சமூக வலைதளப் படைப்பாளராக ஓர் அரசியல் கட்சி
-ஆர்.எஸ்.நீலகண்டன்

தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் (த.வெ.க-வின்) வெற்றி, சமூக வலைதளங்களின் படைப்பாற்றல் உள்ளடக்கத்தால் ஏற்பட்ட அரசின் எழுச்சியையும், பகுத்தறிவின் மரணத்தையும் குறிக்கிறது.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேர்தல் முடிவு மாநிலத்தின் அரசியல் பாதையில் ஏற்பட்டிருக்கும் ஓர் ஆழமான பிளவைக் குறிக்கிறது. 1967 ஆம் ஆண்டில் தி.மு.க முதன்முதலில் ஆட்சிக்கு வந்தபோது பெற்ற வெற்றியை விட இது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. 20-ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி யுர்கன் ஹேபர்மாஸின் (Jurgen Habermas) படைப்புகளின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இது புலப்படுகிறது. ஹேபர்மாஸ் தனது வாழ்நாள் முழுவதையும் கடுமையான சர்வாதிகாரம் மற்றும் அவநம்பிக்கை என்கிற இரட்டை அச்சுறுத்தல்களுக்கு எதிராக நவீன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் செலவிட்டார். அவரது மையக் கருத்து எளிமையானது என்றாலும் புரட்சிகரமானது. அதாவது, ”உண்மையான ஜனநாயகம் என்பது தனித்தோ அல்லது அரசாணை மூலமாகவோ நிகழ்வதில்லை, மாறாக அவர் அழைத்த “தொடர்புச் செயல்பாடு (communicative action)” என்கிற செயலாக்கத்தின் மூலமே நிகழ்கிறது”
அல்லது, ஒரு சமூகம் வெளிப்படையாக விவாதித்து, பழைய கோட்பாடுகளைக் கேள்விக்குட்படுத்தி, சமூக முன்னேற்றத்தை அடைவதற்காக ஒரு பகுத்தறிவு சார்ந்த ஒருமித்த கருத்தை உருவாக்கும் செயல்முறையாக இருந்தது. 60 ஆண்டுகளாக, தி.மு.க, அ.இ.அ.தி.மு.க என்கிற இரட்டைத் துருவங்களால் நிலைநிறுத்தப்பட்ட திராவிட இயக்கம், இந்த உலகக் கண்ணோட்டத்தையே நிறுவனமயமாக்கியது. சாதியால் பிளவுபட்டிருந்த ஒரு நிலப்பரப்பை, இட ஒதுக்கீடு, சுகாதார சமத்துவம் மற்றும் நலத்திட்டங்கள் போன்றவற்றைப் பொதுவெளியில் தொடர்ந்து விவாதித்து அமைப்பு ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் சமூக நீதியை விரிவுபடுத்தும் ஒரு பகுத்தறிவு சார்ந்த சமூக ஒப்பந்தமாக மாற்றியது. இதற்கு எதிரான செயல்பாட்டில் இருப்பது பா.ஜ.க. அது, இந்தக் குழப்பமான, பன்மைத்துவப் பேச்சுவார்த்தையை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகக் கற்பனையான நாகரிகக் கட்டுக்கதைகளையும் மேலிருந்து கீழான சீரான தன்மையையும் புகுத்த முயலும், நவீனத்திற்கு முந்தைய அறிவு முதிர்ச்சிக்கு (enlightenment) எதிரான திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
108 இடங்களை வென்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வெற்றியானது, இதற்கு முற்றிலும் எதிரான ஒரு சவாலை அறிமுகப்படுத்துகிறது. த.வெ.க-வின் அடித்தளம், பகுத்தறிவு விவாதத்தின் மீதான ஹேபர்மாஸின் நம்பிக்கைக்கு நேர் எதிராக இருக்கும் மிகவும் சமகால அரசியல் சூனியவாதத்தின் ஒரு பிரிவிலிருந்து உருவாகிறது. த.வெ.க-வின் கொள்கை அறிக்கை ஒரு சித்தாந்தக் கலவையாகும்; அது பெரியார் மற்றும் அம்பேத்கரின் ஆழமான, வரலாற்று ரீதியாக வேரூன்றிய வாதங்களை வெறும் ஒரு வணிக அடையாள அழகியலாகச் சுருக்கி, செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் போன்ற பரிவர்த்தனை சார்ந்த கொள்கை வாக்குறுதிகளுடன் இணைந்து செயல்படுகிறது. த.வெ.க-விற்கான வாக்காளர்களின் ஆணை (mandate) ஒரு திகைப்பூட்டும் சீரற்ற தன்மையைக் காட்டுகிறது; இதில், அரசியல் ரீதியாக அறிமுகமில்லாதவர்கள், ஒரு சூப்பர் ஸ்டாரின் பிம்பத்தின் பலத்தை மட்டுமே கொண்டு, அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களைத் தோற்கடிக்கின்றனர். கொள்கையை விட ஒரு தனிநபரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், மக்கள் நிறுவனமயமாக்கப்பட்ட சித்தாந்த நிலைப்பாட்டிற்குப் பதிலாக ஒரு கவர்ச்சிகரமான அடையாளத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
நிச்சயமாக, திராவிட இயக்கத்திற்கு எப்போதுமே பிரம்மாண்டமான தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் தனிநபர் ஆதிக்கம் என்பது அமைப்பில் இருந்த ஒரு குறைபாடு என்றோ அல்லது குறைந்தபட்சம், சிக்கலான கருத்துக்களை மக்களுக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு தொடக்க நிலை அம்சம் என்றோ வாதிடலாம். இருப்பினும், த.வெ.க-வைப் பொறுத்தவரை, அதன் கவர்ச்சியானது முழுமையான சித்தாந்த வெற்றிடத்துடன் இணைந்துள்ளது. ஒரு புதிய கட்சி வெற்றி பெற்றது என்பதல்ல உண்மையான கவலை; மாறாக, வாக்காளர்கள் அந்த வெற்றிடமான சித்தாந்த வெளிக்குள் முனைப்புடன் நுழைந்ததுதான் உண்மையான கவலை. இது தமிழ் சமூகத்திற்கு ஒரு கடுமையான நெருக்கடியை முன்னறிவிக்கிறது: ஹேபர்மாஸின் ‘தொடர்புச் செயல்பாடு’ (communicative action) கோட்பாட்டைத் துறந்து, சமூக ஊடகங்களால் உந்தப்பட்டு செல்வாக்கு செலுத்துவோரால் வழிநடத்தப்படும் ஒரு வெற்றிடத்தின் பக்கம் கூட்டாகச் சரணடைதலைத் தெரிவிக்கிறது.
அமைப்பு ரீதியிலான ஆட்சியின் மெதுவான, கடுமையான கடமையை, ஒரு தனிப்பட்ட பாதுகாவலரின் பரிவர்த்தனை கவர்ச்சிக்காகப் பரிமாறிக்கொண்டதன் மூலம், நவீன தமிழ் அரசைக் கட்டியெழுப்பிய விவாத அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கத்தையே வாக்காளர்கள் முடக்கிவிட்டனர்; அதன் முற்போக்கான எதிர்காலத்தை ஆழமாகச் சமரசம் செய்துவிட்டனர்.
தனிப்பட்ட கண்ணோட்டத்தின் பொறி
இந்த மாற்றம், ஹேபர்மாஸ் ‘தனிப்பட்ட கண்ணோட்டத்தின் பொறி’ என்று அழைத்ததன் தர்க்கரீதியான விளைவாகும். அறிவொளிக் காலம் சமூகத்தைப் பாரம்பரியக் கோட்பாடுகளிலிருந்து துண்டித்தபோது, அது உண்மை மற்றும் ஒழுக்கத்தின் சுமையை முழுவதுமாகத் தனிநபர் மீதும் அவரது பகுத்தறியும் திறன் மீதும் சுமத்தியது. அதன்பின், இது, பகுத்தறிவையே ஆபத்தில் ஆழ்த்தியது; ஒரு பொதுவான தளத்தையோ அல்லது ஒரு பொது நன்மையையோ உருவாக்குவதற்கு மாறாக, தனிப்பட்ட பயன்பாட்டையும் செயல்திறனையும் அதிகப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகப் பகுத்தறிவை மாற்றிவிடக்கூடும்; மேலும் பல தத்துவஞானிகள் அது ஏற்கெனவே அவ்வாறு ஆகிவிட்டதாகவும் வாதிடுகின்றனர்.
பல தசாப்தங்களாக, திராவிட இயக்கம், பகிரப்பட்ட, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட சமூக நீதித் திட்டத்திற்குள் தனிநபர் விடுதலையை நிலைநிறுத்துவதன் மூலம், கூட்டாக இந்தப் பொறியை எதிர்த்து வந்தது. திமுக இதைச் சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்புகள் மூலம் செய்தபோது, எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தலைமையில், அ.இ.அ.தி.மு.க. தனது ஆளுமை ஈர்ப்பை ‘தீவிரப் பரிவு’க்கான ஒரு கருவியாக உருமாற்றுவதன் மூலம், சமூகச் சிதைவை எதிர்கொண்டது.
பிந்தையவரின் நலத்திட்டக் கோட்பாடு வெறும் பரிவர்த்தனை சார்ந்ததாக இருக்கவில்லை; அது, நலிவடைந்தோருக்கான அரசின் தார்மீகக் கடமை குறித்த ஓர் ஆழமான அரசியல் பிரகடனமாக இருந்ததுடன், தனிநபர் வறுமையை ஒரு கூட்டு நிர்வாக முன்னுரிமையாகவும் மாற்றியது. மிகப் பெரிய ஆளுமைகள் மூலம் செயல்பட்டபோதும், இரு கட்சிகளுமே விடுதலை பெற்ற மக்களை, கட்டமைப்புச் சமத்துவத்திற்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, நிறுவனமயமாக்கப்பட்ட போராட்டத்துடன் பிணைத்து வைத்திருந்தன.
இருப்பினும், த.வெ.க-வின் எழுச்சியானது, தமிழ் சமூகம் இறுதியாக தனிநபர் (அகநிலை) வலையில் வீழ்ந்துவிட்டது என்பதையே உணர்த்துகிறது.
இந்தப் புதிய கண்ணோட்டத்தில், அரசியல் தேர்வு என்பது அதன் கூட்டுப் பேச்சுவார்த்தையிலிருந்து பிரிக்கப்பட்டு, ஒரு தனிநபர் சார்ந்த நுகர்வோர் பரிவர்த்தனையாகச் சுருக்கப்படுகிறது. ஒரு தளம் ஆழமான சித்தாந்த விமர்சனங்களுக்குப் பதிலாக, மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட, தொழில்நுட்பத் தீர்வுகளை முன்வைக்கும்போது, அது தன்னலத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தனிநபரை நேரடியாக ஈர்க்கிறது. அரசு இனி கூட்டு முன்னேற்றத்திற்கான ஒரு களமாகப் பார்க்கப்படாமல், ஒரு அதிதிறன் வாய்ந்த சேவை வழங்கும் இயந்திரமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தத் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரிதல், குடிமக்களை ஓர் அரசியல் முத்திரையின் செயலற்ற நுகர்வோராக மாற்றி, பகிரப்பட்ட சமூகக் கடமைகளைக் காட்டிலும் தனிப்பட்ட பயன்பாட்டின் கண்ணோட்டத்தில் அதிகாரத்தைப் பார்க்க வைக்கிறது. திமுக மற்றும் அஇஅதிமுக ஆகிய இரு கட்சிகளாலும் நிறுவப்பட்ட பரந்த நிறுவனக் கட்டமைப்பிலிருந்து தனிநபரைத் துண்டிப்பதன் மூலம், இந்த மீண்டெழும் அகநிலைவாதம், பொதுவெளியின் விவாத ஆற்றலைப் பறித்து, செல்வாக்கு செலுத்துபவரின் நெறிபாட்டு வசீகரத்தை (algorithmic charm) உண்மையான அரசியல் செயல் திறனாகத் தவறாகப் புரிந்துகொள்ளும் ஒரு பிளவுபட்ட வாக்காளர் கூட்டத்தை உருவாக்குகிறது.
அடோர்னோவின் (Adorno) கலாச்சாரத் தொழில்
இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ள, நவீன சமூகங்கள் எவ்வாறு தங்கள் பாதையை இழக்கின்றன என்பது குறித்த ஓர் ஆழமான விமர்சனத்தை முன்வைத்த ஜெர்மானிய தத்துவஞானி தியோடர் அடோர்னோவைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அடக்குமுறை கோட்பாடுகளிலிருந்து மக்களை விடுவிக்க மனித பகுத்தறிவையும் அறிவியலையும் பயன்படுத்துவது என்ற அறிவு முதிர்ச்சி காலத்தின் மாபெரும் வாக்குறுதி, நுட்பமாகப் பின்விளைவுகளை ஏற்படுத்திவிட்டது என்று அடோர்னோ வாதிட்டார். மனிதர்களை விடுவிப்பதற்குப் பதிலாக, நவீன பகுத்தறிவு முற்றிலும் ஒரு கருவியாக, அதாவது செயல்திறன், கணக்கீடு மற்றும் மேலிருந்து கீழான நிர்வாகத்தில் முழுமையாகக் கவனம் செலுத்தும் ஒரு கருவியாக மாறிவிட்டது.
அடோர்னோவின் மிகவும் பிரபலமான கருத்து என்னவென்றால், நவீன முதலாளித்துவம் மக்களை மிருகத்தனமான சக்திக்கு மாறாக கலாச்சாரத் தொழில் மூலமாகவே கட்டுப்படுத்துகிறது; இந்த அமைப்பு பொதுமக்களை அமைதிப்படுத்துவதற்காக தரப்படுத்தப்பட்ட பொழுதுபோக்கு மற்றும் கலையை பெருமளவில் உருவாக்குகிறது. கலாச்சாரம் சார்ந்த இந்தத் தொழில்துறை, ஆழமான, சவாலான கருத்துக்களை வெற்றுப் பண்டங்களாகச் சிதைத்து, செயலாற்றல் மிக்கக் குடிமக்களை, ’தெரிவுசெய்யும் மாயைதான் உண்மையான சுதந்திரம்’ எனத் தவறாகப் புரிந்துகொள்ளும் செயலற்ற நுகர்வோராக மாற்றுகிறது.
தமிழ்த் தளத்தில், த.வெ;க-வின் எழுச்சியானது, பொருள்சார் அரசியலுக்கு எதிரான கலாச்சாரத் தொழில்துறையின் உச்சகட்ட வெற்றியைப் பிரதிபலிக்கிறது. பல தசாப்தங்களாக, தமிழ்நாட்டின் அரசியல் கலாச்சாரம், கனமான, கடுமையான, மற்றும் ஆழமாக உருமாற்றும் கருத்துக்களின் மீது கட்டமைக்கப்பட்டிருந்தது. முதல் கட்டம், பிராமணர் அல்லாதோர் இயக்கம் மற்றும் நீதிக் கட்சியின் விடுதலை நோக்கிய, சாதி எதிர்ப்பு வாதங்கள் ஆகும். இரண்டாவது கட்டம், திராவிட இயக்கத்தால் மொழி மற்றும் பிராந்திய சுயாட்சி குறித்து நடத்தப்பட்ட கடுமையான விவாதங்கள் ஆகும். மூன்றாவது, மிகச் சமீபத்திய, ஒருவேளை இன்றைக்கும் சமகாலத்திய தேவையாகக் கருதப்படும் கட்டம், பரந்த நிதி கூட்டாட்சி முறைக்கான தொடர்ச்சியான உந்துதலாகும்.
த.வெ.க-வின் வெற்றியானது இந்தக் காத்திரமான மொழி எவ்வாறு ஒரு பண்டமாக்கப்பட்டு, மலட்டுத்தன்மையான ஒரு வணிக அடையாளமாக மாற்றப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதில், வரலாற்றுச் சின்னங்கள் வெறும் காட்சிகளாக பகட்டான, தொழில்நுட்ப வாக்குறுதிகள் அல்லது ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களோடு ஒட்டப்படுகின்றன. இந்த ஒலி-ஒளித் தாக்குதலுக்கு இணங்குவதன் மூலம், வாக்காளர்கள் அறியாமலேயே அடோர்னோவின் மிக துயரமான எச்சரிக்கைக்குப் பணிந்துவிட்டனர். அதாவது, அவர்கள், கூட்டு அரசியல் செயல்பாட்டிற்குப் பதிலாக ஊடகங்களால் இயக்கப்படும் வெறுமையான மேலிருந்து கீழ் நோக்கிய ஆதிக்கத்தின் திறமையான ஓர் அமைப்பைத் தழுவியுள்ளனர். இரு கட்சிகளையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் பார்த்தால், பின்-கட்டமைப்புவாத த.வெ.க-வை பா.ஜ.கவின் மதவெறிப் பிடிவாதத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்க இயலாததாக இது ஆக்குகிறது.
பொதுவெளியை மீட்டெடுத்தல்
அடோர்னோவின் முழுமையான அவநம்பிக்கைக்கு அடிபணிய மறுத்த ஹேபர்மாஸ், ஒரு முக்கியத் தீர்வை முன்வைத்தார்: தகவல் பரிமாற்றச் செயலுக்கு மீண்டும் நம்மை அர்ப்பணிப்பதன் மூலம் ஜனநாயகத்தை நம்மால் மீட்க முடியும். மனித மொழி இயல்பாகவே பரஸ்பரப் புரிதலை நோக்கமாகக் கொண்டிருப்பதால், ஒருவரையொருவர் பகுத்தறிவுள்ள சமமானவர்களாக அங்கீகரிக்கும் உள்ளார்ந்த திறனை நாம் கொண்டிருக்கிறோம் என்று அவர் வாதிட்டார். ஆழமற்ற, ஊடகங்களால் இயக்கப்படும் ஒரு கலாச்சாரத்திற்கான தீர்வு, நவீன ஜனநாயகத்தைக் கைவிடுவதல்ல; மாறாக, வெறும் பகட்டினுடைய வரம்புகளை அம்பலப்படுத்தும், நிர்ப்பந்தமற்ற, வெளிப்படையான உரையாடலின் மூலம் பொதுவெளியை ஆக்ரோஷமாகப் புத்துயிர் பெறச் செய்வதாகும்.
செல்வாக்கு செலுத்துபவர்களின் வெறுமையால் முழுமையாக மயக்கப்பட்ட ஒரு தமிழ்ச் சமூகத்தில் இந்த வெளியை மீட்டெடுக்க இரட்டை உத்தி தேவைப்படுகிறது: பகுத்தறிவுக்கு இடைவிடாத வேண்டுகோள் விடுப்பதும், மாற்று வழிகளின் மேலோட்டத்தன்மையை அம்பலப்படுத்தும் கூர்மையான, நியாயமான விமர்சனங்களும் இணைந்து பயணிக்க வேண்டும். தரவுகளை வறட்டுத்தனமாக முன்வைப்பது மட்டும் போதாது; பட்ஜெட் எனும் பூஜ்ஜிய-கூட்டு விளையாட்டில், (இதில் ஒருவரின் ஆதாயம், மற்றொருவரின் சமமான இழப்பைக் குறிக்கிறது).ஒரு பகட்டான வணிக முத்திரையின் அழகியலால் ஒரு மாநிலத்தின் கூட்டாட்சி உரிமைகளைப் பாதுகாக்கவோ அல்லது நியாயமான தீர்வுகளைக் கண்டறியவோ முடியாது என்பதை முற்போக்கு இயக்கம் தீவிரமாக நிரூபிக்க வேண்டும். ஒழுங்கமைக்கப்பட்ட, மிகவும் உள்ளூர்மயமாக்கப்பட்ட மற்றும் விவாத அடிப்படையிலான அரசியலை மீண்டும் கட்டியெழுப்புவதே நுகர்வோர் மாயையை உடைப்பதற்கான ஒரே வழியாகும். ஒரு சமூகம் கவர்ச்சியற்ற வெற்றிடத்தில் நிலைத்திருக்க முடியாது, மாறாக கூட்டு, பகுத்தறிவு விவாதத்தால் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதை வாக்காளர்களை உணரச் செய்வதே இதன் நோக்கமாகும்.
அதைச் செய்வதற்கு, ஆளுகை தேவைப்படும் இடங்களுக்கு நெருக்கமாக அரசு அமைந்திருக்க வேண்டும் என்பதை உணர்வதே முதல் படியாகும். இதை வேறு விதமாகச் சொல்வதானால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாக அதிகாரப் பரவலாக்கம் தேவைப்படுகிறது. இது மட்டுமே அந்த வெற்றிடத்தை அனைவருக்கும் வெளிப்படையாக்கும்; அதன் மூலம், அந்த வெற்றிடத்தை அவர்கள் உள்ளபடியே உணர்ந்துகொள்வார்கள்.
மூலம்: Political party as content creator
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்