ஆட்டம் காண்கிறது, அமித்ஷா- மோடிகளின் அதிகாரம்!

-ச.அருணாச்சலம்

மீபத்திய இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆளுபவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. “மோடி – ஷா “ தலைமையின் பின்னடைவையும், தடுமாற்றங்களையும்  அம்பலப்படுத்தியது. இத்தனை நாள் சிம்ம சொப்பனமாக தோற்றம் காட்டிய இவர்களின் தைரியம் இவ்வளவு தானா?  இந்தக் காட்சி மாற்றங்கள்.. ஆட்சி கலகலத்துக் கொண்டிருப்பதை காட்டுகிறதா?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை – அரசியல் சாசன திருத்த மசோதாவை மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களை தன்பக்கம் இழுப்பதன்மூலம் சாதித்து காட்ட மோடி அரசு திட்டமிட்டு இருந்தது. இதன் மூலம் தங்களை யாராலும் வீழ்த்த முடியாது என உலகிற்கு காட்ட மோடி-ஷா தலைமை திட்டமிட்டிருந்தது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை மசோதாவை நிறைவேற்றி தங்களது இந்துத்துவ ஆதிக்கத்தை நிலைநாட்டவும் எண்ணியிருந்தனர். ஆனால் இவை எல்லாம் வெறும் பகற்கனவாய் மாறிப் போயின.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல்லை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது, பா.ஜ.க ! அத்துடன் நில்லாமல் திரிணாமுல் சட்டமன்ற கட்சியையே  தன்பக்கம் இழுத்த பா.ஜ.க , திரிணாமுல்லின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கை தட்டி தூக்கியது.

அடுத்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா  நாடாளுமன்ற உறுப்பினர்களை தூக்கியும், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களை இழுத்தும் தங்களின் பராக்கிருமத்தை மோடி-ஷா தலைமை வெளிப்படுத்தினர்.

இந்த கபடவேடதாரிகளுடன் கைகோர்க்க சரத்பவாரின் தேசீய காங்கிரசும், தமிழகத்தின் திமுகவும் கண்களை இமைக்காமல் காத்து கிடந்தனர். எப்படியாவது தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஆதரித்து தங்கள் மோடி அபிமானத்தை காட்டலாம் என இந்த கட்சிகள் தவமிருந்தனர்.

இத்தகைய ஆள்தூக்கி அரசியலை தட்டி கேட்காத பத்திரிகைகள் , வேடிக்கை பார்க்கும்நீதிமன்றங்கள் ஆகியவை இந்த அத்துமீறல்களை புதிய வளமையாக ஏற்றுக் கொண்டதால் இந்தியா ஜனநாயகத்தன்மையை இழந்துள்ளது.

ஆனால் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடித்த மாணவர்களின் போராட்டங்கள் ‘வலுப்பெற்றதால்’ ஆளுங்கட்சியினரின் எதிர்பார்ப்பில் மண் விழுந்தது. மழைக்கால கூட்டத்தொடருக்கான எதிர்பார்ப்புகள் கூட்டத்தொடர் தொடங்கு முன்னரே ஆட்டங்கண்டது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கோரிக்கை வலுப்பெற்றதில், பாராமுகம் காட்டிவந்த மோடி அரசு போராடுபவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், போராட்டங்களை திசை திருப்ப எடுக்கப்பட்ட முயற்சிகள்  பலனளிக்கவில்லை.

மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே (ஜூலை20) நாடாளுமன்றத்தை நோக்கி  திரண்ட , மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கெதிராக அரசு பயங்கரமான வன்முறையை  கட்டவிழ்த்து விட்டது.  காவல்துறை வெறியாட்டங்களை அமித்ஷா  கட்டவிழ்த்து விட்டார்.

இதன் எதிரொலியாக நாடாளுமன்றத்திலும், வெளியிலும்  எதிர்கட்சிகள் மாணவர் மீதான வன்முறைக்கு யார் காரணம் என்ற கேள்வியை எழுப்பினர். இத்துடன் அயோத்தி ராமர் கோவிலில் நடந்த “நன்கொடை திருட்டுக்கு துணை போன ஆளுங் கும்பலை எதிர்த்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், இந்த இரு கேள்விகளுக்கும் அரசு பதில் தரவில்லை.

# தடியடி, துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? என்ற கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமீத்ஷா பதில் சொல்ல முன்வரவில்லை.

# மாணவர் போராட்டத்திற்கு அடிப்படை காரணமான கல்வி அமைச்சர்  மாணவர்களை “பயங்கரவாதிகள்” என வசை பாடினாரே ஒழிய, நடந்த அலங்கோலங்களுக்கு பொறுப்பேற்கவில்லை.

# மாணவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும், அயோத்தி ராமர் கோவில் மோசடிகள் குறித்தும் பதில் கூறவோ, பொறுப்பு கோரவோ விவாதம் நடத்தவோ கடைசி வரை பாஜக அரசு முன்வரவில்லை.

எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புவதும், அரசு பதிலேதும் அளிக்காமல் காலங் கடத்துவதும், அவை ஒத்தி வைக்கப்படுவதும் தொடர்கதையாக நீடித்தன.

கண்டனங்கள் வலுக்கவே, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகட்டும் என்றெண்ணி தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்தார், மோடி.

ஜந்தர் மந்தர் போராட்டத்தை விலக்கி கொள்ளப்பட்டாலும் நாடெங்கிலும் வெடித்த மாணவர் போராட்டங்கள் , இந்திய அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தை அரங்கேற்றியதோடு பொறுப்பு கூற வேண்டிய கட்டாயத்தில் ஆளுங்கட்சியை நிர்பந்தித்தது.

இதை கருத்தில் கொண்டே நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அரசை நிர்ப்பந்தித்த சூழலில் இரண்டே இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே பாஜக அரசு பதில் அளித்தது!

பன்னிரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுத்தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளை தடுத்தல்) மசோதா மட்டுமே விவாதங்கள் நடந்தபி றகு நிறைவேற்றப்பட்டு சட்டமாகியது. மற்ற மசோதாக்களான சுரங்கம் மற்றும் தாதுப்பொருட்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்கமைப்பு) திருத்த மசோதா போன்று முக்கியமான மசோதாக்கள் கூட எந்த விவாதமும் இன்றி, எதிர்கட்சிகளின் வேண்டுகோளை புறக்கணித்து அமளிகளுக்கு நடுவே நிறைவேற்றப்பட்டன.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை மசோதாவிற்கு பலத்த எதிர்ப்புகள் அரசியல் கட்சிகளிடமிருந்தும் சிறுபான்மை மக்களிடமிருந்தும் கிளம்பினாலும் அமீத்ஷா மனமிறங்கவோ எதிர்கட்சிகள் கோரும் திருத்தங்களை ஏற்றுக்கொள்ளவோ முன்வரவில்லை. ஆனால் அமெரிக்க செனட்டர்கள் இத்தகைய (கிறித்துவ மத நிறுவனங்களை நெருக்கும் ) மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவுத்து எச்சரித்ததால் (?) இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது மோடி அரசு.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாக்கள் விவாதமிற்றி சட்டமாக்கப்படுவதும், அமளிகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்படுவதும் ஜனநாயக நடைமுறைகளல்ல.

அதைவிட முக்கியமானது மசோதாக்களை பரிசீலிக்க – விவாதித்து நிறை குறைகளை சுட்டிக்காட்ட – நிலைக்குழுக்களுக்கு அனுப்பி அம்மசோதாக்களை செம்மைபடுத்துவது பாராளுமன்ற நடைமுறைகளின் அடிப்படை நியதிகளாகும்.

ஆனால் மோடி அரசு 2014 முதலே இத்தகைய நடைமுறையை பின்பற்றுவதில்லை என்பதே உண்மை. 2004 முதல் 2014 வரை மத்திய அரசு கொண்டுவந்த மசோதாக்களில் 71% விழுக்காடு மசோதாக்கள் அத்துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பபட்டன. மோடி ஆட்சி வந்த பின்னர் இது 2019 வாக்கில் 27% மாக சுருங்கியது இப்பொழுது 2019-2026 ல் அது 9% க்கும் கீழாக உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

எதிராளிகளின் கருத்தை கேட்பதையே பாவச்செயலாக நினைக்கும் இந்த ஆட்சியாளர்கள் தங்களுக்கு இருக்கும் எண்ணிக்கையின் பலமே எல்லா அதிகாரத்துக்குமான திறவு கோல் என்று குதர்க்கம் செய்கின்றனர்.

மாணவர்கள் மீதான வன்முறைகளுக்கு பதில் கூற பயந்து உள்துறை அமைச்சர் அமீத் ஷா நாடாளுமன்றத்திற்கு வராமலேயே நாட்களை கடத்தினார். எதிர்கட்சிகள் வற்புறுத்திய பிறகும் மோடி மன்னிப்பு கேட்கவில்லை. அமீத்ஷா, யார் துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது என்பதற்கு பதிலளிக்கவில்லை.

முதல் சில நாட்கள் துப்பாக்கி சூடே நடக்கவில்லை என்று பொய்பேசியது பாரதீய ஜனதா. நாடாளுமன்றதில் தன் அறைக்கு வந்து விட்டு நாடாளுமன்ற அவைக்கே வராமல் ஓடினார், அமித்ஷா

எதிர்கட்சிகள் கோரிக்கைகளை புரிந்து கொண்ட துணை குடியரசு தலைவர்  சி.பிஇராதாகிருஷ்ணன்அவையில் எதிர்கட்சிகளின் முக்கியத்துவத்தை அமீத் ஷாவுக்கு தெரிவித்து இதற்கு முடிவு கட்டுமாறு நாடாளுமன்ற விவகார அமைச்சர் ரிஜிஜூவிற்கு வேண்டுகோள் விடுத்தார் . ஆனால் இதையும்  அமீத்ஷா கண்டு கொள்ளவில்லை!

ஆனாலும் அழுத்தங்கள் அதிகரிக்கவே, வேறு வழியின்றி அமீத்ஷா சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு ஆகஸ்டு 12 ந்தேதி 11 மணி முதல் ஜந்தர் மந்தர் நிகழ்வு பற்றி விவாதிக்கலாம், இறுதியில் நான் பதில் கூறுகிறேன் என்று கடிதம் எழுதினார்.

கோடி மீடியாவும் பாஜகவினரும், “அமீத் ஷா கோழை என்று யார் சொன்னது? அவர் ஓடி ஒளியவில்லை, நாளை அவைக்கு வருவார்,தக்க பதிலடி கொடுப்பார்” என்றனர். ஆனால் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியோ, அமீத்ஷா துப்பாக்கி சூட்டிற்கு  உத்தரவிட்டாரா? இல்லையா? என்பதை முதலில் தெளிவுபடுத்தட்டும் . அந்த பதிலின் மேல் விவாதிக்கலாம், உத்தரவிட்டதை ஒத்துக்கொண்டால் அவர் பதவி விலக வேண்டும், அவருக்கு தெரியாமல் துப்பாக்கி சூடு நடந்தது என்றால்  அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என்று கிடுக்கிப்பிடி போட்டார்.

இத்தகைய கிடுக்கிபிடியில் சிக்கிய அமீத் ஷா, இறுதி வரை அவைக்கு வரவில்லை. இறுதிநாளான 13 ந் திகதி பிரதமர் மோடியும் , உள்துறை அமைச்சர் அமீத் ஷாவும் நாடாளுமன்றம் வந்தனர்,வந்தவுடன் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டது , பாட்டு முடியும் வரை மோடியும் ஷாவும் கண்களை திறக்கவில்லை, பாட்டு முடிந்தவுடன் சபாநாயகர் ஓம் பிர்லா சபையை காலவரையரையின்றி (sine die) ஒத்தி வைத்தார். சபை கலைந்தது, அமீத் ஷா வாயை திறக்காமலே வெளியேறினார், மோடி நிமிர்ந்து பார்க்காமல் விரைந்து வெளியேறினார். இது தான் இவர்களின் இலட்சணம்!

ஒரு காலத்தில் எதிர்கட்சிகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய அமீத்ஷா தற்போது அவைக்கே வர அஞ்சி எதிர்கட்சிகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் ஓடி ஒளிகிறார்?

இருவருமே இது நாள்வரை தங்களது அதிகாரத்தை காட்டி காட்டி பயம் என்ற விதையை விதைத்து அடிபணிந்து நடக்கும் பயிரை வளர்த்தனர்.

எதிர்ப்பவர்களை பயமுறுத்தி, அனுசரணையாகப் போகிறவர்களுக்கு வெகுமதி அளித்து தங்கள் அதிகாரத்தை விரிவுபடுத்தினர்.

இதற்கு அரசு இயந்திரங்களை- காவல்துறை, சிபிஐ, இடி, வருமான வரித்துறை ஆகியவற்றை ஆயுதமாக பயன்படுத்தினர்.எதிர்கட்சிகளை உடைப்பது, இழுப்பது, மூலம் அச்சப்படுத்தினர். பத்திரிக்கைகளை, ஊடகங்களை விலைக்கு வாங்கி, நீதிமன்றங்களை ஆதரவு மன்றங்களாக்கி சிறுமைபடுத்தினர்.

இதையும் மீறி போராடுபவர்களை அரச வன்முறையால் அடக்கியும், எதிர்த்து பேசுபவர்களை சிறையில் தள்ளியும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.

ஆனால், இதைபற்றியெல்லாம் கவலைப்படாத இளந்தலைமுறையினர்தெருவில் இறங்கி நாட்டில் இன்று நிலவும் அவல நிலைக்கு யார் பொறுப்பு என கேள்வி கேட்கின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் அதற்கு பதில் கூற முடியாமல் முழிக்கின்றனர். இளங்கன்று பயமறியாது. இந்த இளைஞர்களை அடக்க முடியாது.

மோடியும் ஷாவும் விரும்புவது அடங்கி நடப்பது, ஆர்எஸ்எஸ் விரும்புவது  கேள்வி கேட்காமல் பின்பற்றுவது. இத்தகைய அடிமைத்தன கொள்கையினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் இவர்களுடன் சமரசமாக போக விரும்பவில்லை.

வேலையின்மையும், கவைக்குதவாத கல்வியும் இளைஞர்களின் எதிர்காலத்தை இருட்டடிக்கின்றன. மோடி அரசின் கல்வி கொள்கையும்,பொருளாதார கொள்கையும் அரசியல் முனைப்பும் இளைஞர்களின் வளர்ச்சிக்கு, வாழ்வாதாரத்திற்கு,சுதந்திர போக்கிற்கு தடைக்கற்களாகும். இவற்றை மாற்றுவது காலத்தின் கட்டாயம்.

ஆனால் ஆட்சியாளர்கள் கோல்மால்கள் மூலம்  தேர்தல்களில் “எப்படியாவது” வென்று இந்த பின்னடைவை சமாளிக்க எண்ணுகின்றனர். காலம் பதில் சொல்லும்.

Tags: