பலஸ்தீன, இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு

பலஸ்தீன ஆக்கிரமிப்பை முன்னெடுக்கும் பாசிச இஸ்ரேலிய அரசாங்கத்தின் போர்வெறியை யூதர்களின் இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சி எப்படி அணுகுகிறது..? சொல்லொண்ணா துயரில் செத்து மடியும் அரேபியர்கள் விஷயத்தில் பலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சி அணுகுமுறை என்ன? நாட்டுக்கு நாடு வேறுபடுகிறதா?

பலஸ்தீனத்தில் உள்ள அரேபியர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை:

பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை  

காஸா பகுதியில் உள்ள எமது மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியதில் இருந்து, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் இஸ்ரேல் ஆதரவு போக்கு காரணமாக, அரபு நாடுகளின் அரசுகள் மௌனமாக இருந்து வருகின்றன. காஸா பகுதியில் நடைபெற்று வரும் இன அழித்தொழிப்பு குறித்து பிற்போக்கான அரசாங்கங்கள் மௌனமாக இருந்து வருகின்றன. இவை அனைத்தும் ஒட்டுமொத்த உலக நாடுகளின் முன்னிலையில் தான் நடைபெற்று வருகின்றது. பாசிச அரசாங்கத்தின் ஆயுத உதவிகளைப் பெற்றுள்ள இஸ்ரேல் தீவிரவாத (குடியேற்றத்தார்) குழுக்கள் நடத்தி வரும் வன்முறைத் தாக்குதல்கள் மேற்கு கரை பகுதியில் பரவி வருகிறது. பலஸ்தீன கிராமங்கள் மீதும் பிடூயின் (Bedouin) இன மக்கள் மீதான அவர்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பலஸ்தீன நகரங்களை இணைக்கும் புறவழி சாலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினரின் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது.

எமது மக்கள் மீதான இந்தப் போர் ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கிறது. தினந்தோறும், மக்கள் கொல்லப்படுவது மட்டுமின்றி உளவியல் ரீதியிலான ஒரு போரும் தொடுக்கப்பட்டுள்ளது. வடக்கு காஸா பகுதியில் உள்ள 11 இலட்சம் பலஸ்தீனியர்களை காஸா பள்ளத்தாக்கிற்கு அப்பால் உள்ள நிலப்பரப்பிற்கு புலம்பெயர்ந்து செல்ல கட்டாயப்படுத்தும் ஒரு நடைமுறை போரும் தொடுக்கப்பட்டுள்ளது. எங்கு செல்வது? என்று புரியாமல் தவிக்கும் மக்களிடையே குழப்பமும் அச்ச உணர்வும் ஏற்பட்டுள்ளது. மக்களை அப்புறப்படுத்தும் இந்த உத்தரவை இஸ்ரேல் ரத்து செய்ய வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி இருக்கிறது. சாலைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதால், வடக்கு பகுதியில் வசித்து வரும் மக்கள் தெற்கு நோக்கி புலம்பெயர்ந்து செல்லவும் முடியாது. இது தொடர்பான சர்வதேச சமூகத்தின் கருத்து வெட்ககரமானது என்று இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஆதரவுடன் கொடூரமான வெடிகுண்டு தாக்குதல்களும் நடைபெறுகிறது. சினாய் (Sinai) தீபகற்ப பகுதி நோக்கி மக்கள் புலம் பெயர்ந்து செல்வதற்கு உதவியாக இராணுவமற்ற ஒரு பகுதியை ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் காசா பகுதியின் மக்கட்தொகையில் பாதியை அரபு நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அரசின் செயலர் பிளிங்கன் அரபு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளுடன் தான் அவர் அரபு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். காஸா பகுதியில் பெரும் எண்ணிக்கையில் உள்ள பலஸ்தீனிய மக்களை எகிப்து, கட்டார் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்குப் புலம்பெயரச் செய்வதற்கான சதித்திட்டம் இப்போது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கோரிக்கைக்கு இந்த நாடுகள் என்ன பதில் அளிக்கப் போகின்றன என்பது  நமக்குத் தெரியவில்லை.

பலஸ்தீனப் பிரச்சினை குறித்து யூதர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை!

பாலஸ்தீன பிரச்சனையில் இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு 

இஸ்ரேல் – பலஸ்தீன போர் சூழலானது, உலக நாடுகளின் ஆழ்ந்த கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், அது குறித்து இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை:

ஆக்கிரமிப்பை நோக்கமாகக் கொண்ட பாசிச வலதுசாரி இஸ்ரேலிய அரசாங்கத்தின் குற்றச் செயல்கள் ஒரு பிராந்திய அளவிலான போருக்கு வழிவகுத்து வருகிறது. போர் பதற்றமிக்க இந்தச் சூழல் நிறுத்தப்பட வேண்டும்.

கொந்தளிப்பான இது போன்ற காலச் சூழலில், அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களைத் திட்டவட்டமாக மீண்டும் கண்டிக்கிறோம். வன்முறை தாக்குதல்களில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அனுப்புமாறு அனைத்து தரப்பினருக்கும் அறைகூவல் விடுக்கிறோம். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட (அரேபிய மற்றும் யூத மக்கள்) குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எண்ணற்ற அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பிற்கு காரணமான இந்தத் தீவிர மற்றும் அபாயகரமான தாக்குதலுக்கு இஸ்ரேலின் பாசிச வலதுசாரி அரசாங்கம் தான் பொறுப்பு என்று இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

கடந்த வாரத்தில், அரசாங்க ஆதரவு பெற்ற குடியேற்றத்தார் (Settlers), ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் தாக்குதல்களைத் தொடுத்து அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்; அல் அக்ஸா புனிதத்தலமும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது; வீதிகளில் இனப்படுகொலைகள் நடைபெற்றன. தாக்குதல்கள் தீவிரமடைந்து, அதன் உச்சகட்ட நிலையானது ஒரு பிராந்திய அளவிலான போருக்கு வழிவகுக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதை நாம் கண்டு வருகிறோம். அத்தகையதொரு போருக்கான சூழலை இஸ்ரேலின் வலதுசாரி அரசாங்கம், அது ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே தொடர்ந்து திட்டமிட்டு தீவிரமாக உருவாக்கி வருகிறது.

நெதன்யாஹு மற்றும் அவரின் அரசாங்க கூட்டாளிகள், அந்தப் பிராந்தியத்தை போருக்கான திசைவழியை நோக்கி இட்டுச் செல்வதை நிகழ்கால நடவடிக்கைகள் எடுத்துரைக்கின்றன.

பிரச்சனைக்கு இராணுவ ரீதியான தீர்வு என்பது சாத்தியமற்றது என்பதை நாம்  அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகிறோம். ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை  உடனடியாக நிறுத்துவதும், பாலஸ்தீன மக்களின் சட்டப்பூர்வமான  உரிமைகளையும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிப்பதும்  தான் இந்தப் பிரச்சனைக்கான ஒரே தீர்வு ஆகும். அமைதியை நிலைநாட்டுவது  தான் இரு தரப்பு மக்களின் நலன்களுக்கும் உகந்ததாகும்.

பழிவாங்கும் நோக்கத்துடன் காஸா பகுதியில் தாக்குதல்களை நடத்திட நெதன்யாஹு அரசாங்கம் அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி வருகிறது என்று இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிப்பதுடன் சர்வதேச சமூகமும், அண்டை நாடுகளும் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு அமைதியை நிலைநாட்டவும், அரசியல் தீர்வு காணவும் அறைகூவல் விடுக்கிறது.

இஸ்ரேலில் இருக்கும் பலஸ்தீன குடிமக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்தும் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த கவலை கொள்கிறது. இத்தகைய சமூக எதார்த்த நிலையில், எந்தவொரு குழுவைச் சார்ந்த மக்களின் மீதும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் முயற்சிகளுக்கு எதிராக ஓர் உரத்த முழக்கத்தை   இஸ்ரேலின் அறிவார்ந்த மக்கள் சமூகம் (அரேபிய மற்றும் யூதர் சமூகத்தவர்) எழுப்ப வேண்டும். ஆக்கிரமிப்பும், பாகுபாடுகளும் அல்லது இனப் பெருமிதமும் இல்லாத ஒரு நெறிமுறை கொண்ட வாழ்வுக்கான  கூட்டு நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அனைவருக்குமான சமத்துவம், அமைதி மற்றும் மெய்யான ஜனநாயகத்திற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

பலஸ்தீனப் பிரச்சினையில் உலகம் முழுமையிலும் உள்ள கம்யூனிஸ்டுகள் பாதிக்கப்படும் பலஸ்தீனர்களின் பக்கமே சமரசமின்றி உறுதியாக நிற்கிறார்கள்!

தமிழில்: அருண் அசோகன்

Tags: