‘அமெரிக்க ஏகாதிபத்தியமே, ஆசியாவை விட்டு வெளியேறு!’ கொழும்பு நகரில் கூடி சர்வதேச மக்கள் பேரவை முழக்கம்
– ஸ்ருதி எம். டி.

இலங்கை தலைநகரான கொழும்புவில் மூன்று நாள் (16-18 July 2026) நடைபெற்ற ‘ஆசியாவை விட்டு வெளியேறு’ (#HandsOffAsia) மாநாட்டில், வெவ்வேறு ஆசிய நாடுகளில் உள்ள 400க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவப் படைகளை உடனடியாக அகற்றக் கோரி சர்வதேச மக்கள் பேரவை (International Peoples Assembly) முழக்கம் எழுப்பியது.
நேபாளம், இந்தியா, சீனா, வங்கதேசம், ஈரான், தென் கொரியா, பாகிஸ்தான், ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, தைமூர்-கிழக்கு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச்சேர்ந்த சோசலிச அமைப்புகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
அவர்கள், விரிவடைந்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கட்டுப்படுத்தக் கூட்டுப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.மாநாட்டின் தொடக்க அமர்வில் பேசிய புகழ்பெற்ற மார்க்சிய வரலாற்றாசிரியர் விஜய் பிரசாத், “ஆசியாவை விட்டு வெளியேறு என்ற முழக்கம் சர்வதேச தலையீடுகளுக்கு எதிரான முழக்கம் மட்டுமல்ல,அது ஆசிய மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்கும் உரிமைக்கான நிலைப்பாடு”என்றார். மேலும், “இது இன்றைய சூழலுக்கான சோசலிச அழைப்பு” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் ஆளும் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரும் சுற்றுச்சூழல்அமைச்சருமான முனைவர் டம்மிக பட்டபென்டி பேசுகையில், “நீண்ட காலமாக சோசலிசம் காலாவதியான கருத்து என்று கூறப்பட்டு வந்தது,ஆனால் வரலாறு அதற்கு மாறாக உணர்த்தியுள்ளது” என்றார். மேலும், “நாட்டின் வெற்றியைத் தேசிய வருமானத்தால் மட்டும் அளவிடக்கூடாது; சுகாதாரம்,வேலைவாய்ப்பு, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல்பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றங்களா லும் அளவிடப்பட வேண்டும்” என்றார்.
நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான புஷ்ப கமல் தஹால் (பிரச்சந்தா) கூறுகையில், “வரலாறு நெடுகிலும் முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்டபோது குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றோம். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் விரும்பிய முடிவைஅடைய முடியும்” என்றார்.

ஆசியாவில் இராணுவமயமாக்கல் மற்றும் பன்னாட்டுச் சதி
ஜப்பானைச் சேர்ந்த முனைவர் கெய்கோ யோனாஹா, “இராணுவம் மக்களைப் பாதுகாப்பதில்லை என்பதை ஒகினாவா மக்கள் உணர்ந்துகொண்டனர். இருப்பினும், ‘சீன அச்சுறுத்தல்’ என்ற பெயரில் அமெரிக்க-ஜப்பானிய கூட்டு இராணுவ விரிவாக்கம்தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.
ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் 70 சதவீதம்ஒகினாவா மாகாணத்தில் குவிந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தென் கொரியாவின் சர்வதேச உத்தி மையத்தைச் சேர்ந்த ஜியோங்-யுன் ஹ்வாங் கூறுகையில், தென் கொரியாவும் அமெரிக்காவும் தங்கள் உறவு பொருளாதாரக் கூட்டாண்மையாக மாறுவதாகக் கூறினாலும்,சமமான அடிப்படையில் இல்லாமல் அமெரிக்கா தனது சொந்த நலன்களையே முன்னிறுத்துவதாகத்தெரிவித்தார்.
தாய்லாந்தின் பென்யாசிரி ஐம்விரியப்பூங், வர்க்க முரண்பாடுகளால் அரசியல் போராட்டம் தீவிரமடைந்துள்ளதாகக் கூறினார். இந்தோனேசியாவின் டாக்டர் ஹில்மர் ஃபரீத், அரசு நிர்வாகம்மீண்டும் இராணுவமயமாக்கப் படுவதைச் சுட்டிக் காட்டினார்.
இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஐஷி கோஷ்பேசுகையில், “அச்சத்தை விதைக்கும் மனநிலையேஅரசாங்கத்தின் ஆயுதமாக உள்ளது; அரசாங்கத்தின் முடிவுகளை நாங்கள் எதிர்க்கும்போது தாக்குதல்களுக்கு ஆளாகிறோம்.
இருப்பினும், தாக்குதல்கள் மற்றும் அச்சமூட்டும் முயற்சிகள் இருந்தபோதிலும்இந்தியாவில் மாணவர் இயக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது” என்றார்.பாகிஸ்தானின் முனைவர் தைமூர் ரஹ்மான் பேசுகையில், பாகிஸ்தான் தனது வரவுசெலவுத் திட்டத்தில் பெரும்பகுதியை இராணுவத்திற்கும் கடன் திருப்பிச் செலுத்தவுமே செலவிடுவதாகத் தெரிவித்தார். மேலும், ஏழை நாடுகளுக்கு 8 முதல் 15 சதவீதம் வரை அதிக வட்டி விதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தானின் முற்போக்கு மாணவர் கூட்டமைப்பின் ஃபாத்திமா ஷாஹ்சாத், ஜிடிபியில் 1சதவீதத்திற்கும் குறைவான தொகையே கல்விக்குச் செலவிடப்படுவதாகக் கூறினார். மலேசிய சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயகுமார் தேவராஜ், நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் போட்டியில் ஆசிய நாடுகள்நிறுவன வரிகளைக் குறைத்து வருவதைக் கண்டித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அகிலன் கதிர்காமர், “சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடமிருந்து அனைத்தையும் பிழிந்தெடுத்தது. நாம் பாசிசத்தை நோக்கிச் செல்லலாம் அல்லது சோசலிசம் போன்ற ஒரு நிலையை அடையலாம்” என்றார்.

ஏகாதிபத்தியத் தலையீடும் தொழில்நுட்ப ஆதிக்கமும்
பிலிப்பைன்ஸின் கைல் ஆஷ்லி பேசுகையில், அமெரிக்காவின் ‘பேக்ஸ் சிலிக்கா’ திட்டம் பழங்குடிமக்களை இடம்பெயரச் செய்வதோடு, செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான விநியோகச் சங்கிலிகளைப் பற்றிக்கொள்ளும் பாதுகாப்புமுக்கியத்துவம் வாய்ந்த முயற்சியாக உள்ளதாகத்தெரிவித்தார். பிலிப்பைன்ஸ் அரசோ அமெரிக்காவிற்குத் தேவையான தளங்களை வழங்குவதாகக் குற்றம்சாட்டினார்.
சீனாவின் ஜெஃப் சியோங் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அமெரிக்காதடைகளை ஏற்படுத்தினாலும், சீன நிறுவனங்கள் மலிவான மற்றும் திறமையான சொந்த தொழில்நுட்பங்களைஉருவாக்கி வருவதாகக் கூறினார்.
ஈரான் நாட்டின் சார்பில் பங்கேற்ற முனைவர் சத்தாரே சாதேகி முகமதி, அமெரிக்க ஏகாதிபத்தியஅமைப்பின் மீது அழுத்தம் கொடுக்க ஆசியாவில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த புவிசார் அரசியல் கூட்டணிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தாய்வானைச் சேர்ந்த முனைவர் மீ-ஷியா சென், தாய்வான் மக்கள் அமெரிக்க இராணுவ மற்றும் தத்துவ கட்டுப்பாட்டின் கீழ் இன்னும் போராடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவின் நிக்கோலஸ் டோப்ரி ஜெபிக், அவுஸ்திரேலியா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாகச் செயல்படுவதாகக் கூறினார்.
அறிவுசார் மீட்பும் சர்வதேச ஒருமைப்பாடும்
பிரேசிலின் லூயிஸ் ஜார்ரெஃப் பேசுகையில், அறிவியலும் தொழில்நுட்பமும் மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்ப்பதற்கான சர்வதேசவாதத்தின் தூண்களாக இருக்க வேண்டும் என்றார். டிஜிட்டல் கலாச்சாரம் என்பது விவசாயிகளுக்கு எதிரானது அல்ல, மாறாக அது உழைக்கும் மக்களின் கைகளில்தான் இருக்க வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார்.
கிழக்கு தைமூரின் அகஸ்டினோ பெரெஸ், சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு பிழைத்திருக்கமுடியும் என்பதை வியட்நாம் மற்றும் கியூபா போன்ற நாடுகளின் வரலாறு கற்பிப்பதாகக் குறிப்பிட்டார். ஹோ சி மின் மற்றும் பிடல் காஸ்ட்ரோ போன்றோரின் வழிகாட்டுதல்கள் தங்களுக்குப் பாடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவைச் சேர்ந்த முகம்மது ஜிக்ரி, வரலாற்றை மீட்டெடுப்பதும் நினைவகத்தை உருவாக்குவதும் புதியவகையான எதிர்ப்பிற்கு அவசியமானது என்றார்.
வங்கதேச தொழிலாளர் கட்சியின் பேராசிரியர் சுசாந்த தாஸ், புதிய தாராளவாதத்தால் அறிவுத்திறன் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்ள முற்போக்குச் சக்திகள் தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றார்.

கியூபாவுடன் ஒற்றுமையும் எதிர்காலப் பார்வையும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இடைவிடாத எதிர்ப்பிற்காகக் கியூபாவிற்கு மாநாடு தனது ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியது.
இலங்கைக்கான கியூபாவின் தூதுவர் பாட்ரிசியா லஸ்ஸாரா பெகோ குவேரா உரையாற்றுகையில்,அனைவருக்கும் மலிவு விலையில் சுகாதார சேவையை வழங்க முடியாத அரசுகள் வரலாற்றில் இருந்துவெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
2027ஆம் ஆண்டில் பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மாநாடு மரியாதைசெலுத்தியது. அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் கியூபாவிற்கு உலகெங்கிலுமிருந்து மக்கள்ஆதரவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
‘ஆசியாவை விட்டு வெளியேறு’ என்ற இம்மாநாட்டைசமூக ஆராய்ச்சிக்கான முக்கண்ட நிறுவனமும் (Tricontinental Institute for Social Research) சர்வதேச மக்கள் பேரவையும் இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளன.