நக்சல்களை நினைத்து நரகத்தில் உழலும் மோடி!
-ச.அருணாசலம்

சிறைச்சாலைகள் போதாது! மாற்று கருத்துள்ளோரை, அரசின் அராஜகத்தை எதிர்ப்போரை, தங்கள் எதிர்காலத்திற்காக போராடும் மாணவர்களை, எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள் எனக் கதறும் பழங்குடிகளை, படித்த பேராசிரியர்களை எல்லாம் நக்சல்களாக பாவித்து சிறையில் தள்ள வேண்டும் என்றால்! இடதுசாரிகளைக் கண்டு இதயம் நடுங்குவதேன் பிரதமர் மோடி அவர்களே..?
மோடி அரசு கொடுத்த உத்தரவாதங்களில் ஒன்று, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை (FIR) அரசு வாபஸ் வாங்கி கொள்ளும் என்பதாகும் . மோடி அரசு அளித்த உத்தரவாத்த்தின் அடிப்படையிலேயே ஜந்தர் மந்தர் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஆனால் இந்த உத்தரவாதத்தை நிறைவேற்றுவதில் மோடி அரசு உண்மையாய் இல்லை. விவகாரம் உச்சநீதி மன்றம் வரை நீண்டிருக்கிறது.
இதனிடையே, சுதந்திர தின விழாவில், டெல்லி செங்கோட்டையில் மோடி உரையாற்றியபோது, அரசின் மோசமான கல்விக்கொள்கையின் (NEP2020 )விளைவாக எழுந்த தேர்வு குளறுபடிகளை பற்றியோ, அதனால் மாணவர் எதிர்காலம் பாழாவதை பற்றியோ, அவர்களின் போராட்டத்தை பற்றியோ வாய் திறக்காத பிரதமர் , “காடுகளில் ஆயுதமேந்திய இடது சாரி பயங்கரவாதிகளான நக்சலைட்டுகளை முறியடித்து விட்டோம், ஆனால் நகரங்களில் வாழும் சிந்தையிலும் நக்சல்களாக (Dimagi Naxals) இருப்பவர்களை நாம் அடையாளம் கண்டு தனிமைப் படுத்த வேண்டும், அவர்களை முறியடிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். யாரை பிரதமர் சிந்தையில் நக்சல்கள் என்கிறார்? பொது வாழ்க்கையில், பல்கலை கழகங்களில், அரசின் உயர்நிலை ஆலோசனை குழுக்களில், அரசின் கொள்கை முடிவெடுக்கும் கமிட்டிகளில் நக்சல்கள் இருக்கிறார்கள் என்றும் கோடிட்டு மோடி காட்டுகிறார்.
ஆயுதந்தாங்கிய நக்சலைட்டை அடையாளம் காண்பது எளிது, ஆனால் சிந்தையில் நக்சல்களாக இருப்போரை எவ்வாறு அடையாளம் காண்பது ? அதற்கு அடையாளம் அல்லது உரைகல் என்ன? ஆக, இங்கு ஒருவரின் மீதான சந்தேகமே ஒருவரை பற்றி தீர்மானிக்கும் உரைகல்லாக மோடியால் காட்டப்படுகிறது.
முன்பு, மகாராஷ்டிராவில், பீமா கோரேகான் வழக்கில் கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் வழக்கறிஞர்களை கைது செய்து அவர்களை சிறை வைத்த போது அவர்களை “ஏர்பன் நக்சல்கள்” (urban naxals) என மோடி அரசும் , பா.ஜ.க கூட்டமும் கூறின.

டெல்லியிலுள்ள புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலை கழக மாணவர்களை ஏர்பன் நக்சல்கள் என்றனர், காஷ்மீரில் அரசு அடக்குமுறையை கண்டித்த மாணவர்களை ‘தேச விரோதிகள்’ என்றும், ‘துக்டே துக்டே கேங் ‘ என்றும் சங்கப் பரிவாரங்களும் மோடி அரசும் முத்திரை குத்தின.
கடந்த ஆண்டு 2025 இல் டெல்லி பல்கலைகழக துணைவேந்தர் யோகேஷ் சிங், பல்கலை கழகத்தில் ஏர்பன் நக்சல்கள் உள்ளனர், பேராசிரியர்கள் சிலர் மாணவர்களின் எண்ணத்தில் நச்சுவிதைகளை விதைக்கின்றனர் என டெல்லி பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை குறிப்பிட்டு கூறினார். இதைப் போன்ற புது வழக்கத்தை சங்கப்பரிவாரங்கள் மோடியின் அங்கீகாரத்தோடு நடைமுறைபடுத்துகின்றதை நாம் காணுகிறோம் .
காடுகளில் இருந்து நகரங்களுக்கும், அங்கிருந்து பல்கலைகழகங்களுக்கும் இந்த சந்தேகப்படலம் தொடர்ந்து வருகிறது. கேள்வி கேட்போரிலிருந்து இந்த சந்தேகம் இப்பொழுது மாணவர்களையும்,ஆசிரியப் பெரு மக்களையும் தொட்டு , அத்தோடு நிற்காமல், இன்று “சிந்திப்பதையே“ சந்தேக கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு இந்த ஆட்சியாளர்களை நெருக்கி தள்ளியுள்ளது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்தான் என்ற மன நோய்க்கு மோடி கும்பல் ஆட்பட்டதேன்?
ஆட்சியாளர்களின் இத்தகைய அணுகுமுறை நியாமானதா? சந்தேகத்தின் பேரில் மக்களை பிரித்து பார்ப்பதும் தனிமைப்படுத்த முனைவதும் ஜனநாயக நெறி முறைகளா? ஒரு குடியரசில் உள்ள ஆட்சியாளர்கள் இத்தகைய நடைமுறைகளை பின்பற்றுவதை சட்டம் அனுமதிக்குமா? சந்தேகத்தின் பெயரால் சட்டத்தை திருத்தி அவற்றையே ஆயுதமாக கொண்டு எதிராளிகளை- கேள்வி கேட்போரை, மாற்றுக்கருத்து கூறுவோரை, அரசை எதிர்ப்போரை மற்றும் எதிர்கட்சியினரை- முடக்குவதை ஒரு வழிமுறையாக மோடி அரசு கையாண்டு வருவதின் தொடர்ச்சியே இது.

‘திமாகி நக்சல்’ (நக்சலைட் போன்ற எதிர்ப்பு மனநிலை) என்று எதைக் கூறுகிறார் மோடி?
நாட்டில் நிலவும் பயங்கரமான ஏற்றத்தாழ்வை குறைகூறினால் தவறாகுமா?
கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க ஒரே தேர்வை அரசு முன்வைத்துள்ளதை எதிர்ப்பது குற்றமாகுமா?
அந்த ஒற்றை தேர்விலே தொடர்ந்து குளறுபடிகள் நடப்பதை எதிர்த்தால் அது குற்றமா?
சட்டத்திற்கு உட்படாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதை எதிர்த்தால் குற்றமா?
ஆதிவாசிகளின் வாழ்வாதாரங்களை சிதைக்கும் அரசு கொள்கைகளை கேள்வி கேட்டால் குற்றமா?
பத்திரிக்கையாளன் ஒருவர் அரசின் வன்கொடுமைகளின் ஆதாரங்களை சேகரித்தால் அது சட்ட விரோதமா?
அரசின் மோசமான கொள்கைகளே மக்களை அரசை எதிர்க்க தூண்டுகின்றன என பொருளாதார ஆராய்ச்சியாளன் கூறினால் அவன் ஏர்பன் நக்சலைட்டா?
சர்ச்சைகள் நிறைந்த, பல்வேறு பிரச்சினைகளில்,
எந்த வித விவாதமும் செய்யாமல் , ஒருமித்த கருத்தை அறிய முயற்சி ஏதும் செய்யாமலே தங்களுடைய நிலைபாட்டை திணித்து சட்டமாக்குவதை நாம் மோடி அரசு கொணர்ந்த பல்வேறு சட்ட திருத்தங்களில் இருந்து காணலாம்.
பணமதிப்பிழப்பு (Demonetisation) அறிவிப்பில்தொடங்கி
நில கையகப்படுத்தும் சட்டம்
காஷ்மீர் மாநிலத்தை தரந்தாழ்த்தி 370 பிரிவை ரத்து செய்த சட்டம்
குடியுரிமை சட்ட திருத்தம்
பயங்கரவாத சட்டங்களை கடுமையாக்கிய சட்ட திருத்தம்
தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் சட்டம்
வேளாண் சட்ட திருத்தங்கள்
தொகுதி மறு சீராய்வு சட்டம்
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம்
குற்றவியல் சட்ட திருத்தம்
இப்படி பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் எண்ணற்ற சட்டங்களை ஒருமித்த கருத்தின் அவசியத்தை நிராகரித்து, தங்கள் எண்ணத்தையே சட்டமாக்கிய வரலாறு மோடி அரசுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
இத்திருத்தங்களில் பல அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளதா? என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமுன்னரே, அரசு அச்சட்டங்களை நடைமுறைப்படுத்தி அதை இயல்பாக மாற்றும் வேடிக்கைகள் தொடர்ந்து நடக்கின்றன. உச்சநீதி மன்றமும்இதற்கு துணை போகிறது.
பண மதிப்பிழப்பை எதிர்த்த வழக்கு முடிந்து தீர்ப்பு வர ஏழு ஆண்டுகள் ஆனது! காஷ்மீர் வழக்கிலும் தாமதாகவே தீர்ப்பு வந்தது!
தேர்தல் நன்கொடை சட்டம் இரத்து செய்யபட்டதும் தாமதமாகவே வந்தது!
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் சட்ட வரையரைகளை மீறி தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான வாக்காளர்களை நீக்கியதும் இப்படித்தான் நடந்தது!

இன்று போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் வாங்க மோடி அரசு கொடுத்த உறுதி மொழி பற்றியும் டெல்லி காவல்துறை நடத்திய வன்முறையை பற்றியும் கருத்து கூறிய உச்சநீதிமன்றம், அரசியல் பிரிவு 142ஐ பயன்படுத்தி மாணவர்கள் மீதான வழக்குகளை கைவிட உச்சநீதிமன்றம் தயாராய் உள்ளது எனக்கூறியுள்ளது.
அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால் விவகாரம் உச்சநீதிமன்றம் சென்றிருக்க தேவையில்லை. வழக்குகளை கைவிட வேண்டுமென்றே அரசு தாமதப்படுத்துகிறது, இதில் மறைக்கப்பட்ட விடயம் யாதெனில் மாணவரல்லாத போராட்டகாரர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் தொடரும் என்பதுதான்! அது மட்டுமின்றி அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளன என்ற விவரத்தை டெல்லி காவல்துறை தரவில்லை.
நீதிமன்றம் இது குறித்து கேட்கையில் , அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, டெல்லி காவல்துறை 2,873 நபர்களின் மீதான வழக்குகள் தொடரும் என்று கூறினார். எதனடிப்படையில் இந்த 2,873 நபர்களும் அடையாளங்காணப்பட்டனர்? என்று கேட்டால் பேசியல் ரெக்கக்னிஷன் (Facial recognition) என்ற புது கருவி மூலம் காவல்துறையினர் இந்த நபர்களை அடையாளங் கண்டுள்ளனர் என்று துஷார் மேத்தா கூறுகிறார். பேசியல் ரெக்கக்னிஷன் கருவியை காவல்துறை பயன்படுத்த சட்ட அனுமதி உள்ளதா? என்றால், அந்த வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற தகவல் வெளி வருகிறது. ஆக சட்ட அனுமதியின்றி இக் கருவியை காவல்துறை பயன்படுத்தி உள்ளது.
உலகில் மக்களாட்சிக்கு வித்திட்ட 1774 ஆம் ஆண்டு அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில்,
“………அரசாங்கங்கள் (மக்களுடைய) உரிமைகளை அழிக்க முற்படுமானால் , அத்தகைய அரசுகளை மாற்றவும், அழிக்கவும், மக்களுக்கு உரிமை உண்டு. இப்படி மாற்றிய பிறகு தங்களுக்கு பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்க கூடிய ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்த அவர்களுக்கு உரிமையுண்டு.” என கூறப்பட்டுள்ளது.
இத்தகைய கோட்பாடுகளை பின்பற்றியே இந்திய அரசியல் சாசனமும், இந்திய குடியரசும் தோற்றுவிக்கப்பட்டன.
இங்கே கேள்வி கேட்பவர்களை, ஏர்பன் நக்சல்கள் என்றும் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்திய மோடி அரசு, தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் சுயாதீன அமைப்புகளை செல்லாக்காசாக்குவதை ஒரு கலையாகவே அரங்கேற்றுகிறது.
தேர்தல் ஆணையரை நியமிப்பதிலும் நீதிபதிகள் நியமனத்தை அங்கீகரித்தலிலும் மோடி அரசின் நாடகங்களை பா.ஜ.கவினரால் கூட மறுக்க முடியாது.

இப்பொழுது இளைஞர் கூட்டம் விழித்துக் கொண்டதால் அவர்களை சமூகத்தில் தனிமை படுத்த ’திமாகி நக்சல்’ என்ற புதிய உத்தியை கையில் எடுத்துள்ளார் மோடி. சிந்திக்கத் துணிந்த படித்தவர் அனைவரையும் அரசை எதிர்த்து குரல் கொடுக்காதே என்று எச்சரிக்கை விடுகிறார். இந்த எச்சரிக்கை அரசு நிருவாகத்தையும், நீதி மன்றத்தையும் கூட ஆமாம் சாமிகளாக மாற்றும் அபாயம் உள்ளது.
கடல்களில் அலைகள் எழுவதை கட்டு படுத்த முடியுமா பிரதமரே? என நமக்கு கேட்க தோன்றுகிறது. ஜந்தர் மந்தர் எழுச்சிக்கு பிறகும் “தான் இந்நாட்டின் மன்னரென்ற” நினைப்பு மட்டும் மோடியிடமிருந்து அகலவில்லை !