத்திற்கு ஏற்ப முன்பு எழுபதுகளில் பின்பற்றிய அரச முதலாளித்துவமும் சந்தைப் பொருளாதாரமும் கலந்த சமூக சந்தைப் பொருளாதாரம் அல்லது திராவிட மாதிரிப் பொருளாதாரக் கொள்கையை மீண்டும் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். 

உற்பத்தியில் மூலதனம்(பணம்) மூளை

அப்போது நடுத்தர வர்க்கத்தை சேமிக்க ஊக்குவித்து அந்த மூலதனத்தைக் கொண்டு உற்பத்தி செய்வது; அந்த ரூபாய் மதிப்பை அரசே நிர்ணயித்துக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது; அப்படி உருவான பொருட்களை அந்த வலுவான நாணயத்தைக் கொண்டு மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்வது என்பதாக இருந்தது.

அதன்மூலம் பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் வலிமை நம்மிடம் இருந்தது.   உலகமயமாக்களுக்குப் பிறகு டாலர் கடனைப் பெற்று மூலப்பொருட்களையும் தொழில்நுட்பங்களையும் வாங்குவது; இப்படி திரட்டிய டொலர் கையிருப்பை அடித்தளமாக (base money) வைத்துக்கொண்டு ரூபாய் உற்பத்தி சுழற்சியை ஏற்படுத்துவது;

இந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்து டொலரை ஈட்டி கடனை அடைப்பது என்ற ஏற்றுமதிக்கான பொருளாதாரமாக இந்தியா மாற்றப்பட்டது.  இப்படியான பொருளாதார சுழற்சிக்கான டொலர் கடன் வேண்டுமென்றால் ரூபாய் மதிப்பைச் சந்தையையே தீர்மானிக்க விடவேண்டும் என முன்நிபந்தனையாக வைக்கப்பட்டது. இதன்படி சந்தையில் இந்திய சொத்துக்கள் பொருட்களுக்கான தேவையைப் பொறுத்து ரூபாயின் மதிப்பு மாறும். இதனை ஏற்று படிப்படியாக ஒன்றியம் ரூபாய் மதிப்பை நிர்ணயிப்பதில் இருந்து விலகியது.

ரூபாய் மூலதன சரிவு

இது,

1. நமது பொருட்களுக்கு விலையை தீர்மானிக்கும் ஆற்றலை இழக்கச் செய்தது.

2. சந்தையில் ரூபாய் மூலதனத்துக்கான தேவையைக் குறைத்து சேமிப்புக்குப் பதிலாகச் செலவிட வைத்தது

3. ரூபாய் மதிப்பைக் குறைத்து நடுத்தர வர்க்க சேமிப்பை செறித்தது

4. மதிப்புக்  கரைந்த ரூபாயில் வருமானம் பெறும் தொழிலாளர்களின் வாங்கும் திறனைச் சரித்தது. 

இப்படி முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதிகள் இந்திய ஆளும் வர்க்கத்திடம் இருந்து விலையைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பறித்தார்கள் என்றால் இந்திய பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியவாதிகள் மாநிலங்கள் முதலீடுகள் வழியாகவும் வரிவிதிப்பின் ஊடாகவும் பணத்தை உருவாக்கி நிர்வகிக்கும் நிதிய அதிகாரங்களைப் பறித்தார்கள்.

ரூபாயை மலிவாக்கி இருவரும் நடுத்தர, உழைக்கும் வர்க்கத்தின் சேமிப்பை உழைப்பை ஒன்று மில்லாமல் செய்தார்கள்.  உலக நெருக்கடியினால் வெடித்த உக்ரைன் போருக்குப் பிறகான பல்துருவ உலக மாற்றத்தைப் பயன்படுத்தி முன்பு இழந்த ரூபாய் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெறத்துடிக்கும் பார்ப்பனியவாதிகள் அதன்மூலம் ரூபாயில் விலையைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற துடிக்கிறார்கள். நாடுகளுக்கு இடையிலான ரூபாய் வணிகத்தை ஊக்குவித்து வருகிறார்கள். 

முரணான ஒன்றிய ரூபாய் நகர்வு

அதேசமயம் மாநிலங்களின் ரூபாய் மூலதனத்தின் மீதான அதிகாரத்தை மறுத்து அஞ்சலக, வங்கிசேமிப்பு, காப்பீடுகளின் வழியாகத் திரட்டும் ரூபாய் மூலதனத்தை அதானிகளின் முதலீட்டுக்கும் அவர்களின் பங்கு மதிப்பை கூட்டுவதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இது உலகம், உள்ளூர் என இருவகை உள்-வெளி  முரண்பாடுகளைக் கொண்டுவருகிறது.  நிதிமூலதன சந்தை சூதாடிகளிடம் இருந்து ரூபாய் மதிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மீட்பது உலக ஏகாதிபத்தியத்துடன் முரணைக் கொண்டுவருகிறது. அது அவர்களை அந்த ரூபாய் மூலதனம் குவிக்கப்பட்டுள்ள அதானியின் மீது நிதியத் தாக்குதலையும் மோடியின் மீது அரசியல் தாக்குதலையும் தொடுக்க வைக்கிறது. 

அதேசமயம் ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்து உருவாகும் ரூபாய் மூலதனம் உற்பத்தியில் ஈடுபட்டு போட்டியைக் கூட்டி பொருட்களைப் பெருக்கி சந்தைக்கான அளிப்பைச் செய்யாமல் பார்ப்பனியம் ஓரிடத்தில் குவிக்கிறது;

ஊகபேரத்தில் ஈடுபட வைக்கிறது. அது ரூபாயை ஏற்று வர்த்தகம் செய்ய ஒப்புக்கொண்ட ரஷ்யர்களை அந்நியப்படுத்தி அவர்கள் ஈட்டிய ரூபாய்க்கு இந்தியாவில் வாங்க பொருளற்ற சூழலை ஏற்படுத்துகிறது.

சோவியத் காலத்தில் அப்படி சேர்த்த ரூபாய் ஒன்றுமில்லாமல் போன அனுபவத்தில் அவர்களை ரூபாய்க்குப் பதிலாகச் சீன யுவானைக் கோரிப் பெறவைக்கிறது.  ரூபாய் மூலதனம் உற்பத்தியில் ஈடுபடாமல் ஓரிடத்தில் குவிவது உற்பத்தி சுழற்சியின் வேகத்தைக் குறைத்து உள்ளூரில் பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட உள்நாட்டு முரணைத் தோற்றுவிக்கிறது.

சுருங்கும் சந்தையில் இருந்து தூக்கி வீசப்படும் மற்ற முதலாளிகள் அதானிகளுக்கு எதிராக ஏகாதிபத்தியவாதிகளுடன் கைகோர்க்கும் சூழலை ஏற்படுத்துகிறது. 

பணிந்த பா.ஜ.க 

இந்த ஒருங்கிணைந்த தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு அதானியின் பங்குகளை டொலர் நிதிமூலதனத்துக்குத் திறந்துவிட்டு கொள்ளையில் பங்களிக்கிறது பார்ப்பனியம். இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்க கப்பற்படைக்கு  சென்னையில் இருக்கும் காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களில் போர்க்கப்பல்களை பழுதுபார்க்கவும், சரக்குகளை நிரப்பிக் கொள்ளவும் (repair and logistics) பாஜக அனுமதி அளிக்கிறது.    

இந்த இராணுவ அனுமதி சீனா உள்ளிட்ட இந்தப் பிராந்திய நாடுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த உதவுவதோடு இந்தியாவில் செய்யப்படும் டொலர் மூலதனத்துக்கு எதிரான நகர்வுகளையும் தடுத்து நிறுத்தும். எஸ்.சி.ஒ, பிரிக்ஸ் (SCO, BRICKS) உள்ளிட்ட அமெரிக்க எதிர்த்தரப்பு கூட்டில் இருக்கும் இந்தியா ஏற்கனவே அவர்களின் மாற்று வர்த்தக, நாணய முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டை போட ஆரம்பித்துவிட்டது.  அமெரிக்கா மோடியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்தளித்தது வீண்போகவில்லை.

இப்படி ஏகாதிபத்தியவாதிகளை சமாதானம் செய்துவிட்ட பா.ஜ.க எதிர்க்கட்சிகளின்  ரூபாய் நிதியாதாரங்களை வெட்டி ஒடுக்கும் நோக்கில் வருமானவரி சோதனைகளை முடுக்கிவிட்டு வருகிறது. அது இயல்பாக எதிர்க்கட்சிகளை இறுக்கமாகப் பிணைத்து அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வைக்கிறது. 

எதிர்க்கட்சிகளின் பாதையென்ன?

ஆனால் பா.ஜ.கவின் பொருளாதார தாக்குதலுக்கு எதிராகப் பன்மைத்துவம், எல்லோரையும் உள்ளடக்கிய இந்திய ஒற்றுமை, அரசியல் சாசன பாதுகாப்பு என்ற எதிர்க்கட்சிகளின் அரசியல் எப்படி தீர்வாகும்?

அதேபோல ஏகாதிபத்தியம் இவர்களுக்கு அவ்வப்போது காட்டும் ஆதரவு பா.ஜ.கவை வழிக்குக் கொண்டுவரவும் அவர்களின் டொலர்மைய பொருளாதார சூழற்சியையும் இணையதள தொழில்நுட்ப வர்த்தக முற்றொருமையையும் நிலைநிறுத்துவதை  நோக்கமாகக் கொண்டது. 

இவர்களுடன் இணக்கமாகச் சென்று எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கலாம் என்று கனவு கண்டால் அது இமாலயத் தவறாகவே இருக்கும். அப்படியே அவர்களின் ஆதரவுடன் ஒன்றியத்தில் ஆட்சியமைத்தாலும் டொலர் மூலதனத்தில் இயங்கும் பார்ப்பனிய-ஏகாதிபத்திய முற்றொருமையை அது உடைக்க அனுமதிக்காது.

போட்டியை ஏற்படுத்தாமல் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையை இவர்களால் தீர்க்கமுடியாது. எனவே குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு எதிர்ப்பை சந்திப்பது தவிர்க்க இயலாதது.  ஆகவே நம்முடைய பிரச்சனைக்கான தீர்வு ஏகாதிபத்தியம், பார்ப்பனியம் ஆகிய இருவரின் முற்றொருமையையும் ஒருசேர உடைப்பது;

ஊகபேர வணிகத்துக்காக வரும் அந்நிய மூலதனத்தைத் தடுத்து நமக்குத் தேவையான உற்பத்தி தொழில்நுட்பங்களை அளிக்கும் எல்லா நாட்டு நாணயங்களையும் இந்தியாவில் அனுமதித்து ரூபாய்மைய உள்நாட்டுப் பொருளாதார சுழற்சியை ஏற்படுத்துவது;  

எழுபதுகளைப்போல ரூபாயின் மதிப்பைப் படிப்படியாக அரசே தீர்மானித்து மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்வதை நோக்கி நகர்வது; அதன்மூலம் மக்களின் சேமிப்பை ஊக்குவித்து ரூபாய் மூலதனத்தைப் பெருக்குவது; இழந்த பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கும் ஆற்றலை திரும்பப் பெறுவது; மக்களின் வாங்கும் திறனைக் கூட்டுவது.

ஆகவே நமது பணக்கொள்கை: தொழில்நுட்ப தற்சார்புக்கான பல்துருவ நாணயங்களை அனுமதிப்பது; படிப்படியாக ரூபாய் நாணய மதிப்பை அரசே தீர்மானிப்பதாக மாற்றுவதுரூபாய் மூலதனத்தை உருவாக்கி நிர்வகிக்கும் அதிகாரங்களை மாநிலங்களுக்கு மாற்றுவது.   

ஒன்றிய பா.ஜ.க முன்னெடுப்பதாலேயே ரூபாய் வர்த்தக முன்னெடுப்பை எதிர்மறையில் அணுகக்கூடாது. அது அவர்களின் விருப்பமல்ல; உலகப் பொருளாதாரச் சூழல் அவர்களை மாற்றை நோக்கி நகர்த்தியிருக்கிறது. அவ்வளவே! பிரச்சனை ரூபாய் வர்த்தக மாற்றை நோக்கிய நகர்வில் இல்லை. 

அந்த ரூபாய் மூலதனத்தை அதன்மூலம் பெற்ற மலிவான எரிபொருளின் பலனை எல்லோருக்கும் பரவலாக்கி ஜனநாயகப்படுத்தி உற்பத்தியைப் பெருக்கி மக்களின் வாங்கும்திறனைக் கூட்டாமல் சுயநல நோக்கில் ஓரிருவரிடம் குவிப்பதுதான் பிரச்சனை. அதுதானே பார்ப்பனியம்! அதைத்தானே பார்ப்பனியம் காலம்காலமாக செய்துவருகிறது.

ஆகவே, எதிர்க்கட்சிகள் இந்த மூலதன நிதிய ஓர்மையை உடைத்து ஜனநாயகப்படுத்தி போட்டியை ஊக்குவித்து விலைவாசி வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதை மையமாகக் கொண்ட சமூகநீதி அரசியல்பொருளாதார முழக்கங்களை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்வதுதான் எல்லோருடைய பிரச்சனைக்குமான சரியான தீர்வாக இருக்கும்.

தமிழகம் மற்ற மாநில எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதன் மூலம் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்பட்டு வருகிறது. இதில் வெற்றியடைந்தால் மகிழ்ச்சிதான். தோல்வியடைந்தால்? அப்படியே வெற்றிபெற்று ஆட்சியமைத்தாலும் தமிழகம் கோரும் மாநில சுயாட்சி உரிமைகளுக்கு இக்கூட்டணியினர் உடன்படுவார்களா? 

இந்தக் கேள்விகளுக்கு யாரிடமும் உறுதியான பதில் கிடையாது. எனவே இப்படியான முயற்சிகளில் ஈடுபடும் அதேவேளை தமிழகம் மற்றவர்களைச் சார்ந்திராமல் சொந்த அரசியல் பொருளாதார பலத்தின் மூலம் நமது சுயசார்பை அடைய முற்படுவதுதான் சரியான பாதையாக இருக்கும். அது என்ன பாதை?

அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். 

பகுதி 1: இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள்

பகுதி 2: இந்தியாவைக் கட்டுப்படுத்தும் ஐந்து பெரிய நிறுவனங்கள்

பகுதி 3: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? 

பகுதி 4:  டொலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி?

பகுதி 5:  பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் 

பகுதி 6:  இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும்

பகுதி 7:  உடையும் ஒற்றைத் துருவம்

பகுதி 8: உலகை மாற்றிக் கொண்டிருக்கும் உக்ரைன் போர்

பகுதி 9: எழுபதுகளையும் தொண்ணூறுகளையும் ஒத்த சூழலை எதிர்கொள்ளும் இந்தியா

பகுதி 10: சாதிக்கும் தொழில்மயமாதலுக்குமான தொடர்பு என்ன? 

பகுதி 11: சாதி எப்போது ஒழியும்?

பகுதி 12: எதில் தன்னாட்சியும் தற்சார்பும் வேண்டும்? 

பகுதி 13:  மீண்டும் கிழக்கையும் மேற்கையும் இணைக்குமா தமிழகம்?

Tags: