நான்கு இந்திய மாநிலத் தேர்தல்கள், நமக்கு சொல்லும் செய்திகள்!
-ச.அருணாச்சலம்

அசாம், மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு ஆகிய இந்திய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பல திருப்பங்களை இந்திய அரசியல் அரங்கில் ஏற்படுத்தியுள்ளன.! அசாமில் பா.ஜ.க செய்த சூழ்ச்சிகள், மேற்கு வங்கத்தில் மம்தாவின் வீழ்ச்சி, பா.ஜ.கவின் எழுச்சி எப்படி உருவானது?,கேரளாவில் காங்கிரசின் வெற்றி – ஒரு விரிவான அலசல்.
இந்த தேர்தல் முடிவுகளின் அடிநாதமாக திகழ்வது ஆட்சியாளர்கள் மீதான மக்களின் அயற்சியே ஆகும். இதற்கு விதி விலக்காக உள்ளது அசாம் மாநில தேர்தல் முடிவுகள் தான். அங்கு ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்து கொண்டதற்கு பின்னால் உள்ள காரணங்களும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. பாண்டிசேரி தேர்தல் முடிவுகளை, அதன் அளவு மற்றும் வீச்சை கருத்தில் கொண்டு நாம் இங்கு கருத்தில் கொள்ளவில்லை.
மூன்று முறை மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருந்த (2011, 2016, 2021) திரிணாமுல் காங்கிரசும், இரண்டு முறை கேரளத்தில் அபூர்வமாக தொடர்ந்த இடதுசாரி அரசும், 2021 முதல் ஐந்தாண்டுகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழக அரசும் இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டன.இம்மூன்று மாநிலங்களிலும் தோற்கடிக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மீதான மக்களின் வெறுப்பும் , அயற்சியும் தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டன.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மேற்கு வங்கத்தில் முதல்வர் ம்மதா பானர்ஜி ஆகிய இரு தலைவர்களின் சொந்த தோல்வியும் (கொளத்தூர் மற்றும் ப்பானிபூர்) கேரள முதல்வர் பினராயி விஜயனின் “சாரமற்ற வெற்றியும்” இதை உறுதிபடுத்துகின்றன.
இந்த மாநிலங்களில் எல்லாம் வேலை செய்த ‘ஆட்சியாளர் மீதான மக்களின் அயற்சி’ (anti incumbency) என்ற காரணி அசாமில் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரும் பாஜக மீது ஏன் வேலை செய்யவில்லை என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது.
அசாமில் அந்த காரணி வேலை செய்யவில்லை என்பதை விட, அத்தகைய மனநிலையை மக்கள் அடையாமல் அவர்கள் கவனத்தை திசை திருப்புவதில் முதல்வர் ஹிமந்தா சர்மாவும், பா.ஜ.கவும் வெற்றி கண்டுள்ளனர். இதில் அவர்களுக்கு உதவிய இரு காரணிகளில் அசாமின் பாரம்பரியமும், அங்கு வாழும் பல தேசீய இன மக்கள் தொகையும் ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம், 2023 இல் நடத்தப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு ஆகும்.
அசாம் தேர்தல்
அசாமின் மொத்த மக்கள் தொகையில் 61.47% இந்துக்களும், 34.22% இஸ்லாமியர்களும் உள்ளனர். மொழி வழியாகவும் அசாமியை தாய் மொழியாகவும் வங்காள மொழியை தாய் மொழியாகவும் கொண்ட இருபெரும் பிரிவாக உள்ள சமுதாயம் அது.
இந்து – முஸ்லீம் மக்களின் கணிசமான இருப்பு, பா.ஜ.கவின் வகுப்புவாத அரசியலுக்கு உகந்த களமாக இருக்கின்றது. இதற்கு முன்பு அசாமில் தலைவிரித்தாடிய அசாமிய தேசீய இனவாதம் “அசாமிய ஜாதியபாடி” இயக்கமாக உருவெடுத்து ஜாதி – மாதி – பேட்டி ஆகிய மாண்புகளின் அடிப்படையில் அசாமில் வசிக்கும் வங்காளிகளை அப்புறப்படுத்தும் இயக்கமாக உருவெடுத்தது.
அசாம் மாணவர் கிளர்ச்சியாக 1980களில் வெடித்த இயக்கத்திலும் அதை நடத்திய அசாம் கண பரிஷத் கட்சியிலும் தேசீய இனவாதம் இருந்ததே ஒழிய இந்து முஸ்லீம்என்ற மதவாதம் இல்லை. ஆனால் வெறுப்பு என்ற ஒற்றை காரணியில் இணைந்த தேசீய இனவாதிகளும், மதவாதிகளும் அசாம் அரசியலை இன்று பா.ஜ.கவின் பாதங்களில் கொண்டு சேர்த்துள்ளனர். வங்காளிகளை வந்தேறிகள் என்று நம்புகின்ற அசாமிய மக்களிடம் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் “மியா முஸ்லீம்களே” என்று இஸ்லாமியருக்கு எதிரான புதிய வகுப்புவாத போதனையை பா.ஜ.க விதைத்து அதன் பயனையும் அறுவடை செய்கிறது.
இதற்கு உறுதுணையாக தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை 2023 ல் துவக்கிய பா.ஜ.க இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை உடைத்து அவர்களின் செல்வாக்கை குறைத்தனர். இதை எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவனரின் நன்மைக்காக செய்கிறோம் என கூறியதோடன்றி, போடோ பழங்குடியினரையும் இஸ்லாமியருக்கு எதிராக நிறுத்துவதில் வெற்றி கண்டனர்.
இப்படி அசாமிய இந்துக்களையும், வங்காளி இந்துக்களையும், முஸ்லீம் அல்லாத சிறுபான்மையினரையும் (தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர்) ஆகிய மூன்று பிரிவினரையும் இந்து தேசீயம் என்ற போர்வையில் ஒன்று சேர்த்துள்ளது. இதை எதிர்க்க காங்கிரஸ் கட்சி தவறியதும், இஸ்லாமியருக்கெதிரான பா.ஜ.க அரசின் செயல்களை எதிர்த்து களம் காணத் தயங்குவதும் (இந்துக்களை பகைத்து கொள்ள வேண்டுமே என தயங்குவது) காங்கிரசின் இரண்டுங்கெட்டான் அரசியலாக அங்கு உள்ளது.
இதன் விளைவு வகுப்புவாதம் தேர்தல் களத்தில் பா.ஜ.க விற்கு (97+5= 102 இடங்கள், வாக்கு 48.27%) அதிக இடங்களை ஈட்டி தந்துள்ளது. பா.ஜ.க வெற்றி பெற்றுள்ள 102 தொகுதிகளிலும் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை என்பதும், எதிர்கட்சி வரிசையில் வென்ற 24 இடங்களில் 22 பேர் இஸ்லாமிய சமூகத்தினர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காங்கிரசின் உட்கட்சி பூசலும், ஒற்றுமையின்மையும், முக்கிய தலைவர்களின் விலகலும், எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையும் சேர்ந்து பா.ஜ.கவை மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்த்தியுள்ளது.
மேற்கு வங்கத் தேர்தல்
2011 முதல் தொடர்ந்து ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் இந்த முறை தோல்வியை சந்தித்துள்ளது. பா.ஜ.கவின் வெற்றி (206 தொகுதிகள், வாக்கு விகிதம் 45.83%) ஒரு அறமற்ற வெற்றி என்றும், முதல்வர் பதவியை துறக்கப் போவதில்லை என ம்மதா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் காவிக் கொடியை ஏற்ற வேண்டும் என்று இடைவிடாது “உழைத்த” மோடி அரசு வாக்கு திருட்டின் மூலம் இந்த வெற்றியை ஈட்டியுள்ளது என்று எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சிறப்பு தீவிர தேர்தல் அட்டவணை திருத்த நடவடிக்கைகளின் மூலம் மேற்கு வங்கத்தில் இலட்சக் கணக்கானோர் வாக்குரிமை பறிக்கப்பட்டனர். நீதியையும், அரசியல் சாசன மாண்பையும் நிலைநாட்ட வேண்டிய உச்சநீதி மன்றம் தனது கடமையை செய்ய தவறியதானால் இந்த விபத்து மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் ஒருதலை பட்சமான, தான்தோன்றி தனமான, செயல்பாடுகளால் வாக்காளர் உரிமை மறுக்கப்பட்டதோடன்றி, தேர்தல் களமும் சமநிலை குலைந்து மாசுபடுத்தப்பட்டது. ஒன்றிய அரசின் சட்ட விரோத நடவடிக்கைகள் மூலமும், சுயாதீன அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்தி மேற்கு வங்க அரசை முடக்கியும் பா.ஜ.க இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது மட்டுமே தேர்தல் முடிவுகளை தீர்மானித்தன என்றும் சொல்வதற்கில்லை. நேர்மையான தேர்தல் நடந்திருந்தால் மேற்கு வங்க மக்கள் மீண்டும் ம்மதா பானர்ஜியை, திரிணாமுல் கட்சியை தேர்ந்தெடுத்திருப்பார்களா? என்ற கேள்விக்கும் தெளிவான விடையில்லை.
2016, 2019 தேர்தல்களில் படிப்படியாக வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்ட பா.ஜ.க, 2021 மாநிலத் தேர்தலில் ஆக்ரோஷமாக களம் இறங்கியது, ஆட்சியை பிடிக்காவிட்டாலும் 77 தொகுதிகளை வென்று, 38% வாக்குகளை அங்கு பெற்றது.
எனவே பா.ஜ.கவின் வெற்றி SIR மூலமாக மட்டுமே சாத்தியமானது என்ற கருத்து சரியானதல்ல. சிறப்பு தீவிர திருத்தத்தின் விளைவாக ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்தார்கள் என்பதும், பாதிக்கப்பட்டவர்களில் அதிகம்பேர் இஸ்லாமியர்கள் என்பதும் உண்மைதான். பத்து முதல் பதினைந்து தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வாக்காளர் நீக்கத்தினால் தோல்வியை தழுவினார்கள் என்பதும், அங்கு பா.ஜ.க வென்றது என்பது மறுப்பதற்கில்லை. இவ்வாறு வெட்டி குறைக்கப்பட்ட தொகுதிகள் 13 இல் திரிணாமுல் கட்சி வென்றிருப்பதும் உண்மைதான்.
எனவே SIR மட்டுமே ம்மதாவின் தோல்விக்கு காரணம் என்று கூறுவது சரியல்ல. ம்மதாவின் தோல்விக்கான காரணங்களில் SIR மிக முக்கியமானது. அது தவிர்த்த ஏனைய முக்கிய காரணங்கள் பல உள்ளன.
அவை, திரிணாமுல் ஆட்சியில் தலைவிரித்தாடிய ஊழலும், முறைகேடுகளும் ஆகும். அந்த கட்சியின் கட்ட பஞ்சாயத்து நடவடிக்கைகளும், வசூல் மையங்கள் வைத்து மாநிலம் பூராவும் கமிஷன் பார்த்த திரிணாமுல் கட்சி மக்களின் ஆதரவை இழந்து நின்றது,
‘போதுமடா சாமி ‘ என மக்கள் தப்பிக்கும் வழியைத் தேடியது வாக்குகளில் தெரிகிறது. பாலியல் வன்கொடுமைகளும், குற்றச் செயல்களும் ஆட்சியினரின் ஆதரவோடு வலம் வருவதும், பாதுகாப்பின்மையையும் மக்கள் பார்த்து பார்த்து சலித்து விட்டனர். ம்மதா அரசின் மக்கள் நலத்திட்டங்களும் , உதவித் தொகைகளும் இந்த சலிப்பை சரி செய்யவில்லை.
பா.ஜ.கவினரின் வகுப்புவாத பிரசாசாரங்களும், சங் பரிவாரின் ஊடுருவல்களும் மேற்கு வங்க கிராமப் புறங்களில் பல வடிவங்கள் பெற்று காலூன்றின. நகர்ப்புறத்தில் உள்ள வாக்காளர்கள் பலர் வகுப்புவாதத்திற்கு துணை போகாவிடினும், திரிணாமுல் கட்சியினரின் அராஜகத்திற்கு முடிவு கட்ட, களத்தில் வலிமை வாய்ந்த கட்சியாக திகழும் பா.ஜ.க விற்கு ஆதரவை இப்பொழுது நீட்டியுள்ளனர். இடது சாரிகளும், காங்கிரசும் மேற்கு வங்கத்தில் குறைத்து வாக்கு வாங்கும் சூட்சுமம் இது தான். இத்தகைய கள நிலைமையை பா.ஜ.க வெற்றிகரமாக பயன்படுத்தி இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை அங்கு நடைமுறை படுத்த முயற்சிக்கிறது.
மொத்த வாக்காளர்களில் 30% விழுக்காடுள்ள இஸ்லாமியர்களின் வாக்கு முன்பு ஒருசேர திரிணாமுல் கட்சிக்கு சென்றன. ஆனால் அது இப்பொழுது காங்கிரஸ், இடதுசாரிகள், மற்றும் இந்திய மத சார்பற்ற முன்னணி (ISF) என்ற கட்சிகளும் திரிணாமல் கட்சியோடு இந்த வாக்குகளை பங்கு போடுவதால் திரிணாமுல் வாக்கு விகிதம் குறைந்துள்ளது.
அதே சமயம் இந்துக்களின் வாக்கு, மேலும் மேலும் ஒருசேரக் குவிந்து சங் பரிவாரத்தை ஆதரிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து களம் காண திராணாமுல் கட்சியிடம் தெளிவான சித்தாந்தமோ, சிறப்பான திட்டமோ, கொள்கையோ இல்லை. மாற்றம் வேண்டும் எனக்கூறி மாற்றத்திற்கான மாற்றுக் கொள்கையோ, திட்டமோ இல்லாது ஆட்சியில் அமர்ந்தார் ம்மதா 2011ல் . அப்பொழுது மக்கள் இடது சித்தாந்தத்தை கைவிட்டு, ம்மதாவின் கவர்ச்சி அரசியலுக்கு இரையாயினர். இன்று 2026-ல் பதினைந்து ஆண்டுகள் கழித்து திரிணாமுல் கட்சி அராஜகத்தை ஒதுக்கிவிட்டு, மாற்றம் என்ற பெயரில் இந்துத்துவ சித்தாந்தத்தை, வங்க மக்கள் தழுவுகின்றனரா?
கேரளத்தில் பத்து ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரி அரசு தேர்தலில் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது. 140 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட கேரளத்தில் 102 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் தலைமையிலான UDF மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. வெறும் 35 தொகுதிகளை மட்டுமே வென்ற இடதுசாரி கூட்டணி , தன்னுடைய வாக்கு விகிதத்திலும் (37.34%) வீழ்ச்சியே கண்டுள்ளனர்.
பத்தாண்டுகளாக ஒரே கூட்டணி ஆட்சியில் நீடிப்பது கேரளத்தின் வழக்கம் அல்ல, என்பதை முறியடித்து பினராயி விஜயன் ஆட்சி 2021 இல் ஆட்சியில் நீடித்தது. ஆனால், இப்பொழுது ஒப்பீடு செய்ய மாற்றுக் கட்சி ஆட்சி இல்லாத நிலையில் இடது சாரிகளின் ஆட்சி மக்களின் மனதில் சலிப்பை சம்பாதித்து தோல்வியை தழுவியுள்ளது. இத்துடன் ஆட்சி முறையில் முன்பிருந்த கூட்டுத் தலைமை, கலந்துணர்ந்து செயல்படுதல் என்ற நிலைமாறி, பினராயி விஜயனின் முடிவும் , முகமும் அரணின் அனைத்து செயல்களிலும் தென்பட்டதால் மூத்த கட்சி தலைவர்கள் , விஜயனின் ஆதிக்கத்தை எதிர்த்து கட்சியிலிருந்து வெளியேறினர். இன்று மக்கள் மத்தியிலும் அந்த சலிப்பு பரவியுள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
கடந்த முறை மலபார் பகுதியில் சிறுபான்மையினரின் வாக்குச் சிதறலால் அந்த பகுதியில் அதிக இடங்களை பெற்று ஆட்சியை தக்க வைத்த விஜயனுக்கு இந்த முறை சிறுபான்மையினர் காங்கிரஸ் கூட்டணியின் பின் சிந்தாமல், சிதறாமல் அணி திரண்டதால் தோல்வியை சந்திக்க தேர்ந்துள்ளது. மற்றொரு சிறுபான்மையினரான கிறித்துவர்களும், காங்கிரஸ் கூட்டணிக்கான ஆதரவை நீட்டித்ததால் பினாராயி விஜயனின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
திருவிதாங்கூர் பகுதியில் பா.ஜ.கவினர் மூன்று தொகுதிகளில் வென்று தங்களது வாக்கு விகிதத்தை 14% உயர்த்தி உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் .
இடது சாரி அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும் விஷயங்களில் ஒன்றான வெள்ளப்பள்ளி நடேசன் விவகாரத்திலும், சபரி மலை வழக்கில் அரசின் நிலை பாட்டிலும் ஊசலாட்டங்கள் ஏற்பட்டுள்ளதை சரி செய்யாத அல்லது சரி செய்ய விரும்பாத இடதுசாரி அரசு சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதை தேர்தல் முடிவுகள் சுட்டிகாட்டுகின்றன.
சபரிமலை கோவில் தங்கம் திருடு போன விவகாரத்திலும் ஆட்சியின் மீது விழுந்த சந்தேகப்புள்ளி மறையவில்லை என்பதையும் தேர்தல் காட்டுகிறது. பல்வேறு சமய மார்க்கங்களை பின்பற்றும் கேரள மக்கள் மாபெரும் தவறுகள் ஏதும் இல்லாவிடினும் இடதுசாரியினரின் பத்து ஆண்டு ஆட்சியில் சலிப்படைந்து , காங்கிரஸ கூட்டணிக்கு வாய்ப்பு கொடுக்க தயாராய் உள்ளதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் தி.மு.க அரசை மக்கள் தோற்கடித்தனர் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் தி.மு.க வை விட்டால் தமிழர்களை காப்பாற்ற யாருமில்லை என்ற மாய வலையை பின்னியிருந்த ஊடகத்தாரின் சித்திரத்தை கிழித்தெறிந்து தமிழக வெற்றி கழகம் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. இதில் ஆச்சரிய மூட்டும் தகவல் என்னவென்றால், கட்சி துவங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆலமரம் என்று வருணிக்கப்பட்ட இரு திராவிட கட்சிகளை தன்னந்தனியாக களத்தில் எதிர் கொண்டு தோற்கடித்துள்ளார். இதற்காக விஜய் எடுத்த முடிவும், வகுத்த திட்டமும், அதை செயல்படுத்திய விதமும் உண்மையில் சாதனைகளே ஆகும்.
அக்கட்சி அனைவரின் எதிர்பார்ப்புகளையும் மீறி திமுக வை தோற்கடித்தது, அதிமுக – பா.ஜ.க கூட்டணியை ஓரங்கட்டி மூன்றாமிடத்திற்கு தள்ளியுள்ளது பலரது கனவை கலைத்துள்ளது எனலாம்.
தி.மு.க கூட்டணியின் தோல்விக்கு காரணங்கள் ஏராளமுள்ளன. மக்களின் வெறுப்போ பன் மடங்கு இருந்தன. இயற்கை வளக்கொள்ளை, மணற் கொள்ளை, திட்டங்களில் ஊழல், வேலையின்மை, அரசு வேலைகளை தனியாரிடம் ஒப்பந்தம் மூலம் கொடுப்பது, கள்ள சாரயம் பெருக்கெடுத்தல், காவல்துறையின் அத்துமீறல் , வெளியில் வீராப்பு உள்ளே சரண்டர் என பா.ஜ.க கொள்கைகளை சத்தமின்றி அமுல் செய்த (கல்வி மற்றும் தொழிற் கொள்கைகளை) ஸ்டாலின் அரசு மீது மக்களுக்கு வெறுப்பும் சலிப்பும் ஏராளமிருந்தன. ஆனால் இவற்றையெல்லாம் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதன் மூலமும், நலத்திட்டங்கள் மூலமும் மூடி மறைத்து விடலாம் என்று தி.மு.க நினைத்தது.
இந்த நாடகத்திற்கு மக்கள் ஒரு முடிவு கட்டியுள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதிலும் புதிதாக களமிறங்கியுள்ள விஜய் கட்சியான த.வெ.க விற்கு 108 இடங்கள் கொடுத்து தங்கள் எண்ணத்தை மக்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

இதனால் ஏற்பட்டுள்ள அழு குரல்கள் ஒருபுறமிருக்க, ஒட்டு மொத்தமாக அகில இந்திய அளவில் இத்தேர்தல் முடிவுகள் கூறும் செய்தி என்ன?
ஆளும் மோடி அரசின் மதவாதப் போக்கையும்,
ஜனநாயக விரோத போக்கையும் எதிர்கட்சிகள் எவ்வாறு எதிர் கொள்ள போகின்றன?
மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பது, தொகுதி மறுசீரமைப்பை அனைவரும் ஏற்கும் விதத்தில் எவ்வாறு நிறைவேற்றுவது, அரசியல் சாசனக் கூறுகளை காப்பாற்றி அனைவருக்குமான புதிய அரசை எவ்வாறு ஏற்படுத்துவது? என்ற முனைப்பில் இந்தியா கூட்டணியின் பங்கு இனி எப்படி இருக்கும்?
உண்மையில் இக் கட்சிகளெல்லாம் இணைந்து பா.ஜ.க வை – மோடி ஆட்சியை – வீழ்த்த முடியுமா? அரசியல்,பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளில் இக் கட்சிகள் பா.ஜ.க வின் கொள்கைகளுக்கெதிரான உருப்படியான மாற்று திட்டத்தை முன் வைக்காமல் இது சாத்தியமா?
வாக்கு திருட்டு என்று அவ்வப்போது கூவாமல், தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் நடைமுறையையும் தனது கட்டுபாட்டில் வைத்திருக்கும் மோடி அரசின் செயல்களை எதிர்த்து எதிர்கட்சிகள் நிலைத்து நின்று போராட திட்டம் உள்ளதா?
ஊழலிலும் அதிகார முறைகேட்டிலும் பா.ஜ.க போலவே இந்தியா கூட்டணி கட்சிகளும் ஈடுபட்டுக் கொண்டு நாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்று பேசுவதால் மக்களின் நம்பிக்கையை பெற முடியுமா?
தோல்வியடைந்துள்ளதால் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க மற்றும் திரிணாமுல் மற்றும் இடது சாரி கட்சிகளின் நிலை என்ன?
காங்கிரஸ் கட்சி கேரளத்தில் ஆட்சியை பிடித்தாலும், அசாமில் மோசமான தோல்வியடைந்துள்ளது. மாநிலங்களில் எதிரும் புதிருமாக இருந்தாலும் தேசீய அளவில் காங்கிரசுடன் இடது சாரிகள் நிற்கின்றனர். அப்படியும் இப்படியும் இருந்த ம்மதா ‘இந்தியா’ கூட்டணியுடன் இணைந்து தீவிரமாக செயல்படப் போவதாக கூறியுள்ளார். ராகுல் காந்தி மேற்கு வங்க தேர்தல் பரப்புரையில் ”மமதா ஆட்சியை காட்டாட்சி’’ என வருணித்தாலும் ”பா.ஜ.கவின் வெற்றி தேர்தல் திருட்டு மூலமே சாத்தியமானது’’ என கூறியுள்ளார்.
ஹரியானா, மகாராஷ்டிராவை தொடர்ந்து SIR மூலம் பீகாரிலும் இப்பொழுது மேற்கு வங்கத்திலும் தேர்தல் மோசடி நடந்துள்ளது, வாக்கு திருட்டு நடந்துள்ளது எனக் கூறியுள்ளார்.
ஆனால், இத்தகைய குற்றச் சாட்டுகளை கேரளத்திலோ தமிழ்நாட்டிலோ இதுவரை யாரும் எழுப்பவில்லை. த.வெ.க ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவளிக்க முன் வந்துள்ளது. இடதுசாரிகளும் வி.சி.கவும் கூட இந்த பாதையில் தொடர வாய்ப்பு உள்ளது.
பா.ஜ.க எங்களது கொள்கை எதிரி என்ற நிலைபாட்டில் உள்ள த.வெ.க வும் இந்தியா கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது. அநேகமாக அந்த நிபந்தனையின் பேரில்தான் காங்கிரஸ் கட்சி ஆதரவுக்கரம் நீட்டியிருக்க வேண்டும்.
அப்படி நேர்ந்தால் தி.மு.க வின் நிலைப்பாடு என்ன? தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தி.மு.க தொடருமா அல்லது மோடிக்கு ஆதரவை மறைமுகமாக அளிப்பார்களா? என்ற பல கேள்விகள் எழுகின்றன.
இவற்றுக்கெல்லாம் விடை விரைவில் தெரிய வேண்டும், அதுவே மக்களின் நம்பிக்கையை வளர்க்கும்!