பிரான்ஸ் அரசை உலுக்கும் பாடசாலை மாணவர்கள் போராட்டம்
-க.போத்தி ராஜ்

விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயரிய தத்துவங்களை உலகுக்கு அளித்த ஐரோப்பிய வல்லரசுகளில் ஒன்றான பிரான்ஸ் தேசம் இன்று தனது கல்வி அமைப்பின் எதிர்காலத்தைக் காக்க வீதியில் இறங்கிப் போராடும் மாணவர்களைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கிறது.
சுமார் 3.6 டிரில்லியன் யூரோக்கள் என்ற பிரம்மாண்ட பொதுக்கடன் சுமையின் கீழ் பிரான்ஸ் அரசு தள்ளாடுகிறது. பொருளாதாரத்தை மீட்க அரசு கொண்டுவந்த கடுமையான நிதிச் சிக்கன நடவடிக்கைகள், நாட்டின் கல்வித் துறையை முடக்கி, மாணவர்களை வெகுண்டு எழச் செய்துள்ளன.
ஒருபுறம் பொருளாதாரச் சரிவும், வரலாறு காணாத கடன் சுமையும் அரசின் கழுத்தை நெருக்குகின்றன. மறுபுறம் உள்கட்டமைப்புச் சீர்கேடு, ஆசிரியர் பற்றாக்குறை, ஊதியம் வழங்க முடியாத நிலை எனத் திணறும் கல்வித் துறை, மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விகுறியாக்கியுள்ளது.
சுவர்களில் விரிசல்கள், பழுதடைந்த வகுப்பறைகள், போதிய ஆசிரியர்கள் இல்லாத பாடவேளைகள் என ஏதோ ஓர் ஏழை நாட்டில் இருப்பது போன்ற அவல நிலையில்தான் பிரான்ஸின் பாடசாலைகள் இருக்கின்றன.
மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காகவும் பாதுகாப்பான கல்விச் சூழலுக்காகவும் வகுப்புகளைப் புறக்கணித்து ஒரு வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு, அரசையே நிலைகுலைய வைத்துள்ளனர்.
செலவினங்களைக் குறைக்க அரசு எடுத்த முடிவுகள் வகுப்பறைகளைப் பாதித்ததால், மாணவர்களோடு ஆசிரியர்களும் அரசுக்கு எதிராக அணிதிரண்டுள்ளனர். 1,000-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் கதவடைப்பு, பல்கலைக்கழக முற்றுகை, காவல் துறை மோதல் எனப் பிரான்ஸ் நாடு முன்னெப்போதும் கண்டிராத கல்வி நெருக்கடியைச் சந்திக்கிறது.
பிரான்ஸ் அரசில் என்ன பிரச்சினை?
மாணவர் போராட்டம் அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்த முதன்மை காரணம், நாட்டின் பொருளாதாரச் சரிவு மற்றும் அரசியல் ஸ்திரமின்மை.
பிரான்ஸின் பொதுக்கடன் 3.596 டிரில்லியன் யூரோக்களாக (4.08 டிரில்லியன் அமெரிக்க டொலர்) உயர்ந்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 119% ஆகும். கடனுக்கான வட்டி மட்டுமே ஆண்டுக்கு 67 முதல் 77 பில்லியன் யூரோக்கள் வரை ஆகிறது. இது அரசு தனது இராணுவத்துக்கு ஒதுக்கும் நிதியை விட அதிகம்.
கடன் உயர்வுக்கு முக்கியக் காரணங்கள்:
தொடர் பட்ஜெட் பற்றாக்குறை: 1974-க்குப் பிறகு பிரான்ஸ் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை. வருவாயை விட மக்கள் நலச் செலவுகள் ஆண்டுதோறும் அதிகமாகவே இருந்து வருகின்றன.
கொரோனா பெருந்தொற்று: வணிகங்களையும் வேலைவாய்ப்புகளையும் பாதுகாக்க அரசு பெருமளவில் கடன் வாங்கி நிதி உதவியது.
எரிபொருள் விலை உயர்வு: ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பின் ஐரோப்பாவில் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு, பிரான்ஸைக் கடுமையாகப் பாதித்து, பெரிய கடன் நெருக்கடியில் தள்ளியது. இதனால் மின்சாரக் கட்டணம் பெருமளவு உயர்ந்த போது, மக்களுக்குப் பில்லியன் டொலர் கணக்கில் மானியங்களை அரசு வழங்கியது.
வட்டி உயர்வு: கடந்த காலங்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த வட்டி விகிதங்கள், தற்போதைய பணவீக்கத்தின் காரணமாக 3.5% வரை உயர்ந்துள்ளன. பழைய கடன்களை மறுநிதியளிப்பு (Refinancing) செய்யும்போது அதிக வட்டி கட்ட வேண்டிய சூழல் அரசுக்குக் கூடுதல் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கடனைக் கட்டுப்படுத்தவே அரசு 54 பில்லியன் யூரோ செலவினக் குறைப்பை அமுல்படுத்த முயல்கிறது. இதன் விளைவாகக் கல்வி நிதி குறைக்கப்பட்டு, ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுப் போராட்டத்துக்கு வழிவகுத்துள்ளது.

மாணவர்களின் பிரச்சினை
பிரான்ஸ் முழுவதும் பாடசாலைகளின் உள்கட்டமைப்பு படுமோசமடைந்துள்ளது. பாடசாலைகளுக்குப் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும், காலை 8 மணிக்குச் செல்லும் மாணவர்கள் மாலை 6 மணி வரை பாடசாலையிலேயே இருக்க வேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு எரிச்சலூட்டியுள்ளது. ஆசிரியர்கள் இல்லாமல் பாடசாலை நேரத்தில் பெரும் பகுதி நேரத்தைச் சும்மா கழிப்பது மாணவர்களுக்கு மனச்சோர்வையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, கடந்த ஒரு வாரமாக மேல்நிலைப் பாடசாலை மாணவர்கள் சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாரீஸின் புறநகரில் உள்ள பாடசாலைகளில் தொடங்கிய போராட்டம், சமூக ஊடகங்களின் தாக்கத்தால் படிப்படியாக அதிகரித்து நாடு முழுவதும் பரவிவிட்டது. இன்று பாடசாலை மாணவர்களோடு சேர்ந்து கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்கிவிட்டனர்.
இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாட்டில் உள்ள 3,700-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பாடசாலைகளில் 1,000-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்கள், நீண்ட வகுப்பு நேரம், ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவை மாணவர்களுக்குக் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
“தூங்கும் நேரத்தை விடப் பாடசாலையில்தான் அதிகம் இருக்கிறோம். காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கும் வகுப்புகளில் இருக்க நாங்கள் மாணவர்களா அல்லது கைது செய்யப்பட்ட அடிமைகளா?” என அவர்கள் அரசை நோக்கிக் கேட்கின்றனர்.
பாடசாலைகளில் சுகாதாரமில்லாத கழிப்பறைகள், சில பாடசாலைகளில் கழிப்பறைகளே இல்லாத நிலைகளில்தான் நிர்வாகம் இயங்குகிறது.

பாடசாலைகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், கல்விச் சூழலைச் சீரமைக்க வேண்டும், பாடசாலை பாடவேளையை வரையறை செய்ய வேண்டும், கூடுதலான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பவைதான் மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகளாகும்.
சுகாதாரமற்ற கழிப்பறைகள், காற்றோட்டமோ மின்விசிறியோ இல்லாத வெப்பமான வகுப்பறைகள் என அடிப்படை வசதிகள் இல்லாததே அவர்களின் கொந்தளிப்புக்குக் காரணம்.
பிரான்ஸ் அரசு என்ன சொல்கிறது?
போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு அவசர ஆலோசனை நடத்தி வகுப்புகளை இணையவழியில் நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்தப் போராட்ட மோதல்களில் 85 காவலர்கள் காயமடைந்துள்ளனர்; சில பாடசாலைகளுக்குத் தீ வைக்கப்பட்டு டிராம் (Tram) சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். எதிர்க்கட்சியான ‘லா பிரான்ஸ் இன்சோமிஸ்’ இந்தப் போராட்டத்தைத் தூண்டுவதாக அரசு குற்றம் சாட்டுகிறது.
அதேவேளையில், கல்வி அமைச்சகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் சங்கங்களைச் சந்தித்துப் பேசியதுடன், சீர்திருத்தக் கருத்துகளைப் பெற புதிய ஒன்லைன் தளத்தையும் அமைத்துள்ளது. இந்தப் போராட்டத்தின் தாக்கம் அண்டை நாடான பெல்ஜியத்திற்கும் பரவி, அங்குள்ள லியேஜ் நகரிலும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
-இந்து தமிழ்
2026.10.04