தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழ்நாடு அரசு பதவியேற்பும்

10.05.2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில், தமிழ்நாடு மாநிலத்தின் தனித்துவத்தை தொலைத்தது மிகவும் வேதனைக்குரியது!
தமிழ்நாடு அரசு பின்பற்றி வந்த தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் மரபை மாற்ற அனுமதிக்க இயலாது!
இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் தனக்கென தனித்துவமான மரபை பின்பற்றி, இந்திய ஒருமைப்பாட்டிற்கு வலுசேர்த்து வரும் மாநிலம் தமிழ்நாடு.
ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் இராணுவ வீரர் நலனுக்கான கொடி நாள் வசூல் தொடங்கி, நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் காலங்களிலெல்லாம், அத்தகைய சவால்களை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் தனது பங்களிப்பை முதலில் செலுத்தும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.
இந்தியாவின் பிற மாநிலத்தில் பிறந்து தமிழ்நாடு மாநிலத்திற்கு வரும் மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் இந்தியரென அரவணைத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி வரும் மாநிலம் தமிழ்நாடு.
மொழிவாரியக நாம் தமிழர், தேசமாக நாம் இந்தியர்.
இந்திய மொழிகளில் நமது தாய் மொழியான தமிழ், பழம் பெரும் மொழி. தனித்துவமிக்க மொழி.
தமிழ்நாடு மாநில அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது மரபு. காலம்காலமாக பின்பற்றப்படும் இந்த மரபை, சிலர் பின்பற்ற தவறியதைத் தொடர்ந்து, இத்தகைய நடைமுறையை அரசு நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டும் என்பதை அரசு தனது ஆணை மூலம் அறிவித்தது.
தமிழ்நாடு அரசு பொது(பொது -1)த் துறை அரசாணை (நிலை) எண் 1037 நாள் 17.12.2021 என்ற அரசாணை காலம்காலமாக பின்பற்றப்படும் மரபு தொடர்வதை உறுதிசெய்யவே பிறப்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு நிகழ்வுகள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி ‘ஜன கண மன’ என தொடங்கும் தேசியக் கீதம் இசைத்து நிறைவு பெறுவது வழக்கம்.
தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவாக தேசியக் கீதம் எனும் மரபு அறிவியல் பூர்வமான அரசு நடைமுறை. இந்திய தேசியத்தின் பிரிக்க முடியாத அங்கமாக தமிழ்நாடு விளங்குவதன் வெளிப்பாடு.

மூன்று திசைகளில் நீராலும், ஒரு திசையில் நிலத்தாலும் சூழப்பட்ட இந்திய நில அமைப்பை குறிப்பிட்டு, அத்தகைய சிறப்பைப் பெற்ற இந்திய நாட்டின் பெருமைமிகு மாநிலத்தின் தாயாகவும், உலகில் அனைவரும் இன்புற்று இருக்க விரும்பும் பண்புகளை உணர்த்தும் மொழியாகவும் திகழும் தமிழன்னையை வாழ்த்துகிறோம் என்பதே தமிழ்த்தாய் வாழ்த்து வெளிப்படுத்தும் செய்தி.
மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் ஒருசேர வெளிப்படுத்துவதே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குரியத் தனிச் சிறப்பாகும்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழ்நாடு அரசு நிகழ்வுகள் தொடங்கும், ‘ஜன கண மன’ என தொடங்கும் தேசியக் கீதத்துடன் நிகழ்வுகள் நிறைவுறும்.
வாதத்திற்காக, தேசியக் கீதத்திற்கு இணையாக ‘வந்தே மாதரம்’ பாடல் மதிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்று கூறுப்படுமேயானல், தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் மரபுப்படியும், தமிழ்நாடு அரசு ஆணையின் படியும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலிலும், நிறைவாக தேசியக் கீதம் அதன் தொடர்ச்சியாக ‘வந்தே மாதரம்’ என்கிற வகையில் அரசின் நிகழ்வு திட்டமிடப்பட்டிருக்க வேண்டும்.
10.05.2026 அன்று முற்பகல் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அமைச்சரவைப் பதிவியேற்பு நிகழ்வில் தமிழ்நாடு அரசு இதுவரை பின்பற்றி வந்த மரபும், அரசாணையும் மீறப்பட்ட நிகழ்வு, தமிழ்நாடு மாநிலத்திற்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கப்பட்ட பெரும் அநீதி.
தமிழ்நாடு அரசு பொது(பொது -1)த் துறை அரசாணை (நிலை) எண் 1037 நாள் 17.12.2021 தமிழ்நாடு அரசால் மீறப்பட்டுள்ளது. அரசு பிறப்பித்த ஆணையை அரசே மீறிய செயல் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாட்டிற்கு நேரெதிரானது, கண்டனத்திற்குரியது.
‘வந்தே மாதரம்’ பாடல் குறித்த வழக்கில் ‘எந்த கட்டாயமும் இல்லை, யாராவது பாதிக்கப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
‘வந்தே மாதரம்’ பாடல் சிலரின் நம்பிக்கையை நாடாக உருவகப்படுத்துகிறது. ‘இந்தியா எனும் பாரதம்’ என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பெயர் வரையறையின் அடிப்படையில் வந்தே மாதரம் பாடலில் இந்திய நாடு குறிப்பிடப்படவில்லை. அதனால்தான், இந்திய நாட்டின் புவியமைப்பை வெளிப்படுத்தும் அந்த பாடலின் சில வரிகளை மட்டுமே தேசியப் பாடலாக ஏற்கலாம் என்று வங்கத்தின் இரவீந்திரநாத் தாகூர் முதல் குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேல் வரை கூறியிருந்தார்கள். டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் முன்மொழிந்து, சர்தார் வல்லபாய் படேல் அவர்களால் வழிமொழியப்பட்டது ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் சில வரிகள் மட்டுமே.
மொழி மற்றும் பழக்கவழக்கங்களால் பன்மைத்துவம் கொண்ட நாடாக இந்தியாவை பார்க்காமல், சிலரின் நம்பிக்கையின் வடிவமாக இந்தியாவை பார்க்கும் வரிகள் இந்தியாவின் தேசியப் பாடலாக எவ்வாறு ஏற்க இயலும் என்பதே இந்த பாடல் மீது வைக்கப்படும் விமர்சனம்.
இத்தகைய விவாதம் ஒரு புறம் இருக்க, தமிழ்நாடு அரசு ஆணையையும் மரபையும் பின்பற்றி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தமிழ்நாடு அரசு அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தொடங்காமல், ‘வந்தே மாதரம்’ பாடல் வரிகள் முழுமையாக பாடப் பெற்று, அதன் பின்னர் தேசியக் கீதம், அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் என்று அமைந்திருந்தது தமிழர்களின் மொழி உணர்வை பாதிக்கும் செயல் மட்டுமல்ல, “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் இந்திய கோட்பாட்டை சிதைக்கும் செயலாகும்.
“செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்”
என்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியார்,
“தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
என்ற பாவேந்தர் பாரதிதாசனார்,
“புதுமைக் கண்டு வாழ இன்று
போர் செயுந் தமிழ்நாடு – மறப்
போர் செயுந் தமிழ்நாடு – மிக
முதுமை கொண்ட மடமை வீழ
மோதிடும் தமிழ்நாடு”
என்று முழக்கமிட்ட கவிஞர் தமிழ்ஒளி
ஆகியோர் வழியில் நின்று தமிழுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதியை கண்டிக்க தமிழர்கள் குரலெப்ப வேண்டும்.
‘மதராஸ்’ என்று அழைக்கப்பட்ட இந்த மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி நடந்த போராட்டத்தின் உச்சமாக, தமிழ்நாடு பெயர் சூட்ட வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு தனது உயிரை இழந்தார்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் அந்த மாநிலத்தின் பெயருக்கு போராடி ஒருவர் உயிர் துறந்த வரலாறு கிடையாது. தமிழ்நாடு மாநிலத்திற்கு மட்டுமே அந்த வரலாறு உண்டு.
தமிழர், தங்களின் உயிரென கருதும் தமிழ்நாடு மாநிலத்தின் பெயருக்கும், தமிழ் மொழிக்கும் அநீதி இழைக்கப்பட்டால், தாயே தடுத்தாலும் பொறுத்திருக்க இயலாது எனும் பாவேந்தர் பாரதிதாசனார் வரிகளுக்கிணங்க தமிழ் மொழி, தமிழ்நாடு மாநிலப் பெயர், தமிழ்நாடு அரசு இது வரை பின்பற்றி வந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடும் மரபு ஆகியவற்றைக் காக்க தமிழ்நாடு ஒன்றிணைந்து போராடும்.
தமிழ்நாடு அரசு தனது தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, இனி வரும் காலங்களில் அனைத்து தமிழ்நாடு அரசு விழாக்களிலும், இதுவரை பின்பற்றி வந்த மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே முதலில் பாட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
அனைத்து தமிழ் இயக்கங்களும் இணைந்து வலுவுடன் இக்கோரிக்கையை தமிழ்நாடு அரசின் முன் வைக்க வேண்டும்.
தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழர்களின் ஒருமித்த குரலாக தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலே தமிழ்நாடு அரசு நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்பட வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
-பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
எண் 14-A, சோலையப்பன தெரு,
தியாகராயா நகர், சென்னை – 600 017.
மின்னஞ்சல்: spcsstn2025@gmail.com
தொடர்பு எண்: 94456 83660
தமிழ்த்தாய் வாழ்த்து: ஒரு நூற்றாண்டு வரலாறு

மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த’ பாடலைத் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. மனோன்மணீயம் பெ.சுந்தரம் கேரள மாநிலம் ஆலப்புழையில் 1855-ல் பிறந்தவர். பி.ஏ. பட்டம் பெற்றவர். சிறந்த தமிழறிஞர். அவர் இயற்றிய மனோன்மணீயம் என்னும் 4,500 வரிகள் கொண்ட கவிதை நாடக நூலில் உள்ள ஒரு பாடலே ‘நீராரும் கடலுடுத்த’ என்பதாகும்.
பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து, இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும், பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 1913-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வாசிப்பும் இந்த அரசாணையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
கரந்தைத் தமிழ்ச் சங்கம்
24.05.1901 அன்று பாலவனத்தம் நிலக்கிழவர் பொ.பாண்டித்துரையாரால் மதுரையில் புதிய தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா தஞ்சாவூரில் சிறப்பாக நடைபெற்றது. இதைக் கண்டு மகிழ்ந்த தஞ்சையைச் சேர்ந்த சில தமிழ்ச் சான்றோர், ‘நம் நகரத்தில் இதுபோல் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கினால் நன்றாக இருக்குமே’ என்று எண்ணினார்கள். அந்த நல்ல எண்ணத்தின் விளைவே தஞ்சை தமிழ்ச் சங்கம். நிலக்கிழவர் சாமிநாதனார் அந்தச் சங்கத்தின் தலைவராக இருந்தார்.
காலப்போக்கில் அந்தச் சங்கம் மறைந்தாலும், கரந்தை வட ஆற்றங்கரையில் இருந்த பஞ்சநதம் பாவா மடத்தில் தமிழ்ச் சங்கம் ஒன்று தொடங்கப்பட்டது. ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தின் பெயர் மீதுள்ள ஈர்ப்பின் காரணத்தால், புதிதாகத் தொடங்கப்பட்ட சங்கத்துக்கு வித்யா நிகேதனம் என்று பெயர் சூட்டப்பட்டது. வித்தியா நிகேதனம் தஞ்சைப் பகுதியில் மிகச் சிறப்பாகத் தமிழ்ப் பணியாற்றிவந்தது. ஆனால், சங்கத் தலைவர் ராஜாளியார், செயலாளர் சாமிநாதனார் ஆகியோரின் கட்டுப்பாடுகளை விரும்பாத இளைஞர்கள் தம்முள் இணைந்து தனியாக ஒரு சங்கத்தை நிறுவ எண்ணினார்கள்.
அதன் விளைவாகத் தோன்றியதுதான் இன்றைய கரந்தைத் தமிழ்ச் சங்கம். விரோதிகிருது ஆண்டு வைகாசித் திங்கள் முதல் நாள், 14.05.1911 அன்று நாவலர் ந.மு.வேங்கடசாமி தலைமையில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. சங்கத் தலைவர் உமா மகேசுவரனார் ஒரு சிறந்த வழக்கறிஞராக இருந்ததால், தமிழ்ச் சங்கத்துக்கு முறையான பொது விதிகளை ஏற்படுத்தினார். பிற்காலத்தில் எந்த ஒரு தனிநபரும் உரிமை கொண்டாட முடியாத வகையில், 1860–ல், 21-வது சட்டப் பிரிவின்படி ஆனந்த சித்திரை ஆண்டு பத்தாம் நாள் [15.05.1914] சங்கம் பதிவு செய்யப்பட்டது.
தமிழ் வாழ்த்து
தமிழ் மொழியின் நிலைமை, தமிழரின் வாழ்வு ஆகியவற்றைச் சீர்செய்வது, சங்க உறுப்பினர் களுக்குள் நட்புரிமையையும் ஒருமைப்பாட்டையும் உண்டாக்குவது, தமிழரின் அற நிலையங்களைப் பேணிக் காப்பது, உறுப்பினர்களின் ஒழுக்க நிலை, உடல்நிலை, சமூக நிலை, கல்வி நிலை – இவை செம்மையுறுவதற்கான வசதிகளை அமைப்பது, தமிழரின் தொழிலும் பொருளாதாரமும் வளம் பெறச் செய்வது – இவைதான் சங்கத்தின் நோக்கங்களாக வரையறுக்கப்பட்டன. தொண்டு – தமிழ் – முன்னேற்றம் என்பதே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலையாய கொள்கை என்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரன் முழங்கினார்.
கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற இரண்டாம் ஆண்டு முதல், மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ என்னும் பாடல் சங்கத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கத் தொடங்கியது. முதன்முதலில் இந்தப் பாடலை மேடையில் பாடியவர் கூடலூர் வே.இராமசாமி. இந்தப் பாடல் தமிழ்நாட்டின் மேடைகளில் மட்டும் அல்லாது தரணி எங்கும் பாடிப் பரவ வேண்டும் என்பது உமா மகேசுவரனாரின் கனவு.
1913-ல் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு அறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பாடல் உலகெங்கும் பரவ வேண்டும் என்னும் கனவின் தொடர்ச்சியைப் போல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாம் ஆண்டு அறிக்கை ‘நீராரும் கடலுடுத்த’ பாடலுடனேயே தொடங்குகிறது. தமிழ்ச் சங்கத்தின் அடுத்தடுத்த முன்னெடுப்புகள் அப்பாடலைத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஒலிக்கச் செய்தது!
அண்ணாவின் தேர்வு
அறுபதுகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றங்கள் அரங்கேறத் தொடங்கின. மாநில மொழிகளை நசுக்கும் விதமாக மத்திய அரசு மேற்கொண்ட இந்தித் திணிப்பு முயற்சிகள் இந்தியா எங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. தமிழ்நாட்டு அரசியலில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்னும் மாபெரும் சமூகப் புரட்சி நடந்து முடிந்திருந்த காலகட்டம் அது. அதன் விளைவாக 1967-ல் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. தமிழ் மொழியின் வளர்ச்சிப் போக்கை முன்னெடுக்கும் விதமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு விழாக்கள், கல்லூரி, பள்ளி விழாக்கள் அனைத்திலும் பாடக்கூடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தமிழறிஞர்களைக் கூட்டி ஆலோசனை செய்தார் முதல்வர் அண்ணா.
தமிழ் குறித்து, தமிழ்க் கவிஞர்கள் இயற்றிய பாடல்களில், சிறந்த இரு பாடல்களாக மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த’ பாடலும், கரந்தைக் கவியரசு இயற்றிய ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே’ என்ற பாடலும் பரிந்துரைக்கப்பட்டன. இரண்டில் ஒரு பாடலைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அண்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘நீராருங் கடலுடுத்த’ பாடலில் வரும் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ எனும் வரிகளில் வரும் ‘திராவிடம்’ என்னும் சொல் அவரைக் கவர்ந்தது. அப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அரசுபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை அண்ணா மேற்கொண்டார். ஆனால், அதற்குள் நோய்வாய்ப்பட்டிருந்த அண்ணா 03.02.1969-ல் மறைந்தார்.
கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாட வேண்டும் என, அரசாங்கப் பொதுத் துறையின் சார்பில் 23.11.1970 அன்று அரசாணையாக வெளியிடச் செய்தார். உமா மகேசுவரனார் தோற்றுவித்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நீண்ட நாள் பெருங்கனவு அன்று நிறைவேறியது. இன்று, அந்தப் பாடல் மாநிலப் பாடலாகவும் மாறியிருக்கிறது.
– எஸ்.ராஜகுமாரன்