சோசலிச கியூபாவைப் பாதுகாப்போம்
–காப்ரியல் வேரா லோபஸ் (Gabriel Vera Lopes)

சோசலிச கியூபாவைப் பாதுகாப்போம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தடைகளை எதிர்கொள்ள வியூகம்
கியூபாவின் புதிய பொருளாதார நடைமுறை உத்தி
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூரமான மற்றும் சட்டவிரோதமான பொருளாதாரத் தடைகளை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு வரும் கியூபா, தனது சோசலிசக் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய பொருளாதார உத்தியை வெளியிட்டுள்ளது. கியூபாவின் உயரிய அதிகார அமைப்பான தேசிய மக்கள் நாடாளுமன்றம், நாட்டின் சோசலிச மாதிரியைப் பலப்படுத்தும் நோக்கில் 170-க்கும் மேற்பட்ட சட்டமுன்னெடுப்புகள் கொண்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்த திட்டத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தச் சீர்திருத்தங்கள், கியூபா தனது வரலாற்றின் மிகக் கடுமையான சவால்களைச் சந்தித்து வரும் வேளையில் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 15 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து அமெரிக்கா, கியூபா மீதான தனது விரோதப் போக்கை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. கியூபாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள பிற நாட்டு நிறுவனங்கள் மீதும் ஒருதலைப்பட்சமாகப் பாயும் “இரண்டாம் நிலைத் தடைகளை” வாஷிங்டன் ஏவியுள்ளது. இதன் காரணமாக கியூபாவிற்கான சர்வதேச எரிபொருள் விநியோகமும் வர்த்தகமும் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன.
இந்த இக்கட்டான சூழலிலும், கியூப ஜனாதிபதி மிகுயேல் தியாஸ்-கேனல் நாடாளுமன்ற விவாதத்தின் போது கியூபாவின் இறையாண்மையை மிக உணர்ச்சிப்பூர்வமாகப் பிரகடனம் செய்தார்:
“நாங்கள் அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பயந்து இந்த மாற்றங்களைச் செய்யவில்லை; மாறாக, நமது சோசலிசக் கட்டமைப்பை தற்போதைய உலகச் சூழலில் நிலைநிறுத்துவதற்கான முதிர்ச்சியடைந்த சிந்தனையின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளோம். தற்போதைய நெருக்கடி நிலை இல்லாதிருந்தாலும் கூட, கியூபா இந்தத் திசையில்தான் பயணித்திருக்க வேண்டும்.”
அரசு மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பை மறுவரையறை செய்யும் இந்தச் சட்டங்கள், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிலும் கியூப உழைக்கும் வர்க்கத்திடமும் மிக ஆழமான விவாதங்களை உருவாக்கியுள்ளன.

அரசு நிறுவனங்களுக்கான தன்னாட்சியும் புதிய பாதுகாப்பு வளையமும்
சோவியத் பொருளாதார மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, அமைச்சகங்களின் நேரடி நிர்வாக முடிவுகளுக்கும் மத்திய திட்டமிடலுக்கும் உட்பட்டிருந்த கியூபாவின் அரசு நிறுவனக் கட்டமைப்பு இனி முழு தன்னாட்சியுடன் செயல்படப் போகிறது. புதிய சட்டத்தின்படி, கியூபாவின் 2,000-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் இனி தங்களின் சப்ளையர்களையும் வாடிக்கையாளர்களையும் தாங்களே சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கலாம். சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விலைகளைத் தீர்மானிக்கவும் அவற்றுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கான மீட்பு நிதியுதவிகள் (Bailouts) நிறுத்தப்பட்டு, நஷ்டத்தைச் சரிசெய்ய முடியாத நிறுவனங்களை திவாலாக அறிவித்து கலைக்கும் அதிகாரம் புதிதாக நிறுவப்பட்டுள்ள ‘அரசு நிறுவன சொத்துக்களுக்கான தேசிய நிறுவனத்திடம்’ (INAEES) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு நிறுவனங்களைப் பொதுப் பங்கு நிறுவனங்களாக மாற்றி, அதில் வெளிநாட்டு முதலீடுகளைப் பகுதி அளவில் அனுமதிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் அரசு ஊதிய முறை ஒழிக்கப்பட்டு, பணவீக்கத்திற்கு ஏற்ப தொழிற்சங்கங்களுடன் பேசி ஊதியத்தை நிர்ணயிக்கும் முற்போக்கான அதிகாரம் கியூப உழைக்கும் வர்க்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தனியார் துறையின் விரிவாக்கமும் சோசலிசக் கட்டுப்பாடுகளும்
கடந்த 2021 ஆம் ஆண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) கியூப அரசு அனுமதி வழங்கியிருந்தது. எனினும், மூலதனக் குவிப்பைத் தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப் பட்டுள்ளன. 100 தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற வரம்பும், ஒரு நபர் ஒரு நிறுவனமே நடத்த வேண்டும் என்ற விதியும் நீக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கூட்டுப் பங்கு நிறுவனங்களைத் தொடங்கவும், வணிகப் பங்குகளை வாங்கவும் விற்கவும் முதலீட்டாளர்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. கியூப வரலாற்றில் முதன்முறையாகத் தனியார் நிறுவனங்கள் தங்கள் பெயரிலேயே வணிகக் கட்டடங்கள், கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகளைப் பதிவு செய்து கொள்ளும் சொத்துரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயப் புரட்சியும் நேரடி வெளிநாட்டு முதலீடும்
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் துறையை உந்தித்தள்ள, அரசு நிலங்களைத் தனியார் நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அரசு நிறுவனங்களின் தலையீடு இன்றி நேரடியாகப் பொருட்களை இறக்குமதி செய்யவும், சந்தை விதிகளின்படி விலையைத் தீர்மானிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்யவும் புதிய சட்டம் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் கியூபாவில் ஒரு புதிய கலப்புப் பொருளாதார மாதிரி உருவாவது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும், (சீனா மாடல் போல) அரசு நிறுவனங்களின் வழிகாட்டுதலோடும், சோசலிச இலக்குகளைப் பாதுகாக்கும் நோக்கோடும் இவை அரங்கேறுகின்றன.
-New Left Views