நம்பிக்கை தரும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

-தயாளன்

நாடு எதிர் கொண்டிருக்கும் அபாயமான, அச்சமிக்க சூழலில், காங்கிரசின் தேர்தல் அறிக்கையோ, மிகப் பெரும் மாற்றத்திற்கான நம்பிக்கைகளை தருகின்றன!  2024 – நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸின் அறிக்கை மிகுந்த பொறுப்புணர்வோடும், எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும் அசத்துகிறது.

75 ஆண்டு கால இந்திய தேர்தல் வரலாற்றில் விடுதலைக்கு முன்பு துவங்கிய காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியையும், சவாலையும் எதிர் கொண்டிருக்கிறது. ஒன்றிய ஆட்சியை பி.ஜே.பியிடம் 2014 இல் பறிகொடுத்ததோடு தனது வரலாற்றில் மிக மோசமான தோல்வியை பெற்ற காங்கிரஸ், 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் மிகப் பெரிய சறுக்கலை சந்தித்தது. இந்திய அரசமைப்பும், அரசியல் சாசனமும் மிக கடும் நெருக்கடியில் சிக்கி இருக்கும் இக்கால கட்டத்தில் 2024 தேர்தலில் காங்கிரஸ் வாழ்வா? சாவா? என்ற முனையில் நிற்கிறது.

“இந்தியா” கூட்டணியை உருவாக்கியதும், நாடு முழுவதும் மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ’ நடை பயணங்களும், ராகுல் காந்தியின் கடும் உழைப்பும் நம்பிக்கைக் கீற்றை உருவாக்கி இருக்கிறது.

இந் நிலையில், எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலின் பெரிய திருப்பு முனையை உருவாக்ககூடும் என்று ஆய்வாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் அறிக்கை சுமார் 48 பக்கங்களில் பல்வேறு தலைப்புகளில் உருவாகி இருக்கிறது. மேலோட்டமாக பார்த்தாலே, நாட்டின் எதிர்காலத் திசையை வளர்ச்சிக்கு மீண்டும் திருப்புவதையும்,  திட்டமிட்டு வளர்க்கப்பட்ட பிளவு, வெறுப்புகளில் இருந்து நாட்டை மீள கட்டுவதையும் நோக்கமாக கொண்டிருப்பது புலனாகிறது.

பி.ஜே.பியை எதிர்கொள்ள மிகப் பெரிய ஆயுதமாக இந்த தேர்தல் அறிக்கை பயன்படும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் “இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இந்த தேர்தல் அறிக்கைதான்” என்று குறிப்பிடுவது மிகையல்ல.

முதலில் தேர்தல் அறிக்கையின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது காங்கிரஸ் கட்சி.   கடந்த பத்தாண்டுகளில் வீழ்த்தப்பட்ட இந்தியாவின் சுதந்திர உணர்வு, அரசியல்  சாசனம், அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றை மீட்டெடுப்பதை முதன்மை  நோக்கமாக வலியுறுத்துகிறது. ரவீந்திரநாத் கவிதை ஒன்றை மேற்கோள் காட்டி தேர்தல்அறிக்கை தொடங்கி, சமூக நீதி, பெண்கள், தலித், அரசியல் சாசனம், இளைஞர் நலன்,  நீதி, பேச்சுரிமை, ஊடகம் என்று அனைத்தும் உள்ளடக்கிய பொதுவான சமமான  வளர்ச்சியை வலியுறுத்துகிறது.

அறிமுகம் என்ற தலைப்பில், வேலைவாய்ப்பை இழந்திருக்கும் இளைஞர்கள், நம்பிக்கையை இழந்திருக்கும் விவசாயிகள், தொழில்களை இழந்திருக்கும் வணிகர்கள், நலிவுற்று இருக்கும் சிறு குறு, நடுத்தர தொழில்கள், பாதுகாப்பை இழந்திருக்கும் பெண்கள், பொருளாதார உரிமையை இழந்திருக்கும் விளிம்பு நிலை, ஒடுக்கப்பட்ட மக்கள், சுதந்திர உணர்வை இழந்திருக்கும் அரசமைப்பு நிறுவனங்கள் ஆகியவற்றை மீட்டெடுக்க விரும்புவதாக தெரிவிக்கிறது. தங்களது உடனடியான கவனமும், அக்கறையும் “பயம், மிரட்டல்கள், வெறுப்பு ஆகியவற்றிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் மீட்டெடுப்பதே என்று அறைகூவல் விடுக்கிறது.

நாட்டு மக்களுக்கு முன் உள்ள மிகப்பெரிய கேள்வி காங்கிரசா? அல்லது பிஜேபியா?  என்பதல்ல. சனநாயக அரசா? அல்லது சர்வாதிகாரமா?, விடுதலை உணர்வா?  அல்லது அச்ச உணர்வா? அனைவருக்குமான வளர்ச்சியா? அல்லது ஒரு சிலருக்கான வளர்ச்சியா? என்பதோடு, நாட்டு மக்களுக்கு தேவை நீதியா? அநீதியா? என்ற கேள்வியை  முன்வைத்து தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை தருகிறது காங்கிரஸ் கட்சி.

சமூக நீதி:
ஆட்சிக்கு வந்தால்,  நாடு முழுவதும் சமூக – பொருளாதார – சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று உறுதி அளிக்கிறது. இதன் மூலம் வெளிப்படையான சமூக நீதி உறுதிப்படுத்தப்படும். 50% இட ஒதுக்கீடு வரம்பு தளர்த்தப்படும் என்றும், 10% பொருளாதரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அனைத்து சாதிகளுக்குமானதாக விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் உயர்சாதியினருக்கு மட்டும் என்ற பாகுபாடு ஒழிக்கப்படும் என்று அறிவிக்கிறது காங்கிரஸ்.

அரசு மற்றும் பொதுத்துறைகளில் காலியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். குறுகிய கால ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்ட்டு நிரந்தர பணியிடங்களாக அவை மாற்றப்படும்.  நாடு முழுவதும் அம்பேத்கர் பெயரில் நூலகங்கள் ஏற்படுத்தப்படும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் முக்கியமானவை, முற்போக்கானவை.

கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாட்டை ஒழிக்க ரோஹித் வெமுலா பெயரில்  சட்டம் கொண்டு வரப்படும், ரெங்கே கமிஷன் பரிந்துரைகள் ஏற்கப்படும் போன்ற  வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

முதியோர், பெண்கள் நலன்:

முதியோர், கைம்பெண்கள், மாற்று திறனாளிகளுக்கான பென்ஷன் 1000 ஆக உயர்த்தப்படும், மாற்றுத் திறனாளிகள் சட்டம் 2016 மிக தீவிரமாக அமுல்படுத்தப்படும், ஆகியவற்றோடு பால் புதுமையினரின் உரிமைகளை காக்க புதிய சட்டம் இயற்றப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் என்ற தலைப்பில், ராஜஸ்தான் மாடலில் 25 இலட்சம் வரையிலான காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும். 75 சதவீத பணியாளர்கள் இல்லாத மருத்துவமனைகள், கல்லூரிகளுக்கு அனுமதி தரப்படாது என்றும் தெரிவிக்கிறது.

இளைஞர் நலன்:
பட்டய படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வருடத்திற்கு ஒரு இலட்சம்  ரூபாய் பயிற்சி கட்டணமாக வழங்கப்படும். ஒன்றிய துறைகளில் நிலவும் 30 இலட்சம்  காலியிடங்கள் முழுவதுமாக நிரப்பப்படும். தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படும்.  வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக கல்விக் கடன்கள் இரத்து செய்யப்படும்  என்றும் அறிவிக்கிறது.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் தீவிரமாக அமுலாக்கப்படும்.  தேசிய கல்விக் கொள்கை மாநிலங்களின் ஒப்புதலோடு மறு ஆய்வு செய்யப்படும். ஆசிரியர்கள் கல்வி அல்லாத பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். கல்விப் பணிகளில் ஒப்பந்த முறை நீக்கப்பட்டு நிரந்தர பணியிடங்கள் நிரப்படும். நீட், க்யூட் ஆகிய தேர்வு முறைகள் அந்தந்த மாநிலங்களின் முடிவுக்கு விடப்படும்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் வயதான பெண்களுக்கு வருடம் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் மஹாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.  சட்டசபை,  நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஒன்றிய  பணியிடங்களில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்படும். உயர் பதவிகளில் பெண்கள்  பணியமர்த்த்ப்படுவார்கள்.

விவசாயிகளுக்கு, குறைந்த பட்ச ஆதாரவிலை அளிக்கப்படும். தேசிய ஊரக 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி 400 ரூபாயாக உயர்த்தப்படும். மீனவர்களுக்கு டீசல் மானியம் தரப்படும். உள்நாட்டு மீன் பிடிப்பும், மீன் வளர்ப்பும் விவசாயமாக அங்கீகரிக்கப்படும். தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலியாக 400 ரூபாய் நிர்ணயிக்கப்படும்.

பயம், வெறுப்பு ஆகியவற்றிலிருந்து மக்களை விடுவிக்க காங்கிரஸ் உறுதி கொள்கிறது. ஊடகங்களின் அச்ச உணர்வு நீக்கப்படும். ஒரு நாடு, ஒரு தேர்தல் முறை நிராகரிக்கப்படும்.  சட்டங்கள், வழக்குகள், காவல், கைது, சிறை மரணம், புல்டோசர் நீதி ஆகியவை அரசியல் ஆயுதங்களாக மாறுவது  தடுக்கப்படும். கட்சி தாவுதல் சட்டப்படி தடுக்கப்படும். திட்டக் கமிஷன் மீண்டும் நிறுவப்படும்.

ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும். கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த ஊழல், முறைகேடுகள் குறிப்பாக தேர்தல் பத்திர முறைகேடுகள் முழுமையாக விசாரணை செய்யப்படும்.

பொருளாதார கொள்கை :
சிறு, குறு நடுத்தர தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டு அதன் மூலம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். தொழிலாளர் நலச் சட்டங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அக்னிபாத் திட்டம் கைவிடப்படும். அங்கன்வாடி பணியாளர்கள் இரு மடங்காக்கப்படுவர். வருமானவரி முறைப்படுத்தப்படும்.  சிறு, குறு நிறுவனங்கள் மீதான “ஏஞ்சல் வரி” நீக்கப்படும். மோதி அரசின் செஸ் வரி முறைப்படுத்தப்படும். ஜி.எஸ்.டி (GST) வரி மறு ஆய்வு செய்யப்பட்டு ஜிஎஸ்டி 2.0 கொண்டுவரப்படும். விவசாய இடுபொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி முழுமையாக ரத்து செய்யப்படும்.

கூட்டாட்சி:
இந்தியாவின் ஒற்றுமைக்கு அடித்தளமாக விளங்கும் கூட்டாட்சி முறை  வலுப்படுத்தப்படும். பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மாநிலப்பட்டியலுக்கு  மாற்றப்படும். மாநிலங்களுக்கு தரப்படும் வரி பகிர்வு நேர்மையானதாகவும்  வெளிப்படையானதாகவும் மாற்றப்படும். டெல்லி, புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து  வழங்கப்படும்.

சூழலியல், காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படும்.  ஆறுகள், காற்று மாசுபாடு தவிர்க்கப்படும்.

இவ்வாறு பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“எங்கே மனம் பயமில்லாமல் இருக்கிறதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ
அங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறது,
குறுகிய உள்நாட்டு சுவர்களால்
உலகம் துண்டு துண்டாக உடைக்கப்படவில்லை,
உண்மையின் ஆழத்திலிருந்து வார்த்தைகள் வெளிவரும் இடம்
அயராத முயற்சி தன் கரங்களை முழுமையை நோக்கி நீட்டும் இடத்தில்,
தெளிவான பகுத்தறிவு அதன் வழியை இழக்காத இடத்தில்
இறந்த பழக்கத்தின் மந்தமான பாலைவன மணலில்
மனம் உன்னால் முன்னோக்கி செல்லும் இடம்
எப்போதும் விரிவடையும் சிந்தனை மற்றும் செயலில்
அந்த சுதந்திர சொர்க்கத்தில், என் தந்தையே, என் தேசம் விழித்துக் கொள்ளட்டும்”

என்ற புகழ்பெற்ற ரவீந்திரநாத் கவிதையை மேற்கோள் காட்டி, பயமற்ற, சுதந்திரமான, வெறுப்பற்ற வளர்ச்சி கொண்ட இந்தியாவை உருவாக்க காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் நாட்டையும் அரசியல் சாசனத்தையும் காக்க அறைகூவல் விடுக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கை தேர்ந்த வல்லுனர்களால் செதுக்கப்பட்டு உரையாடி விவாதித்து, அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது.  ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்ல காங்கிரஸ் விரும்புகிறது.

சில கவர்ச்சி திட்டங்கள் இருந்தாலும், உடனடியான தேர்தல் வெற்றிக்காக பி.ஜே.பியை வெல்ல வேண்டிய தேவையின் பொருட்டு அதையும் ஏற்றுக் கொள்ள முடிகிறது.  சாகர் மாலா, தனியார் மயம், சி.ஏ.ஏ  போன்ற விஷயங்களில் காங்கிரஸ் மவுனம் காட்டியிருப்பது வருத்தமளிக்கிறது. இதில் காங்கிரஸ் நிலைபாடு கண்டிப்பாக வெளிப்பட்டிருக்க வேண்டும். எனினும், கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார, பண்பாட்டு வீழ்ச்சியை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருப்பதை இந்த தேர்தல் அறிக்கை உணர்த்துகிறது.

வெறுப்பும், வன்மமும், மதவாத பிளவும், கூர்மையாக்கப்படும் துருவ அரசியலும்  நாட்டை மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிற இந்த சூழலில்  காங். கட்சியின்  இந்த அறைகூவல் நம்பிக்கை ஒளியை காட்டுகிறது.  ராகுலின் அயராத உழைப்பும்  நுட்பமான தேர்தல் அறிக்கையும் அதை  பிரதிபலிக்கின்றன.  காங்கிரஸ் கட்சி தனது  “பிரதமர் வேட்பாளரான” தேர்தல்  அறிக்கையை நாடு முழுவதும் இண்டு இடுக்குகளில் கொண்டு சேர்ப்பதிலேயே அதன் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும்  அடங்கியிருக்கிறது.

Tags:

Leave a Reply