கல்வியைக் காக்கும் மாபெரும் போராட்டம் மோடி அரசின் கொடூர அடக்குமுறையும் மாணவர் – இளைஞர் எழுச்சியும்!

டெல்லி ஜந்தர் மந்தரில் சி.ஜே.பி (Cockroach Janta party – CJP) சார்பில் துவங்கிய போராட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தாங்களும் இணைந்து கொண்டு ஜூலை 20 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் நடை பெற்ற வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும், வினாத்தாள் கசிவுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி…
போராட்டத்தின் முதல் நாள் காலை மழைப் பொழிவுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடியபோது, ஜந்தர் மந்தரில் தொடங்கிய மாணவர் பேரணி டெல்லி யின் பிரதான வீதிகளைக் கடந்து நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்களையும் வாலிபர்களையும் அழைத்துச் சென்றது. இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்காத டெல்லி காவல்துறை, மாணவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு ஏராளமான தடுப்புகளை அமைத்தது. அதையும் மீறி மாணவர்கள் முன்னேறிச் சென்றதை அடுத்து, அவர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மாணவர்கள் அனைவரும் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தை எழுப்பிக்கொண்டு நாடாளுமன்ற வீதியை நோக்கி முன்னேறினர். அப்போது, நாடாளுமன்றத்திற்குள்ளே காவலில் இருந்த சி.எஸ்.ஐ.எப் படையினர் வெளியே விரைந்து வந்து, பிரதான நுழைவாயில்களை அடைத்தனர். மேலும், நாடாளுமன்ற வாயிலை நோக்கித் துப்பாக்கி ஏந்திய காவலர்களை நிறுத்தி விட்டு, உள்ளே நுழைந்தால் சுட்டுத் தள்ளுவோம் என மிரட்டும் வகையிலான சூழல் உருவாக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), டெல்லி காவல்துறை மற்றும் துணை இராணுவப் படைகள் ஏராளமாகக் குவிக்கப்பட்டு மாணவர்களைத் தடுத்து நிறுத்து வதற்கு முயன்றனர். மாணவர்கள் தடுப்புகளைத் தாண்ட முயன்றபோது கீழே தள்ளப்பட்டு, கால்கள் இடறப்பட்டு, பெரிய லத்திகளைக் கொண்டு கண்மூடித் தனமான தடியடி நடத்தப்பட்டது. இதில் பலரது மண்டைகளும் கைகளும் உடைக்கப்பட்டன. குறிப்பாக, ஒரு இஸ்லாமிய மாணவியின் மேலாடை யை அவிழ்க்கும் அளவுக்குக் கொடூரமான அடக்கு முறை நிகழ்த்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் தடைகள்
இந்தப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்றுவிடக் கூடாது என்பதில் காவல்துறை உறுதியாக இருந்தது. எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குள்ளே போராட்டம் நடத்தினாலும், பேரணிக்குள் யாரும் கலந்து கொள்ளாதவாறு அவை நடவடிக்கைகள் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தால் டெல்லி முழுவதும் ஸ்தம்பித்தது. ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலிருந்து வந்தவர்கள் டெல்லி நகருக்குள் நுழைய முடியாமல் ஸ்தம்பித்துக்கிடக்கும் காட்சியைத் தலைநகர் எதிர்கொண்டது. தலைநகரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மாபெரும் எழுச்சியுடன் இந்தத் போராட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற நேரம் முடிந்த பிறகு, அன்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபி, மக்களவைக் குழுத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் வி.சிவதாசன் ஆகியோர் ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று போராட்டக்காரர்களைச் சந்திக்க முயன்ற னர். அப்போது அவர்களை உள்ளே நுழையவிடாமல் காவல்துறை தடுத்தது. மக்களவைக் குழுத் தலைவர் தனது அடையாள அட்டையைக் காட்டிய பிறகும் கூட உள்ளே அனுமதிக்க மறுத்தனர். அதையும் மீறி, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளே நுழைந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த தோடு, படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்; இந்தக் கொடுமைக்கு எதிராக நிச்சயமாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர்.
எதிர்க்கட்சிகளின் கண்டனமும் ஒத்திவைப்பு தீர்மானமும்
மாணவர்கள் கொடும் காயங்களுடன் இரவு பகலாக அங்கேயே காத்திருந்து போராடினர். முதல் இரண்டு நாள்களும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானத்தை அரசு ஏற்கவில்லை. இதனால், இரண்டாவது நாள் பிற்பகலில் இடதுசாரி நாடாளு மன்ற உறுப்பினர்கள் 14 பேரும் கேரளா பவனி லிருந்து அணிவகுத்துச் சென்று போராட்டக்களத்தை அடைந்தனர். காயம்பட்ட ஒவ்வொருவரையும் சந்தித்து நிலைமையை விசாரித்தோம். இந்தத் தடியடி உத்தரவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் காரணம் என்று மாணவர்கள் உறுதியாகக் கூறினர். ஆகவே, தர்மேந்திர பிரதானும் அமித் ஷாவும் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். “உங்களோடு நாங்கள் இருக்கிறோம், ஜனநாயகப் போராட்டத்தைத் தொடருங்கள்” என்று கூறி இடதுசாரி எம்பிக்கள் அவர்களுடன் கரம் கோர்த்துப் பங்கேற்றோம். மறுநாள் ஜூலை 23 காலையில் இடதுசாரி எம்பிக்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற நுழைவாயிலில் இந்த அடக்குமுறைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் இது குறித்து விவாதிக்கத் தயார் என்று அறிவித்தார். ஆனால், முதலாவதாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், பெண் குழந்தைகளின் ஆடைகளைக் கலைக்கும் அளவுக்கு மோச மான செயலில் ஈடுபட்ட டெல்லி காவல்துறைக்கு அனுமதி கொடுத்தது யார் என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். இடது சாரி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து வலுவான போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

நாடு முழுவதும் எதிரொலிக்கும் போராட்டம்
நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, ஜந்தர் மந்தரில் திறந்தவெளிச் சிறை போல மாறிவிட்ட பகுதியில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள மாணவர்களை எம்பிக்கள் மீண்டும் சந்தித்துப் பேசினோம். திடீர் மழை மற்றும் வெயில் என மாறி மாறி வரும் சூழலிலும் மாணவர்கள் இரவு பகலாகக் காத்திருந்து போராடி வருகின்றனர். இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கானோரும் களத்தில் நிற்கின்றனர். டெல்லியின் இந்த எழுச்சி நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருநகரங்கள் மற்றும் சிறிய நகரங்கள் என அனைத்து இடங்களிலும் இதற்கு ஆதரவான போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் நடைபெறுகிற போராட்டத்தின் மீதும் டெல்லி காவல்துறை போன்றே தமிழகக் காவல்துறை அடக்குமுறையை ஏவ முயல்கிறது; போராடுபவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அப்புறப்படுத்தப் பார்க்கிறது. நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் கூட இந்தப் போராட்டத்தில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்பது ஏற்புடையதல்ல. போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவும் எந்த அரசும் மாணவர்களாலும் இளைஞர்களாலும் தூக்கி எறியப்படும் என்பதே வரலாறு.

மாணவர்களின் உரிமைகள் பறிப்பு
இன்றைக்கு நீட் தேர்வினால் பலியான உயிர்கள் பல. நுழைவுத் தேர்வு என்ற அச்சத்தால் மாணவர்கள் ஒருபுறம் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும், மறுபுறம் வினாத்தாள்களைக் கசியவிட்டுத் தனக்கு வேண்டியவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யும் முறைகேடுகளும் அரங்கேறி வருகின்றன. பள்ளிப்படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்திற்காக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன.
சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மாநில அரசின் அனுமதி பெறாமலேயே நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டு, மத்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் இடங்கள் குறைக்கப்பட்டு மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த மோசமான நிலைமைக்கெல்லாம் காரணமான ஒன்றிய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்; கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் உடனடி யாகப் பதவி விலக வேண்டும். மாணவர்களின் ஜன நாயகப் போராட்டத்தின் மீதான கொடூர அடக்கு முறைக்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் முழுமையான ஆதரவைத் தர வேண்டும்.